\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இந்தியப் பயணம்

Filed in இலக்கியம், கதை by on October 6, 2013 1 Comment

Indian_Journey_520x362உணர்வுகள் – கடவுள் மனிதனுக்கு அளித்த வரம். உறவுகள் – அந்த வரத்தை முழுவதுமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பாலங்கள். காலையிலெழுகையில் வீட்டின் வாசலில் காகம் கரைந்தால் உறவுகள் வீட்டிற்கு வரப்போவதற்கான அறிகுறி என்பது என் கிராமத்தின் நம்பிக்கை, உணர்வு. இதில் அறிவியல் இருக்கிறதாவென்று நானறியேன், ஆனால் மனது உறவினர் கொண்டு வரப்போகும் தின்பண்டங்களை எதிர்பார்க்கத் தொடங்கிவிடும்.

அழகிய மாலைப் பொழுதில் சாவதானமாக அமர்ந்து உணவு உட்கொள்ளும்பொழுது வரும் விக்கல் பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வாழும் உடன்பிறந்தவளின் நினைப்பு என்பது உணர்வுபூர்வமாகத் தெரிந்தாலும், அறிவியல் அதற்கு விளக்கங்கள் கூறுகையில் இது வெறும் உணர்வு பூர்வமானது மட்டுமல்ல என்பது விளங்குகிறது. அதேபோல் ஒரு நாள் ஒரு உணர்வு, என் மகளுக்கு – பாட்டி மடியில் படுத்துறங்குவதாக.. கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிவிட்டன அவள் பாட்டியை நேரில் பார்த்து. கடைசியாகப் பார்க்கும்பொழுது அவளுக்கு நான்கு வயது – எதை நினைவில் வைத்துக் கொண்டிருப்பாள் எனக் குறிப்பிட்டுச் சொல்லயிலவில்லை. தொலை பேசிச் சம்பாஷணைகளிலேயே ஒரு உறவையும் பாசத்தையும் வளர்த்து கொண்டிருக்கிறாள். பாட்டி வளர்த்தப் பூனையின் மீதும் அளவு கடந்த பாசம், ஒவ்வொரு தொலை பேசி அழைப்பிலும் பூனை குறித்த நல  விசாரணை.

இந்த மூன்று வருடங்களில், பூனைக்கு உடல் நிலை சரியின்றி இறந்தே விட்டது. பாட்டியின் பேத்திப் பாசம் ஊரூராய்த் தேடி அதே நிறத்தில் இன்னொரு பூனை வாங்கி அதுதான் இது என்று சொல்லத் தயார் செய்தது. உண்மையைச் சொல்லப் போனால் என் மகளுக்கு நினைவிலிருப்பது அந்தப் பூனையின் பெயர் மட்டுமே, எந்தப் பூனையைக் காட்டி இதுதான் அது என்று சொல்லியிருந்தாலும் ஏற்றுக் கொண்டிருப்பாள். ஆனால், பாட்டிக்குப் பயம், பேத்தி ஏமாந்து விடக் கூடாதென்ற கவனம், கவலை, அக்கறை. உறவுகளின் அர்த்தம், பலம், ஆழம் அனைத்தும் இதுபோன்ற சிறிய உதாரணங்களில் உணரலாமென்பது என் அனுபவம்.

இந்தியா செல்வது என்று முடிவாயிற்று. ஏழு வயது மகளின் தேவைகளையும், இரண்டு வயது சிறியவளின் நிர்ப்பந்தங்களையும் சமாளிப்பது எப்படி என்பதிலேயே ஒரு மாதம் கடந்தது. பல கழிவறைகளில் லிகுவிட் சோப்பு இருக்காது என்பதற்காக எத்தனை சிறிய பாட்டில் சானிடைஸர்ஸ் வாங்குவது என்பதில் தொடங்கியது தயாரிப்பு. நீர் நிறைந்து நிற்கும் கழிவறைகளை உபயோகப் படுத்தக் குழந்தைகள் வருந்துவார்களே எனத் தொடர்ந்தது நம் கவலை. இந்திய முறையில் முழங்காலிட்டு அமர்ந்து இயற்கை உபாதை கழிப்பதற்கு ஒரு பாடமே எடுக்கத் தொடங்கினோம் நானும் என் மனைவியும்.

முதல் நாள் விமான நிலையத்திலிருந்து வீட்டிற்கு வரும் நள்ளிரவு குறித்த கவலை, கவனம் பல நாட்களாக எங்களைத் தொற்றிக் கொண்டது. குழந்தைகள் தங்களின் பழக்கத்தில் ஏதேனும் கூறி, உயிருனும் மேலான அற்புத உறவுகளின் உணர்வுகள் புண்படுமோ என்ற கவலை மனமெங்கும் ஒரு விஸ்வரூபம் எடுக்க, குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டுமென்ற உந்துதல் அதிகரித்தது. அமெரிக்கக் குளியலறையில் அங்கும் இங்கும் எப்போதாவது தென்படும் தலைமுடிக்கே முகம் சுழித்து “வ்யூ…” என அருவருக்கும் குழந்தைகள், கரப்பான் பூச்சியும் பல்லியும் நடமாடும் நம்மூர் கழிவறைகளை எவ்வாறு பார்ப்பார்களோ என்ற பயம் மரணப் பயத்தைவிட மேலானது என்பது விவரம் தெரிந்த குழந்தைகளை இந்தியா அழைத்துச் சென்ற அமெரிக்க வாழ் இந்தியர்களுக்குப் புரியும்.

ஒரு வழியாக விமானம் எதுவென்று முடிவு செய்து பயணச்சீட்டு வாங்கியாகி விட்டது. நமக்கு வேண்டிய துணிமணி மற்றும் இதர பொருள்களை வாங்குவதற்காகப் பல மாலை நேரங்களிலும், சனி மற்றும் ஞாயிறு தினங்களிலும், நேரத்தையும், பணத்தையும் செலவு செய்தாகி விட்டது. உடன்பிறந்த உறவுகள் தொடங்கி, தெருக்கோடியில் துணிமணிகள் சலவை செய்து பல வருடங்களாக நம் குடும்பத்திற்குச் சேவை செய்து வரும் சலவைத் தொழிலாளி தங்கராஜ் அண்ணன் வரை அனைவரையும் நினைத்து, மனதில் எது பொருத்தமாக இருக்குமென்று ஆய்வு செய்து, அன்பளிப்புப் பொருட்கள் வாங்கும் முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. பல வருடங்கள் வெளி நாட்டில் வாழ்ந்து கொண்டு பல முறை பயணம் செய்து, ஒவ்வொரு முறையும் ஏதோவொரு அன்பளிப்பு வாங்கிச் செல்வது என்பது வழக்கமானபின் என்ன வாங்குவது என்பது மிகவும் கடினமான முடிவு. எதைப் பார்த்தாலும் இதற்கு முன்னர்ச் சென்ற பயணத்தில் வாங்கிக் கொடுத்ததாகத்தான் இருக்கும். உறவுகளுக்கு நாம் வாங்கி வரும் பொருளின் மதிப்பைப் பற்றிய அக்கறையில்லையென்றாலும், நமக்கு ஒரு சரியான, உபயோகமான ஒன்றை வாங்க வேண்டுமென்ற உந்துதல் மிகப் பெரிய சவாலாகத் திகழும்.

இதையெல்லாம் மீறி ஏதோ சிலபல பொருட்களை வாங்கி முடித்த பின்னர், அவற்றையெல்லாம் எப்படி வரையறுக்கப்பட்ட அளவுள்ள பெட்டி ஒன்றில் நிர்ணயிக்கப்பட்ட எடையளவுக்கு குறைவாகப் பேக் செய்வது என்பது கம்பச் சூத்திரத்திற்கு நிகரான ஒரு பெரு முயற்சி. பல பெட்டிகளில் இவற்றைச் சமன் செய்து, ஒன்றுக்கு மூன்று முறை எடை பார்த்து, உடையும் பொருட்கள் உடையா வண்ணம் வைத்து… அப்பப்பா, ஏதாவது ஒரு கொரியர் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தால் நாம்தான் நம்பர் ஒன் பேக்கர் என்ற பெயரை எடுத்திருப்போம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எல்லா ஏற்பாடுகளும் முடிந்த புறப்படும் நாள். பெரியவள் சரளமான அமெரிக்க ஆங்கிலத்தில், “அப்பா, வுட் ஐ பி ஏபிள் டு ப்ளே ஆன் மை ஐபேட் ஒவர் தேர் இன் இண்டியா?” எனக் கேட்க, அவளின் தனிமை குறித்த பயம் அடிவயிற்றிலிருந்து ஒரு பந்தாகப் புரளத் தொடங்கியது. “யு வில் ஹேவ் அ லாட் ஆஃ பீப்பிள் டு ப்ளே வித்” – என்னுடைய பதில். “வில் தே ஸ்பீக் இங்கிலிஷ்” கேள்வி தொடர்கிறது, “செவெரல் ஆஃ தெம், அம்மா”..

ஒரு மாதம் எப்படி ஓடப் போகிறது. ஆற்றொணாக் கவலையாய் அடிமனத்தில் தொற்றிக் கொண்டது.

விஷக் கிருமிகள் சிலரின் கைங்கரியம் இன்றைய விமானப் பயணமென்பது ஒரு கதிகலங்க வைக்கும் செய்கை. நீளமான வரிசையில் நின்று, நம் முறை வந்ததும் இடுப்பில் அணியும் பெல்ட்டிலிருந்து, காலில் போடும் காலணி வரை அனைத்தையும் களைந்து கிட்டத்தட்ட அரை நிர்வாண நிலையில் செல்லும் பாதுகாப்புச் சோதனை. புதிதாக இப்பொழுது ஒரு கருவி உடலில் வளைவுகளையும் கோடுகளையும், உள்ளே பதுக்கி வைத்திருக்கும் பொருட்களையும் படமெடுத்துக் காட்டுகிறதாம். எவற்றையெல்லாம் படமெடுத்துக் காட்டுகிறதோ, எவரெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ என்ற நினைப்புடனே, வேறு வழியெதுவுமில்லாமல் காட்டிக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம். கேடு விளைவிக்கும் விஷக் கிருமிகள் எப்படியோ இவற்றை மீறித் தாம் செய்யும் அழிவுச் செயல்களைத் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறார்கள். நம்போன்ற சாதாரண மனிதர்கள்தான் இந்தச் சங்கடங்களுக்கு ஆட்பட வேண்டிய கட்டாயத்திலிருக்கிறோம். விந்தை உலகமிது.

ஒரு வழியாக நள்ளிரவில் தீப்பந்த ஒளிகள் போன்ற ஒளிகளுக்கு மத்தியில், மேலிருந்து பார்க்கையில் அரக்கோணம் ரயில் நிலையம் போன்று காட்சியளிக்கும் சிங்காரச் சென்னை விமான நிலையம் வந்தடைகிறது நம் விமானம். உணர்வுபூர்வமான மகிழ்ச்சி நம்மனதில் வெள்ளமெனப் புரண்டோடுகிறது. ஆனாலும், பல சர்வதேச விமான நிலையங்களைக் கடந்து பயணித்த நாம், நம்மூரின் விமான நிலையம் மட்டும் அவ்வளவு பளபளப்புடனோ, படாடோபமாகவோ, பெரியதாகவோ இல்லையேயென்ற கவலையும் ஏக்கமும் தாங்கியவராய்க் கட்டிடத்திற்குள் காலெடுத்து வைக்கிறோம். நம்முன் நடந்து செல்லும் திருவாளர் பொது ஜனம், முகத்தைப் பக்கவாட்டில் திருப்பி, சுவற்றின்மீது எச்சில் உமிழ்கிறார். இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியில் உறைகிறோம் நாம். இதே திருவாளர் பொதுஜனம் ஐநூறு வெள்ளி அபராதத்திற்கோ, முதுகில் விழும் கழியடிக்கோ, சுற்றுமுற்றும் பார்ப்பவர்களின் ஏளனமான கண்களுக்கோ பயந்து அயல் நாட்டில் செய்யாத வேலையை நம் நாட்டில் சர்வச் சாதரணமாகச் செய்கிறார். வாழ்க நம் ஜனநாயகம்!!

விமான நிலையக் கடன்களை முடித்து, நம் பெட்டி படுக்கைகளை எடுத்துக் கொண்டு வெளியேறு வாயில் வழியாக ஊருக்குள் நுழைகிறோம். நம் குழந்தைகளுக்கு ஒரு பெரிய கலாச்சார அதிர்ச்சி… நள்ளிரவு நேரத்திலும் குப்பென்ற முகத்திலடிக்கும் வெப்பக் காற்று, இரண்டு நொடிகள் இடைவெளி விடாது முன்னால் நகர்வதற்கு ஊசி முனையளவும் இடமில்லையென நன்றாகத் தெரிந்திருந்தும், விடாமல் ஹார்ன் அடிக்கும் வாகன ஓட்டிகள், எங்கெங்கு  காணினும் மானுடத்தலைகள் – பெரும்பாலானவை கருமை நிறச் சிகையுடன். ஒரு இடத்தில் இத்தனை மனிதர்கள் கூடியிருந்து நம் குழந்தைகள் இதற்கு முன்னர்த் தங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை.

அந்த நள்ளிரவு தூக்கக் கலக்கத்திலும், சிரித்த முகத்துடன் நம்முறவினர்கள் அனைவரும் ஆறிலிருந்து அறுபது வரை ரத  கஜ துரக பதாதிகளுடன் ஆஜராகியிருந்தனர். அன்பின் பரிமாற்றங்கள் அவரவர்களின் வெளிப்பாடுகளுக்கேற்ப இனிதே நடந்தேறியது. பயணித்து வந்த குழந்தைகளும், பரவசத்தில் பார்க்க வந்திருந்த குழந்தைகளும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதில் ஆரம்பித்து, பேசுவதில், பழகுவதில் என்று நிதர்சனமான வித்தியாசங்கள். அவை வித்தியாசங்களாக நம் கண்களுக்குத் தெரிந்தாலும், அவர்களுக்கு இடையில் எந்த வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. வெளியில் வந்து, காருக்குக் காத்திருக்கும் இடைவெளியில் மிகச் சிறந்த நண்பர்களாகிவிட்டிருந்தனர்.

எவையெல்லாம் குழந்தைகளால் ஏற்று கொண்டு மகிழ்ச்சியாக இயங்க இயலாது என்று நாங்கள் பயந்து கொண்டிருந்தோமோ அவையெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. வீடு நிறைய மக்கள், பக்கத்து வீட்டு மாமி, எதிர்த்த வீட்டு ஆசிரியர், பொறியியல் படிக்கும் கீழ் வீட்டு இளைஞன், பாட்டு டீச்சர், அடுத்த தெரு ஹிந்தி பண்டிட் என அனைவரும் எங்களைப் பார்க்க வந்திருந்தனர். வந்த எவரும், என் குழந்தைகளின் கன்னத்தைப் பிடித்துக் கொஞ்சாமல் நகரவில்லை. ஏற்கனவே எலுமிச்சை நிறக் கன்னம் கிட்டத்தட்ட ரோஜாப்பூ நிறமாக மாறியிருந்தது. முதலில் நாணிக்கோணி, தன் அம்மாவின் கால்களைக் கட்டிக்கொண்டு கன்னத்தைக் காட்ட மறுத்த சிறியவள், சில மணித்துளிகளுக்குப் பின் இது  தன்னை வரவேற்றுப் பாராட்டைத் தெரிவிக்கும் வழிமுறை என்பதைப் புரிந்துகொண்டவுடன் வரும் அனைவரிடமும் கன்னக் கிள்ளலை எதிர்பார்க்கவே ஆரம்பித்து விட்டாள்.

வேண்டிய அனைத்தும் கேட்பதற்கு முன்னரே கிடைக்கத் துவங்கியது. அறுசுவை உணவு, அமர்ந்த இடத்தில் காஃபி என ராஜோபசாரம் நடந்து கொண்டிருக்க, சிற்சிறு துன்பங்களாக நாங்கள் பயந்து கொண்டிருந்த எல்லாமே காணாமற் போயிருந்தது. அனைத்தையும் மீறி நாம் சாதாரணமாக நினைத்துப் பார்க்காத மலையினும் பெரிய, பலமான உறவுகளும் அவற்றின் அன்பும், அதன் வெளிப்பாடும் எங்கள் அனைவரையும் முழுவதுமாகக் கட்டிப் போட்டிருந்தது.

முதல் வாரத்தில் ஒவ்வொரு இரவுப் பொழுதும் ஒரு பெரிய போராட்டம். நமது உடலுக்கு அது மதிய நேரம், நம்மைச் சுற்றியுள்ள உலகத்திற்கு அது நடுநிசி. குறட்டை விட்டுத் தூங்கும் அனைவரையும் பார்க்கப் பொறாமையாய் இருக்கும். ஜெட் லாக் (jet lag) என்ற பெயரில், பேய்கள் உலாவரும் அந்த நேரத்தில், நம் குடும்பம் முழுதும் எழுந்து உட்கார்ந்து கொண்டிருக்கும். இரண்டு மூன்று தினங்களுப்பிறகு, வீட்டிற்கு உள்ளேயே இருப்பதற்குப் பிடிக்காமல் மொத்தக் குடும்பமும் “வாக்” போகலாமென முடிவெடுத்து ஒரு ஐந்து மணியளவில் வெளியில் புறப்பட்டோம்.

முந்தைய இரவில் பலமாகப் பெய் து ஓய்ந்திருந்த மழை, இன்றைய காலைப் பொழுதில் சேறாகவும், சகதியாகவும் சாலையின் இரு மருங்கிலும் தேங்கியி்ருக்க, எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு பகீரதப் பிரயத்தனமானது. குழந்தைகள் இருவருக்கும் பார்க்கும் அனைத்தும் புதுமை. மாநகராட்சி குப்பைத் தொட்டி என்ற பெயரில் வைத்திருக்கும் ஒரு பெரிய சிமெண்ட் தொட்டி, அது இருக்கும் உணர்வேயின்றி அதனைச் சுற்றி எறியப்பட்டிருக்கும் அனைத்து விதமான குப்பைக் கூளங்கள், அதனைச் சுற்றித் தனது இரை தேடும், சொந்தக்காரர் இல்லாத தெரு நாய்கள், அவற்றுடன் போரிடத் தயாராகக் கூவிக் கொண்டே பறந்து வரும் காகங்கள், இவற்றுக்கு மத்தியில் எங்கேனும் ஓரிரு பச்சை இலைகள் தெரியாதா எனச் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருக்கும் மாடுகளும், அவற்றின் கன்றுகளும், அந்தக் குளிரைத் தாங்க இயலாமல் ஆனாலும் வீட்டிற்குள்ளே அமர்ந்திருக்க இயலாமல் தெருவோரத் தேனீர்க் கடைக்கு வந்து தினசரிப் பத்திரிகை படித்துக் கொண்டே தேனீர் உறிஞ்சும் திருவாளர் பொது ஜனம், அவர் அணிந்திருக்கும் லுங்கி.. அனைத்தும் புதுமை: காக்கையையும், நாயையும், மாடு கன்றுகளையும் பார்த்துக் குழந்தைகளுக்கு ஒரே குதூகலம்..

சகதியில் நடக்க வேண்டாமென தார் ரோடில் கால் வைத்தால், நம்மை அதிர்ச்சியில் மூழ்கடிக்கும் விதமாக ஹார்ன் சத்தத்துடன் அரிசி மூட்டைகளைச் சுமந்து கொண்டு ஆந்திரா விரையும் லாரி ஒன்று. அந்த ஹார்ன் சத்தம் அதனைக் கேட்டு நாம் விலகிச் சென்று பிழைத்துக் கொள்ளவா அல்லது அதிர்ச்சியில் லாரியினடியிலேயே விழுந்து உயிரை மாய்க்கவா என்பது நமக்கு விளங்கவில்லை. குழந்தைகளைப் பத்திரமாக அழைத்துக் கொள்ளவேண்டுமென்ற உணர்வில், சாலைக்கு மத்தியில் மீடியன் என்ற பெயரில் கிட்டத்தட்ட ஒரு அரசியல் கூட்டம் போட முடிந்த அளவுள்ள ஒரு மேடையின் மீது ஏறி நடக்க ஆரம்பித்தோம். இப்பொழுது லாரிகள் இரு மருங்கிலும் சென்று கொண்டிருக்க, அவற்றின் ஹார்ன் சத்தங்கள் அடி வயிற்றைக் கலக்க, கால்கள் லேசாக நடுங்க ஆரம்பித்தன. எப்படியாவது குழந்தைகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் வீடு வந்து சேர வேண்டுமென்ற முடிவுடன், நாம் பெரியவளையும், என் மனைவி சின்னவளையும் தூக்கி கொண்டு நடக்கலானோம். சகதி படிந்த அவர்களின் காலணிகள் எங்களின் உடைமேல் உரசியவாறு வர, அவர்கள் காகம், கன்று என எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டே வர ஆரம்பித்தனர்.  நாளையிலிருந்து காரில் சென்று நாகேஸ்வரராவ் பூங்காவின் உள்ளே மட்டும் “வாக்” செய்தால் போதுமென்ற முடிவுடன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

இரயில் வண்டிப் பயணம் குழந்தைகளின் மகிழ்ச்சியான அனுபவங்களில் மற்றொன்று. “அப்பா, இவர்கள் ஏன் இப்படிப் பொது இடங்களில், தரையில் படுத்து தூங்குகின்றனர்” என இவர்கள் “ஹோம்லஸ்” என்ற எண்ணத்தில் கேள்வி கேட்க, அவர்கள் நம்போன்ற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று விளக்கிப் புரிய வைக்க முயன்றேன். இயலவில்லை. சுமை தூக்குபவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு வேகமாக நடந்து முன்செல்ல, ”அப்பா, நீ ஏன் அந்தப் பெட்டிகளைத் தூக்காமல் இன்னொருவரிடம் கொடுக்கிறாய்” என இதற்கு முன் பார்த்திராததனால் கேள்வி கேட்க, “வெய்ட் அதிகம்மா, என்னால தூக்க முடியல” என நான் பதிலளித்தேன். “அவருக்கு மட்டும் எடை அதிகமில்லையா?”, அழகான ஆங்கிலத்தில் என் மகள் கேள்வியைத் தொடர, பளாரென்று கன்னத்திலறைந்ததைப் போன்ற உணர்வு. அவளிடம் பகிர்வதற்குப் பதிலில்லை, அவரை நிறுத்திப் பெட்டிகளை வாங்கிக் கொள்ள மனமில்லை. சலனத்துடன் தொடர்ந்து நடந்தேன். பெங்களூர் ரயில் நிலையத்தில் இவள் கண்களில் மண்ணைத் தூவி, பெட்டியை எப்படி இன்னொருவரிடம் கொடுத்து அனுப்புவது என அப்பொழுதே யோசிக்கத் தொடங்கினேன்.

இரயிலில் அமர்ந்து கொண்டு பின்னோக்கிச் செல்லும் மரங்கள், அடிக்கடி வந்து போகும் தின்பண்டங்கள், ஆங்காங்கே நிற்கும் நிலையங்களின் நடைமேடைக் கடைகள், பக்கத்தில் அமர்ந்து வரும் குழந்தைகளின் விளையாட்டு, அடுத்த பாக்ஸில் அமர்ந்துள்ள ஆடவர்களின் சீட்டாட்டம், ஒருவருக்கு மேல் ஒருவர் எனப் பல தட்டுக்களில் படுத்துறங்கும் அமைப்பு, சத்தம் மட்டும் போட்டுக் காற்று எதுவும் வராத மின் விசிறிகள், கழிவினை அப்படியே தண்டவாளங்களின் மத்தியிலே தூக்கியெறியும் கழிவறைகள் – என அத்தனையும் புதுமை, இங்கும்.

பாட்டி வாழ்வது கர்நாடக மாநிலத்தில் ஒரு குக்கிராமம். பெங்களூரிலிருந்து காரில் மூன்று மணி நேரப்பயணம். ஒர் அவசர மருத்து உதவி என்றாலும் ஒரு மணி நேரமாவது காரில் வரவேண்டும். குழந்தைகளுக்கு உடல் நிலை சரியில்லையென்றால் என்ன செய்வது என்ற பயம். ஆனாலும் குழந்தைகளின்மீது உயிரையே வைத்திருக்கும் பாட்டி மற்றும் உறவினர்கள். வீட்டில் நுழைந்த மறு நிமிடத்திலிருந்து இளவரசிகளைப் போன்ற கவனிப்பு. சொந்தத் தோட்டத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சுவைமிகு இளநீர், மதிய உணவிற்குப் பிறகு வெட்டி கொடுப்பதற்காக அடுக்கி வைக்கப் பட்டிருந்த பனை நுங்குகள், புழக்கடையில் பயணக் களைப்பு போவதற்காக எண்ணைக் குளியல் செய்வதற்குப் பெரிய அடுப்பில், பெரிய பாய்லரில் கொதிக்கும் வெந்நீர், மாலைச் சிற்றுண்டிக்குச் சுட்டுத்தரக் கொண்டுவரப்பட்ட பனங்கிழங்கு எனக் குழந்தைகளுக்காகப் பார்த்துப் பார்த்துத் தயாரிக்கப்பட்ட வசதிகள். மருத்து வசதி இல்லாமலிருக்கலாம், பொழுது போக்கிற்கு வழி வகையில்லாமலிருக்கலாம், புழுதி படிந்த வீதிகளாக இருக்கலாம், இண்டெர்நெட், வை.ஃபை எந்த வசதியில்லாமலிருக்கலாம், ஐபேடுகளும், டி.எஸ்’களும் வேலை செய்யாமலிருக்கலாம் – குழந்தைகளிருவருக்கும் அந்த ஊர் ஒரு சொர்க்கப் புரியாக மாறிவிட்டிருந்தது. எலக்ட்ரானிக் காட்ஜெட்ஸ் இல்லாமல் இந்தக் குழந்தைகளால் வாழ்க்கையை ரசிக்க முடியுமென்று அன்றுதான் எங்களுக்குப் புரிந்தது.

ஆயிற்று. ஊருக்கு நேற்றுதான் வந்ததுபோல் இருந்தது. ஒரு மாதமாகி விட்டிருந்தது. நாளை இரவு விமானப் பயணம், அமெரிக்கா திரும்பிச் செல்ல. நண்பன் ராமுவுக்கு ஐடினரி அனுப்பவேண்டும், சிகாகோ இறங்கியதும் ஃபோன் செய்து சொல்வதற்கு வசதியாக ஃபோனை முழுவதுமாகச் சார்ஜ் செய்து கொள்ளவேண்டும், இன்ஸ்யூரன்ஸ் கம்பெனிக்கு ஃபோன் செய்து கார் இன்ஸ்யூரென்ஸ் ரி-இன்ஸ்டேட் செய்ய வேண்டும், கேபிள் கனெக்‌ஷன், வீட்டு ஃபோன் என விடுமுறைக்குச் செல்லும்பொழுது அனாவசியமாகச் செலவு வேண்டாம் எனச் சஸ்பெண்டு செய்திருந்த அனைத்தையும் திரும்பப் பெறவேண்டும். ஊரில் குளிர் அதிகமோ, நண்பனிடம் வீட்டின் ஹீட்டரை முதலிலேயே ஆன் செய்யச் சொல்ல வேண்டும் – மனது சென்னையிலிருக்கும் பொழுதே அமெரிக்க வாழ்க்கைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சென்று விட்டிருந்தது. திரும்ப வாங்கிச் செல்லும் சாமான்களைப் பேக் செய்வது, ஐம்பது பவுண்டு எடைக்குள் எட்டுப் பெட்டிகளும் இருக்கிறதா என எடை போட்டுப் பார்ப்பது என்றும் நானும், மனைவியும் மிகவும் பிஸியாக இருந்தோம். சில மணி நேரங்களாகக் கண்ணில் படாதப் பெரியவளைப் பற்றிய நினைப்பேயில்லை.

மாலை 6 மணியளவில், எல்லா ஏற்பாடுகளும் முடிந்தது. பக்கத்து வீட்டு மாமி, எதிர்த்த வீட்டு ஆசிரியர், பொறியியல் படிக்கும் கீழ் வீட்டு இளைஞன், பாட்டு டீச்சர், அடுத்த தெரு ஹிந்தி பண்டிட் மற்றும் சலவைத் தொழில் செய்யும் தங்கராஜ் அண்ணன் அனைவரிடம் சொல்லிக் கொண்டு   புறப்பட்டாகி விட்டது. இந்தக் களேபரத்திலும் பெரிவளின் மீது கவனமில்லை. போய் வருகிறேன் என்று சொல்லிக் கொள்பவர்களில், பெரியவர்கள் காலில் விழுந்து நமஸ்காரம் மற்றும் சிறியவர்களை ஆலிங்கனம் என அவரவர்களின் மரியாதை கேற்ப விடையளிப்பு தொடர்ந்தது. ஆசிர்வாதம் செய்து அனைவரும் வைத்த விபூதியும் குங்குமமும் நெற்றியைக் கிட்டத்தட்டப் பொங்கலுக்குக் காவியும் வெள்ளையும் அடிக்கும் கோவில் சுவராக மாற்றியிருந்தது.

வீட்டிற்கு வந்து சாப்பிட்டு அவசர அவசரமாகச் சாப்பிட்டு விட்டுக் கிளம்பியாகி விட்டது. கார் சரியான நேரத்திற்கு வரவேண்டும். மழை நேரத்தில் சாலையில் எதுவும் தொல்லையில்லாமல் இருக்க வேண்டும், சரியான நேரத்தில் விமான நிலையம் சேர வேண்டும். எட்டுப் பெட்டிகளும் நிர்ணயிக்கப்பட்ட எடைக்குக் குறைவாக இருக்க வேண்டும், பாஸ்போட், டிக்கட் மறந்து விடாமல் இருக்க வேண்டும். பல நினைவுகள், இப்பொழுதும் குழந்தைகளின் முகங்களையோ, உணர்வுகளையோ இருவரும் சரியாகக் கவனிக்கவில்லை.

வரிசையில் நின்று, விமானக் கவுண்டர் சென்று எல்லாவற்றையும் செக்-இன் போர்டிங் பாஸ் வாங்கிக் கொண்டு, அனுப்ப வந்திருந்தவர்களை நோக்கித் திரும்ப வந்து அவர்களிடம் விடை பெறும் நேரம். அருகில் அமைதியாய் நடந்துவரும் பெரியவளை அப்பொழுதுதான் பார்க்கிறேன் அழுது அழுது சிவந்த கண்களுடன் நடந்து கொண்டிருந்த அவள். ”அப்பா, நாம ஏன் அமெரிக்கா போகணும்” – சாதாரணத் தமிழில் அசாதாரணக் கேள்வி கேட்கிறாள் என் மகள். ஒரு மாதத்திற்கு முன் இதே போன்ற ஒரு சூழலில் நடந்த ஆங்கிலச் சம்பாஷணை நினைவுக்கு வந்தது.

புறப்படத் தயாரான குழந்தைகளுக்கும், வழியனுப்ப வந்திருந்த குழந்தைகளுக்கும் பொதுவாய் இருந்தது ஒன்று. அது அவர்களின் கண்களில் தங்கு தடையின்றி வழிந்தோடும் கண்ணீர்.

அந்தக் கண்ணீர், காவியம் பல சொல்லிற்று.

என் அன்னை பூமிக்கு அசாத்திய சக்தி எனச் சொல்லிற்று.

உறவுகளின் பலத்தை உறுதியாய் உணர்த்திற்று!!!.

– வெ. மதுசூதனன்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. பாண்டி says:

    ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள்..அதைப் போல், குழந்தைகள் சூழ்நிலைக்கேற்ப எளிதாக வளைகிறார்கள்..அவர்களை விட அவர்களை பற்றி நினைத்து வாடும் நம் நிலைதான் கவலைக்குரியது! 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad