\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

கேட்பரீஸ்…

ன்னா … கேட்டேளா இந்தக் கதைய?” – வழக்கமான ராகத்துடன் லக்‌ஷ்மியின் கேள்வி வந்து விழ, அன்றைய தினசரியை மேய்ந்து கொண்டிருந்த கணேஷ் தலையை நிமிர்த்தி, கண்ணாடியை மூக்கின் மத்தியப் பகுதிக்குச் சற்று இறக்கி, அதற்கு மேலே கண்களை ஊடுருவி, அவளிருக்கும் திசை பார்த்து, “என்னடி, என்ன ஆச்சு?” என்றான்.

“வேலண்டைன்ஸ் வீக் பத்தித் தெரியுமான்னா?” – தனது மொபைல் ஃபோனில் வந்து குதித்த லிங்க்கின் மூலம் படித்துத் தெரிந்து கொண்டு அவனிடம் கேட்டாள். “என்னா, வீக்கா?” – அந்த ஒரு நாளை நினைவில் வைத்துக் கொண்டு ஏதேனும் பரிசு வாங்கித் தருவதே அவனுக்கு பகீரதப் பிரயத்தனம். இந்த நிலையில், ஒரு வாரமா? பைத்தியக் காரர்கள் என்று நினைத்துக் கொண்டு, செய்தித்தாள் படிப்பதைத் தொடர்ந்தான் கணேஷ்.

இந்தச் சந்தடியில், மொபைல் ஃபோன் பார்த்துக் கொண்டே அவனருகே வந்து அமர்ந்த லக்‌ஷ்மி நாற்பதுகளின் மத்தியில் இருப்பவள். புதிதாகப் பார்க்கும் யாரும் அவளை முப்பதுக்கு மேல் என்று ஒப்புக் கொள்ள மாட்டார்கள். பரந்த நெற்றி, இயல்பாகவே ஒழுங்காய் அமைந்திருக்கும் கருநிறப் புருவங்கள், பார்ப்பவரைப் பார்வையால் விழுங்கிவிடும் அழகான முட்டைக் கண்கள், சற்றுப் பெரிதாக இருந்தாலும் அந்த வட்ட முகத்திற்கேற்ற வடிவான மூக்கு, பிரம்மன் சிரத்தை எடுத்துக் கொண்டு சிறப்பாய், வரிசையாய்ச் செதுக்கிய முத்துப் போன்ற வெண்ணிறப் பற்கள், அவை சிரிக்கும் பொழுது, விஸ்வாமித்திரன் கூட ஒருமுறை மேனகைக்குத் தெரியாமல் பார்த்து ரசித்துக் கொள்வான் என்பதே நிச்சயம். இந்த வயதிலும் வசீகரிக்கும் முகப்பொலிவு கொண்ட லக்‌ஷ்மி, ஏதோ பதின்பருவப் பெண்போல இன்றும் தனது கணவனையே சுற்றி வந்து கொண்டிருப்பாள். இந்த மே மாதம் வந்தால் இவர்களிருவருக்கும் திருமணம் முடிந்து இருபத்து நான்கு ஆண்டுகள் நிறைவாகிறது. திருமணத்திற்கு முன்னர் சில வருடங்கள் காதலித்ததையும் சேர்த்தால், ஒருவருக்கொருவர் அறிமுகமாகி முப்பது வருடங்களைக் கடந்தாகிவிட்டது. ஆனால், அவளின் காதல் இன்று காலையில் மலர்ந்ததுபோல் எப்பொழுதுமே ஃப்ரெஷ்.

கணேஷும் ரொமான்ஸ்ஸானவன்தான் என்றாலும், அவளளவு இல்லையென்றுதான் சொல்ல வேண்டாம். திருமணத்திற்கு முன்னரே தபாலில் நாடு விட்டு நாடு வேலண்டைன்ஸ் டே வாழ்த்தட்டைகளையும், பரிசுகளையும் பல நாட்களுக்கு முன்னமேயே திட்டமிட்டு அனுப்பியவள் அவள். ஒவ்வொரு வாழ்த்தட்டைகளும் பலப்பல விதமாய் காதல் வசனங்களை உதிர்க்கும். அந்த அட்டைகளைப் பிரித்துப் படித்தால் மட்டுமே அப்படி ஒரு நாளிருக்கிறது என்று நினைவுக்கு வரும் அவனுக்கு. திருமணத்திற்குப் பிறகு, ரோஜாப்பூ வாங்கிவருமளவுக்கு மாறியிருந்தாலும், அவளது ரசனை, அணு அணுவாய் அனுபவிக்கும் ஆனந்தம், சிறுசிறு விஷயங்களையும் பெருமளவு நினைத்துப் பூரித்துப் போகும் குழந்தை போன்ற அன்பு அனைத்தும் கொண்டவள் அவள். பல வருட அமெரிக்க வாழ்க்கை பலவற்றைக் கற்றுக் கொடுத்திருந்தாலும், இந்த அடிப்படைத் தன்மை அவளைவிட்டு அகலவில்லை என்பதை அவன் உணர்ந்து ரசிப்பவன்.

“என்னடி, ஒரு வாரம் செலப்ரேட் பண்றதுக்கு என்னடி இருக்கு? .. எல்லாம் வெறும் கமர்ஷியல்டீ” என்று ப்ராக்டிகலாகச் சொன்னான். “இருக்கலாம்னா… ஆனாலும், அதிலயும் ஒரு க்யூட்னஸ் இருக்கு பாருங்கோளேன்..” என்று தனது ரசனையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள் லக்‌ஷ்மி. “சரி, இவாள்லாம் என்னடி பண்ணுவா, ஒரு வாரத்துக்கு?” நிஜமாகவே தெரியாததால் கேட்ட கேள்வி. “நானும் படிச்சுப் பாத்தேன்னா… ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு தீம் வெச்சுருக்கா; ரோஸ் டே, ப்ரபோஸல் டே, சாக்லெட் டே, டெட்டி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே, அதுக்கப்புறம் வேலண்டைன்ஸ் டே” என்று சற்று முன்னர் படித்து அறிந்ததைக் குறுகுறுக்கும் கண்களோடு ஆர்வமாய் அவனிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள். இதெல்லாம் அனைவரின் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை வியாபாரம் எனும் பெயரில் கொள்ளையடிக்கும் முயற்சி என்பதில் அவன் தெளிவாய் இருந்தான். அவளிருப்பதைக் கண்டு கொள்ளாததுபோல், இன்று எந்தக் கோவிலை எந்த அரசியல்வாதி அசிங்கப்படுத்தினார் என்பதை செய்தித்தாள் வாயிலாக அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதைத் தொடர்ந்தான்.

“ஏன்னா, இன்னைக்கு சாக்லெட் டேயாம்.. உங்களுக்கு ஞாபகம் இருக்கா, எனக்கு என்ன சாக்லெட் பிடிக்கும்னு?” அவள் கேட்டு முடித்த விநாடி “செத்தடா சேகரு” என உள்மனது எச்சரிக்க, “ம்ம்.. என்ன, என்ன கேட்ட?” யோசித்துப் பார்த்து, மூளையின் மூலையிலெல்லாம் பதிலைக் குடைந்து தேட அவகாசம் வாங்கத் தொடங்கினான். “கேட்பரீஸ்ஸா, ஃபைவ் ஸ்ட்டாரா” என்று மனப் போராட்டம். தவறாகச் சொன்னால் முடிந்தது கதை என்று அவனுக்கு நன்றாகத் தெரியும். புத்திசாலித்தனம் என்று நினைத்துக் கொண்டு, “நீ கூட சாப்பிட்டுத் தூக்கிப்போட்ட சாக்லெட் பேப்பரைக் கலெக்ட் பண்ணுவியே, பைத்தியக்காரி” என்று செல்லமாகக் கூறிச் சிரித்தாய். “அது இருக்கட்டும், என்ன சாக்லெட்னு நினைவுக்கு வந்துதா, இல்லையா” அவள் விடுவதாக இல்லை. இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் வீக்கெண்ட் க்ளீனிங்கின்போது திறந்து பார்த்த ஷூ பாக்ஸில் முப்பது வருடத்திற்கும் பழையதான சாக்லெட் பேப்பர் இருந்ததே, அது கேட்பரீஸ்ஸா, பைவ் ஸ்ட்டாரா மண்டையைக் குழப்பியும் ஒரு தெளிவு வரவில்லை. கடவுள் மேல் பாரத்தைப் போட்டு, ஏதோவொன்றைச் சொல்லலாம் என்று முடிவு செய்கையில், அவளது கைபேசி ஒலிக்க, அவள் “ஹல்லோ” சொல்லிக் கொண்டே எழுந்து செல்ல, கடவுள் புண்ணியத்தில் தப்பித்தோம் என அவன் நியூஸ் பேப்பர் படிப்பதைத் தொடர்ந்தான்.

ப்படியெல்லாம் காதலித்தார்கள்! இந்தக் காலக் காதலர்களைப் போல் வீக்கெண்டானால் பார்க், சினிமா, பீச்சென்று சுற்றிக் கொண்டிருப்பதெல்லாம் சாத்தியமில்லை. இவர்களும் பார்க், சினிமா, பீச்சென்று சுற்றியிருக்கிறார்கள் – ஒரு பத்துப் பதினைந்து குடும்ப உறுப்பினர்களுடன். கோல்டன் பீச்சில், வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்ட ரோலர் கோஸ்ட்டர் அவளையும் சுமந்து கொண்டு மேலே செல்லும்பொழுது ஒரு கையில் உயிரைப் பிடித்துக் கொண்டு, மறுகையில் அவனைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருக்கையில், மறுபக்கம் அமர்ந்திருந்தது அவன் அம்மா. ரோலர் கோஸ்ட்டர் சுற்றி முடிந்து, கீழே இறங்கி வருகையில் அவன் கையில் அவளின் நகம் பதித்த தடத்தின் ஆழம் மிக அதிகம். ‘நம்மவர்’, ‘ரங்கீளா’, இன்னும் இரண்டு பெயர் ஞாபகமில்லாத கன்னடப் படங்கள் எனத் திரையரங்கு சென்று அருகருகே அமர்ந்து பார்த்தாலும், அந்த மொத்த வரிசை இருக்கைகளையும் ஆக்ரமித்தது அவர்களது உறவுகளே. மெரினா பீச்சில் இருவரும் சேர்ந்து பலூன் சுட்டுக் கொண்டிருந்தாலும் பின்னால் நின்ற வரிசையில் பாதிப் பேர் அவன் உறவுகளே.

ஊர் உலகுக்குத் தெரியாமல், புதர் மறைவுக்குச் சென்று மணிக்கணக்காய்ப் பேசிக் கொண்டிருக்கும் காதலர்களுக்கு மத்தியில், அனைத்து சொந்த பந்தங்களுக்கும் நடுவே அரை நொடியும் தனித்து விடப்படாத நிலையிலும், அவர்களால் காதலை வெளிப்படுத்த முடிந்தது, காதலிக்க முடிந்தது. அன்று என்ன உடை அணிந்து வெளிச்செல்வது என்பது பார்வையிலேயே பரிமாறிக் கொள்ளப்படும். மாலையில் சற்றுத் தாமதமாக வீடு திரும்பினால் இரு கண்கள் கனலைக் கக்க, மற்றிரு கண்கள் மன்னிப்பை வெளிப்படுத்தும். பலருக்கு நடுவிலும், நேருக்கு நேர் பேசாமல் காதலைப் பறிமாறிக்கொள்ள முடிந்த அவர்களால், பல மைல் தூரம் விலகி வாழ்ந்த போதிலும் காதலை மனதளவில் தொடர முடிந்தது.

ஃபோன் பேசிவிட்டுத் திரும்பிய லக்‌ஷ்மியின் முகத்தில் பெரிய அளவு கலவரம். “ஏன்னா, நம்ம மாலதி இருக்காளே….” அதற்கு மேல் பேச்சுவராமல் பெருமூச்சு வாங்கும் மனைவியைப் பார்த்து, கலவரத்தை உணர்ந்த கணேஷ், எழுந்து வந்து அவளை அணைத்து ஆசுவாசப் படுத்தலானான். “என்னடி, என்ன ஆச்சு… என்ன ஃபோன்ல.. மாலதிக்கு என்ன?”. கேள்வி கேட்கும் கணவனின் தோளில் சாய்ந்த லக்‌ஷ்மியின் கண்களிலிருந்து கண்ணீர் வரத் தொடங்கியதைக் கண்ட கணேஷ் அதிர்ச்சியடைந்தான்.

மாலதி லக்‌ஷ்மியின் உயிர்த்தோழி கமலாவின் மகள். சென்ற வருடம் பனிரெண்டாம் வகுப்பில் ஸ்ட்டேட் ஃபர்ஸ்ட் வாங்கியவள். ஸ்ட்டேட்டிலிருந்த அனைத்துக் கல்லூரிகளும் அவளுக்கு சீட் கொடுக்கக் காத்திருக்க, வீட்டிற்குப் பக்கத்திலேயே இருந்த பொறியியற் கல்லூரியில் சேர்த்தனர் கமலாவும் அவள் கணவரும். பள்ளியில் படிப்புத் தவிர வேறு எதுவும் நினைக்காத மாலதி, படிப்பு மீது முழுவதும் வெறுப்ப வந்தவளாகக் கல்லூரியில் சுற்றிவர, அவளுக்கு ஆதரவாக இருந்த ரித்விக் மீது பாசம் வைத்து, சில தினங்களிலேயே அது காதலாய் மலர, இதனை அரசல் புரசலாகத் தெரிந்து கொண்ட பெற்றோர் அவள்மீது சீரிப் பாய, கோபத்தாலும், பயத்தாலும் மாலதி தற்கொலைக்கு முயற்சி செய்தாள். அந்த விஷயத்தைத்தான் லக்‌ஷ்மி ஃபோனில் கேட்டுவிட்டு அழத் தொடங்கியிருந்தாள். “ஏன்னா, நாம உடனே அவாத்துக்குப் போயாகணும்”. மறுபேச்சில்லாமல், வேட்டியை இழுத்துச் சரிசெய்து கொண்டு, கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

சோஃபாவில் அமர்ந்து மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்த சுதாகர், தரையில் அமர்ந்து சேலைத் தலைப்பைச் சுற்றி மூக்கையும் வாயையும் மூடித் தான் அழுவது வெளியில் தெரியாத மாதிரி அமர்ந்திருந்த கமலா; விரிந்த தலைமுடியுடன், மடியில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு, ஆனால் மனத்தை அதில் செலுத்தாமல், அழுகையுடன் தனது அறையில், படுக்கையின்மீது அமர்ந்திருந்த மாலதி. கிட்டத்தட்ட சாவு வீடுபோலக் காட்சியளித்துக் கொண்டிருந்தது கமலாவின் வீடு. கணேஷும், லக்‌ஷ்மியும் வாசலில் காரைப் பார்க் செய்துவிட்டு உள்ளே வருவதைப் பார்த்தவுடன், எழுந்து ஓடி வந்தாள் கமலா. லக்‌ஷ்மியைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழ, சுதாகர் கணேஷின் கையைப் பிடித்துக் கொண்டு சற்றே கண்கலங்க சோஃபாவில் அமர்த்தினார். இவர்களின் வருகையைப் பார்த்த மாலதி, தனது அறையிலிருந்து வெளிவந்து கணேஷை வந்து ஹக் செய்து கொண்டாள். அவள் பிறந்த சில மணி நேரத்தில் அவளைக் கையிலெடுத்துக் கொஞ்சியவன். அப்போது தொடங்கி, இப்போது வரையிலும் சொந்த மகளைப்போலப் பழகுபவன். அருகில் வந்த மாலதியை உச்சந்தலை தொட்டு, தன்னை நோக்கி இழுத்து அணைத்துக் கொண்டான். “நல்லாக் கேளுடா” என மௌனத்தைக் கலைத்த சுதாகரைக் கை ஜாடையால் அமைதியாக்கிவிட்டு, ஒன்றும் பேசாமல் தொடர்ந்தான் கணேஷ்.

பல மணித்துளிகளுக்குப் பிறகு மௌனத்தைக் கலைத்த மாலதி, “நீங்களுந்தானே லவ் மேரேஜ்; காலேஜ் டயத்துல லவ் பண்ண ஆரம்பிச்சிட்டீங்கதானே.. நான் பண்ணா தப்பா?” நேரடியான கேள்வியை அவள் எழுப்ப, அவளின் அப்பா கொதித்தெழ, அம்மா அடித்தொண்டையில் கத்த ஆரம்பிக்க, லக்‌ஷ்மி என்ன சொல்வதென்று திகைத்து நிற்க, கணேஷ் நிதானமாய் அவளைப் பார்த்துக் கேட்டான் “எங்க அப்பா அம்மா உடனே சரிப்பா, கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்ல எங்க ரெண்டு பேர் கையையும் சேத்து வச்சுட்டாங்களா?”. நிதானமான கேள்வி. சற்றும் எதிர்பாராத மாலதி, “என்ன, உங்க பேரண்ட்ஸ்ஸும் ஒத்துக்கலயா?” என்றாள். “எந்தப் பேரண்ட்ஸ்ஸும் ஒத்துக்க மாட்டாங்க; ஒத்துக்காம இருக்குறது கன்வென்ஷனல் இல்ல; உனக்கு இப்ப காதலிக்கிறத விட முக்கியமான ப்ரையாரிட்டி இருக்குன்னு சொல்றது” என்று வாழ்க்கையின் நிதர்சனத்தை விளக்கத் தொடங்கினான் கணேஷ்.

“அஞ்சு வருஷம் … அஞ்சு வருஷம் காத்திருந்தோம். பல வகைகள்ல எங்க முடிவுல இருந்த உறுதியை ரெண்டு ஃபேமிலிக்கும் கன்வே பண்ணிக்கிட்டேதான் இருந்தோம்… ஆனா, எக்காரணத்தக் கொண்டும் வீட்டை விட்டுட்டு ஓடிப்போய் வீட்டுக்குத் தெரியாமக் கல்யாணம் பண்ணிக்கிறதுல்லை அப்டிங்கிறதுல உறுதியா இருந்தோம். தற்கொலைங்கறதெல்லாம் எப்டி நெனச்சுப்பாக்க முடியும்? இன்னும் சொல்லப் போனா, ஒருத்தி நம்மள உயிரா நேசிக்கிறான்னு தெரிஞ்சப்ப நம்ம உயிர எப்படி விட முடியும்? அது அவளுக்குச் சொந்தமானதில்லையா?” வழக்கமாக தத்துவம் பேசும் கணேஷ், தனது மகள் போன்ற மாலதிக்கு உணர்வு பூர்வமான கேள்வியை அறிவுபூர்வமாய்க் கேட்டுக் கொண்டிருந்தான். அதனைக் கேட்க மாலதிக்கு வியப்பு அதிகரிக்க, தூரத்திலிருந்து தன் கணவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த லக்‌ஷ்மி, அந்த ஷூ பாக்ஸுக்குள் பத்திரமாக வைக்கப்பட்டிருந்த முப்பது வருடங்களுக்கு முன்னர் அவன் சாப்பிட்டுவிட்டுத் தூக்கி எரிந்திருந்த கேட்பரீஸ் சாக்லெக் கவரை நினைத்துப் பார்த்துக் கொண்டாள். இது போன்ற ஒரு காதலனுக்காக இந்தச் சாக்லெட் காகிதத்தை முப்பது வருடங்களென்ன, முன்னூறு வருடங்கள்கூட காப்பாத்தி வைத்திருக்கலாம் என்று தோன்றியது.

 

வெ. மதுசூதனன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad