நகரமும்! கிராமமும்!
அடுக்கு மாடி கட்டிடமாம்
இடுக்கில் கூட குடித்தனமாம்!
மடக்கு நீருக்கு வழியில்லையாம்.
மிடுக்கு மட்டும் குறையலையாம்!
பஞ்சு மெத்தை வகைவகையாம்
படுத் துறங்க நேரமில்லையாம்!
பல்லு துலக்க பலபசையாம்.
பளிச்சினு சிரிக்க மனசில்லையாம்!
உரசாம நடக்க முடியலையாம்
உரையாடு வதற்குத் துணையில்லையாம்
உதவிக் கொரு ஆளில்லையாம்
உறவுக் கூட நிலைக்கலையாம்!
அழகு ஏடிஎம் அணிவரிசையாம்
அடகுக் கடைகட்கு அழிவில்லையாம்!
அலைபேசி இருபதாயிரம் விலையாம்.
அடுத்தவேளை கஞ்சிக்கு வகையில்லையாம்.
அருகம் புல்லுக்கு இடமில்லையாம்
அறிவியல் கல்லூரிக்கு குறைவில்லையாம்!
அறிஞர் உருவுக்கு பளிங்குசிலையாம்
அவரது கருத்துமனசில பதியலையாம்!
– ரவிக்குமார்
நகரத்து லட்சணம் நயமா வெளங்குதாம்
நம்மூருப் பக்கம் நெலவரம் பாக்கலாம்
நஞ்சநிலம் வெளஞ்சு நெல்கதுரு ஆடுதாம்
நல்ல விளைச்சலுனு நாடுபூராப் பேசுதாம்
நடையா நடந்து வாங்கியாந்த கடனெல்லாம்
நல்லூருச் சந்தையில நெல்வித்தா அடைச்சிடலாம்
நம்பிக்கை வெச்சுத்தான் நிம்மதியாத் தூங்கிட்டானாம்
நடுநிசியில் வந்தந்த நாசகாரப் பயலுகெலாம்
நயமா வெளஞ்ச நம்நிலத்தைப் பாத்தாங்களாம்
நஞ்சுபோல வஞ்சகத்தால் நன்னிலத்தை எரிச்சாங்களாம்
நம்மூரு நல்லூரு சினிமாப்பொட்டி சொல்லிடலாம்
நரகம்போகும் நாய்களையும் நாடுபூராப் பாத்திடலாம்
நல்லவனைப் பாக்கணுன்னா நாட்டுப்புறம் போகணுமாம்
நடிகனுங்க சொல்லியந்த நெசமெல்லாம் மறைச்சாங்களாம்
நல்லவனும் கெட்டவனும் நாடுபூரா வாழுரானாம்
நலமாப் பாத்தறிஞ்சி நலமுடனே வாழ்ந்திடுவோமாம்!!
– வெ. மதுசூதனன்.
அன்பனின் கவிதைக்கு மறுப்பில்லையே
அப்படியும் அங்கலாய்ப்பு குறையலையே!
அழகு நங்கையர்க்கு மதிப்பில்லையே
அடங்கா காமுகர்க்கு குறைவில்லையே!
அசைபட நட்சத்திரர் கணக்கில்லையே
அலையும் விசிறியர்க்கு ஒளியில்லையே!
அடைபடும் சிறையில் இடமில்லையே
அடிமேசைக் கையூட்டும் அழியலையே!
உருக்குத் தொழில் தழைக்கலையே
உழவுத் தொழிலில் உயர்வில்லையே
உடுத்தும் துணியும் வளரலையே,
உணர்ந்து யாரும் வருந்தலையே!
– ரவிக்குமார்.
அழகான கவிதையில அவலத்தச் சொல்லிட்டியே
அதநானும் படிக்கையில அழுகையது நிக்கலயே
அன்புதான் பெரிசுன்னு அறிஞருங்க சொன்னதயே
அறியாம சனங்களெல்லாம் அரிவாளத் தூக்றதயே
அஞ்சாத குணமுன்னு அறிவிலிங்க சொல்றதயே
அலுங்காமக் கேட்டவனும் அடியாளா வாழ்வதயே
அரசியல் காரணமா அயோக்கியனுங்க கொடுத்ததயே
அன்பான பரிசுன்னு அவனெனச்சு முடிச்சதயே
அலங்கோல வாழ்வதுன்னு அக்கம்பக்கம் சொல்லலயே
அரிவாள எடுத்தவன்லாம் அரிவாளால் சாவதையே
அசைக்க முடியாத அடையாளம் பலகாட்டியே
அருமையாப் புரியவச்ச அம்மாவும் தேவதையே!!!
– வெ. மதுசூதனன்.
ஊருல பிறந்த பிள்ள
ஊணை தீச்சது இல்ல
ஊருல யாரும் இல்ல
ஊதிப் பழியச் சொல்ல
பசியை தீர்த்த நெல்ல
பயபுள்ள பழிச்ச தில்ல
பருத்த ஆண்ட இல்ல
பணியும் அடிமை இல்ல
அணைல தண்ணி இல்ல
அரசும் பக்கம் இல்ல
அலறல் சத்தம் இல்ல
அங்க ஆளும் இல்ல
முட்டியே வாழ்வில் வெல்ல
முகங்கள் நகரம் செல்ல
முதுகின் எலும்பு சொல்ல
முழுசா சனமும் இல்ல
முக்கி முனகி மெல்ல
முழுசும் கணினி கல்ல
முதுகில் எலும்பு மெல்ல
முளைக்கும் என்று சொல்ல
முன்பின் யோசிக்காம இல்ல
முழுச்சனமும் நகரம் செல்ல
முன்கட்டு அமர்ந்து நல்ல
முதுமையில பாட்டி மெல்ல
முடிஞ்சு போன வெத்தல
முக்குத் திரும்பினாக் கடையில
முந்தி வாங்கியார ஆளில்ல
முழுக்குப் போட்டோம் உறவுக்கில்ல!!!
அழகுப் புனைவு தரயில – நீ
அழுக்கு உண்மையை மறைக்கல!
அக்கரை சிறப்புன்னு நெனக்கயில
அதுவும் இல்லைன்னு மறுத்தியே!
உயர்வின் உயிர்நாடி உழவில –
உத்தமர் சொன்னது உறைக்கல!
உழவு இன்று செழிக்கல !
உலகம் இன்னும் திருந்தல!
விளைநிலம் கொறஞ்சு போகயில
விஞ்ஞான விதைநெல்லும் பயனில்ல!
விசைப்பொறி ஒண்ணும் கொறையில்ல
வினைதீர மின்சாரந்தான் கிடைக்கல்ல!
எட்டிநின்னு எண்ணூறு குறைசொல்ல
என்னையும் உன்னையும்விட ஆளில்ல!
எள்ளியாடி அனைவரும் சொல்லுமுன்ன
எழுந்தோடி சீரமைப்போம் மெல்லமெல்ல!
– ரவிக்குமார்
எட்டிநின்னு எண்ணூறு கொறசொல்ல
எம்பதாயிரம் மனுசனுங்க இருக்கையில
எழுத்துமூலம் எழுச்சிசெய்யும் பொறுப்புல
என்னையும் உன்னையும் படைச்சதால்ல
எகத்தாளமா நான் இருக்கையில
எழுதுனா மட்டும் பயனில்ல
எழுந்துபோய் உருப்படியான முறையில
எதனாச்சும் செஞ்சுடத் தூண்டிச்சொல்ல
எழுதின உன்கவிதை அருமையில்ல
எமப்பய வந்துயிர் எடுக்கயில
என்னதான் செஞ்சோமுனு கேக்கையில
எங்கநாட்ட உசத்தினோமுனு சொல்லணுமுல்ல!!!
விஞ்ஞானம் இன்றி மின்சாரமா
எப்படி கிடைக்கும்? இதுமாயமா?
உழவனுக்கு ட்ராக்டர் உபயோகமா
குடுத்தான் நகரவாசி இதுமர்மமா?
பழயதை சொல்லி – படுவேகமா
வளருவதை தடுப்பது நியாமா?
முன்னேற்ற பாதை வெகுநீளமா
ஒருசில குழிகளை பொறுத்துக்கலாமா?
– பாண்டி
விஞ்ஞானம் விண் குறித்த ஞானம்
அஞ்ஞானம் அண்மைப் பொருள் ஞானம்
மெய்ஞானம் உண்மைப் பொருள் ஞானம்
உழவனின் கருவி அறிவியல் ஞானம்
நகரவாசி கொடுத்திலை விவசாயிக் கெதுவும்
பகரநினைக் கையிலிலை நம்மனக் கிலேசம்
சிகரமேரி சீர்மிகு நிலை எய்திடிலும்
பகரமிக விலை நகரத்தின் மெய்நேசம்
பழையதைச் சொல்வது வளர்ச்சிக் கெதிரியன்று
நிலையதைச் சொல்லி நிதர்சனம் உணர்த்துவது
களையதைக் களைந்து பயிரதைக் காப்பது
விதையதைக் களிக்கும் வித்தகர்க்கு விருப்பமது!!
நகரவாசி என்றால் நகரத்தில் வசிப்பவன்
நகரத்தில் பிறந்தவன் அல்ல என்பொருள்
நகரமா கிராமமா உயர்வெதுவென வாதிடுபவன்
நானல்ல, என்பதிலுக்கு அல்ல அப்பொருள்
கண்டவை சொன்னீர் குறைகள் சொன்னீர்
கனவைச் சொன்னீர் கவிதையில் சொன்னீர்
நல்லவை சொன்னேன் வினாவாய்ச் சொன்னேன்
பொறுமையைச் சொன்னேன் தெளிவன்றிச் சொன்னேன்
முதுகெலும்பென்றார் உண்மை அறிந்த தேசத்தந்தை
மறவாமல் உணவருந்துகையில் இருக்கவேண்டும் அச்சிந்தை
மணிக்கணக்கில் உழைப்பினால் குவியும் உழவர்சந்தை
மனமுவந்து போற்றிடுவோம் கிராமத்தின் பெருவிந்தை!
அறிவியல் அய்யன் எடிசனம்மா
அவருதித்த சிற்றூர் மில்லனமா
இந்திய எடிசனோ நாயுடம்மா
இவருதித்த சிற்றூர் கலங்கலம்மா
படைப்புகள் கிராமத்தின் அறிவம்மா
பட்டிணத்தோர் இவற்றை மறுக்கலாமா?
உழுவோர் இங்கே இல்லையம்மா
உம்மெந்திர கலப்பை அவசியமா
நாடுமே நல்லா வளருதம்மா
நாளுமே ஊரும் சொல்லுதம்மா
காடுகள் காசாய் ஆகுதம்மா
கல்லாவும் வேகமா நிறம்புதம்மா
நகரத்தின் நெரிசல் பலகாலமா
நரகமாய் அதனை ஆக்குதம்மா
கோலத்தின் புள்ளியாய் நகரமம்மா
கோடாய் கிராமமும் வேண்டுமம்மா
உலையும் உழவுசெய் கிராமம்மா
உண்மையா விலைசெய் நகரம்மா
பட்டிணம் ஊருமே சமப்படுமா
பக்தியாய் யானும் தொழுதேனம்மா