மூவர் தேவாரம்
தேவாரம் எனப்படுவது சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மீது கிபி 6ம் 7ம் 8ம் நூற்றாண்டை சேர்ந்த அப்பர் என்ற திருநாவுக்கரசர், ஆளுடைய பிள்ளை என்னும் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார் இம்மூவரும் சிவாலயங்கள் தோறும் எழுந்து பாடிய இசைத்தோகுப்பே ஆகும். இவர்கள் மொத்தமாகப் பாடியது ஒரு லட்சத்தி இருபதினாயிரம் பாடல்கள் என்பது செவிவழிச்செய்தி.
இன்று நம்மிடம் கிடைத்திருப்பது 791 பதிகங்கள்
1. திருநாவுக்கரசர் – 384 பதிகங்கள்
2. திருஞானசம்பந்தர்- 307 பதிகங்கள்
3. சுந்தரமூர்த்தி நாயனார் – 100 பதிகங்கள்
ஒரு பதிகம் என்பது 10 பாடல்களை கொண்டது
தெய்வங்கள் மீது பாடப்பட்ட ஆரம்(பாமாலை) என்பதால் தேவாரம் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். இசையியலில் வாரம் என்பது நடையை (இசை வேகம்) குறிக்கும் சொல்லாகும். இதை ஒட்டியே தேவாரம் எனப் பெயர்பெற்றது என்று சொல்பவரும் உண்டு.
இம்மூவரின் மறைவிற்குப்பின் தில்லை அந்தணர்கள் இவர்கள் பாடல்களை ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. நம்பியாண்டார் நம்பி என்பவர் இராஜராஜ சோழனின் ஆணைக்கிணங்க சிதம்பரம் கோயிலிலே இருந்த பூச்சிகளால் அரிக்கப்பட்டு அழிந்தவை போக எஞ்சிய தேவாரங்களைப் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுத்தார். இதில் சம்பந்தர் பாடல்களைத் ‘திருக்கடைக் காப்பு’ என்றும், நாவுக்கரசர் பாடல்களைத் ‘தேவாரம்’ என்றும், சுந்தரமூர்த்தி பாடல்களைத் ‘திருப்பாட்டு’ என்றும் கூறுவர்.
இந்த பன்னிரண்டு திருமுறைகளில், திருநாவுக்கரசரின் மூன்று திருமுறைகளும், திருஞானசம்பந்தரின் மூன்று திருமுறைகளும், சுந்தரமூர்த்தி நாயனாரின் ஒரு திருமுறையும் சேர்த்து 7 திருமுறைகளும் மூவர் தேவாரம் எனப்பட்டது. அதை அடங்கன் முறை என்றும் கூறுவர்.
இவ்வாறு தொகுக்கப்பட்ட பாடல்களுக்குப் பலர் பண் தெறியாது திகைத்தனர். இராசராச சோழன் இசைஞானியரை அமர்த்தி இதற்குப் பண் அமைத்துக்கொடுத்தார். அப்பண்களுக்குள் சிலவற்றை ஓதுவார்கள் மாற்றிவிட்டனர். தேவார பண்ணாராய்ச்சி என்பது வானத்து மீனுக்கு வன்றூண்டிலிடும் கதையாகும் என பாவாணர் தெறிவிக்கின்றார்.
-சத்யா-
குறிப்பு நூல்கள்:
தமிழ் இலக்கிய வரலாறு – பாவாணர்
wikipedia