\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

மனப் போராட்டம்

Filed in இலக்கியம், கதை by on October 6, 2013 1 Comment

manaporattam_520x372“உன் புக்கைக் கொஞ்சம் தரியா?”

வலப்புறம் திரும்பி வனப்புடன் அமர்ந்திருந்த மாணவிகளின் மத்தியில் அன்றலர்ந்த மலர்போல வீற்றிருக்கும் பாரதியைப் பார்த்துக் கேட்டான் கணேஷ்.

இளங்கலை மூன்றாம் ஆண்டில் பயிலும் மாணவ மாணவியர்கள் ஆசிரியருக்காகக் காத்திருக்கும் இடைவெளியில் பேசிக் கொண்டிருந்தனர்.

கணேஷுக்கும் பாரதிக்கும் இணக்கமான ஒரு நட்பு. எப்படி ஆரம்பித்தது இது, எப்படித் தொடர்ந்தது என்பது இருவருக்கும் நினைவில்லை. ஆனால் ஒருவரைப் பார்க்காமல் இன்னொருவரால் ஒரு நாள்கூடக் கல்லூரியில் இருக்க இயலாது என்பது இன்றைய நிலை.

பனிரெண்டாம் வகுப்பு வரை கிராமத்துப் பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்து, கல்லூரியில் இளங்கலை இயற்பியல் முதல் வருடம் சேர்ந்தான் கணேஷ். முதல் வார வகுப்பிலேயே ஆசிரியரின் ஒவ்வொரு கேள்விக்கும் ஓயாது எழுந்து பதில் இயம்பும் நகரப் பள்ளியிலிருந்து ஊர் மாற்றலாகி வந்திருந்த பாரதி, மாணவர்கள் அனைவரின் கண்ணிற்கும் புலப்படத் தொடங்கினாள். படிப்பு வாசனை அவ்வளவாக இல்லாதவர்களும், ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் தவறில்லாமல் பேசத் தெரியாதவர்களும் பாரதியைப் பல விதமாய்ப் பழிக்கத் தொடங்கியிருந்தனர். இவற்றைப் பற்றியெல்லாம் கவலை படாமல் ஆசிரியர் கேள்வி கேட்பதெல்லாம் தனக்காகத் தான் என்ற முடிவுடன் எதற்கும் சளைக்காது பதிலளித்து வந்தாள் பாரதி. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் பல மாணவர்களுக்கு – கணேஷ் உட்பட – அவளின் பதில் சரியா தவறா என்று தெரியாது. ஆனால் ஆசிரியர்களின் அன்புக்குப் பாத்திரமானாள் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்கவில்லை.

படிப்பில் மிகவும் சூட்டிகையான கணேஷுக்கு ஆங்கிலம் சரளமாக வரவில்லையென்பது பெரிய குறையாகவே இருந்தது. தமிழ் மீது பற்றும், ஆழமான அறிவும் கொண்டவன். தமிழ் இலக்கணத்தில் ஆர்வமும் ஆழமும் கொண்டிருந்தான். இலக்கியங்கள் பலவும் ஆர்வத்துடன் படிக்கும் அவனுக்கு மகாகவி பாரதியின்பால் அளவு கடந்த அன்பு. அந்தக் காரணத்தாலோ என்னவோ, நுனி நாக்கு ஆங்கிலம் சரளமாகப் பேசும் பாரதியின்மீது ஒரு ஈர்ப்பு உண்டானது. கணேஷின் படிப்புத் தாகத்தையும், தமிழறிவையும் கண்ட பாரதிக்கும் அவன்மேல் ஒரு மரியாதை ஏற்படத் தொடங்கியது. சென்னை நகரத்திலே பிறந்து, நகரத்திலேயே வளர்ந்து, தமிழில் பேசினால் அபராதம் போடும் மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்ற பாரதிக்குத் தமிழ் படிக்க உதவி தேவைப்பட்டதில் அதிசயம் ஏதுமில்லை.

பாரதியின் தமிழ் அறிந்து கொள்ள வேண்டிய தேவை மற்றும் கணேஷின் ஆங்கிலம் படிக்க வேண்டிய தேவை இவையிரண்டும் இவர்கள் இருவரையும் இணைத்தது எனலாம். இந்திய  சராசரி உயரம், இந்திய  சராசரிக்குப் பல மடங்கு அதிகமான வெள்ளை நிறம், தென்னிந்தியப் பெண்களுக்கே உரித்தான அடர்த்தியான கருகருவென நீண்டு வளர்ந்த கூந்தல், கொவ்வைப் பழமொத்த அதரங்கள், வரிசையாய்ச் செதுக்கப்பட்ட முல்லை நிறமொத்த தூய வெள்ளை நிறமான பற்கள் – பிரம்மன் மிகவும் திறமைசாலி என்பதற்கு யாரேனும் சான்று கேட்பார்களேயானால் பாரதியை முன்னிறுத்தலாம். இதுபோன்ற ஒரு பெண்ணை பார்த்து மயங்குவது என்பது இயல்புதானே? ஆங்கிலம் பயிலும் முயற்சியில் கணேஷ் தன்னை இழந்தான் என்றுதான் சொல்ல வேண்டும்.

பாரதியின் மனதில் அதுபோன்ற எண்ணம் எதுவும் இருந்தாகத் தெரியவில்லை. ஒவ்வொரு தினமும் தனது மனதைத் திறந்து சொல்லிவிட வேண்டுமென்று நினைத்த கணேஷ், ஒரு வேளை அவள் மனதில் அதுபோன்ற எண்ணம் இல்லாது தன்மேலிருந்த மதிப்பு விலகி விடுமோவென பயந்து சொல்லாமலேயே தினங்களைக் கடத்தலானான். இந்த மனப் போராட்டத்திலேயே மூன்று வருடங்கள் ஓடி முடிய, அவன் குழப்பமின்றி நிம்மதியாகத் தூங்கிப் பல காலங்கள் ஆகி விட்டிருந்தன.

நாளைக் கல்லூரியின் கடைசி தினம். அதன் பின்னர் அவரவர் வழியில் அவரவர் செல்வர். இது ஒரு கடைசி சந்தர்ப்பம். எப்படிச் சொல்வது?

இதுதானா நீ என்மேல் வைத்திருந்த அன்பு? – முகத்தில் காரி உமிழ்ந்து விடுவாளோ? மூன்று வருடமாய்க் கட்டி காத்த மரியாதை முக்கியமா, இன்னமும் பூமியில் வாழப்போகும் ஐம்பது, அறுபது வருட வாழ்க்கையின் சந்தோஷம் முக்கியமா – மனப்போராட்டம் தொடர்ந்தது கணேஷிற்கு.

காதல் என்பது கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு வாராது என்று கூறி விடுவாளா? உன் குலமென்ன என் குலமென்ன என்று கேட்பாளோ? நீ உடைந்த சைக்கிளில் சாலையைக் கடக்கும் ஒவ்வொரு நாளும் என் டிரைவரிடம் நின்று பார்த்துச் செல் என்று நான் கூறுவதை நீ அறிவாயோ என அந்தஸ்து பேசுவாளோ? என் நிறம் எங்கே உன் நிறமெங்கே என்று என்னால் மாற்ற இயலாதக் காரணங்களை முன் வைப்பாளோ?

முந்தைய தினம் இரவு முழுவதும் உறக்கமேயில்லை. சொல்லி இவ்வளவு பிரச்சினை வருவதற்குப் பதிலாக, சொல்லாமலேயே மனதில் வைத்துப் புதைத்து விட்டால் பிரச்சினை எதுவுமில்லை அல்லவா, என நினைக்கத் தொடங்கினான். அது எப்படி, அவளில்லாமல் வாழ இயலுமா, அப்படிக் காதலிப்பதில் என்னதான் தவறு, நானென்ன சந்தர்ப்பச் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்தித் தவறு ஏதும் செய்து விட்டேனா? இந்தக் குடியில், இந்த அந்தஸ்தில், இந்த நிறத்தில் பிறந்தவர்கள் மட்டும் தான் காதலிக்க வேண்டுமென்று ஏதேனும் சட்டமிருக்கிறதா? என்ன ஆனாலும் சரி சொல்லிவிடுவது என முடிவெடுத்தான்.

ஒரு வேளை காவல் துறையை அழைத்து உதைக்கச் சொல்வாளோ? முகத்தில் சாக்கைப் போட்டு மூடி, தலைகீழாகத் தொங்க விட்டு, கோபத்துடன் கொந்தளிக்கும் எலி ஒன்றை அந்தச் சாக்குப் பையில் போட்டு விடுவார்களோ? சே, சே, அப்படி எல்லாம் செய்ய மாட்டார்கள் – அது திரைப்படக் கதாநாயகர்களுக்கு மட்டுமே நடக்கும் சடங்கு. நம்மையெல்லாம் யார் அவ்வாறு நடத்தப் போகிறார்கள். தவிர, அவள் நம்மிடம் நட்பாகத்தானே பழகுகிறாள், நாம் அவ்வாறு துன்புறுமாறு எதுவும் செய்து விடுவாளா என்ன? கண்டிப்பாகச் சொல்லிவிட வேண்டும்.

ஒரு வேளை, அவளும் நம்போல நினைத்துக் கொண்டிருந்தால்? நன்றாகத்தானே பழகுகிறாள், அவள் பேசும்பொழுது அவளின் கண்களை உற்றுப் பார்த்திருக்கிறேன், அதில் ஒரு வகையான கனிவு, அன்பு……  காதல்… ஆம், காதல்… தெரிந்திருக்கிறது. அப்படியா? நிஜமாகவா? இல்லையே, நம் நண்பன் பிரகாஷிடமும் அதேபோலத் தான் பேசுகிறாள். உணர்வு காட்டுகிறாள், அது எப்படிக் காதலாக இருக்க முடியும்?

நம்மை நம்பியிருக்கிறது நம் குடும்பம். படித்து முடித்து ஏதோவொரு குமாஸ்தா வேலைக்குச் சேர்ந்தால்தான் வீட்டில் மூன்று வேளையும் சாப்பாடு கிடைக்கும். அம்மாவால் ஒரு ஒட்டு போட்டுத் தைக்காத நல்ல ரவிக்கையும், மற்றவர்கள் தானமாகக் கொடுத்திராத சொந்தப் பணத்தில் வாங்கிய புடவையும் உடுத்த இயலும். இந்த நிலையில் நமக்கெதற்கு காதலும், கத்திரிக்காயும். எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

நினைத்து முடித்த இரண்டு நிமிடங்களில், அந்தக் கொவ்வை இதழ்களின் உள்ளே பிரண்டு பிரண்டு ஆங்கிலேயனுக்கு ஒப்ப ஆங்கிலம் பேசும் நா நினைவுக்கு வந்தது. ஒவ்வொரு வாக்கியம் முடிகையிலும் மேலும் கீழும் கோலி வடிவத்தில் ஏறி இறங்கும் தொண்டை குழியும், அது ஏறி இறங்கும் அந்த வலம்புரிச் சங்கு வடிவக் கழுத்தும் மனத்திரையில் ஓட ஆரம்பித்தன. ஒவ்வொரு பேச்சும் முடிகையில் அழகாய் அசையும் அந்த வட்ட வடிவ நிலா போன்ற அழகு முகமும், தன்னிச்சையாய் முன் தலை கோதி, நெற்றிப்பரப்பில் தவழும் கூந்தலைப் பின்னோக்கித் தள்ளி கொள்ளுவதும், குளுமையான மரத்தடியில் நடக்கும் சம்பாஷணையிலும் நெற்றியில் லேசாய் வழியத் தொடங்கிய ஒரு சிறு வியர்வைத் துளியும் மனது முழுதும் வியாபிக்க ஆரம்பித்தன.

ஏழ்மை நிலையில் பிறந்தவர் காதலிக்கக் கூடாதா? காதலித்துத் திருமணம் புரிந்தால் தாய், தந்தை, குடும்பத்தைக் கை விட்டு விடுவோமென எவன் சொன்னான்? திருமணம் புரிந்து கொண்டும் குமாஸ்தா வேலை பார்க்கலாமே, முன்று வேளை உணவு சாப்பிடலாமே, அம்மாவிற்குப் புதுப் புடவையும் ரவிக்கையும் எடுத்துக் கொடுக்கலாமே. கண்டிப்பாகச் சொல்லி விட வேண்டும். நாளை விட்டால், பிறகு வாழ்நாளில் முடியாது. எப்படிச் சொல்வது?

அவனின் மனது ஒரு நீதி மன்றம் போல மாறிவிட்டிருந்தது. அவனே வாதியாகவும் பிரதிவாதியாகவும் இரண்டு கூண்டுகளிலும் ஏறி நின்று சாதகப் பாதகமாகப் பேசிக் கொண்டான். இரண்டையும் அளந்து பார்த்து நடுநிலையில் நின்று தீர்ப்பு சொல்வதற்கு நீதிபதிதான் அங்கு இல்லை. இந்தப் போராட்டங்களிலேயே இரவு முழுதும் முடிந்து சாளரம் வழியே சிறு ஒளிக் கீற்றுடன் காலை நேரச் சூரியன் தன் கடமை மறக்காது உதித்தே விட்டான்.

தூங்கியிருந்தால்தானே எழுந்து விட்டான் என்று சொல்ல இயலும்? ஆனால் படுக்கையை விட்டு எழுந்து, குளியலறை நோக்கிக் காலைக் கடன்களை முடிக்கச் சென்றான். வாயில் பல்தேய்க்கும் பிரஷ்ஷை வைத்துக் கண்ணாடி முன்னால் நின்றால், கண்ணாடியில் தெரிவது அந்தக் கோவை இதழ்கள், நீர்ப்பசையுடன் பார்ப்பவரைக் கிறங்கடிக்கும் அந்த அதரங்கள், கருணையின் மொத்த உருவமாய் ஒளி வீசும் கூர்மையான கண்கள். பித்து பிடித்தவன் போலவனானான்.

பார்க்கும் திசைகளெல்லாம் பாவையவளின் பாவை தெரியக் கண்டான். முற்றிய நிலை. இதற்கு மேல் இதனைப் பொறுப்பதென்பது இயலாது. இன்று சொல்லியே தீர வேண்டும். ஆமாம் என்றால் சொர்க்கபுரிப் பிரவேசம். இல்லையென்றால், தொடரும் இந்த நரகம். முடிவெடுத்து விட்டான். குளித்து முடித்து, உடையணிந்து, நடைப் பிணமாய்ச் சுற்றி நடப்பதறியாமல் அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு கல்லூரி புறப்பட்டான்.

கல்லூரியில் நுழைந்ததும் கண்கள் தேடுவது அவளை மட்டுமே. இன்று நேற்றல்ல, ஒரு மூன்று வருடமாக நடக்கும் நிகழ்ச்சி இதுவே. கீழிருந்து பார்க்கையில், மேலே அரங்க வேலை ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கிறாள் என்று தெரிகிறது. வெள்ளை நிறச் சுரிதார் அணிந்து பளிச்சென்ற முகத்துடன் திருத்தமான சிரிப்புடன் தேவதையாய் வலம் வந்து கொண்டிருந்தாள். தூரத்திலே பார்த்து விட்டாள். பார்த்த மாத்திரத்தில் ஒரு நட்பு புன்னகை. எந்தன்

கனிவுத் தோழன் நீ என்பது போன்ற ஒரு அங்கீகாரப் புன்னகை, உரிமையுடன் கூடிய கையசைப்பு. சுற்றியிருப்பவர்களைவிட நம்மீது அதிகக் கவனம் என்ற நினைப்பு கணேஷுக்கு. அவளின் சிரிப்பு அர்த்தப் பொலிவுடன் இருப்பதாக நினைக்கிறான். எப்படிச் சொல்லுவேன் இவளிடம், நினைத்த மாத்திரத்தில் காலுக்குக் கீழே பூமி சுற்ற ஆரம்பித்தது, வயிற்றுக்கு மட்டும் காய்ச்சல் வர ஆரம்பித்தது, பத்து நிமிடங்களுக்கு முன் சென்று திரும்பியிருந்தாலும் மீண்டும் கழிவறை செல்ல வேண்டும் போன்ற உணர்வு. அவசரமாய் அங்கிருந்து அகன்றான்.

முன்வந்து வணக்கம் சொன்ன அனைவருக்கும் சம்பிரதாயமாய்த் தலையாட்டி விட்டு, தனது மனப் போராட்டத்தைப் பல விதத்திலும் தொடரலானான். அரை மணி நேர இடை வெளிக்குப் பிறகு, மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவளிருக்கும் அரங்கம் நோக்கி மறுபடியும் சென்றான், வேதாளத்தைத் தோளில் போட்டுக் கொண்டு செல்லும் விக்கிரமாதித்தனைப் போல. இப்பொழுது அவளைச் சுற்றி இன்னும் சில பெண்கள் கூடியிருந்தனர். அதைப் பற்றியெல்லாம் கண்டு கொள்ளாமல், இவன் அருகில் வருவதை உணர்ந்து, “கணேஷ், எங்க போய்ட்ட நீ, அப்பலிருந்து தேடிண்டே இருக்கேன். அந்தச் சோவனீர் புக் வாங்கிண்டு வந்தியா? எல்லாரும் கேட்டுண்டே இருக்கா” என அவனுக்கு முந்தைய தினம் கொடுத்த வேலையின் ஸ்டேடஸ் கால் எடுத்துக் கொண்டிருந்தாள். இவனுக்கு அது சுத்தமாய் மறந்து விட்டிருந்தது.

“ம்ம்.. என்ன சொன்ன?”.. மீண்டும் கேட்க

“நோக்கு என்னாச்சு, அப்போத்திலருந்து கவனிச்சுண்டுதான் இருக்கேன், உடம்பு கிடம்பு சரியில்லையா?” கரிசனமான கேள்வி..

“அதெல்லா ஒண்ணுமில்லையே, சாதரணமாத்தான் இருக்கேன்”

“கணேஷ், நிஜத்தைச் சொல்லு, என்னண்ட ஏதாவது சொல்லணும்னு தோண்றதா?”… கிராதகி, மனதுக்குள் உள் சென்று, என்ன இருக்கின்றது என அகழ்ந்தாராய்ந்தாளா என்ன..

“அப்படி எல்லாம் ஒண்ணும் இல்லையே”.. கணேஷ்..

”சரி, ஒண்ணுமில்லாமலேயே இருக்கட்டும். ஆனா, நேக்கு ஒண்ணு இருக்கு. நெஞ்சப் புடிச்சு உலுக்கிண்டுருக்கு. நானும் பொறுத்துப் பொறுத்து பாத்துட்டேன், இனியும் பொறுக்குறதா இல்ல”. சொல்லிக் கொண்டே, கூட்டத்தை விட்டு நகர்ந்து, ஜாடையால் பின் தொடர்ந்து வா எனக் காட்டிக் கொண்டே வராந்தாவை நோக்கி நடக்கலானாள்.

பின் செல்லும் கணேஷுக்கு என்ன சொல்லப்போகிறாளோ என இதயம் அடித்துக் கொள்ள ஆரம்பித்தது. அவன் இதயம் அடித்துக் கொள்ளும் “லப் டப்” அந்த அரங்கில் இருக்கும் அனைவருக்கும் கேட்டிருக்கும் அவர்கள் மட்டும் அவர்களுக்கிடையே பேசாது இருந்திருந்தால்.

முன்னர் நடந்து செல்லும் வெள்ளுடை அணிந்த தேவதையின், அழகாகப் பக்கவாட்டிலே அசைந்து செல்லும் பின்னழகைப் பார்த்துக் கொண்டே பின் தொடர்ந்தான் கணேஷ். வாழ்க்கையில், அம்மாவிற்கோ, அப்பாவிற்கோ, கல்வி சொல்லித் தரும் ஆசான்களுக்கோ, ஏன், தான் முழுதாக நம்பும் அரச மரத்தடி விநாயகருக்கோகூட இவ்வளவு பயந்ததில்லை அவன். என்ன சொல்வாளோ, எப்படிப் பார்ப்பாளோ, அவளின் கண்களைச் சந்திப்பது எவ்வாறு – நாற்பத்தி ஐந்து வினாடிகளுக்கு மேலிருக்காது அந்த நடை, ஆனால் அந்த நேரத்தில் முழுவதுமாக மூன்று முறை இறந்து மீண்டும் உயிர்த்  தெழுந்திருந்தான். காதலித்தவனுக்கு மட்டும்தான் தெரியும் அவன் என்ன மன நிலையில் இருந்திருப்பான் என்று.

சுற்றிலும் யாருமில்லாத தனிமையான இடத்திற்கு வந்துவிட்டோமென உறுதி செய்து கொண்ட பாரதி, நின்று நிதானமாய்த் திரும்பினாள். இது, முதல் மாடியில் தமிழ் இளங்கலை வகுப்பின் வெளிப்புற வராந்தா. அவளின் பின்புறம் அழகாய் நடப்பட்ட மரங்களின் இலைகள் நளினத்துடன் தலையசைத்துக் கொண்டிருக்க, அந்த அசைவை இசையாய் கொண்டது போல் அவளின் அழகான கூந்தலும் கூத்தாட ஆரம்பித்திருந்தது. நின்று திரும்பியவள் தீர்க்கமாய்க் கணேஷின் கண்களை உற்று நோக்கத் தொடங்கினாள். இரையைத் தீர்க்கமாய்ப் பார்க்கும் பெண்புலியின் கூர்மையான பார்வையது. எவன் சொன்னான் பெண்மை பலகீனமானதென்று? சொன்னவன் முன்பின் பெண் சகவாசமில்லாதவனாக இருந்திருக்க வேண்டும்.

“ரொம்ப நாளா நெனச்சுண்டு இருந்தேன், சொல்லலாமா வேணாமானுட்டு. மனசுலே வெச்சுண்டு புழுங்கிண்டிருந்தேன் – தப்பா நெனப்பியோ என்னமோனுட்டு. ஆனா இப்ப முடிவு பண்ணிட்டேன் – தப்பா நெனச்சாலும் பரவாயில்லனுட்டு. இதுதான் கடசி சான்ஸ்னு மனசு சொல்றது. வாய்விட்டுச் சொன்னாதானே மத்தவாளுக்கும் புரியும், அவாளும் என்ன நெனக்குறானு தெரியும். பகவான் மேல பாரத்தப் போட்டுச் சொல்லலாமுன்னு முடிவு பண்ணிட்டேன். புடிக்கலனா தப்பா நெனச்சுக்காத…”

மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டே போனாள். அவளின் கண்கள் மட்டும் கணேஷின் கண்களிலே ஆணி அடித்தது போல் பொருத்தப் பட்டிருந்தது. உண்மையின் வெளிப்பாடு கண்களை உற்று நோக்குவதிலிருக்கிறதாம் கேள்வி பட்டிருக்கிறான் கணேஷ். பேயரைந்ததைப் போல் ஒரு வார்த்தை பேசாமல், மகாகவி பாரதி முன்னின்று கண்ணனைப் பாடுவதுபோல, கைகட்டி வாய்பொத்தி அவளின் வாயிலிருந்து உதிரும் அடுத்த மொழிக்காகக் காத்துக் கொண்டிருந்தான் கணேஷ்.

“நோக்கு பாரதியை ரொம்பவும் புடிக்கும்” – இப்பொழுது அவள் குறிப்பிட்டது மகாகவியை, “நேக்கு பாரதிங்கற பேரத் தவிர, தமிழ் மேலே பெரிய சம்பந்தமில்லை. நம்ம ரெண்டு பேருக்கும் பொறக்கற கொழந்தேள் பாரதியார் மாதிரிக் கவிதை எழுதணும்னு நேக்கு ஆசை”…

சொல்லி முடித்தவளின் குரல் தழுதழுக்க ஆரம்பித்தது. பல நூறு மின்னல்கள் பாய்ந்தெழுந்து வந்து, வட்டமாகித் தன் தலையின்பின்னாலே ஒளி வட்டமாய் நிற்பதைப் போன்றதொரு உணர்வு பெற்றான் கணேஷ். என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த அவன் செவிகளிலே அரங்கத்தின் ஒலி பெருக்கியிலிருந்து ஒலிபரப்பான மகாகவியின் பாடல் ஒலிக்கத் தொடங்கியது…

“காற்று வெளியிடைக் கண்ணம்மா,

நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்

அமுதூற்றினை ஒத்த இதழ்களும்

நிலவூறித் ததும்பும் விழிகளும்……..”

மூடிய கண்களுடன் செவி பாடலை ரசிக்க, உணர்வு எதிர் நிற்கும் பாரதியை முழுதாய் ருசிக்க, மூன்று வருடமாய்ச் செய்து வந்த போராட்டத்தை மனது முழுதுமாய் மறக்க, புதிய கணேஷ் பிறந்திருந்தான் அங்கே!!!

– வெ. மதுசூதனன்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Radhika Vijay says:

    Nice

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad