பலமிழக்குமா அமெரிக்க டாலர்?
ஜனவரி 20இல் பதவியேற்றதும், அதிபர் டானல்ட் டிரம்ப் “பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டாலரை அழிக்க முயன்றன. அவர்கள் ஒரு புதிய நாணயத்தை உருவாக்க விரும்புகிறார்கள். டாலரை அழிப்பதாகக் குறிப்பிடும் எந்த பிரிக்ஸ் நாட்டிற்கும் 150 சதவீத வரி விதிக்கப்படும். உங்கள் பொருட்களும், நாடுகளும் உடைந்து போவதை நாங்கள் விரும்பவில்லை” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த வாரம், ”அமெரிக்க டாலருடன் யாரும் விளையாட வேண்டாம். ஒருவேளை அவர்கள் அவ்வாறு செய்தால், குறைந்தபட்சம் 100 சதவீத சுங்க வரியை எதிர்கொள்வார்கள் என்று சொன்னேன். ஒரு வேளை அவர்கள் மீண்டும் அப்படி செய்ய விரும்பினால், திரும்பி வந்து – ‘நாங்கள் உங்களைக் கெஞ்சுகிறோம்’ என்று கெஞ்சும் நிலை ஏற்படும். நான் அப்படி சொன்னதுமே பிரிக்ஸ் இறந்துவிட்டது.” என்று பேசியுள்ளார். அதிபர் டானல்ட் டிரம்ப், அதிரடி என்ற பெயரில் அடாவடியாகப் பேசுவது புதிதல்ல என்றாலும், அவரது சமீபத்திய இந்தப் பேச்சு வலிய சென்று மற்ற நாடுகளை, குறிப்பாக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பைச் சார்ந்த நாடுகளைச் சீண்டியுள்ளது.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில், தங்களிடையே நடைபெறும் வர்த்தகத்திற்கு, குறிப்பாக எண்ணெய் வர்த்தகத்திற்காகப் புதிய நாணயத்தை உருவாக்குவது குறித்த கருத்து முன்மொழியப்பட்டது. அப்படியொரு புது நாணயம் உருவாவது, டாலரின் ஆதிக்கத்தை வீழ்த்தும் என்று கருதப்படுவதால், அமெரிக்கா பதற்றமடைந்துள்ளது. இதனை முளையிலேயெ கிள்ளியெறிய வேண்டுமென நினைக்கும் டிரம்ப், சுங்கவரி, வர்த்தகத் தடை எனப் பல அஸ்திரங்களையும் வரிசைப்படுத்தி, பிரிக்ஸ் நாடுகளை அச்சுறுத்தத் தொடங்கியிருக்கிறார்.
பொருளாதாரப் பரப்பில் வளர்ச்சியடைய நினைக்கும் நாடுகள் ஒருங்கிணைந்து , பிரிக்ஸ் எனும் கூட்டமைப்பை அமைத்தனர். 2009இல், பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீன நாடுகளின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. 2010இல், தென்னாப்பிரிக்கா இதில் இணைந்தவுடன் அந்த அமைப்பிற்கு ‘BRICS’ என்று பெயரிடப்பட்டது. 2024இல் ஈரான், எகிப்து, எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளும், கடந்த ஜனவரி மாதம் இந்தோனேசியாவும் இணைந்தன. மேலும் அஜர்பைஜான், மலேசியா, துருக்கி போன்ற நாடுகள் விரைவில் கூட்டமைப்பில் சேர ஆர்வம் காட்டியுள்ளன. சவுதி அரேபியா தனது நிலைப்பாட்டை இன்னமும் உறுதிசெய்யாவிடினும், கடந்த ஆண்டு மாநாட்டில் கலந்துகொண்டது. சீனா இந்தக் கூட்டமைப்பை, மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த தெற்கு நாடுகளின் ஒற்றுமை அவசியம் என்ற வகையில் நகர்த்துகிறது. இந்த புவிசார் அரசியல் மாற்றங்களினால் பிரிக்ஸ் நாணயம் உண்டாக்கப்பட்டால், அது அமெரிக்க டாலரின் செல்வாக்கை வீழ்த்தும் என்பதால் அமெரிக்கா பதற்றமடைந்துள்ளது.
உலகப் போர்களுக்கு முன்னர், உலகின் பொருளாதாரக் கட்டமைப்பு நிலை தடுமாறி போனது. அதுவரையில், மிக வலுவான நாணயமாகத் திகழ்ந்த இங்கிலாந்தின் பவுண்ட் ஸ்டெர்லிங், ஏறத்தாழ எல்லா நாடுகளும் ஏற்றுக் கொண்ட பொதுப் பரிவர்த்தனை நாணயமாக இருந்துவந்தது. ஆனால் இரு உலகப் போர்களில் ஈடுபட்டதால், இங்கிலாந்தின் பொருளாதாரம் தடுமாறத் துவங்கியபோது, பணவீக்கம் அதிகரித்து, பவுண்ட் ஸ்டெர்லிங் முக்கியத்துவத்தை இழக்க நேரிட்டது. அந்தக் காலகட்டத்தில் தங்கத்தின் அடிப்படையில் நாணய மதிப்பு கணக்கிடப்பட்டு வந்தது. உலகப்போர்களில், பெரிதும் தலையிடாத காரணத்தால், உலகளவில் நான்கில் மூன்று பங்கு தங்கத்தை அமெரிக்கா இருப்பில் வைத்திருந்தது. அதன் அடிப்படையில்,1944 ஆம் ஆண்டு, 1 அவுன்ஸ் தங்கம் $35 அமெரிக்க டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டு, ‘பிரெட்டன் வுட்ஸ்’ (Bretton Woods ஒப்பந்தம் மூலமாக, அமெரிக்க டாலர் உலகின் பொதுப் பரிவர்த்தனை நாணயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. உலக நாடுகள் தங்களுக்குத் தேவையான தங்கத்தை அமெரிக்காவிடமிருந்து வாங்கத் துவங்கியதில் அமெரிக்காவின் தங்க இருப்பு குறைந்து, டாலரின் புழக்கம் அதிகரித்தது. இந்தச் சூழலைப் புரிந்து சுதாரித்துக் கொண்ட அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன், 1971 ஆம் ஆண்டு, தங்கத்துக்கு ஈடான டாலர் மதிப்பு எனும் சித்தாந்தத்தை ரத்து செய்தார். டாலரின் மதிப்பு தங்கத்தின் மதிப்பை விட உயர்ந்திருந்த காரணத்தினால், மற்ற நாடுகள் தங்கத்தை இருப்பாக வைத்துக் கொள்வதைக் காட்டிலும் டாலரை ஈர்ப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கின. அதே ஆண்டில் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் (OPEC – Organization of the Petroleum Exporting Countries) அமைப்போடு, எண்ணெய் வணிகத்திற்கு அமெரிக்க டாலரையே முதன்மை நாணயமாக பயன்படுத்த ஒப்பந்தம் செய்துகொண்டது அமெரிக்கா. இது டாலரின் சர்வதேச தேவை மற்றும் மதிப்பை அதிகரித்தது. சமீபத்திய தரவுகளின்படி, உலகளாவிய வெளிநாட்டு நாணய இருப்புக்களில் அமெரிக்க டாலரின் பங்கு தோராயமாக 59% ஆகும். உலகளவில் நடைபெறும் வர்த்தகங்களில் ஏறத்தாழ 88% அமெரிக்க டாலரில் நிகழ்கிறது.
சோவியத் யூனியன் உடைந்த பிறகு, குறிப்பாக உலகமயமாக்க கோட்பாடு பிரசித்தி பெற்ற சமயத்தில் அமெரிக்க டாலர் மேலும் வலிமை பெற்றது. இந்தச் சமயத்தில் அமெரிக்கா, ஈராக் மீது விதித்திருந்த தடைகளை எதிர்த்து மறைமுகமாக எண்ணெய் வர்த்தகத்தை, டாலர் அல்லாத மாற்று கரென்சிகளில் நடத்தத் துவங்கினார். (ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுக்க இதுவும் ஒரு காரணம் எனச் சொல்லப்படுவதுண்டு). உலக நாடுகளில் தனியார் மயமாக்கம் விரிவடைய ஆரம்பித்தவுடன், தொழில்சார் கட்டுப்பாடுகள் குறைந்து ஆசிய நாடுகள் பெரும் வளர்ச்சி நோக்கிப் பயணிக்கத் தொடங்கின. இவையெல்லாம், ஈராக் மீதான போரைக் கடந்து அமெரிக்காவுக்கு சாதகமானச் சூழலை உண்டாக்கித் தந்தது. அமெரிக்கத் தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருந்ததால், உலகச் சந்தையில் அமெரிக்கா வலுவான இடத்தைப் பிடித்தது. அமெரிக்காவின் ஏற்றுமதி பலமடங்கு உயர்ந்தது. அமெரிக்க டாலரின் சீரான மதிப்புயர்வு, உலக அரங்கில் அதன் பயன்பாடு முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர காரணமாகியது. ஆனால், அனைத்து விஷயங்களுக்கும் ஒரு முடிவுண்டு எனும் நியதிக்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.
2008 ஆம் ஆண்டு, லேமன் பிரதர்ஸ் வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் திவாலானபோது, அமெரிக்கா மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. உலக நாடுகளின் வர்த்தகம் அமெரிக்க டாலர் வழியே பிணைக்கப்பட்டிருந்ததால், அமெரிக்கப் பொருளாதாரத்தின் மந்தம் பல நாடுகளைப் பாதித்தது. இந்த அனுபவம் தந்த பாடத்தினால், அமெரிக்க டாலர் ஆதிக்கப்பிடியிலிருந்து விடுபட பல நாடுகள் முடிவெடுத்தன. குறிப்பாக சீனா இதில் அதிக முனைப்பு காட்டி இந்தியாவின் துணையுடன் ‘பிரிக்’ அமைப்பை உருவாக்கியது. (அந்த சமயத்தில் தென்னாப்பிரிக்கா இணையாததால் ‘பிரிக்’ என்றே அழைக்கப்பட்டது).
2020 ஆம் ஆண்டு, கொரோனா ஊரடங்கு உலகமயமாக்கல் கோட்பாட்டினை முடிவுக்குக் கொண்டுவந்தது. எல்லைகள் மூடப்பட்டு, ஒவ்வொரு நாடும் தற்சார்புத் தன்மையைக் குறித்து திட்டமிடத் தொடங்கின. கொரோனாவுக்குப் பிறகு பெயரளவில் எல்லைகள் திறக்கப்பட்டாலும், முன்பிருந்தாற்போல் வர்த்தகச் சுதந்திரம் கனியவில்லை. ரஷ்ய-உக்ரைன் போர் புதிதாகப் பல வர்த்தகத் தடைகளை ஏற்படுத்தின. அமெரிக்கா ரஷ்யப் பொருட்களுக்குத் தடை விதித்தபோது, ஐரோப்பிய நாடுகள் வேறுவழியின்றி அமெரிக்கா பக்கம் நின்றன. பொருளாதாரப் பலமிழந்து நின்ற ரஷ்யாவுக்கு முதலில் கைகொடுத்தது சீனா. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியம், அலுமினிய மூலப் பொருட்கள் மற்றும் பிற கனிம எரிபொருட்களை சீனா இறக்குமதி செய்கிறது. அதைப் போலவே இந்தியாவும் தனது எரிபொருள் தேவைகளை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளத் தொடங்கியது. இவ்விரு நாடுகளும், ரஷ்ய வர்த்தகத்தை ரஷ்ய ரூபிள், இந்திய ரூபாய், சீன யுவான் மூலமாகத் தீர்மானித்துக் கொண்டன. ஈரானும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ஈடாக இந்திய ரூபாயாகவே ஏற்றுக்கொண்டது. இந்த இருபெரு நாடுகளும் தங்களது எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்க டாலரைப் பயன்படுத்தாதது அமெரிக்க டாலரை அச்சுறுத்தியுள்ளது. அதனை மாற்றும் முயற்சியில் அமெரிக்கா அதிதீவிரமாக இறங்கியுள்ளது. (இந்தியப் பிரதமரின் சமீபத்திய விஜயத்தின் போது, அமெரிக்காவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரிக்கவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டதும், டாலர் பயன்பாட்டை நிலைநிறுத்தும் முயற்சியே. ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அமெரிக்காவிடமிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது).
மொத்தத்தில், உலகமயமாக்க கோட்பாடு நீர்த்துப் போய், எதிர் உலகமயமாக்கல் (Deglobalisation) தொடங்குவதாக பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். உலகப் பொருளாதாரம் பல்முனை அமைப்பை (Multipolar economic system) நோக்கி நகர்வதாகவும் குறிப்பிடுகிறார்கள். அமெரிக்காவை மையப்படுத்தி, உலகப் பொருளாதாரம் தீர்மானிக்கப்படுவதை மாற்றி, தேவைக்கேற்ப மண்டலங்களாகப் பிரிந்து செயல்படுவதுதான் பல்முனை பொருளாதாரக் கொள்கையின் குறிக்கோள். இதன்படி அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா கண்டங்களில் தனித்தனி மண்டலங்கள் செயல்படக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முதற்கட்ட நகர்வு தான் ‘பிரிக்ஸ்’ கரென்சி என்று பார்க்கலாம். இந்தியா, சீனா போன்ற முரன்பட்ட நாடுகள் மண்டலமாக இயைந்து செயல்படுவது எந்தளவுக்கு சாத்தியப்படும் என்பதைத் தாண்டி, அமெரிக்க டாலருக்கான மாற்று உருவாகுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.
தற்போது, பெரும்பாலான உலக வர்த்தகம் டாலர் அடிப்படையிலேயே நடக்கிறது என்றாலும் அந்த நாடுகளிடம் வர்த்தகத்துக்குத் தேவையான டாலர் நோட்டுகள் இருப்பதில்லை. ‘ஸ்விஃப்ட்’ எனப்படும் உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்பு சங்கம் (SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication)) மூலம் நிதிப் பற்று / வரவு கணக்குகள் பரிமாறப்படுகின்றன. இந்த அமைப்பு வங்கி கிடையாது. சர்வதேச வர்த்தகப் பரிமாற்ற தகவல்களை பாதுகாப்பான வழிகளில் அந்தந்த நாட்டு நடுவண் வங்கிகளிடம் சேர்ப்பது மட்டுமே ‘ஸ்விப்ட்’ அமைப்பின் பணி.
எடுத்துகாட்டாக, இந்தியா சவுதியிடமிருந்து 1 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் வாங்கவிரும்புகிறது என வைத்துக் கொள்வோம். சவுதி இந்திய ரூபாயை விட அமெரிக்க டாலர் பாதுகாப்பானது என்று கருதி, 1 பீப்பாய்க்கு $100 என்று விலை நிர்ணயிக்கும். இந்தியாவிடம் இருப்பில் $100 மில்லியன் இல்லையெனும் பட்சத்தில் அமெரிக்காவிடம் கடன் கேட்கக் கூடும். அமெரிக்கா $100 மில்லியனை இந்தியாவின் கணக்கில் வரவு வைக்கும். நிஜத்தில் இங்கு அமெரிக்க டாலர்கள் இந்தியாவுக்கு அனுப்பப் படுவதில்லை. இந்தியா பதிலுக்கு அந்த $100 மில்லியனை சவுதி கணக்கில் வரவு வைத்துவிடும். இந்தியா கடனாகப் பெற்ற இந்தத் தொகைக்கு அமெரிக்காவுக்கு வட்டி கட்ட வேண்டும். சவுதி இந்த $100 மில்லியனைக் கொண்டு அமெரிக்காவிடமிருந்து தளவாடங்கள் வாங்கக் கூடும், அல்லது வேறொரு நாட்டுடன் வணிகம் மேற்கொள்ளும். இப்படி நேரடியாகவோ சுற்றி வளைத்தோ, அமெரிக்காவுக்கு ஒரு வியாபார வாய்ப்பு உருவாகும். இந்தியா வாங்கிய கடனை, பணமாகவோ பொருளாகவோ அமெரிக்காவுக்கு திருப்பி செலுத்தாத வரையில் வட்டி செலுத்தும். இப்படி, தான் அளித்தப் பணத்துக்கு வட்டி வருவாய் ஈட்டுவதுடன், அதற்கு ஈடான பொருளை இந்தியாவுக்கோ, சவுதிக்கோ அல்லது வேறொரு நாட்டுக்கோ விற்கும் வாய்ப்பை அமெரிக்கா பெறுகிறது. இது ஒரு சின்ன உதாரணம் மட்டுமே. வர்த்தக உலகில், அன்றாடம் பல நாடுகளுக்கு கடன் கொடுப்பதோடு, வர்த்தகமும் மேற்கொள்ளும் அமெரிக்கா பெரும் வருவாயை எண்ணிப் பாருங்கள். உலகளவில் நடக்கும் அனைத்து கடன் பரிவர்த்தனைகளில் 64% டாலர்களில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கடனுக்கான வட்டி மட்டுமே பல பில்லியன் டாலர்கள் இருக்கக்கூடும். வட்டி தருவதைத் தவிர்க்க, பிற நாடுகள் அமெரிக்காவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கடனைக் கழித்துவிட முயல்வதுண்டு. அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தான், அமெரிக்க அதிபர் டிரம்ப் சுங்கவரியை அதிகரிக்கத் துடிக்கிறார். கூடவே அமெரிக்க டாலர் தான் உலகப் பொது வர்த்தக நாணயமாக இருக்க வேண்டும் என்பதையும் நிர்பந்திக்கிறார்.
ஒருபுறம் டாலரைப் பொது நாணயமாக நிறுத்தி பல பயன்களைப் பெற்றாலும், உலக நாடுகள் டாலர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற, அமெரிக்கா ஏகப்பட்ட நெருக்கடிகளைச் சமாளிக்கவேண்டியுள்ளது. நாட்டில் நிலவும் பணவாட்டம் (deflation), பணவீக்கம் (inflation), பொருளாதாரத் தேக்கம் (slump) எதுவும் டாலரின் மதிப்பை, ஸ்திரத்தன்மையைப் பாதித்துவிடாமல் பாதுகாப்பது எளிதான காரியமல்ல. இருந்தாலும் முந்தைய பத்தாண்டுகளை ஒப்பிடும்போது, உலகளாவிய டாலரின் பங்கு குறைந்துள்ளது என்பதை மறுக்கவியலாது. 2000ஆம் ஆண்டில், உலகளவில் டாலரின் பங்கு 71% ஆக இருந்தது. தற்போது அது 59% ஆக சரிந்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பிரிக்ஸ் நாடுகள், புதியதொரு செலாவணியைக் கொண்டு வந்துவிடக் கூடாது என்பதில் டிரம்ப் குறியாக இருக்கிறார்.
2024 ஆம் ஆண்டுக்கான ‘பிரிக்ஸ்’ மாநாட்டில், புதிய பொது நாணயத்தைப் பற்றி எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை என்றாலும், ஜூலை 2025, பிரேசிலில் நடைபெறவுள்ள மாநாட்டில் இதற்கான முயற்சி தொடர வாய்ப்புள்ளது. சவுதி அரேபியா பிரிக்ஸ் அமைப்பில் இணைந்துவிட்டால், புது நாணயத்தின் சாத்தியக்கூறுகள் அதிகம். ஈரான், சவுதி, ஐக்கிய அரபு அமீரக நாடுகள் ஆகியவை மட்டுமே உலகின் கச்சா எண்ணெயில் 44% பங்கை உற்பத்தி செய்கின்றன. இவை ஒத்துழைத்து புது நாணயத்துக்கு சம்மதித்தால் அமெரிக்க டாலர் கடுமையாகப் பலவீனப்படும்.
இன்றைய தேதியில் 1 யூரோ = 1.04 அமெரிக்க டாலர் என்றுள்ளதை எப்படியாவது சமமாக்கிவிட, அல்லது டாலரை விட மதிப்பு குறைந்ததாக மாற்றிவிட டிரம்ப் முயல்கிறார். 2018 ஆம் ஆண்டு, சீனா பெட்ரோலியப் பொருட்கள் வர்த்தகத்து பெட்ரோ யுவானைப் பயன்படுத்தத் துவங்கியது பெட்ரோ டாலருக்குத் தலைவலியாக உள்ள நிலையில் புதியதொரு சர்வதேச நாணயம் உருவாவதை அமெரிக்கா விரும்பாது. ரஷ்யா, சீனா, இந்தியா என்று முரன்பட்ட கொள்கையுடைய நாடுகள் ஒற்றுமையாக புதிய நாணயத்தை உருவாக்குவது சாத்தியப்படாது என்று நம்பினாலும், அதன் சாத்தியக்கூறுகளை அமெரிக்கா கூர்ந்து கவனித்துவருகிறது. மறுபுறம், கிரிப்டோ நாணயம் பிரபலமடைந்து வரும் வேளையில், கிரிப்டோவின் தலைமையிடமாக அமெரிக்கா விளங்கவேண்டுமென டிரம்ப் முயல்கிறார்.
பிரிக்ஸ் நாடுகள், உலக மக்கள்தொகையில் சுமார் 45 சதவீதத்தையும், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 35 சதவீதத்தையும் கொண்டுள்ளது. டாலரும், யூரோவும் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் G7 நாடுகளின் (கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், ஐக்கிய ராஜாங்கம், அமெரிக்கா) மக்கட்தொகை 10 சதவீதமாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 30 சதவீதமாகவும் உள்ளபடியால், பிரிக்ஸ் நாணயம் உருவானால், உலக அரங்கில் G7 நாடுகளின் செல்வாக்கு பலவீனமடையும்; உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற அமைப்புகளில் அமெரிக்காவின் ஆதிக்கம் குறையும். ஆனால் இந்த மாற்றங்கள் நடைபெற வெகு காலமாகலாம். சென்ற மாநாட்டில் இறுதியுரை ஆற்றிய ரஷ்ய அதிபர் புடின், ‘பிரிக்ஸ் நாணயத்துக்கான நேரம் இன்னும் வரவில்லை. இதில் அவசரமில்லாமல், கவனமாகச் செயல்படவேண்டியுள்ளது. இதன் சாத்தியக்கூறுகளைத் தனிப்பட்ட குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன’ என்று குறிப்பிட்டது, அமெரிக்காவைச் சற்று ஆசுவாசப்படுத்தினாலும், நிம்மதியாக சுவாசிக்க விடாது.
- ரவிக்குமார்.