சங்கமம் 2025 பொங்கல் விழா
பிப்ரவரி 1, 2025 அன்று மினசோட்டா தமிழ்ச் சங்கம் “சங்கமம் 2025” பொங்கல் விழாவை ஹாப்கின்ஸ் உயர்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. இந்த விழாவில் மரபு சார்ந்த கலை நிகழ்ச்சிகள், கேளிக்கை கொண்டாட்ட ஆட்டங்கள், உணவு விருந்து, விருந்தினர் உரை மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
விழா காலை 10:30 மணிக்கு பொங்கல் சிறப்பு விருந்துடன் தொடங்கியது. இதில் கருப்பட்டி பொங்கல், வடை, கூட்டு, சாம்பார் என பலவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன. மதியம் 12:00 மணிக்கு சங்கமம் நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. இதில் மழலை குழந்தைகள் அழகிய வேடங்களில் கலந்து கொண்ட மலரும் மொட்டும், மினசோட்டாவின் பல்வேறு நடன குழுக்களின் கண்கவர் நடனங்கள், மினசோட்டா இசை குழுவினர் உருவாக்கத்தில் பாடல் நிகழ்ச்சி, மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முனைவர் ராஜு அவர்களின் இயக்கத்தில் உருவான “மாவீரன் ராசேந்திர சோழன்” வரலாற்று நாடகம், அரசக் குடும்பக் கதாபாத்திரங்களிடையேயான உணர்வுப் போராட்டத்தை நவீன வடிவில் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது. இதில் நடித்த மினசோட்டா கலைஞர்கள் தேர்ந்த நடிகர்களுக்கு சற்றும் குறைவில்லாத நடிப்பை வழங்கியிருந்தார்கள்.
sangamam2025
விழாவில் கலந்து கொண்டு பேசிய செனட்டர் ஜான் ஹாஃப்மென் மினசோட்டாத் தமிழ் மக்களின் தமிழ் ஆர்வத்தைப் புகழ்ந்து பாராட்டினார். மாநில அரசு, கலைகளை வளர்க்கும் முயற்சிக்கு அளிக்கும் உதவிகளைத் தொடர்ந்து அளிக்கும் என்று உறுதி அளித்தார். முன்னதாக நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு வகைகளில் தன்னார்வ உதவிகள் புரியும் தன்னார்வலர்கள் சான்றிதழ் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டனர்.
இந்த விழாவில் அரங்கத்திற்கு வெளியே பொங்கல் விழாவினைப் பிரதிபலிக்கும் அழகிய வேலைபாடுகளுடன் மினசோட்டாவின் இந்திய சிறு வணிக நிறுவனங்களின் தகவல் மற்றும் விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இரவு உணவுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. இந்த விழா மினசோட்டா வாழ் தமிழர்களுக்கு ஒரு இனிய சங்கமமாக அமைந்தது.
- சரவணகுமரன்