\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பயணங்கள் முடிவதில்லை!

Filed in இலக்கியம், கதை by on October 6, 2013 4 Comments

payanam_2_520x371“ம்மா … என்னோட பர்ப்பிள் கலர் நெயில் பாலிஷ் எங்க?” மாடியிலிருந்து சுமதியின் குரல்.

“ஏண்டி இப்படிக் கத்தற.. தொண்டை வத்தி போற மாதிரி .. இரு வர்றேன்”

அவளை விட அதிகமாகக் கத்தினாள் ராஜி – சுமதியின் அம்மா.

“ஏங்க… இந்த குக்கர்ல பருப்பு வெச்சிருக்கேன் .. மூணாவது விசில் வந்தா ஆஃப்  பண்ணிடுங்க .. அவ எதோ கேக்கறா .. நான் எடுத்து கொடுத்துட்டு வந்திடறேன் ..” என்று ஈரக் கையை நைட்டியில் துடைத்து கொண்டே, ரகுவிடம் சொன்னாள் ராஜி .

“அவளையே எடுத்துக்கச் சொல்லேன் .. எல்லாத்துக்கும் நீ ஏன் ஓடிக்கிட்டுருக்கிற” கரிசனம் காட்டுவது போல் அடுப்பை அணைக்கும் வேலையிலிருந்து கழல முயன்றார் ரகு.

“அவளுக்குத் தெரியாதுங்க, சின்னப் பொண்ணு. நான் எடுத்துக் கொடுத்துட்டு வர்றேன்” படிகளில் ஏறத் துவங்கி விட்டிருந்தாள் ராஜி.

“சரி .. மூணாவது விசில் எப்ப வரும்…”

“ரெண்டாவதுக்கப்புறம் வரும் ..” போயே போய் விட்டாள்.

ராஜியின் வீட்டில் தினமும் நடக்கும் கூத்து இது … என்ன பர்ப்பிள் நெயில் பாலிஷுக்கு பதிலாக நீல கலர் சாக்ஸ், பேடட் டெனிம், கார்நெட் இயர் ரிங் இப்படி ஏதாவது இருக்கும். ரகுவின் அசைன்மென்ட், பருப்புக்கு பதிலாக, வெந்தயக் கொழம்பு, பசலைக் கீரைக் கூட்டு, வெண்டைக்காய் வதக்கல் என்று மாறுபடும்.

“இதோ வந்திடறேன் ..” என்று சொல்லிவிட்டுப் போனால் ராஜி வருவதற்கு குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும். சில சமயம் “மைக்ரோவேவ்லே புளி கொதிக்க வேச்சிருக்கேன் .. அதைக் கரைச்சி ஊத்திடுங்க …”, “ரசத்தில உப்பு போட்டனான்னு ஞாபகம் இல்ல .. பாத்துப் போட்டுடுங்க .. அப்படியே கொஞ்சம் கறிவேப்பிலை தாளிச்சுடுங்க …” என்று விட்டு விட்டுக் கட்டளைகள் வரும்.

“நல்ல வேளை நான் போனேன் … இல்லேன்னா கை காலெல்லாம் பாலிஷை அப்பிக்கிட்டு வருவா ..”, “நான் போனேனோ தப்பிச்சிதோ .. ஜீன்சைத் தேடறேன்னு ட்ரெஸ்ஸரை தலை கீழா புரட்டிப் போட்டு வெச்சிருந்தா ..” என்று சொல்லியபடி வேர்க்க விறுவிறுக்க வருவாள்.

அதென்னவோ, அம்மாவுக்கும் பொண்ணுக்கும் அப்படி ஒரு பந்தம். சுமதி ஒண்ணும் சின்னப் பெண் இல்லை. பதினாறு வயதாகிறது. ஆனாலும் அம்மாவன்றி அணுவும் அசையாது அவளுக்கு.

சுமதி உண்ணும் உணவு, படிப்பு, உடை, தலை முதல் கால் வரை அவள் அலங்கரித்து கொள்ளும் அணிகலன்கள் என ஒவ்வொன்றிலும் ராஜியின் பங்கிருக்கும். அவளுக்கு ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்வாள் ராஜி.

“நேத்துதாண்டி ப்ளூ கலர் ஹேர் கிளிப் போட்டுட்டுப் போன … இன்னைக்கும் அதையே ஏன் போடற. உன் ஷர்ட்ல தான் பிங்க் கலர் டிசைன் இருக்குல்ல .. இரு பிங்க் கலர் க்ளிப் போட்டு விடறேன்.”

“கால் கட்டை விரல் நகம் பெரிசா வளந்திருக்குடி .. சாயந்திரம் கட் பண்ணி விடறேன் ..”

“உனக்காகப் பருப்பிலாம ரசம் வெச்சிருக்கேண்டி .. அதைச் சாப்பிட்டா வெயிட் ஏறாது.. கொஞ்சமாச்சும் சாப்பிடு”

“நேத்து எதேச்சையா சேனல் மாத்தும் போது கவனிச்சேன் .. எம் டிவில டெய்லர் ஸ்விப்ட் பேசிக்கிட்டிருந்தா .. ரெகார்ட் பண்ணி வெச்சிருக்கேன்..”

“மிசஸ். ஸ்மித்துக்கு அறிவிருக்கா இல்லையா .. நேத்து அசைன்மென்ட் கொடுத்துட்டு நாளைக்கு ‘ட்யூ’ ன்னா எப்படி? அவ செஞ்சான்னாத் தெரியும்..”

சுமதியும் அப்படித்தான்… “ம்மா .. இன்னைக்கு லஞ்ச் டைம்ல டானா என் பக்கத்தில உக்காந்து சாப்பிட்டா … அவ போட்டிருந்த ஸ்ப்ரே சூப்பரா இருந்தது … ரெட் டிராகன், மைல்ட் லாவண்டர் ..”, “போன மாசம் என் டேட்ஸ் என்ன”, “என்னொட ஹிஸ்டரி ரைட் அப் என்னைக்குள்ள கொடுக்கணும்?” என எல்லாவற்றுக்கும் ராஜியை எதிர்ப்பார்ப்பாள்.

சுமதி பள்ளி செல்லும் நேரமும், தன் தோழிகளுடன் இருக்கும் நேரமும் தவிர்த்து ராஜி எப்போதும் அவளுடன் இருப்பாள். ராஜி, சுமதிக்கு ஓவராக செல்லம் கொடுக்கிறாளோ என்று தோன்றும். நாசூக்காக, “ராஜி … சுமதி இப்போ பெரிய பொண்ணாயிட்டா .. அவளுக்கு கொஞ்சம் ஸ்பேஸ் கொடு.. அவ எப்பவும் உன்னையே டிபண்ட் பண்ணிக்கிட்டுருக்க கூடாது …” என்பார் ரகு. அதற்கு ராஜி, “அவ என் பொண்ணுங்க .. என்னை டிபண்ட் பண்ணாம வேற யாரை டிபண்ட் பண்ணுவா.. எல்லாம் எனக்கு தெரியும்..” எனத் தவிர்த்து விடுவாள்.

payanam_1_393x305ரகுவுக்கு மட்டும் ராஜியை நினைத்தால் பாவமாக இருக்கும். அளவுக்கு அதிகமாக பெண் மீது பாசம் வைத்திருக்கிறாள். இது எப்போதும் தொடராது எனச் சொல்லத் தோன்றும். சுமதியைக் குறை சொல்ல ஏதுமில்லை. அந்த வயதில் மற்ற பெண்கள் எப்படி இருப்பார்களோ அப்படி இருக்கிறாள். கூடுதலாக அம்மாவிடமிருந்து உதவி கிடைக்கும் போது அதைப் பயன்படுத்திக் கொள்கிறாள் அவ்வளவு தான்.

இரண்டு மாதங்களுக்கு முன் சுமதியின் ஃபேஸ் புக் பக்கத்தை ரகு யதேச்சையாகப் பார்க்க நேர்ந்தது. அது நாள் வரை ராஜியுடன் இருக்கும் படங்களையே போட்டு வந்த சுமதி, முதல் முறையாக தன் ஆண் நண்பன், மற்றும் தோழியருடன் இருக்கும் படத்தைப் போட்டிருந்தாள்.

சுமதிக்கென்று வேறொரு உலகமும் உள்ளது என்பதை ராஜிக்குப் புரிய வைக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் ரகு.

அன்று இரவு சாப்பாட்டின் போது மெதுவாக ஆரம்பித்தார்.

“ராஜி , உன் கசின் ரமாவோட பையன் ஹிந்தி கிளாஸ் சேர்ந்திருக்கானாம் .. பேஸ் புக் அப்டேட் போட்டிருந்தா ரமா .. பாத்தியா”

“அப்படியா .. நான் கம்ப்யூட்டர் பக்கம் போயி ரெண்டு நாளாச்சி .. “

“பாரு பாரு … நாளைக்கு பாரு … அப்புறம் நீ சுமதிக்கு போன தடவை எங்கேயோ வாங்கிட்டு வந்தியே ப்ரௌன் கலர் டீஷர்ட், அதை போட்டுக்கிட்டு எடுத்த போட்டவ போட்டிருக்கா சுமதி .. அதையும் பாரு.”

“அதை நான் பாத்து மூணு நாளாச்சு .. அவ கிட்டேயே சொன்னேன்

‘ஏண்டி மத்தவங்க எல்லாம் எவ்வளவு ப்ரைட்டா போட்டிருக்காங்க நீ மட்டும் இப்படி டல்லான கலர்ல போட்டுக்கிட்டு இருக்கியே’ ன்னு ..”

“யாருக்கும்மா தெரியும் அன்னைக்கு போட்டோ எடுப்போம்னு .. திடிர்னு நேதன் வந்து கேட்டான், சரின்னு எல்லாரும் எடுத்துகிட்டோம் ..”

“இப்பவே அவன் கிட்ட சொல்லிடு .. அடுத்த தடவை போட்டோ கீட்டோ எடுக்கிறதுன்னா மொத நாளே சொல்லச் சொல்லு ..”

ராஜியின் அறியாமையையும், வெகுளித்தனத்தையும் ரகுவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘என்றாவது ஒரு நாள் ஏமாறப் போகிறாய் பெண்ணே’ என்று நினைத்தார். சொன்னாலும் ராஜி அதைக் காதில் வாங்கிக் கொள்ள மாட்டாள் எனத் தோன்றியது.

சில மாதங்களில் ரகு பயந்து கொண்டிருந்தது வந்தே விட்டது.

“டாட்.. நான் ஜார்ஜ் வாஷிங்டன் யுனிவர்சிட்டி சேரலாம்னு பாக்கிறேன்.. அட்மிஷன் லெட்டர் அனுப்பியிருக்காங்க..”

“ஏண்டா … போன வாரம் தான் யுனிவர்சிட்டி ஆஃப் மினசோட்டா அட்மிஷன் லெட்டர் வந்தது நீயும் ஓகேன்னு சொல்லியிருந்தியே .. “

“ஆமாம்பா .. அது போன வாரம் ..” என்று சிரித்தாள் சுமதி.

“சீரியஸ்மா .. உன்னை அவ்வளவு தூரம் அனுப்பிட்டு நாங்க என்ன பண்ணுவோம்”

“என்னப்பா இது .. ஜி.டபில்யூ.யு எங்க? யு.ஆஃப்.எம் எங்க? இந்த மாதிரி வாய்ப்பு வருமான்னு எல்லாரும் காத்துகிட்டிருக்காங்க ..”

“அதில்லைம்மா .. உங்க அம்மாவுக்கு நீ இல்லாம கஷ்டமாயிடும் ..”

“அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா .. அம்மா என்ன சின்னக் கொழந்தையா .. ஐ நோ மை மாம் ..ரைட் அம்மா?”

“ஆமாம் .. நான் என்ன சின்னக் கொழந்தையா?” சப்பாத்தி போட்டுக் கொண்டிருந்தவள் முகத்தை திருப்பாமல் குரல் கொடுத்தாள்.

ரகு ஓரிரு வாரங்கள் எவ்வளவு போராடியும் சுமதியிடம் மாற்றமில்லை. அவளது பள்ளி ஆசிரியரும் சுமதி ஜார்ஜ் வாஷிங்டன் யுனிவர்சிடியில் சேருவதே நல்லது எனவும் குறிப்பிட்டார்.

ரகுவுக்கு ராஜியை நினைத்துப் பெருங்கவலை வந்து விட்டது. ராஜி அதிகம் படிக்காதவள். வெளியுலகம் தெரியாமல் வளர்ந்து விட்டவள். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைத்து, அப்படியே வளர்ந்தும் விட்டாள். அவளுக்கு எதிர்பார்ப்பில்லா அன்பு செலுத்த மட்டுமே தெரியும். வேறெதுவும் தெரியாது. பதினாறு ஆண்டுகளாய்த் தன் உலகமே சுமதி தான் என்று வாழ்ந்தவள். பேருக்குத் தான் அவள் சுமதியின் அம்மாவே தவிர, நிஜத்தில் அவள் குழந்தை. தாயைப் பிரியப் போகும் ஒரு குழந்தையின் நிலையில் தான் ராஜி இருக்கிறாள். இந்தப் பிரிவை எப்படித் தாங்கப் போகிறாள் அவள்? ரகுவின் மனதில் குழப்பம் அதிகரித்தது.

சுமதி தன் முடிவில் மாற்றமில்லாமல் ஜார்ஜ் வாஷிங்டன் யுனிவர்சிட்டி அட்மிஷனை ஏற்றுக் கொண்டாள்.

நாட்கள் வாரம், மாதமென ஓட வெகு சீக்கிரமே கல்லூரி துவங்கும் நாளும் வந்து விட்டது.

வழக்கம் போலவே ராஜி சுமதிக்கு வேண்டிய ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்தாள். அவளுக்குத் தேவையான பேஸ்ட், பாடி வாஷ், சீப்பு, கண்ணாடி, உடை, செருப்பு, ஜாக்கெட் என அனைத்தையும் தேவையான அளவுகளில் வாங்கி வைத்தாள். புதிய பெட்டிகள் வாங்கி அவற்றை அடுக்கி வைத்து, எந்தெந்தப் பெட்டியில் எந்தெந்தப் பொருட்கள் இருக்கிறதென்று எழுதியும் வைத்தாள்.

“வாரத்துக்கு ரெண்டு தடவைக்கு மேல ஷாம்பூ போடாதேடி.”, “விண்டர்ல மறக்காம சாப்ஸ்டிக் போடு”, “ஹாண்ட்பாக்ல ரெண்டு நாப்கின் எப்பவும் இருக்கட்டும்”, “சாக்ஸ் போடாம ஷூ போடாதே” எனப் பல்வேறு உபதேசங்கள். ரகுவுக்கு அவளது குரலில் சுரத்துக் குறைந்து விட்டது போலத் தோன்றியது.

சுமதிக்குக் கூட முகத்தில் கொஞ்சம் வாட்டம் தெரிய ஆரம்பித்தது. அதை வேறு விதங்களில் அவள் காண்பித்துக் கொண்டாள்.

ஆகஸ்ட் இறுதி வாரத்தில் சுமதியைக் கல்லூரியில் விடக் கிளம்பினார்கள் பெற்றோர்கள். ரகுவுக்குக் கஷ்டமாக இருந்தது. “தாத்தா பாட்டி படத்துக்கு விழுந்து கும்மிட்டுக்க.”, “தினமும் எவ்வளவு நேரமானாலும் அம்மாக்கு போன் பண்ணிப் பேசு”, “டி.சி.ல பரசுராம் அங்க்கிள் கிட்டயும் சொல்லியிருக்கேன். அவசரத்துக்குப் பணம் வேணுமின்னா அவருக்கு போன் பண்ணு. “, “வெளிய எங்க போனாலும் ரூமை பூட்டிட்டுப் போ”, “இங்க ரெண்டு பேர் இருக்கோம்” எனத் தொடர்பில்லாமல் பேசினார்.

அவருடைய பயமெல்லாம் ராஜியை பற்றித்தான். அழுதுடுடி.. அடக்கி வைக்காத.. எனக்கு பயமா இருக்குடி .. அங்க போய் செத்துக் கித்து தொலைக்காதே என்று என்னவெல்லாமோ சொல்லத் தொன்றியது.

இரண்டு நாட்கள் டி.சி.யில் தங்கி சுமதிக்கு தேவையான மற்ற பொருட்களையும் வாங்கிக் கொடுத்தாயிற்று. அந்த நேரத்திலெல்லாம் கூட ராஜி, “ஏய் .. ஐ ப்ரோ ட்ரிம் பண்ணணும்னா இங்க பண்ணிக்கோடி”, “ரெயின்போ பக்கத்திலேயே தான் இருக்கு.. சனிக்கிழமைல வந்து தயிர் மோர் ஏதாவது வாங்கி வெச்சுக்கோ”, “ஆறு எழு மணிக்குள்ள ரூமுக்கு வந்துடு”, “எங்க போறதாயிருந்தாலும் ஃப்ரெண்ட்ஸோட போ ..” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

கல்லூரியில் சேர்வதற்கு முந்தின இரவு, டி.சி.யில் ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ரகு, பரசுராமுக்கு போன் போட்டு அவன் கிடைக்காமல் போனதில் பரசுராமைத் திட்டிக் கொண்டிருந்தான்.

சுமதி முகத்தில் லேசான பயமும், கவலையும் தொற்றிக் கொண்டதை உணர முடிந்தது. அவ்வப்போது கண்களில் நீர் முட்டுவதை மறைத்துக் கொண்டாள். ராஜியின் கையைப் பிடித்துக் கொண்டு ஏதேதோ பேசினாள்.

அத்தைனைக்கும் புன்னகைத்தபடி மெளனமாக அமர்ந்திருந்தாள் ராஜி. ரகுவிற்கு சுமதியை அங்கு விட்டு விட்டுப் போவது கவலையாக இருந்தாலும், ராஜியின் நிலைமை குறித்துப் பெருங்கவலை இருந்தது.

மறுநாள், காலையில் எழுந்திருக்கும் போதே ராஜி, களைப்பாக இருப்பதை உணர முடிந்தது ரகுவால். “ஏங்க, இங்க எங்கயாவது காப்பி கிடைச்சா வாங்கறீங்களா.. லேசா தலை வலிக்கிற மாதிரி இருக்கு.”

தான் நினைத்தது சரி தான் எனத் தோன்றியது ரகுவுக்கு.. “என்ன பண்ணுது ராஜி … டாக்டர் கிட்ட போகலாமா?”

“அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க .. புது இடங்கறதனால சரியா தூங்க முடியலை.. அதையும் இதையும் சொல்லி சுமிய பயமுறுத்தாதீங்க.. “

இந்த நேரத்தில கூட அவளைப் பத்தியே நெனச்சுகிட்டு இருக்கியேடி .. உன்னைப் பத்தி நீ நெனச்சு பாரு .. சொல்லவில்லை. எண்ணிக்கொண்டார்.

கல்லூரி வளாகத்தின் நடுவில் இருந்தது அந்தப் பெரிய வரவேற்பறை. பெற்றவர்கள் பிள்ளைகளை கட்டி அணைத்து வழியனுப்பிக் கொண்டிருந்தனர். ஓரிருவர் முகத்தில் மட்டுமே லேசான கவலை. மற்றவர்கள் புன்னகையுடனும், மகிழ்ச்சியுடனும் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த அறை முழுவதும் சல சலவென பேச்சொலியும், சிரிப்பொலியும் நிரம்பி இருந்தது.

அருகிலிருந்த பெரியவர், ரகுவின் முகத்திலிருந்த கவலையை போக்குவதற்காக, “கவலைப் படாதே … பிள்ளைகள் பத்திரமாக இருப்பார்கள் .. நாம அப்பப்ப காசோலை எழுதிக் கொடுத்திட்டாப் போதும் ..” என்று சொல்லி சிரித்தார்.

“நான் போயிட்டு வர்றேம்பா” என்று சுமதி ரகுவை அணைத்துக் கொண்டாள்.

“பத்திரமா இருடா.. தினம் அம்மாவுக்கு போன் பண்ணு” கண்களில் நீர் உருண்டோடியது ரகுவுக்கு.

“போயிட்டு வர்றேம்மா” என்று அவள் ராஜியை அணைத்துக் கொண்டாள்.

ராஜி எதுவும் பேசவில்லை. சுமதியின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டாள்.

விருட்டென்று குனிந்து தனது கைப்பையை எடுத்துக் கொண்டு தன் அறை நோக்கி நடந்தாள் சுமதி. இன்னும் சற்று நேரம் இருப்பாள் என்று எதிர் பார்த்தார் ரகு. திரும்பி ராஜியைப் பார்த்தார். சுமதியின் மீது பதிந்த பார்வை அப்படியே இருந்தது. விழி ஓரத்தில் மட்டும் லேசான கண்ணீர் வெளி வரத் தயாராக இருந்தது.

சுமதியைப் பார்த்தார் ரகு. அவள் விறு விறுவென நடந்து கொண்டிருந்தாள். இன்னும் சற்று அடிகளில் வளைவில் மறைந்து விடுவாள் .. திரும்பி பார்த்துக் கையசைத்து விடை கொடடி பெண்ணே என்று நினைத்தார். அவள் வளைவை நோக்கி சென்று கொண்டிருக்க … திரும்பிப் பார், திரும்பிப் பார் என மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தார். வளைவு நெருங்கி விட்டது …

“சுமதீ ..” எனக் கூச்சலிட்டார் ரகு. சுமதி திரும்பிப்பார்க்கவில்லை, மாறாக வளைவுக்குள் திரும்பி விட்டாள். அந்த அறையில் அவ்வளவு விளக்குகள் இருந்த போதிலும் இருட்டிக் கொண்டு வந்தது ரகுவுக்கு.. நெஞ்சு அடைப்பது போலத் தோன்றியது.

திரும்பி ராஜியைப் பார்த்தார். ஒரு சலனமில்லை அவள் முகத்தில். சுமதி சென்று மறைந்த வளைவின் அந்த புள்ளியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ராஜி …” என்று அவள் தோளைத் தொட்டார் ரகு.

” … “

“அவ சின்னப் பொண்ணு ராஜி … அதனால அவளுக்கு உன்னோட பாசம் புரியலை .. திரும்பிக் கூட பாக்காமப் போயிட்டா. மத்தபடி வேற ஒண்ணுமில்லை … நீ அதையெல்லாம் மனசில வெச்சுக்காத .. நீ .. நீ.. கவலைப் படக் கூடாது … இத்தனை வருஷமா அவளையே நினச்சிக்கிட்டு இருந்ததால கொஞ்சம் கஷ்டமா இருக்கும் … ஆனா அது சரியாயிடும் .. கவலைப் படாத .. என்ன .. டோன்ட் வொர்ரி “

“நான் எதுக்குங்க கவலைப் படணும்?” என்று அவர் கண்களைப் பார்த்தாள் ராஜி.

“அவ என் பொண்ணுங்க .. அவ இப்ப பெரிய ஆளா வளர்ந்துட்டா.. அவளுக்குன்னு ஒரு பாதை வேணுமில்லை .. அதை நோக்கிப் போய்க்கிட்டிருக்கா. நம்ப ரயில்ல இருந்து இறங்கி வேற ரயில்ல போறா .. அவ்வளவு தான். இன்னொண்ணு தெரியுமா உங்களுக்கு .. அவ அந்த ட்ரைன்ல தனியாப் போகப் போறதில்லை .. அவளுக்குத் துணையா நேதன் போறான் …”

“……..”

“ஆமாங்க .. உங்க கிட்ட சொன்னா வருத்தப்படுவீங்கன்னு நான் தான் அவகிட்ட அதைப் பத்தி சொல்ல வேண்டாம்னு சொன்னேன். சுமதி நம்ப பொண்ணுங்க, அவ எங்க இருந்தாலும் நம்ப மனசுக்குள்ள தான் இருக்கா.”

“… “

“ஆமா உங்க விரல் நகம் ஏன் இவ்வளவு பெரிசா வளர்த்து வெச்சிருக்கீங்க.. பொண்ணு படிக்கிற காலேஜுக்கு வரும் போது இப்படியா மீசையெல்லாம் ட்ரிம் பண்ணாம வருவாங்க .. உள்ளங்கை எல்லாம் ஏன் இப்படி வேர்த்துப் போயிருக்கு… ஊருக்குப் போனதும் நானே ட்ரிம் பண்ணி விடறேன்.. உங்க டாக்டர் கிட்டயும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி வெக்கிறேன் .. பி.பி செக் பண்ணிடலாம்” என பேசிக் கொண்டே வெளியே நடக்கலானாள் ராஜி.

சில நிமிடங்கள் முன்பு வரை ரகுவின் மனதில் சிறுத்துப் போயிருந்த ராஜியின் உருவம் பூதாகாரமாக வளர்ந்து விட்டிருந்தது. இந்த வெகுளித்தனம் திண்மைக் கலந்தது. அப்பாவித்தனம் ஆற்றல் நிறைந்தது.

சடாரென முன்னே நடந்துக் கொண்டிருந்த ராஜியை அணைத்து முத்தமிட்டார்.

 ஒரு பயணி இறங்கி விட்டதால் பயணங்கள் முடிவதில்லை!

– மர்மயோகி

Comments (4)

Trackback URL | Comments RSS Feed

  1. Senthil says:

    Very nice story!!

  2. Anonymous says:

    மர்மயோகி அந்த அப்பன் நோஸ் கட் வாங்கிட்டானோ. பிடித்தது..
    “இந்த வெகுளித்தனம் திண்மைக் கலந்தது. அப்பாவித்தனம் ஆற்றல் நிறைந்தது.”

  3. lokesh says:

    மிக அருமை

    தங்கள் சேவை தமிழர்களுக்கு தேவை

  4. Sathya says:

    A good emotional story….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad