வெகுஜன நாடுகடத்தல் (Mass deportations)
அமெரிக்க அதிபர் டானல்ட் டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் முதல் நாளில், அமெரிக்க குடியேற்றச் சட்டம் மற்றும் கொள்கைகளை மாற்றும் நோக்கில் பத்து நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அவற்றில் முக்கியமானவை, அமெரிக்காவில் பிறப்புரிமையின் அடிப்படையில் வெளிநாட்டவருக்கு வழங்கப்படும் குடியுரிமையை ரத்து செய்வது மற்றும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள அனைவரையும் நாடு கடத்தும் கொள்கையைக் கடைப்பிடிப்பது எனும் உத்தரவுகள். இவற்றில் பிறப்பு அடிப்படையில் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படும் சட்டத்தை எதிர்த்து டிரம்ப் பிறப்பித்த உத்தரவுக்கு, கூட்டாட்சி நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தத் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்யவுள்ளார் டிரம்ப். மறுபுறம், முறையற்ற வழிகளில் அமெரிக்காவில் தங்கியிருப்போரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, நாளொன்றுக்கு சுமார் 800 முதல் 1000 நபர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள்.
சட்டவிரோத குடியேற்றம் அல்லது அங்கீகரிக்கப்படாத குடியேற்றம் எப்படி நடக்கிறது?
- சட்டவிரோத குடியேறிகளில் அநேகர், முறையான நுழைவு அனுமதியுமின்றி, திருட்டுத்தனமாக எல்லைகளைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்துவிடுகின்றனர்.
- முறையாக தற்காலிக நுழைவு அனுமதி பெற்று அமெரிக்காவுக்குள் வந்து, விசா காலாவதியானப் பிறகும், சொந்த நாட்டுக்குத் திரும்பாமல், அமெரிக்காவிலேயே தங்கிவிடுபவர்கள் இரண்டாவது ரகத்தினர். வியாபாரக் காரணங்களுக்காக அமெரிக்காவுக்குள் வர மெக்சிகோ நாட்டினர்க்கு வழங்கப்படும் ‘பார்டர் கிராஸிங் கார்ட்’டை (Border Crossing Card) பயன்படுத்தி இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுவோரும் இதில் அடக்கம்.
- கல்லூரியில் சேர்வதற்காக அமெரிக்காவுக்கு வந்து, கல்லூரிக்குச் செல்லாமல், பணி அனுமதியும் இல்லாமல் எதோவொரு வேலையைச் செய்துகொண்டு, இங்கேயே தங்கிவிடுபவர்களும் உண்டு.
- போலியான திருமண உறவைக் காரணம் காட்டி, அமெரிக்காவுக்குள் நுழைபவர்களும் இதில் அடக்கம்.
அமெரிக்கச் சட்டப்படி, எந்தவொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ, தகுந்த பணி அனுமதி ஆவணமின்றி ஒருவரைப் பணியமர்த்துவது குற்றமாகும். இருப்பினும் சில நிறுவனங்கள் எந்தவித ஒப்பந்தமுமின்றி, சொற்ப ஊதியத்துக்கு அவர்களுக்கு வேலைகள் தருவதுண்டு. அபாயகரமான பணிகளாக இருந்தாலும், பிழைப்புக்காக அதனை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையை ஓட்டத் தொடங்கி, ஒரு கட்டத்துக்குப் பிறகு தஞ்சம் நாடி, அரசாங்கத்திடம் விண்ணப்பிப்பார்கள். இந்த விண்ணப்பதாரர்கள், பணி அனுமதியுடன், அவசர மருத்துவச் சிகிச்சை, பிள்ளைகளுக்கு இலவச கல்வி போன்ற சில சலுகைகள் கிடைக்கப் பெறுவார்கள். அவர்களின் ஒழுக்க நடவடிக்கைகள், செயல்பாடுகளைக் கண்காணிக்கும் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைத்துறை (U.S. Citizenship and Immigration Services (USCIS)), மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத் துறை (Homeland Security) அவர்களுக்கு அகதி (Asylee) என்ற அடிப்படையில் நாட்டில் தங்க அனுமதிப்பார்கள். காலப்போக்கில் இவர்கள் நிரந்தர வசிப்பு மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஒரு சிறு நம்பிக்கையின் அடிப்படையில், உயிரைப் பணயம் வைத்து, முறையற்ற வழிகளில் அமெரிக்காவுக்குள் நுழைந்து, கால் பதித்துவிட முனைகிறார்கள் பலர்.
சட்டவிரோதமாக அமெரிக்க எல்லைக்குள் நுழைய முற்படுவோர், அமெரிக்க எல்லை ரோந்து படையினர் (United States Border Patrol), அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு படை (Customs and Border Protection (CBP) ) மற்றும் கடலோரக் காவல் படை (U.S. Coast Guard) ஆகியவற்றின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்க பல அபாயகரமான வழிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் காடுகள், சதுப்பு நிலங்கள் வழியே நடந்தே எல்லையை கடக்கிறார்கள். கனடா வழியே ஊடுருபவர்கள், எல்லை பாதுகாப்பு படையிடமிருந்து தப்பிக்க கடுங்குளிர் காலங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். பனிப்படர்ந்திருக்கும் காடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு காமெராக்களிலிருந்து தப்பிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளில், பலர் குளிரில் தாக்குப் பிடிக்க முடியாமல் அல்லது பனி மூடிய பள்ளங்களில் விழுந்து மடிந்து போவதும் உண்டு. கடந்த 2022 ஆம் ஆண்டு கனடா வழியே அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்துக்குள் நுழைய முற்பட்ட நான்கு பேர் கொண்ட இந்தியக் குடும்பம், -36 டிகிரி ஃபாரன்ஹீட் குளிரில் விறைத்து மடிந்துபோனது உங்களுக்கு நினைவிருக்கக் கூடும். 11 வயது மற்றும் 3 வயது நிரம்பிய குழந்தைகளும் இதில் அடக்கம்.
இவ்வாறு நுழைய முயல்பவர்கள் பலரும் மனித கடத்தல் (human trafficking) குழுக்களின் உதவியோடு எல்லையைக் கடக்க முற்படுகிறார்கள். இவ்வகை மனித கடத்தல் குழுவினர், அமெரிக்க எல்லைவரை மக்களை கொண்டு வந்து சேர்க்க பல லட்சக்கணக்கான ரூபாயைக் கட்டணமாகப் பெறுகிறார்கள். சராசரியாக நபருக்கு $40,000 முதல் $70,000 வரை வசூலிக்கும் இக்குழுவினர், பல நாடுகளில் தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். ஒரு நாட்டிலிருந்து அமெரிக்க அண்டை நாடுகளான மெக்சிகோ அல்லது கனடா வருவதற்கு பல நாடுகளைக் கடந்து வர நேரிடும். அந்தந்த நாட்டில் இயங்கும் கடத்தல் குழுக்கள் அவர்கள் கண்காணிக்கப்படாமல் அடுத்த நாட்டுக்குச் சென்றிட, குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்கிறார்கள். அனுபவமிக்க கடத்தல் குழுவினர் சிலர், அமெரிக்க எல்லைப் பாதுகாப்பு படையினரோடும் தொடர்பு வைத்துக்கொண்டு, மனிதக் கடத்தலை வெற்றிகரமாக நடத்துவது துரதிருஷ்டவசமானது.
சட்டவிரோதமாக அமெரிக்க எல்லையில் நுழையும்போது பிடிபடும் அனைவரும் விரட்டியடிக்கப்படுவதில்லை. உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இவ்வகை ஊடுருவலை மூன்று வகைகளில் கையாள்கிறது. இவர்களில் சிலர் தற்காலிகமாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள். குற்றம் புரிந்தவர்கள் என அறியப்படுவோர் சிறைகளுக்கு அனுப்பப்படுவதுண்டு. சிலர் அகதிகளாக பதியப்பட்டு, அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பொருளாதாரம் அல்லது இன அடக்குமுறை காரணங்களால், சொந்த நாட்டில் வாழ வழிவகையின்றி அமெரிக்காவை நாடி வருபவர்கள் சிலரும் மனிதாபிமான அடிப்படையில், அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்படுவதுண்டு. 2018 ஆம் ஆண்டு, அதாவது அதிபர் டிரம்பின் முந்தைய ஆட்சி துவங்கியவுடன், சட்டவிரோதமாக நுழைய முயன்று பிடிபட்டு, முகாம்களில் அடைக்கப்படுபவர்களின் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு தனியாகவோ அல்லது அமெரிக்காவில் இருக்கும் அவர்களது உறவினரிடமோ தங்க வைக்கப்பட்டனர். குடும்பப் பிரிவினை (family separation policy) அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையாக கருதப்பட்டது.
இந்த இரண்டு வகையிலும் சேராதோர் அவர்கள் கடைசியாக எந்த நாட்டிலிருந்து வந்தார்களோ அந்த நாட்டுக்குத் திருப்பியனுப்பி வைக்கப்படுவார்கள். (கோவிட் பெருந்தொற்று காலத்தில், இப்படி ஏராளமானோர் திருப்ப அனுப்பப்பட்டனர்). கடுமையான பாதுகாப்பு வளையங்கள் இருந்தாலும், அவற்றில் பிடிபடாமல் நாட்டுக்குள் நுழைந்துவிடுபவர்கள் ஏராளம். இவர்களின் பலரது நுழைவு கண்காணிப்பு கேமராக்களில் பதியப்படுவதோடு சரி. அவர்கள் எப்படி வந்தார்கள், எங்கு சென்றார்கள் போன்ற தடயங்கள் எதுவும் அகப்படுவதில்லை.
சட்டவிரோதமாக குடியேறும் பலர் கலிஃபோர்னியா, டெக்ஸஸ், ஃப்ளாரிடா, நியுயார்க், நியுஜெர்சி, இல்லினாய் போன்ற மாநிலங்களில் தஞ்சமடைய முனைகிறார்கள். மார்ச் 2021 இல், கலிஃபோர்னியா, கொலராடோ, கனெக்டிகட், இல்லினாய், மாசசூசெட்ஸ், நியூ ஜெர்சி, நியூ மெக்ஸிகோ மற்றும் நியூயார்க் ஆகியவை இவர்களைப் பாதுகாக்க தங்கள் குடியேற்றக் கொள்கைகளைத் திருத்தியமைத்தன. இந்த மாநிலங்கள் சட்டவிரோத குடியேறிகளுக்கு ‘சரணாலய மாநிலங்கள்’ என்று கருதப்படுகின்றன.
2017ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில், அந்த ஆண்டில் சுமார் முறையான நுழைவு அனுமதி பெற்று அமெரிக்காவுக்கு வந்தவர்களில் 700,000 நபர்கள் திரும்ப செல்லாமல் அமெரிக்காவில் தங்கி விட்டனர். அவர்களைக் கண்டுபிடிப்பது எளிதில் சாத்தியப்படாது என்பதால் அரசு முனைப்பு எடுக்கவில்லை. அதே ஆண்டில் முறையற்ற வழிகளில் எல்லையைக் கடக்க முயன்றதாக பிடிபட்டவர்கள் சுமார் 300,000 பேர். அதாவது சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களில் மூன்றில் இரண்டு பேர், தற்காலிக விசாவில் உள்ளே நுழைந்து இங்கேயே தங்கிவிட்டவர்கள்(over stayed).
புள்ளிவிவரங்களின் படி, 1986 ஆம் ஆண்டு 1.75 மில்லியன் மக்கள், எல்லையைக் கடக்க முயன்று பிடிபட்டுள்ளனர். 1996 முதல் 2000 வரை, ஆண்டுதோரும் சராசரியாக 1.6 மில்லியன் மக்கள் எல்லையில் பிடிபட்டனர். பின்னர் மெதுவாகக் குறையத் தொடங்கிய இந்த எண்ணிக்கை அரை மில்லியனுக்கும் குறைவாகவேயிருந்தது. 2019 இல் 800,000 ஐக் கடந்த இந்த எண்ணிக்கை 2000 ஆம் குறையத் தொடங்கியது. பெருந்தொற்று காரணமாக பலர் எல்லைக்குள் அனுமதிக்கப்படாமல் திரும்ப அனுப்பப்பட்டனர். 2021 ஆம் ஆண்டு அதிகப்பட்சமாக 1 மில்லியனுக்கும் அதிகமானோ எல்லையிலேயே தடுத்து திரும்ப அனுப்பட்டனர்.
1996 ஆம் ஆண்டு, குடியுரிமை சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டது. இதன்படி ‘நாடு கடத்தல்’ (Deportation) என்பது இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ‘நீக்கம்’ அல்லது ‘அகற்றுதல்’ (Removal) மற்றும் ‘புறத் திருப்புகை’ அல்லது ‘வெளியேற்றுதல்’ (Returns). இரண்டு பிரிவுகளின் நோக்கமும் சட்டவிரோத குடியேறிகளை அமெரிக்காவிலிருந்து திரும்ப அனுப்புவது தான் என்றாலும், ‘நீக்கம்’ (Removal) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நாட்டுக்குள் நுழைந்தவர்கள் அகதிகளாக விண்ணப்பித்து, சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள். எல்லையோரங்களில், பாதுகாப்பு பணியில் உள்ளவர்களே விசாரித்து, முடிவெடுத்து திருப்பி அனுப்பப்படுவது ‘வெளியேற்றுதல்’ என்பதாகும். இவர்கள் எந்தவித சட்ட நடவடிக்கைகளுக்கும் உள்ளாக மாட்டார்கள். ‘நீக்கம்’ (Removal) அடிப்படையில் நாடுகடத்தப்படுவோரின் தகவல்கள் அமெரிக்க குடியேற்றப் பதிவுகளில் உள்ளபடியால், இவர்கள் பத்தாண்டுகள் (அல்லது அதற்கும் மேற்ப்ட்டு) அமெரிக்காவுக்குள் திரும்ப நுழையவே முடியாது. ‘வெளியேற்றுதல்’ (Returns) அடிப்படையில் திரும்ப அனுப்பப்படுவோர், மறுநாளே அமெரிக்க எல்லைக்குள் நுழைய முற்படலாம். ‘நீக்க’ கோட்பாடு அறிமுகமான பின்பு, சட்ட நடவடிக்கைகு உள்ளாக்கப்பட்டு கடத்தப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது. ஒபாமாவின் 8 ஆண்டு கால ஆட்சியில் முதல் நான்காண்டில் 1.57 மில்லியன் மக்களும், இரண்டாவது நான்காண்டில் 1.49 மில்லியன் மக்களும் அகற்றப்பட்டனர். டிரம்பின் முந்தைய நான்காண்டுகளில், சுமார் 1.2 மில்லியன் மக்கள் அகற்றப்பட்டனர். பைடனின் ஆட்சிக் காலத்தில், கோவிட் பெருந்தொற்று காரணமாக ‘டைட்டில் 42’ எனும் கோட்பாட்டின் அடிப்படையில் அவசரகால நடவடிக்கையாக குடியேறிகள் அகற்றப்பட்டனர்.
மொத்தத்தில் ஓபாமாவின் எட்டு ஆண்டுகளில், 5,246,431 பேரும், டிரம்பின் நான்காண்டுகளில் 2,001,290 பேரும், பைடனின் நான்காண்டுகளில் 4,677,540 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஒபாமா மற்றும் டிரம்ப் இருவரைக் காட்டிலும் பைடன் அதிகமானோரை நாடு கடத்தியுள்ளார். ஆனால், எல்லையில் பாதுகாப்பின்மையால் அவர்கள் உள்ளே நுழைந்த பின்னர் ‘குடிவரவு மற்றும் சுங்க அமலாக்க’ (interior removals by Immigration and Customs enforcement – ICE) நாடு கடத்துவதால் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாக டிரம்ப் கருதுகிறார்.
2024 நிதியாண்டின் இறுதியில், குடியேற்ற மீறல்கள் காரணமாக நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்தோரின் வழக்குகளின் எண்ணிக்கை, (ICE இன் தடுப்புக்காவலில் இல்லாதவர்கள்) கிட்டத்தட்ட 7.7 மில்லியனாக அதிகரித்துள்ளதாகக் கருதப்படுகிறது. இது 2020 நிதியாண்டின் இறுதியில் 3.3 மில்லியனாக இருந்தது.
அமெரிக்காவில் சுமார் 725,000 ஆவணமற்ற இந்திய குடியேறிகள் இருப்பதாக பியூ ஆராய்ச்சி மையம் தெரிவிக்கிறது. மெக்சிகோ மற்றும் எல்-சால்வடோர் நாட்டினருக்கு அடுத்ததாக, இந்தியர்கள் மூன்றாவது இடத்தில் உள்ளனர். இடம்பெயர்வு கொள்கை நிறுவனம் (The Migration Policy Institute) ஆவணமற்ற இந்திய குடியேறிகளின் எண்ணிக்கையை பாதியாக, அதாவது 365,000 என மதிப்பிடுகிறது. இதில், கடந்த ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, 20,407 ஆவணமற்ற இந்தியர்கள் இறுதி நீக்க உத்தரவுகளை எதிர்கொள்வர் அல்லது தற்போது அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்தின் தடுப்பு மையங்களில் உள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கிறது.
2024ஆம் ஆண்டு, 1300க்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர். 2020ஆம் ஆண்டு 1800க்கும் அதிகமானவர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இருந்தாலும் தற்போது மூன்று தவணைகளில் முறையே 104, 119, 112 இந்தியர்கள் திரும்ப அனுப்பப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காரணம் அவர்கள் அனுப்பப்பட்ட முறை. இதற்கு முன்பு, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்கள், எந்த நாட்டவராக இருந்தாலும், அவர்கள் பொதுவான பயணிகள் விமானத்தில் மற்ற பயணிகளோடு அல்லது இதற்கனவே பிரத்யேகமாக வாடகைக்கு எடுக்கப்பட்ட ‘சார்ட்டர்’ விமானம் (charter flight) மூலமாகவே நாடு கடத்தப்பட்டுள்ளனர். டிரம்ப், தனது தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை காட்டவே, இராணுவ விமானம் மூலம், கை கால்களில் விலங்கிட்டு அவர்களை நாடு கடத்துகிறார் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. மற்ற சில நாடுகள், தங்கள் நாடுகளுக்குத் திரும்ப அனுப்பப்படுவோரை, இராணுவ விமானத்தில் விலங்கிட்டு அனுப்ப கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த நாடுகள், அமெரிக்க இராணுவ விமானம் தங்கள் நாட்டில் இறங்கக் கூடாது என்று தங்கள் சொந்த விமானங்களை அனுப்பி அவர்களை அழைத்துச் செல்கின்ற போது, இந்தியா ஏன் அவ்வகையான ஏற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
“வரலாற்றில் முதல்முறையாக, நாங்கள் சட்டவிரோத வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து இராணுவ விமானங்களில் ஏற்றி, அவர்கள் வந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்புகிறோம்,” என்று டிரம்ப் கூறியுள்ளார். மேலும் “பல ஆண்டுகளாக எங்களை முட்டாள்கள் போல சித்தரித்தவர்களிடையே நாம் மீண்டும் மதிக்கப்படுகிறோம்” அவர் கூறியுள்ளது, இனி அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய ஒருவரும் எத்தனிக்கக் கூடாது என்று விடுக்கும் கடுமையான எச்சரிக்கை எனலாம்.
சட்டவிரோத குடியேறிகள் சிலர் அரசின் சில இலவச திட்டங்களைப் பயன்படுத்தி வந்தனர் என்பது உண்மைதான் என்றாலும், அமெரிக்கப் பொருளாதாரத்துக்கு அவர்கள் ஒருவகையில் பங்களித்து வந்தனர் என்பதை மறுக்கமுடியாது. முறையான வருமான வரி செலுத்தாவிடினும், உள்ளூர் விற்பனை வரி, சாலை மற்றும் சுங்க வரிகளை கட்டியிருப்பார்கள். இவர்களில் பெரும்பாலோனார், நிரந்தர வேலையின்றி, மணி நேர அடிப்படையில் ஊதியம் பெற்று வந்தவர்கள். உடல் உழைப்பினால் எளிமையான மற்றும் கடினமான வேலைகளைச் செய்து வந்தவர்கள். கட்டுமானம், விவசாயம் போன்ற துறைகளுக்கு இவர்களது உழைப்பு அசாதரனமானது. காப்பீடு, ஓய்வூதியம் போன்ற சலுகைகள் இல்லாமல் குறைவான ஊதியம் பெற்று பணியாற்றி வந்த இவர்கள் இல்லாமல் கட்டுமானம், விவசாயம் போன்ற துறைகள் பெரிதும் பாதிப்படையும். இவர்களுக்குப் பதிலாக, முறையாகப் பணியுரிமை பெற்றவரை அல்லது குடியுரிமை உள்ளவரை பணிக்கு அமர்த்துவதினால் ஏற்கனவே வீங்கியிருக்கும் வீட்டு விலை, மளிகைப் பொருட்களின் விலை கண்டிப்பாக உயர்வடையும். மேலும், அமெரிக்காவில் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே வருவதால், இன்னும் சில ஆண்டுகளில் உடல் உழைப்பு பணியாளர்கள் (Blue collar employees) தட்டுப்பாடு அதிகரிக்கும்.
எந்த நாட்டவராக இருந்தாலும், முறையற்ற வழிகளில் வேறொரு நாட்டுக்குள் நுழைவதும், குடியுரிமை கோருவதும் சட்டப்படி குற்றமாகும். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர், வாழ்வில் முன்னேற்றமடைய அல்லது தங்கள் பூர்வீக நாட்டில் ஏதோ ஒரு அடக்குமுறையிலிருந்து தப்பிக்க பிற நாடுகளில் குடிபுக முயல்கிறார்கள். அப்படி வருபவர்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர், குடிபுகுந்த நாடுகளில் கலவரம், வன்முறை ஏற்படுத்துகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அவர்களை தண்டிப்பதும், அகற்றுவதும் அவசியம் தான். அதே சமயம், தவறான வழிகாட்டுதல்களில், கண்மூடித்தனமான நம்பிக்கையில், ஏகப்பட்ட செலவுகள் செய்து, உடலை வருத்திக் கொண்டு அமெரிக்காவுக்குள் புகுந்த பின்னர் நாடு கடத்தப்படுவது மிகத் துயரமானது. இவர்களில் சிலரது குழந்தைகள் பள்ளிகளில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒபாமா காலத்தில் கொணரப்பட்ட ‘குழந்தை பருவ வருகைக்கான ஒத்திவைக்கப்பட்ட நடவடிக்கை’ (Deferred Action for Childhood Arrivals) நிறுத்தப்பட்டு, நீதிமன்ற பரிசீலனையில் உள்ளபடியால், அவர்களது நிலை என்னவாகும் என்பது தெரியவில்லை. இத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் அவர்கள் அமெரிக்க மண்ணில் சேமித்த பணம் அவர்களுக்கு திரும்ப அளிக்கப்படுமா என்றும் தெரியாது. குறைந்தபட்சம், போதிய ஆவணங்கள் இல்லாமல், அவர்களுக்கு வேலையளித்த நிறுவனங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, அந்த அபராதத்தை பிரித்துக் கொடுப்பது அவர்களுக்குச் சிறு ஆறுதலாக இருக்கக்கூடும். அதேபோல், இவர்களுக்கு ஆசைகாட்டி வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக அலைகழித்த முகவர்கள் மற்றும் நிறுவனங்களுக்குக் கடுமையான தண்டனை வழங்குவதன் மூலம் வருங்காலத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க உதவும்.
ரவிக்குமார்.