\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

விடாமுயற்சி – திரை விமர்சனம்

1997 ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளிவந்த ‘ப்ரேக்டௌன்’ எனும் திரைப்படத்தைத் தழுவி வந்த தமிழ்த் திரைப்படம் “விடாமுயற்சி”. இருபத்தி ஏழு வருடங்களுக்கு முன்னர் பார்த்த கர்ட் ரஸ்ஸல் முழுவதுமாக மறந்து விட்டிருக்க, நம்ம ‘தல’யின் அளவான நடிப்பு அந்தத் திரைப்படத்தை ஒப்பீடலாக மனதிற்குள் கொண்டு வரவேயில்லை என்பதுதான் உண்மை.

காதலித்துத் திருமணம் செய்து கொண்ட அஜித்தும், த்ரிஷாவும் சோவியத் யூனியனின் ஒரு பகுதியான அஜர்பெய்ஜானின் தலைநகரான ‘பாகு’வில் வசித்து வருகின்றனர். சில பல காரணங்களுக்காக விவாகரத்து செய்வது என்ற முடிவுக்கு வந்து விட்டனர். அஜித் எப்படியாவது உறவைச் சரிசெய்து விடலாமென்று நினைத்தாலும், த்ரிஷா ஒத்து வரவில்லையென்ற சூழலில், அதே நாட்டில் ஐநூறு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ‘ட்ப்ளிஸி’ என்ற ஊரில் வசித்து வரும் த்ரிஷாவின் பெற்றோர் இல்லத்திற்குச் செல்ல முயற்சிக்கின்றனர். கடைசியாக ஒரு ‘ரோட் ட்ரிப்’ இருவரும் சேர்ந்து செல்வது என்று முடிவு எடுத்துப் புறப்படுகின்றனர். ‘ப்ரேக் டௌன்’ ஆங்கிலப் படத்தில் நியூ மெக்ஸிகோ பாலைவனப் பகுதிகளைக் காட்டியது போல், இதுவும் மலைகள் சூழ்ந்த ரம்யமான பாலை நிலங்களே.

ரோட் ட்ரிப் செல்லும் தொலைவில், அவர்களது லெக்ஸஸ் எஸ்.யூ.வி. ப்ரேக் டௌன் ஆகிவிட, வழியில் ட்ரக் ட்ரைவ் செய்து கொண்டு வரும் அர்ஜுன் (ஆம், அதே அக்‌ஷன் கிங்க் அர்ஜுன்தான்) மற்றும் ரெஜினா கஸாண்ட்ராவின் உதவியை நாடுகின்றனர். அர்ஜுன் த்ரிஷாவை அருகிலிருக்கும் பார் ஒன்றில் இறக்கிவிட்டுச் செல்வதாகவும், அங்கிருந்து டோ ட்ரக் அழைத்து வந்து இவர்களது காரைச் சரிசெய்துவிடலாம் என்பதாகவும் கூற, கணவன் மனைவியாக இருவர் இருப்பதால் நம்பி அஜித் அனுப்பி வைக்கிறார். சற்று நேரக் காத்திருப்புக்குப் பிறகு, அவரே காரைச் சரிசெய்து, அவர்கள் கூறிய பாருக்கு ஓட்டிச் சென்றுவிடுகிறார். ஆனால், அங்கு சென்று பார்த்தால் த்ரிஷாவைக் காணவில்லை. பாரில் இருப்பவர்களும் எந்தக் குறிப்பும் தருவதாக இல்லை. அதிலிருந்து தொடங்கி, மனைவியைத் தேடி அலைவதே படத்தின் முழுக் கதை. மனைவியைக் கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கும் முயற்சியில் வேறென்னவெல்லாம் சோதனைகளைச் சந்திக்கிறார், அந்தச் சோதனைகளையெல்லாம் தனது சாதனைகள் மூலம் எவ்வாறு சமாளிக்கிறார் என்பதே எஞ்சிய திரைப்படம்.

கதையின் மையக்கரு ‘ப்ரேக் டௌன்’ படமாக இருந்தாலும், பலவித கிளைக்கதைகள், ஃப்ளாஷ் பேக் போன்றவை நமது தமிழுக்கே உரிய சிறப்புப் பாணியில் மாற்றப்பட்டிருக்கிறது. ஒரு சில மாற்றங்களைத் தவிர்த்திருக்கலாம் என்பது தவிர, படத்தை நல்ல முறையில் எடுத்திருக்கின்றனர் என்றே கூறவேண்டும். ஒரு மெச்சூரான, தனது பலம் முழுதும் உணர்ந்து அதனைப் பெரிதாக வெளிக் காட்டிக் கொள்ளாத அரிஸ்ட்டோக்ராட் கேரக்டர் அஜித்துடையது. நிஜ வாழ்விலும் அவர் பார்ப்பதற்கு அதுபோல இருப்பதால், அந்தக் கேரக்டர் செய்வது அவருக்கு ஒன்றும் பெரிய கடினமான வேலையல்ல. வழக்கமாகப் பெரிய அளவில் காட்டப்படும் ஹீரோ இன்ட்ரொடக்ஷன் எதுவுமில்லாமல், எடுபுடி தொடங்கி ஆண், பெண், இளைஞன், கிழவன், மூதாட்டி என அனைவரிடமும் கத்தி, துப்பாக்கிக் குண்டு, வில்லம்பு, இரும்புக் கம்பி என எல்லா வகைகளிலும் அடி வாங்கும் கதாபாத்திரம் அவருடையது. ஒரு நிலையில் அவர் எப்பொழுதுதான் திரும்ப அடிக்கப் போகிறார் என்று நம் போன்ற சாதாரண ரசிகர்களே இருக்கையில் நெளிய ஆரம்பித்து விடுவார்கள் என்றால், அவரின் ரசிகர்களின் நிலையைக் கேட்கவா வேண்டும்? படத்தின் பின் பகுதியில் வைக்கப்பட்ட சண்டைக் காட்சிகளில் இந்தியத் திரைப்படங்களுக்குத் தேவையான ஹீரோயிஸம் கலக்கப்பட்டாலும், சற்று உண்மை நிலையைக் காட்டும் அளவில் சில சண்டைக் காட்சிகள் அமைந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. அர்ஜுன் இன்னமும் எப்பொழுதும் போல தொப்புளுக்குக் கீழே ஜீன்ஸைப் போட்டுக் கொண்டு, பெரிய இலச்சினை வைத்த பெல்ட் அணிந்துகொண்டு, ஒரு லெதர் ஜாக்கெட்டைக் கையில் பிடித்துக் கொண்டு, கீழ் உதட்டில் நாக்கைக் கடித்து எச்சில் துப்பிக் கொண்டு, ‘தெரிக்க’, என்று சொல்வது சற்றுச் சலிப்பாக இருந்தாலும், அறுபத்திரண்டு வயதிலும் இளைஞர் போலத் தோற்றத்தையும், சண்டைக் காட்சிகளில் வேகத்தைக் காட்டுவதையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நாற்பத்து மூன்று வயதில், த்ரிஷாவின் அழகு சற்றும் குறையவில்லை. ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் அஜித்தின் வயது முகத்தில் தெரியுமளவுக்கு, அவரின் வயது தெரியவில்லை என்பதுதான் உண்மை. அது தவிர, சொல்லிக் கொள்ளும்படியான நடிப்பு வாய்ப்புகள் அவருக்கு இல்லை. ரெஜினா அவரது கதாபாத்திரத்திற்கு ஒன்றி வருவதாக நமக்குத் தெரியவில்லை. மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுக்கப்பட்ட பணியை நன்றாகவே செய்திருக்கின்றனர்.

அஜர்பெய்ஜான் நாட்டில் பேசப்படும் ‘அஜெரி’ மொழி அந்த நாட்டின் கதாபாத்திரங்களாக வருபவர்கள் பேசுகிறார்கள். சில வருடங்கள் அங்கே வாழ்ந்திருந்த அஜித் அந்த மொழியை அரைகுறையாகப் பேசுவதையும், அந்த ஊரிலுள்ளவர்கள் ஆங்கிலம் அரைகுறையாகப் பேசுவதையும், காவல்துறை அதிகாரி ‘ட்யூயல் லிங்கோ’ போன்ற கைபேசி ஆப்களின் உதவியுடன் மொழிமாற்றம் செய்வதும் இயல்பாக அமைந்துள்ளது. பாலைவனம் சூழ்ந்த நீளமான நெடுஞ்சாலைகளும், சுற்றிலும் இருக்கும் இயற்கையான பெரிய மலைகளும், அவற்றின் நடுவே மொத்தமாகவே வந்து போகும் ஓரிரு வாகனங்களும், அவற்றிற்கு நடுவே இருநூறே குடும்பங்கள் மட்டுமே வாழும் ஒரு சிறிய கிராமமும், அந்தக் கிராமத்திலுள்ள ஒரு காவல் நிலையமும், வங்கியும், பப்ளிக் டெலிஃபோன் பூத்தும் என அனைத்தையும் அந்த ஹாலிவுட் படத்தில் வருவது போலவே மிகவும் இயல்பாகக் காட்டியுள்ளனர், தமிழ்த் திரைப்படக் குழுவினர் பல விதங்களில் முன்னேறியுள்ளனர் என்பதை நாம் நிச்சயமாக ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 

அனிருத்தின் இசை சில இடங்களில் நம்மை இருக்கையின் நுனிக்கு அழைத்துச் செல்கிறது. பல இடங்களில், இருக்கையின் அடியிலிருந்து யாரோ வெடி குண்டு போடுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இரைச்சல் அதிகம். பாடல்கள் எதுவும் மனதில் நிற்கவில்லை – நம் போன்ற ‘பூமர்களின்’ மனதில் நிற்காததுதான் இன்றைய தலைமுறை வெற்றியாகப் பார்க்குமோ, என்னவோ; யார் கண்டது! 

படத்தின் இயக்குனர் மார்கன் ஆண்டனி அலயாஸ் மகிழ் திருமேனி. இது அவருக்கு ஏழாவது திரைப்படமாம். பல சிறு சிறு விஷயங்களில் கவனம் செலுத்தியுள்ளார் என்றுதான் கூற வேண்டும். பல ஹாலிவுட் திரைப்படங்களை ஆழமாகப் பார்த்திருக்கிறார் என்பது விளங்குகிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷுக்கு வேலை அதிகம். முழுக்க முழ்க்க வெளிப்புறப் படப்பிடிப்பு. பல இடங்களில் குப்பையும் கூளமுமாக, சாதாரண மனிதர்களைப் பயமுறுத்தும் வகையில் காட்சியும் பின்புலங்களும் அமைப்பதில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது தெரிகிறது.

ஒரு சில விஷயங்களைத் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அஜித் த்ரிஷாவின் விவாக ரத்துக்கான பின்புலத்தை மனதில் நிறுத்த வேண்டுமென்பதற்காக தொடக்கத்தில் ஒரு இருபது நிமிடங்கள் ரசிகர்களைச் சோதிக்குமளவுக்கு மெதுவாக நகர்த்திச் சென்றதைத் தவிர்த்திருக்கலாம். வில்லன்களின் கொடூரத்தைப் புரிய வைக்க வேண்டுமென்பதற்காகக் காட்டப்பட்ட கடைசி இருபது முப்பது நிமிடங்களையும் சுருக்கியிருக்கலாம். த்ரில்லர் சஸ்பென்ஸ் என்று எடுப்பது என்று முடிவானால் சைக்கோ கேர்க்டர்களைக் காட்டித்தான் ஆக வேண்டுமா? நமக்குப் புரியவில்லை. இது போல ஒருசில விஷயங்களை ஒதுக்கி வைத்துப் பார்க்கையில், விடாமுயற்சி நல்ல திரைப்படமென்றே கூற வேண்டும்.

அஜித்தின் பெயர் போடுகையில் எந்த பந்தாவும் இல்லை. ‘தல’ இல்லை. வெறும் “அஜித் குமார்” மட்டுமே. அவரது நிஜ வாழ்க்கைத் தன்னடக்கம் அவரைக் கண்டிப்பாகப் பாராட்டச் செய்கிறது. இதுபோன்ற நல்ல தொடக்கங்கள், திரைப்பட நட்சத்திரங்கள் என்றாலே பெரிய எதிர்பார்ப்புகள், கொண்டாட்டங்கள் என்பனவற்றைத் தவிர்க்க பெருமளவு உதவும். மற்றவர்களையும் சுயபரிசோதனைச் செய்யத் தூண்டும் என்ற அளவுக்கு, நமக்கு மகிழ்ச்சியே.

மொத்தத்தில், விடாமுயற்சி திரைப்படம் ஒரு நல்ல முயற்சியே. பல ரசிகர்களும் “கதையின்னு ஒண்ணுமில்லை” என்று விமர்சனம் செய்வதைப் பார்க்கும்பொழுது, ஹாலிவுட் படங்களைக் காப்பியடிக்கையில் பல மசாலாக்களைச் சேர்க்க வேண்டிய கட்டாயம் புரிகிறது. 

வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad