ஆசை
உறங்கிடா உள்ளத்தில் எண்ணிலா ஆசை
உறவன்றி உருவின்றி உயிர்பெற்ற ஆசை.
உருக்குலையுமுன் உயர்வுடனே உரைத்திட ஆசை
உயிரோயுமுன் அத்தனையும் அடைந்திட ஆசை
அன்னைமடியில் அனுதினம் படுத்திட ஆசை
அசைந்தாடுமவள் காதணியைப் பிடித்திட ஆசை
ஆயுள்வரை அவளுடனே இருந்திட ஆசை
ஆனந்தமாயவள் தாலாட்டில் துயின்றிட ஆசை
ஆதர்சத் தந்தையின் கைவருட ஆசை
ஆதரவென அவரின் தோள்சாய ஆசை
அலைகடலோரம் கரம்பற்றி நடந்திட ஆசை
அறிவுரையாய் அவரனுபவங்கள் கேட்டிட ஆசை
நங்கையுடன் முதற்காதல் நினைத்திட ஆசை
நவிழ்ந்த முதல்முத்தம் முகர்ந்திட ஆசை
நினைத்ததும் நித்திரை கொண்டிட ஆசை!
நித்தமவள் நிசிக்கனவில் தோன்றிட ஆசை!
மகவின்முதல் ஸ்பரிசம் திரும்பிட ஆசை
மடியமர்த்தி மழலைமொழி கேட்டிட ஆசை
முன்நெற்றி முடியினைத் திருத்திட ஆசை
முகச்சிரிப்பு கன்னக்குழிவில் சரிந்திட ஆசை!
இடையூறின்றி ஆசை உரைக்க ஆசை!
இறுதிவரை இரவா திருக்க ஆசை!
இத்தரணியெங்கும் என் தமிழொலிக்க ஆசை!
இறந்தபின்னும் சிலர் நெஞ்சிலிருக்க ஆசை!
– ரவிக்குமார்