\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மினசோட்டாவின் ஏரிக்கரை துலூத் நகரம்

Duluth1_liftbridge425x282அறிமுகம்

துலூத் நகரமானது சுப்பீரியர் பெரும் ஏரிக்கரைத் தொழிற்படும் துறைமுகமாகவும் பருவகால உல்லாச வலயமாகவும் இருந்து வருகின்றது. இந்நகரில் மினசோட்டா மாநிலப் பல்கலைக் கழக துலூத் பகுதியும், மற்றும் செயின்ட் ஸகொலாஸ்டிக்கா என்னும் கத்தோலிக்கத் தனியார் பல்கலைக்கழகமும், மற்றும் சில தொழிநுட்பப் கல்விக்கூடங்களும் உண்டு. துலூத் நகரானது தன் இரணைப் பிறவியாக செயின்ட் லூயிஸ் ஆற்றின் மறுபுறம் இருக்கும் துறைமுக நகரமான சுப்பீரியரையும் சேர்த்துக் கொள்ளும். சுப்பீரியர் நகரமானது அண்டை மாநிலமான விஸ்கான்ஸினைச் சேர்ந்தது.

சுற்றுலா இடங்கள்

இந்நகர் வாழ் மக்களுக்கும், உல்லாசப் பிரயாணிகளுக்கும் தனித்துவமாக இவ்விடம் இருப்பது ஏறத்தாழ 25 மைல்கள் (40 கிலோ மீட்டர்)நீளமுள்ள பண்டைய ஏரிக்கரை. துலூத் நகரானது 11,000 ஏக்கர் வெளித்திடல்களையும், சிறு மரக்காடுகளையும், குன்றுச் சாரல்களையும் நீரூற்றுக்களையும் கொண்டது. வசந்த காலத்தில் நகர லெஸ்டர் நதியின் ஏரியிலிருந்து செந்நிறச் சாமன் மீன்கள் நீரோட்டத்திற்கு எதிராக மேல் சுனை ஏரிகளைத் தாம் முட்டயிடத்தாவிச் செல்வதையும் காணலாம்.

மேலும் துலூத் நகரம் ஏறத்தாழ 20 மைல்கள் உடற்பயிற்சிக்காக சைக்கிள், நடத்தல் மற்றும் ஓடுவதற்கான பாதைகளையும் 23 பூங்காக்களையும் கொண்டது. மேலும் கோடை காலம் தொட்டு, இலையுதிர்காலம் வரை துலூத் நகரம் பெரியதொரு வண்டுகள் மொய்க்கும் நறுமணம் கூடிய பலவண்ண ரோசாச் செடிப் பூங்காவையும் வருவோர்க்குக் கண்கொள்ளாக் காட்சியாகத் தருகிறது. கனல்பார்க் எனும் பெருவாய்க்காலடியில் பெருங்கப்பல்கள் சில நிமிடங்களிற்கு ஒருமுறை வந்து போவதையும், துலூத் நகரை அதன் ஏரி சிறுகுடா நிலப்பரப்பை இணைக்கும் தொங்குபாலம் உயர்ந்து தாழ்வதையும் பார்த்து மகிழலாம்.

வருடாந்திர நிகழ்வுகள்
கோடைகாலத்தில் துலூத்தில் பல குதூகல நிகழ்ச்சிகள் நடைபெறும். கிராண்மா மராத்தான் (Grandma’s Marathon), பே ஃபுரோண்ட புளூஸ் (Bayfront Blues Festival) என்னும் ஜாஸ் வருடாந்திர இசைவிழா, ஓவிய, மட்பாண்டக் கண்காட்சிகள் எனப் பல நிகழ்ச்சிகளும் நடைபெறும். நடந்து சென்று பார்க்க விரும்பாதவர்கள் பலர் இழுக்கும் (?) ஒருங்கிணைந்த தொடுசைக்கிள்களும் வாடகைக்குப் பெறலாம். மேலும் குழந்தைகளும், மனதில் இளமையானவர்களும் குதிரை வண்டிச்சவாரியும் செய்யலாம். இவ்விடம் பலவகை விருப்பம் உடையவர்க்கும் கவர்ச்சிகரமான உல்லாச இடமாகவேயுள்ளது.

மீன்பிடிக்க வேண்டினும் அதற்கும் கரையோரங்களிலும், மணிக்கணக்கில் வழிகாட்டி சாரதியுடன் பெரும் ஏரியில் போகவும் வழியுண்டு. மேலும் குடும்பம் குழுக்களாக ஏரியைச் சுற்றிப் பார்க்கவும் உல்லாசப்படகுகள் உண்டு. உல்லாசப் படகை எடுத்து சுப்பீரியர் ஏரியின் வடக்குப் பக்கம் போய் ரூ ஹபர் என்னும் இடத்தில் உல்லாசப் புகை வண்டியில் துலூத் நகரத்திற்குத் திரும்பி வரவும் முடியும்.

Duluth2_cityscape425x282இயற்கைத் துறைமுகம்
இரணைத்துறைகள் (Two Harbors) எனப்படும் துலூத் சுப்பீரியர் துறைகள் சேர்ந்து பெரும் இயற்கைத்துறைமுகத்தை அமைக்கிறது. இதில் மினசோட்டா முனை எனப்படும் ஏரியில் சிறுகுடா உலகிலேயே பெரிய தொரு மணற்தரை எனக் கருதப்படுகிறது.. இது வல்லமையாக வரும் சுப்பீரியர் ஏரிப் பெரும் அலைகளை கட்டுப்படுத்துகிறது. இதனால் கப்பல்கள் இயற்கை அன்னையின் கடல், காற்றுக் கொந்தளிப்புகளிலும் புகலிடம் கொள்ளக்கூடியதாக அமைந்தள்ளது. இந்த இரணைத் துறைகளின் மொத்த நீளம் ஏறத்தாழ 49 மைல்கள். இதில் 17 மைல்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆழமான செயற்கை வாய்க்காலும் உட்படும்.

அயலிட ஆர்வங்கள்
மேலும் துலூத்திற்கு மேற்குப் புறத்தில் ஜேகுக் மாநிலப் பூங்காவும் பல மில்லியன் ஆண்டுகளிற்கு முன்னே ஏற்பட்ட பூகோள மாற்றங்களை, தணிந்த எரிமலைக்குழம்புகளைப் பார்க்கக் கூடியதாக இருக்கும். மேலும் வடக்கில் ஏரிக்கரைகளை நாடினால் அகேர் எனும் ஏரிக்கல் மாணிக்கக் கற்களையும் கரையோரங்களிலேயே காணலாம். இவ்விடம் வாழ்ந்து வரும் ஆதிவாசிகள் ஒஜிப்வே குழுவைச் சார்நதவர்கள்.

பொருளாதார அம்சங்கள்
பிரதான பொருளாதாரம் கப்பல் போக்குவரத்தும் சுற்றுலாவும். மேலும் இரும்புத் தாதுப்பொருட்களையும் பெரும் சமுத்திரம் செல்லும் கப்பல்களில் ஏற்ற ஆழ்ந்த வாய்க்கால் ஒன்றும் பல்லாண்டுகள் முன் அகழப்பட்டது. மேலும் தாதுப் பொருட்கள், மாநில விவசாய விளைவுகளாகிய பெருந்தொகை தானியங்களையும் கப்பல்களில் ஏற்ற பிரம்மாண்டமான புகைவண்டிப் பாதைகளும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே தாபிக்கப்பட்டது.

பூகோளத் தொன்மை
இந்த இடத்தின் பூகோளவியல் வரலாறு ஆனது சுப்பீரியர் பேரேரியும் செயின்ட் லுயிஸ் நதியும் பெரும்பனிச் சரித்திரகாலத்தில் இணைந்து எவ்வாறு இயற்கைத்துறைமுகத்தை உருவாக்கியது என்பதில் இருந்து ஆரம்பித்தது எனலாம். வட அமெரிக்கக்கண்டத்தின் பெரும் ஏரிகள் சுப்பீரியர், மிச்சிக்கன், ஹயூரோன், ஈரி, ஒண்டாரியோ ஐந்தும் எவ்வாறு பண்டையகாலத்தில் இருந்து இன்றுவரை பண்டங்களைக் கொண்டு செல்லும் கடற்போக்குவரத்திற்கு உறுதுணையாக இருக்கின்றன என்பதற்கு இவற்றின் கரையிலுள்ள அமெரிக்கக் கனேடிய மாநிலப் பொருளாதார வளர்ச்சிகள் அத்தாட்சியாக உள்ளன.

– யோகி

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Arumugam says:

    I just visited Minneapolis and at that time I could not make it to this place due to short of time. Now, I have a good understanding of this town and hope to see this place during my next visit to USA.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad