\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இன்றைய நாள் இனிய நாள்

Filed in தலையங்கம் by on March 9, 2025 0 Comments

மார்ச் மாதம் என்றவுடன், மரங்களில் இலைகள் துளிர்த்து, வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் ரம்மியமானச் சூழல் மனதில் உருவாவது இயல்பு. இயற்கையின் படைப்பில் தாவரங்களும், மரங்களும் புத்துயிர் பெறுவதைப் போல, வாழ்க்கையில் வசந்தம் என்பது மாற்றங்களை உணர்த்தி புதிய தொடக்கங்கள், நம்பிக்கைகளைத் துளிர்க்கச் செய்கிறது. குளிர்கால இறுக்கங்கள் களையப்பட்டு, மன ரீதியாக மட்டுமல்லாமல், உடலிலும் மெலிதான  புத்துணர்ச்சி பரவும்.  இந்த உத்வேகத்தைக் குறிக்கவே, இப்பருவத்தை ஆங்கிலத்தில் ‘ஸ்ப்ரிங்கிங் டைம்’ (springing time)  அல்லது சுருக்கமாக ‘ஸ்ப்ரிங்’ (Spring) என்று அழைக்கும் சொல்லாடல் உருவானது. நம்முள் நடக்கும் இம்மாற்றங்களை உணரவும் அவற்றை அனுபவிக்கவும் நமது பரபரப்பான, இயந்திர வாழ்க்கை இடமளிக்கிறதா?

நிறைவு தராத எதோவொரு இலக்கைத் தேடி ஓடிக் கொண்டேயிருப்பது வாழ்க்கையின் நியதி என்றாகிவிட்டது. கல்வி, வேலை, பதவி உயர்வு, ஊதிய உயர்வு, வசதியான வீடு, வாழ்க்கைத் துணை, அந்தஸ்து என்று அடுத்தடுத்தத் தேடலுக்குத் தயாராகி ஓய்வில்லாத ஓட்டம். ஒரு கட்டத்தில் ஓடி வந்த பாதை சரியானதுதானா என்ற மீளாய்வு செய்த பின்னர் தொடர்ந்து ஓட்டம். நேற்றையப் பாடத்துக்கும், நாளைய  பதட்டத்துக்குமிடையில் இன்றைய அமைதியை இழந்துகொண்டிருக்கிறோம். பெரும்பாலோர், நமது இலக்கு இதுதான் என்று தீர்மானமாக நிர்ணயித்துக் கொள்வதில்லை. அடுத்தவரது இலக்கைக் காட்டிலும் நாம் அதிகம் ஓடிவிட வேண்டும் அல்லது அடுத்தவர் மெச்சுமளவுக்கு ஓட வேண்டும் என நினைக்கிறோம். மனதில் என்றுமே தீராத தாகத்தை உருவாக்கும் வலிமை ஒப்புமைக்கு (comparison) உண்டு. தொழில்முறை செயலூக்கத்துக்கு ஒப்புமை ஓரளவுக்கு உதவக் கூடும் என்றாலும், தனி மனித வாழ்க்கையில் ஒப்புமை கடும் மனப் புழுக்கத்தை உண்டாக்கும். வேலை-தனிவாழ்க்கை சமநிலை (work-life balance) இன்று பெரிதும் பேசப்படுகிறது. இதில் கச்சிதமான சமநிலை என்றுமே சாத்தியப்படாது என்பது தான் உண்மை.

பழங்காலத்தில் தனி வாழ்க்கை, பணி வாழ்க்கை என்று இரண்டு சூழல்கள் இருந்ததில்லை. உழவு, நெசவு, தச்சு, பட்டறை, மட்பாண்டம், கைவினை என பல தொழில்களிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பணியாற்றும் சூழலே இருந்தது. 19ஆம் நூற்றாண்டில், தொழிற்புரட்சிக்குப் பிறகு தொழிற்சாலைகள், உற்பத்தி நிலையங்கள் உருவானதில் பணியிடம் என்ற கருத்துருவாக்கம் ஏற்பட்டது. ஆணோ, பெண்ணோ, பணி நிமித்தம் குடும்பத்தைப் பிரிந்திருக்கும் நிலை படிப்படியாக வளர்ந்து  தினசரி எட்டு மணி நேரம், வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் வேலை என்ற கட்டாயத்துக்கு வந்து நிற்கிறது. உய்தலுக்காக (survival) இந்தப் பணிச் சுழற்சியில் சிக்குண்ட சராசரி மனிதர்கள், வீட்டுக்கு வருவது ஓய்வெடுக்க மட்டுமே.  சிலருக்கு அந்த நேரத்திலும் அலுவல் தொடர்பான அழைப்புகள், மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் என அழுத்தங்கள் வருவதுண்டு. இவ்வகையான நிறுவனக் கலாச்சாரங்களிலிருந்து விடுபடுவது எளிதான காரியமில்லை. பொதுவாக ஆசிய நாடுகளில் வேலை-வாழ்க்கை விகிதம் மற்ற பிராந்தியங்களுடன் ஒப்பிடும் போது மோசமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக ஜப்பான், சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் நீண்ட வேலை நேரம் அல்லது அதிக வேலை எனும் எழுதப்படாத விதிகள் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. நிறுவன விசுவாசம், வேலைவாய்ப்புகள், குடும்ப முன்னேற்றம் போன்ற அந்நாட்டுக் கலாச்சாரங்கள், தனி வாழ்வின் அவசியத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை.  சமீபத்தில் இந்திய நிறுவன உயரதிகாரிகள் சிலர், தங்களது ஊழியர்கள் வாரத்துக்கு 70 மணி நேரம் அல்லது 90 மணி நேரம் பணியாற்ற வேண்டுமென அழைப்பு விடுத்தனர். எத்தனை மணி நேரந்தான் உங்கள் மனைவியின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று கூட அவர்களில் ஒருவர் கேட்டிருந்தார். நாடு வல்லரசாக 90 மணி நேரமாவது உழைக்க வேண்டுமெனவும் சொல்லியிருந்தார்கள். ஒரு வேளை வல்லரசாக மாறினாலும், பணி அழுத்தங்கள் அந்நாட்டை நல்லரசாக மாற்றுமா என்பது கேள்விக்குறி. சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளில் வேலை-வாழ்க்கை விகிதம் சற்றே முன்னேறியுள்ளதையும் இங்கே குறிப்பிட்டாகவேண்டும். 

முன்னேற்றத்துக்குத் தொடர் உழைப்பு மட்டுமே போதாது. வேலையின் தரமும், எண்ணிக்கை (Quality vs Quantity) அளவும் ஒன்றுக்கொன்று முரனானது. அறிவாற்றல் திறனை வெளிப்படுத்தும் வேலையானாலும், உடல் உழைப்பு தேவைப்படும் வேலையானாலும் மனிதர்களை ஒருகட்டத்தில் சோர்வடையச் செய்யும். உடற் சோர்வையும், மனச் சோர்வையும் போக்கி, மனிதனை ஆசுவாசப்படுத்துவது விருப்பச் செயல்களில் ஈடுபடுவது. சின்னச் சின்ன மகிழ்ச்சிகள் பெரு நிறைவுக்கு வழி வகுக்கும். 

“நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்பினால், அதை ஒரு குறிக்கோளுடன் இணைத்துக் கொள்ளுங்கள்; மக்களுடனோ அல்லது பொருட்களுடனோ அல்ல.” எனும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் வாக்கியம் இங்கு குறிப்பிடத்தக்கது. பல நேரங்களில், நாம் செய்யும் செயலை, தொடர்புடைய மனிதர்களுடன் இணைத்துக் கொள்கிறோம். அதற்கு பதிலாக அதனை குறிக்கோளாகப் பார்ப்பதன் மூலம், அச்செயலை விரும்பத் தொடங்குவீர்கள். எடுத்துக்காட்டாக, மேலாளர் சொன்னார் என்பதற்காக ஒரு வேலையைச் செய்யும் போது வெறுப்பாகத் தோன்றுவது குறிப்பிட்ட வேலையைச் செய்வது என் குறிக்கோள் என்று கருதுவது விருப்பாகத் தோன்றும்.

வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்துக்கு நகர வேண்டுமென துடிக்கும் சிலர், விரும்பிய நிலைக்கு வந்தவுடன் புற அழுத்தங்கள் தாளாமல் அடுத்த நகர்வைப் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிடுகிறார்கள். வாழ்வின் இறுதிநாள் வரை புதுப்புது இலக்குகள், கனவுகள் உருவாகிக்கொண்டேதான் இருக்கும். அவையில்லாமல் வாழ்வில் சுவாரசியம் இருக்காது. ஆனால் அந்த இலக்குகளை, கனவுகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு நிர்ணயிக்காமல், சுயமாக நிர்ணயித்துக் கொள்வது பலனளிக்கும். உதாரணத்துக்கு, உசைன் போல்ட்டை விட வேகமாக ஓட வேண்டும் என்ற இலக்கை விட, நான் இன்று ஓடியதை விட நாளை வேகமாக ஓட வேண்டும் என்று நினைப்பது நிச்சயம் சாத்தியப்படும். தினமும் இந்த நிறைவு தரும் மகிழ்ச்சி உள்ளுக்குள் உத்வேகத்தைப் பன்மடங்காக்கும். ஒரு மாதத்தில் உங்களது வேகம் பத்து சதவிகிதமாவது அதிகரித்திருக்கும். அது போல் எளிதில் அடையக்கூடிய சின்னச் சின்ன இலக்குகள் உங்கள் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்ச்சியாக்குவதோடு, அடுத்தடுத்த கட்டங்களுக்கு இட்டுச் செல்லும். 

முப்பது வயதைத் தொட்டதுமே, எதிர்காலம் குறித்த கேள்விகள் மனதில் தோன்றக்கூடும். நம்மை அறியாமலே, மெலிதான ஒரு அச்சம், படபடப்பு மனதில் படரத் தொடங்கிவிடும். தங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்தார்களோ அதை விட வாழ்க்கையில் பின்தங்கியிருப்பதாக பலர் உணர்வார்கள். காலப்போக்கில் இந்த அழுத்தங்கள் வாழ்விடை நெருக்கடியாக (midlife crisis) உருவெடுக்கின்றன. இதனால் உணர்ச்சி மாற்றங்கள், மன அலைவுகள் (Mood swings), மன அழுத்தம் (stress), உறவுகளில் பிணக்கு (strained relationship) எனப் பல உளைச்சல்கள் ஏற்படும்.. நிதர்சனத்தை ஏற்றுக்கொண்டு, புதிய இலக்குகளைச் சிந்திப்பது, உறவுகளிடம் ஆலோசிப்பது போன்றவை நேர்மறையான மாற்றங்களை உருவாக்கலாம். மாறாக, இதுநாள் வரை கற்பனை செய்த வாழ்க்கையையே இலக்காகக் நிர்ணயித்து, இயலாமையை நொந்துகொள்வது வாழ்விடை நெருக்கடியை மேலும் சிக்கலாக்கும்.

அமெரிக்காவைப் பொறுத்தவரையில் ‘மில்லேனியல்’(millennial) தலைமுறையினர் வேலை-வாழ்க்கை விகிதத்துக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள்.  அவர்களைப் பொறுத்தவரையில் வேலை என்பது தனிப்பட்ட வாழ்க்கை இலக்குகளை அடையச் செய்யும் ஒரு வழிமுறை, அவ்வளவே. எந்தச் சமயத்திலும், வேலை காரணங்களுக்காக, தனிப்பட்ட வாழ்க்கை கடப்பாடுகளை விட்டுத் தர முன்வருவதில்லை. வேலைச் சூழலில் நெகிழ்வுத்தன்மையை எதிர்பார்க்கும் இவர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் திட்டங்கள், பொறுப்புகள் இருப்பதை விரும்புகிறார்கள். அதே நேரம், தங்கள் தொழில் சார்ந்த விஷயங்களைத் தொடர்ந்து கண்காணித்து கற்றலிலும் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். இவர்கள் ‘மைக்ரோ மேனேஜ்மெண்ட்’ வழிமுறைகளை விரும்பாதவர்களாக, சுதந்திரமாகப் பணியாற்ற கூடிய, நட்புக் கலாச்சாரம் மிக்க நிறுவனங்களில் பணியாற்ற விழைகிறார்கள். 

‘ஜென் Z’ தலைமுறையினர் மன ஆரோக்கியத்துக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். வருமானத்தை விட, வேலை வாழ்க்கை விகிதத்தை அதிகம் மதிக்கிறார்கள். ஆக்கவளமுடைய (productive) வேலைக்கு உகந்த நேரத்தையும், இடத்தையும் உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். கோவிட் காலகட்ட கல்வி / பணிக் கலாச்சாரத்தை அனுபவித்த இவர்கள், அலுவலகம் செல்லாமல், விரும்பிய இடத்திலிருந்து பணியாற்றுவதையே விரும்புகிறார்கள். அமேசான், மெட்டா, ஆல்ஃபபெட் போன்ற பெருநிறுவனங்கள் அதிக ஊதியமளிக்க முன்வந்தாலும், பணி வாழ்க்கை மகிழ்ச்சிக்கே இவர்கள் முன்னுரிமை அளிக்கிறார்கள். 

இதைப் பார்க்கும்பொழுது இளங்கன்றுகள் பயமறியாமல், வாழ்க்கையை உணராதிருக்கிறார்கள் என்று மேலோட்டமாகத் தோன்றினாலும், அவர்கள் மகிழ்ச்சியின் சூட்சுமத்தை அறிந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. இன்னும் சொல்லப்போனால், பெரிய குடும்பச் சூழலில் வளர்ந்த ‘பூமர்கள்’ மற்றும் ‘ஜென் X’ தலைமுறையினரை விட ‘மில்லேனியல்’, ‘ஜென் Z’ தலைமுறையினர் தனிமையை அதிகம் உணர்ந்தவர்கள். இவர்கள், இன்றைய தொழில்நுட்பத் துணையுடன், தனிமையிலும் இனிமை காணும் வித்தையை புரிந்து வைத்துள்ளனர். எதிர்காலத்தைப் பற்றி படபடப்பின்றி திட்டமிடுகின்றனர். மிக மிக முக்கியமாகப் புற அழுத்தங்கள், மற்றவரது போட்டிகளைப் பற்றி கவலைப்படாமல், தங்கள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். அடுத்தவரது வெற்றியை மதிப்பதோடு அவர்களது மகிழ்ச்சியிலும் பங்கெடுக்கும் திறந்த மனதோடு உள்ளனர். இந்தக் குணங்கள் அவர்கள் மனதை இலகுவாக்கி, புத்துணர்ச்சியோடு இருக்க உதவுகின்றன.

நாம் அனைவரும் வித்தியாசமானவர்கள், வெவ்வேறு உந்துதல்கள், திறமைகள், தனித்தன்மை உள்ளவர்கள். இதுவே மனிதகுலத்தை மிகவும் சுவாரஸ்யமானதாக ஆக்குகிறது. அதே போல் ஒவ்வொருவருக்கும் தங்கள் எதிர்காலம் குறித்த கனவு அல்லது கலக்கம் இருப்பது புரிந்துகொள்ளக் கூடியது. இருப்பினும், நீங்கள் ஏற்கனவே சாதித்ததைச் சிந்திப்பது அல்லது உங்களிடம் இருப்பதை உணர்ந்து பாராட்டுவது, மேலும் மகிழ்ச்சி தந்து உங்களை உற்சாகத்தால் நிரப்பும்.  இன்றைய நாளுக்காக வாழுங்கள். குழந்தைகள் கடந்த காலத்தை நினைத்து மருகுவதில்லை, எதிர்காலத்தை நினைத்துக் கவலைப்படுவதுமில்லை. பூக்கள், வானம், பறவை, பட்டாம்பூச்சி என்று எதைப் பார்த்தாலும் அதிசயப்படும் குழந்தைகளாக மாறுங்கள்.  வசந்தக் காலத்தின் வண்ணங்களைப் பாராட்டுங்கள்; பறவைகளின் உரையாடலை மொழிபெயருங்கள்; மேனி தழுவும் காற்றை அனுபவியுங்கள் – மனம் லேசாகும்.

  • ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad