\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

ஏன் கடவுளே?

Filed in இலக்கியம், கவிதை by on October 6, 2013 2 Comments

Why_God_520x355கடவுள் ஒருநாள் கருணையுடன் முன்தோன்ற

கண்கள் குளமாகிக் கனவிதோ, குழப்பமுற

கணம்பல கடந்ததும் கருத்தது தெளிந்திட

கலக்கம் துறந்து களிப்புடனே நான்கேட்க…

 

கலகம் விளைக்கும் கயவர்கள் பிறந்ததேன்

களவில் திளைக்கும் கள்ளர்கள் வந்ததேன்

கன்னிகள் சிதைக்கும் கருங்காலிகள் உதித்ததேன்

கனவுகள் அழிக்கும் கல்லறைகள் வளர்வதேன்

 

கஞ்சன் கையில் கணக்கின்றிக் காசேன்

களிப்புடன் அளிக்கும் கர்ணனுக்கு வறுமையேன்

கருவினை அழிக்கும் கட்டழகிக்குக் கர்ப்பமேன்

களைப்பின்றிக் கொஞ்சும் கண்மணிக்கு மலடேன்

 

கல்வியற்ற மூடனுக்குக் கல்லூரிகள் சொந்தமேன்

கலைபல கற்றவர் கைகட்டி நிற்பதேன்

கற்பனை அற்றவர் கவிஞராய் ஆவதேன்

கவிதையில் திளைப்பவர் கருவறுக்கப் படுவதேன்

 

கணக்கின்றிப் பலகேள்வி கணையாக வந்துவிழ

கருணைச் சிரிப்புடனே கடவுளவன் பேசலானான்!!

கசடுகள் பலவும் கலக்கங்கள் பலவும்

கடவுளின் செய்கையெனக் கருதிடும் மானுடர்காள்,

 

கடவுளெனப் போற்றிடும் கதைநாயகன் காடுசென்றதும்

கணவனென்ற நிலையினிலே கடல்தாண்டக் கையேந்தியதும்

கயிலைநகர் அதிபனவன் கடுங்கோபப் பிரம்பேற்றதும்

கரம்பிடித்த மனையதனைக் கண்காட்டிச் சுட்டெரித்ததும்

 

கதைபோலக் கேட்டிருப்பீர், கருத்து ஆராய்ந்ததுண்டோ?

கணக்காய்ச் சிந்தித்தால் கடவுளென்று கருதுவீரோ!!

கடிந்து சினக்கவும் கனன்று எரிக்கவும்

கடவுள் நானெனும் கருத்துப்பிழை தவிர்ப்பீரோ?

 

கரந்து இறைஞ்சினால் கனகம் வருமென்றால்

கடமை என்பதொன்றேன், கடின உழைப்பேன்?

கடந்து பணிந்திட்டால் கருணை உண்டென்றால்

கலகம் விளைவிக்கும் கயவருக்குக் காராக்கிரகமேன்?

 

கதைகள் பலசொல்லி கடவுளெனக்காட்டும்

கருணைப் படைப்பெல்லாம் கருத்தாய்க் கூறுவதொன்றே

கருமம் செய்வதில் கவனம் மிகவேண்டும்

கவலையின்றிப் பிறர் கதறச் செய்திடும்

 

கடுவினை யாவையும் கடைசியில் தருவது

கலங்க வைக்கும் கடுமைமிகு தண்டனை!!

கண்கள் கலங்கிக் கரிசனமுடன் செய்யும்

கருத்தான உதவிக்குண்டு கனிவான சன்மானம்!!

 

கர்ணனின் வறுமைக்கும் கஞ்சனின் வசதிக்கும்

கயவனின் வாழ்வுக்கும் கவிஞனின் வீழ்வுக்கும்

கடந்த காலத்திலவன் கணக்கில் பதிவான

கருமம் ஒன்றே கவிகூறும் காரணம்!!

 

கணக்காய் மனம்வைத்துக் கனிவான செய்கையொன்றே

கருமமாய்ச் செய்திடும் கட்டுப்பாடு வளர்த்து

கடமையுடன் செயல்படுவது கடந்த காலப்பதிவழித்து

களிப்பான எதிர்காலமெனும் கனவதனை நனவாக்கும்

 

கஞ்சனின் தாத்தா கணக்காகச் செய்தததுவே

கர்ணனின் முத்தாத்தன் கவனமின்றி மறந்தததுவே

கயவனின் நேற்றைய கணக்கு நேர்மையானதுவே

கல்வியற்ற மூடன்முன்னோர் கல்விதானம் புரிந்ததுவே!

 

கடவுள் வருவான் கரவினில் பறிப்பானென்ற

கவைக்கு உதவாத கட்டுக்கதை தவிர்த்து

கருமம் தூய்மையாகக் கடின முயற்சியெடு!

கடவுளவன் சொல்லிமறைந்தான்! கனவுமீண்டு கண்கள் திறந்தன!!!

 

– வெ. மதுசூதனன்

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. சச்சிதானந்தன் வெ says:

    நல்ல கனவில் நாயகன் வந்தானோ!
    நல்ல பதிலை நயமாய் தந்தானோ!

    காவென மாடு ஆட்டை வதைத்தாரே
    கள்ளை புகை சுருட்டை படைத்தாரே

    கனவில் வந்தது சைவச் சாமியனோ?
    கள்ளும் காவும் உண்ணும் சாமியனோ?

    நிலையில் யானிருக்க தாத்தன் காரணியோ?
    நித்தம் தவிக்க அவருக்கு பூசனையோ?

    • வெ. மதுசூதனன் says:

      அழகான கேள்வியை அருமையாய்த் தொடுத்தீர்
      அறியும் முயற்சியில் அரிச்சுவடிநான் அறிவீர்!

      அன்றைய கனவில் அரூபமாய்த் தோன்றியவன்
      அஹிம்சா மூர்த்தி அசைவமுண்ணாச் சைவனவன்!

      அவன்யாரைக் கேட்டிட்டான் அசைவமும் கள்ளும்
      அவன்பேரைச் சொல்லிநாம் அனுபவித்தோம் முழுதும்!

      அவனென்று ஒன்றில்லை அவையெல்லாம் நம்பொறுப்பே
      அகமொன்று தூய்மையுர அயராதுழைத்திடல் சிறப்பே!

      அரிதான முயற்சியதில் அசதியது தோன்றையிலே
      அகழ்வான செயல்வினை அமைப்பினை உணர்கையிலே!

      அல்லது நீக்கி அருஞ்சுவை வினைமட்டுமே
      அணுகுதல் நலமெனும் அரும்பொருள் உணர்வோமே!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad