வாங்க ப்ரீயா பேசலாம் !!
என்னா ஊருங்க இது? ஒன்னு பேஞ்சு கெடுக்குது.. இல்ல காஞ்சு கெடுக்குது.. அதுவிமில்லீன்னா குளிரித் தொலைக்குது .. பொறக்காலப் போயி ஒக்காரதுக்குள்ளாற பொடனி எல்லாம் வெறச்சுப் போச்சுது.. பெருசா இல்லாட்டியும், ஊருக்கு அந்தாப்பல ஒரு சின்ன வூட்ட வாங்கிப் போட்டேனுங்க.. (நீங்க நெனக்கிற மாதரயெல்லாம் ஒன்னுமில்லீங்க .. சின்ன சைஸ் வூடுங்க ..) அது என்றான்னா நமுக்கு சோலி சாஸ்தியாப் போனது தான் மிச்சமுங்… எதையும் அனுபவிக்க முடிலீங்க..
”காப்பி கீப்பி குடிக்கிறாங்களா மாமோவ்?” எங்கூட்டம்மணி.
“காப்பி வேனாமத்தா. சொம்புல கொஞ்சூண்டு தண்ணி மோந்துட்டு வா. எளவு, தாகமா கிடக்கு. சரி வேண்டாம்.. கொஞ்சூண்டு காப்பீயே குடு”
“இந்த கிண்டலு தானே மாமா வேண்டாமுங்கறது. என்ர காப்பி, தண்ணியாட்டமாவா இருக்கு?”
காப்பியை அண்ணாந்து குடிக்கையில “பேப்பர் படிக்கிறத வுட்டுப்போட்டு அங்கிட்டுப் பாருங்க ..பொசுக்குன்னு பாக்காம மொள்ளமா பாருங்க.. பக்கத்தூட்டு அம்மிணி பீர் குடிக்கிறத ..”
”குடிக்கத்தானே வோனும் … இல்லாட்டி அவ பெத்து வெச்சிருக்கிறதுங்கள மேக்க முடியாதல்ல..”
“எனுக்கு நெம்ப நாளா ஒன்னு கேக்கோனுமுங்..”
“எது? பீர் குடிக்க போறீயா? அப்புறங்கொய்யன் நாயத்த ஆரு கேக்கறது?”
”அய்யே … லோலாயாக்கும் ”
“செரி .. செரி…. விசியத்த சொல்லுக் கேப்போம்.”
“வேறொண்ணுமில்லீங் .. அந்தம்மிணி அவிக வூட்டுக்காரர எந்நேரமுங் ஹனி ஹனின்னு கூப்பிடுதுங்க .. அதக் கேக்கும்போது ஓடிப் போய் நாலு அப்பு அப்பி வெடுக்குன்னு கேக்கோணும்ன்னு வருதுங்.. அதென்னதுங்கது? புருசன் பேர அடிக்கொருக்கா சொல்லிக்கிட்டு? ஒரு மருவாதை வேணுமில்ல?”
“கோவிக்காத ஆத்தா…அவிங்க வூட்டுக்காரரு பேரு ஹனின்னு உங்கிட்ட சொல்லிச்சா அந்தம்மிணி?”
“சொல்லோனுமாக்கும் ? நானே புரிஞ்சிகிட்டது தான்”
”நெசமாலுமே நீ அறிவாளிதே அம்மிணி”
“ஆமாமுங்… அது நம்ம ரெத்தத்துலயே இருக்குதுங்”
“அது கெடக்கட்டும்.. அந்தம்மிணி பேரு தெரீமா உனுக்கு?”
“ஜ்வீட்டி”
“என்னத்தா?”
“ஜ்வீட்டி.. அவிக வூட்டுக்காரரு அவியள அப்டிதே கூப்பிடுவாறாக்கும்”
“அது ஜீவீட்டி இல்லத்தா … ஸ்வீட்டி..”
“ஜ்டைலாத்தேன் இருக்குங்.. அப்படின்னாக்க என்னர்த்தமுங்க?”
“அவியள போய்க் கேளு…”
“ஐய்யோ .. அவிக வூட்டுக்காரரு இருக்கறாருங்கோ..”
“அடியே .. அது அவீய பேரு கெடயாது.. அவீய வூட்டுக்காரரு அவியள செல்லமா கூப்பிடறது..”
“ஆங் .. செல்லமாக்கும் ”
”ஆமா.. நீ நம்மூரு தியாகராச பாகவதரு, கிட்டப்பா, டி ஆர். மகாலிங்கம் படமெல்லாம் பாத்திருக்கீல்லா? அதுல பேசிக்குவாங்களே, தேனே, மணியே அப்படீன்னு. அது தான் ஹனி, ஸ்வீட்டியெல்லாம். “
“இந்த எகத்தாளம் தானே வேண்டாங்கிறதுங்.”
“எகத்தாளமெல்லாம் ஏதும்மில்லம்மணி .. சத்தீமா நெசத்த தான் சொல்றன். தேனே, அன்பே, அழகே, கற்கண்டேன்னெல்லாம் நம்மூருக்காரவியவளும் பேசினவியத்தான்…இப்பந்தே ஆருக்கும் அன்பா பேசக் கூட நேரமில்லீயே .. எப்பவும் ட்ரைன புடிக்கற மாதர்யே இங்கெயும் அங்கெயும் ஓடிக்கிட்டு .. வெசனமா இருக்கு. பொறவு எங்க பாசமாவும் செல்லமாவும் பேசுறது?”
“ஆரு சொன்னது நேரமில்லன்னு? அன்பு காட்ட வேண்டீதுதேன். இல்லீன்னெல்லாஞ் சொல்லுல . அதுக்காவ ஒறம்பற, பொட்டு பொடிசுங்க முன்னாடி மானே, தேனேன்னு கொஞ்சிக்கிட்டிருந்ததா பாக்கிறவிய என்ன நெனப்பாக?”
“நாலு பேரு நாலு வெதமா பேசிட்டுத்தான் இருப்பாங்க.. அதையெல்லாம் பாக்க முடியுமா? அதெயெல்லாம் விட்டுபோட்டு போக வேண்டீதுதேன்.”
“அதெப்படி முடியும்… உங்கட ஆத்தா அய்யன் முன்னாடி என்னை அப்படி கூப்பிடுவீங்களாக்கும்? அதுமு உங்க ஆத்தா .. என்ர மாமியா… சீவக்கட்டைல சிலுப்பிற மாட்டாக? ஊரு நாயம் போதும் .. வூட்டுக்குள்ற எந்திரிச்சி வாங்க ..”
இப்படித்தானுங் .. எங்கியோ ஆரமிச்சு எதையோ பேசி, எங்கியோ போயி முடிக்கறது… இதெல்லாம் ரோசனை செய்றதில்லீங் .. தானா அமயறதுதாங்க.
தெரியாத்தனமா கேக்குறன்.. ஸ்வீட்டி, ஹனின்னு கூப்டறதெல்லாம் தப்புத்தானுங்களா? அப்ப நம்ம அப்புச்சி, அப்பத்தா காலத்துல தேனே, மானேன்னு கூப்டதெல்லாமுங்க?
உங்களுக்கு எதுனா பதிலு தெரிஞ்சி எளுதுனா நெம்ப நெல்லாருக்குமுங் …
போயிட்டு வர்றேனுங்.!!
– சூலூரு சுந்தருங்.
உங்கூட்டம்மணிதானுங் correct. நம்ம அப்புச்சி, அப்பத்தா காலத்துல தேனே, மானேன்னு கூப்டதெல்லாமுங்க நாலு செவுத்துக்குள்ள தானுங்கண்ணா. இது இவியளுக்கு வேன்னா சரியாருக்கலாம். may be our children will follow this, but for us-will take time.
சூலூரு சுந்தருங்கண்ணா, I have really enjoyed the slang.