\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

குவளைப்பாட்டி

Filed in கதை, வார வெளியீடு by on February 2, 2025 3 Comments

காலை நேர பதட்டம். வேகமாக கல்லூரி போக தயாராகிக் கொண்டு இருந்தாள் அதிதி.  வெளியில் அம்மாவின் கால்கள் தையல் இயந்திரத்தில் ஒட்டிய சத்தம் காதை கிழித்தது. அந்த சத்தம் பழகி போன எரிச்சலை கொடுத்தது அதிதிக்கு.  சமையல் அறையின் உள்ளே சென்று மதிய உணவை நோட்டம் விட்டாள். அம்மா கொடுத்த மதிய உணவை எடுக்காமல் திருட்டுத் தனமாக கிளம்பினாள்.

“அதிதி. மத்தியானம் தயிர் சாதம் வெச்சுருக்கேன். எடுத்துட்டு போ. உடம்பு சூடு ஆகுது. வெளில சாப்பிட வேண்டாம்”.

அம்மா குரலை கேட்காதது போல அதிதி மெதுவாக கிளம்பினாள்.

போலித்தனம்!

பதினெட்டு வயது இளம் பெண் அதிதி. நவ நாகரீகத்தின் விளிம்பில் ஒரு பக்கம், வீட்டின் கண்டிப்பு மறுபக்கம் என இரண்டுக்கும் இடையில் குழம்பும் வயது. அதிதி இயல்பில் நல்ல பெண் தான்.அம்மாவின் கண்டிப்பான வளர்ப்பில் நிறைய நற்பண்புகள் கொண்டே வளர்ந்தாள். ஆனால் கல்லூரித் தோழிகளின் நட்பில் சில நேரங்கள் தடம் மாறும் கணங்களும் உண்டு. அது போல தான் இன்று வீட்டில் அஞ்சறை பெட்டியில் இருந்து காசு திருடிக் கொண்டு (மதிய உணவை மறந்து வைத்தது போல) வேகமாக கிளம்பினாள்.

வீட்டிலிருந்து இருவது நிமிடம் நடந்து, வழக்கம் போல வருகின்ற பேருந்து நிலையத்தில் வந்து நின்றாள்.  அவள் தோழிகள் வரும் நேரம்.  யாரும் இன்னும் வரவில்லை. ரெண்டு பக்கமும் அவர்கள் வருவாயை  பார்த்தபடி காத்திருந்தாள் நிலையத்திற்கு அருகில் வழக்கமாக இருக்கும் அந்த பாட்டி, பரட்டை தலையோடு தலையை சொரிந்து கொண்டு இவள் அருகில் வந்தாள்.

கையில் வைத்திருந்த குவளையை தட்டி தட்டி “டி வாங்கி தாம்மா” என்று கேட்டாள். அதிதி காது கேட்காதது போல தலையை திருப்பிக் கொண்டாள். பாட்டி மெல்ல இவளை விட்டு நகர்ந்து அடுத்தவர்களிடம் சென்றாள்.

இந்த பாட்டி சில மாதங்களாக இந்த பகுதியில் அதிகமாக சுற்றி வருகிறாள். எல்லாரிடமும் வெறும் டி மட்டும் கேட்கிறாள்.  பரட்டை தலை, பழைய கிழிந்த சேலை, பல நாட்கள் குளிக்காத அழுக்கு படிந்த முகம்.

“யார் இவள்?”.

அதிதியின் சிந்தனையை கலைக்கும் விதம் அவளுடைய தோழிகள் வந்தனர்.  வந்தவர்கள் நால்வரும் அதி நவீன உடைகள் அணிந்து இருந்தனர். பகட்டான உடை, போலியான பேச்சு என அவர்களுடன் அதிதி இணைந்து கொண்டாள்.

போலித்தனம்!

“ஹே Adi ”

அதிதி என்ற பெயரை Adi என சுருக்கி அழைத்தனர்.

“இன்னிக்கு லஞ்ச் எங்களோட வரே தானே”?

“ஹ்ம்ம் வரேன் ஆனா எங்க போறோம்?”

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன்”.

“பணம் வெச்சுருக்கியா?”.அம்மா கால் வலியோடு தையல் இயந்தரத்தில் தைத்த நொடிகள் கண் முன் வந்து போயின. அவள் அஞ்சறை பெட்டியில் திருடிய பணமும் , உதாசீனம் செய்த தயிர் சாத டப்பாவும் மனதை உறுத்தியது.

“ம்ம்” என்று மெல்ல தலை அசைத்தாள் அதிதி.

இவர்கள் அருகில் கவனித்தபடி இருந்த பிச்சைக்காரப் பாட்டி அதிதியின் அருகில் வர முயற்சி செய்ய “சீ சீ போ” என்று தோழிகள் அருவருத்தபடி நகர்ந்தனர்.

“What is the deal with this lady? எப்போ பாரு “டி” “டி” ன்னு சரியான டி பார்ட்டி” என்று கேலி செய்தபடி அங்கு வந்த ஒரு பேருந்தில் ஏறினார்கள். கூட அதிதியும் சிரித்தபடி ஏறினாள். பேருந்து சவாரி முழுவதும் அந்த பாட்டி பற்றி முதலில் கேலி செய்தனர். போலித்தனம்

பின்னர் அந்த வண்டியில் இருக்கின்ற இளைஞர்களை சீண்டி தங்களுக்குள் சிரித்து கேலி செய்தனர். அதிதி பொதுவாக இந்த மாதிரி சீண்டல்களை தொடங்க மாட்டாள். ஆனால் அவர்களுடன் சேர்ந்து சிரிக்க விட்டால், கூட சேர்த்து கொள்ள மாட்டார்கள் என்று பயத்திலேயே சிரிப்பாள்.

போலித்தனம்

கல்லூரி வளாகத்தில் பேருந்து நின்ற பொழுது எழுந்த அதிதியை அமர்த்தினர் “இன்னைக்கு நம்ம காலேஜ் கட் அடிக்கறோம். சும்மா வெளியே சுத்த போறோம். உட்காரு”.

“நாள் பூராவுமா? அம்மாவுக்கு தெரிஞ்சா ? “

“நீ என்ன சின்ன குழந்தையா அம்மா பயம் ஆட்டுக்குட்டி பயம்னு. Common Adi”.

இவளை சிறிது நேரம் சீண்டி கேலி செய்தனர். அதிதியும் “சரி ஒரு நாள் தானே” என்று பயத்தோடு மனதை சமாதானம் செய்து கொண்டாள். இளமை தரும் தைர்யம். “பாத்துக்கலாம் ” என்று குருட்டு நம்பிக்கை.

நாள் முழுவதும் நண்பர்களின் கூடயே சுற்றினாள். அனைவரும் சினிமா சென்றனர். ஒரு பெரிய மால் உள்ளே சென்று சுற்றி வந்தனர். அப்புறம் மெரீனா கடற்கரை சென்று அமர்ந்து போகிற வருகிறவரை கேலி செய்தனர். போலித்தனம்

வீட்டில் இருந்து திருடிய காசு தீர்ந்து போயிற்று. அம்மா கஷ்டப்பட்டு உழைத்த ஒரு மாத காசு.

அவ்வப்பொழுது உருத்திய மனதை அடக்கி தோழிகளோடு பொருந்திப்போக நினைத்தாள். அந்த வயது கேலிகளும், சிரிப்புகளும், மனதிற்கு குஷி தானே. மாலை வர வர, தோழிகள் வீட்டுக்கு செல்ல  ஒவ்வொரு வராக கழண்டு கொள்ள தொடங்கினர். இவளிடம் அதிக பணமும் இல்லை என்பதை புரிந்து கொண்டோ கொள்ளாமலோ விலகி நழுவினர். அவர்களிடம் எனக்கு பணம் வேண்டும் என்று எப்படி கேட்பது என்று யோசித்தபடியே அதிதி தயங்கினாள்.

திடீரென்று மழை இருட்டி பெய்ய தொடங்க, கடைசியாக இருந்த தோழியும் வரேன் என்று படக்கென்று அங்கு வந்த ஆட்டோவில் ஏறி சென்று விட்டாள்.

இருட்டு, கையில் காசு இல்லை, மழை, தனியாக இருக்கிறோம், அப்பொழுது தான் அதிதிக்கு தான் எவ்வளவு பெரிய மக்கு என்று புரிந்தது. தோழிகளின் சுயநலமும் புரிந்தது  வீட்டிற்கு எப்படி போவது? காசில்லாமல் பேருந்தில் செல்ல முடியாது. நடந்து போனால் ஒரு மணி நேரம் நடக்க ஆகும்.  தனியாக எப்படி நடப்பது. “திக் திக் ” என மனம் அடித்தது.  தனியாக எப்படி நடப்பது? குடை கூட இல்லை.

மழையில் ! இருட்டில் ! தனியாக!

பயத்தில் அந்த கடையின் நிழலில் எவ்வளவு நேரம் நின்றிருப்பாளோ தெரியாது. திடீரென்று ஓரத்தில் முரட்டுத்தனமான உருவத்தில் தோன்றிய ஒரு ஆளை பார்த்து பயம் கவ்வியது.  செய்திகளில் படிக்கும் அத்தனை கோர சம்பவங்களும் நினைவுக்கு வந்தது.

“டிடின் டிடின்” என்ற சத்தத்தோடு “அம்மா ஒரு டி வாங்கி குடும்மா ” என்ற பழக்கமான அந்த குரல் தேன் போல காதுகளில் வந்து விழுந்தது.

இவளை கடந்து போன பாட்டியை நிறுத்தி, “பாட்டி நீ எங்க இங்க?” என கேட்டாள் அதிதி. இவள் முகம் அவளுக்கு நினைவிற்கு இல்லை போலும்.

மெதுவாக “டி வாங்கி தரியா ?” என்று கேட்டாள் அவள்.

“வாங்கி தரேன். நீ என்னோட வரியா? என்று கேட்டாள் அதிதி.

குவளையை எடுத்து முன் நீட்டினாள் பாட்டி.

“வாங்கி தரேன் பாட்டி. டி கடை கொஞ்சம் தூரம் தள்ளி. என்னோட வா என இழுத்தாள்”.

காலையில் இந்த அழுக்கு பாட்டியின் வாசம் கேலியாக இருந்தது, இப்பொழுது அது துணையாக தெரிந்தது. வழக்கம் போல மனதில் தோன்றிய உறுத்தலை அடக்கினாள் அதிதி. இப்போ இதை யோசிச்சா பத்திரமா வீட்டுக்கு போக முடியாது. தலையை சொரிந்த பாட்டியை கைப் பிடித்து நடக்க தொடங்கினாள். மழையில் மெதுவாக நனைந்த படி இருவரும் நடந்தனர். இரவில் குளிர் காற்று உடலை பயத்தில் இன்னும் நடுங்கியது.

“ரொம்ப தூரம் நடக்கணுமே… பாட்டி உன்கிட்ட காசு இருக்கா?”

குவளையை மீண்டும் காட்டினாள் அவள்.

“ஐயோ இது பயித்தியம் போலவே”..

நடந்தபடி நிலைமையை யோசித்தாள் அதிதி. சுயநலமான தோழிகள் போல தானும் சுயநலமாக நடப்பது புரிந்தது.  இப்போதைக்கு பாட்டி தான் கொஞ்சம் துணை தெரியாத காலி பயலுகளுக்கு இந்த கிழவி தேவலை. கொஞ்சம் வேகமாக நடந்துட்டு வீடு போய்டலாம் என்று மனதை திடப்படுத்திக்கொண்டாள். கூட நடந்த பாட்டி கொஞ்ச நேரம் கழித்து ஏதோ பினாத்த தொடங்கினாள். அவள் சிறு வயது கதை போலும். ஒன்னும் புரிய வில்லை. காசு, கஷ்டம், அம்மா, வேலை என்று உளறினாள்.

“என்ன சொல்ற பாட்டி”

திருப்பி குவளையை இவள் முன் நீட்டினாள் அவள்.

“ஹய்யோ. நீ என்னோட வா நான் என் வீட்டுல இருந்து சாப்பாடே  தரேன்”. “வேண்டாம் வேண்டாம் என்று பலமாக தலை அசைத்து ஓட”.

“சரி சரி நான் டியே வாங்கி தரேன்” என கைப்பிடித்து மீண்டும் இழுத்தாள்.

சிறிது நேரம் அமைதியாக நடந்தாள் அதிதி. இந்த பாட்டி இவள் வீடு அருகில் பிச்சை கேட்க ஆரம்பித்த நாளில் இருந்தே வெறும் டி மட்டும் தான் கேட்கிறாள் வேற சாப்பிட மாட்டாளா? தான் யார் என்று சொல்ல தெரியவில்லை. நிறைய உளறல்களில் இருந்து ஏதோ கஷ்டப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருப்பாள் என்று புரிகிறது. வாழ்க்கை தந்த பாடம். வீதியில் இப்பொழுது.

எப்படி வெறும் டி மட்டுமே சாப்பிட்டு இருக்கிறாள்.? ஏன் வெறும் டி மட்டுமே சாப்பிடுகிறாள்?

வீடு அருகில் வர வர, ஒரு மணி நேரமாக கூட நடந்த பாட்டியின் மீது கொஞ்சம் இரக்கம் வந்தது அதிதிக்கு. பாவம் இவளால் தான் கொஞ்சம் தைரியமாக நடக்க முடிந்தது. சுயநலமாக  விட்டு விட்டு ஓடிய தோழிகள் மீது கொஞ்சம் கோவம் வந்தது. திருட்டு தனமாக பணம் திருடிய தன் மீதே கோவம் வந்தது.

தெருக்கோடி வந்ததும், “வீட்டுல இருந்து அம்மா பண்ணின இட்லி ஏதாவது இருக்கும் எடுத்தாரேன் இரு ” என்ற ஒரு பிராயச்சித்தமாக கூறினாள்

பாட்டி பிடிவாதமாக டி மட்டும் போது என குவளையை நீட்ட, “ஏன் வேற சாப்பிட மாட்டியா ? வயிறெல்லாம் ஒட்டி போய் இருக்கு. சாப்பிட்டு பல மாசம் ஆகி இருக்கும் போல”

இவளை உறுத்து பார்த்த பாட்டி, “டி குடிச்சா ரோட்டோரமா இருட்டினதுக்கப்புறம் கூட ஒண்ணுக்கு போகலாம் அதனால  டீயே போதும்”. என நசுங்கிய குவளையை நீட்டினாள் பாட்டி.

அதுவரை அவள் கூறியதில் இருந்த விஷயங்களை விட, இப்பொழுது சொல்லியது மடேரென்று உரைத்தது அதிதிக்கு. நிதர்சனம் !

போலித்தனம் கலக்காத நிதர்சனம் !

காலையிலுருந்து இவளை கேலி செய்தது, தன்னுடைய சுயநலம், தோழிகளின் நடத்தை, அம்மாவின் அருமை, வாழ்க்கையின் நிதர்சனம்!

புரிய வைத்த பாட்டி குவளை தேநீரோடு நடந்து மழையில் எங்கோ  கரைந்தாள்.

  • லட்சுமி சுப்பு

Comments (3)

Trackback URL | Comments RSS Feed

  1. Usha Sundar says:

    Very nice Lakshmi! Covered many aspects in this story.

  2. Usha Sundar says:

    Very nice Lakshmi! You have covered many aspects in this story.

  3. Harinee says:

    Beautiful, Lakshmi. Very true. Reality of life. Wonderfully written. Proud of you. Congratulations on the 50th.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad