\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

தமிழ்த்தாத்தா உ.வே.சா

tamil-thaatha-uvesa420x630

வடமொழி (சமஸ்கிருதம்) மேற்கத்தியரின் கவனத்தை வெகுவாகக் கவர்ந்திருந்த காலமது. தமிழில் பக்தி இலக்கியங்களும் வரலாற்றுக் காப்பியங்களும் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளது என்று நம்பப் பட்டுக்கொண்டிருந்த காலத்தினூடே, தமிழின் மறக்கப்பட்ட தொன்மையை ஓலைச் சுவடிகளின்பால் ஓடி ஓடித் தேடி மிகத்தெளிவாய் உலகிற்குக் கொண்டு வந்தவர், தமிழ்த்தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் மகாமகோபாத்யாய தக்‌ஷிணாத்ய கலாநிதி  உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர்  சாமிநாதய்யர் அவர்கள்.

அன்றும், இன்றும் தமிழ் மொழி கோடிக் கணக்கானவர்களைச் சிறப்புற வாழ வைத்துள்ளது. ஆனால் தமிழ் என்ற மொழியை, அதன் தொன்மையை, அதிலுள்ள செழிப்புகளை வாழ வைத்தவர்கள் என்ற பட்டியலை எடுத்துக் கொண்டால் அது மிகவும் குறைவான எண்ணிக்கையாகவே இருக்கக் கூடும். அந்தக் குறைவான எண்ணிக்கையில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர் உ.வே. சாமிநாதய்யர் ஆவார். தனியொருவராய் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலான கடின உழைப்பினால் அவர் பல அரிய, மறக்கப்பட்ட தமிழ் இலக்கியங்களை உலகிற்கு வெளிக் கொணர்ந்தார். தனது வாழ்நாளில் 91 இலக்கியப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார். தவிர, மூவாயிரத்திற்கும் மேற்பட்ட காகித வடிவ மற்றும் ஓலைச் சுவடிகள் வடிவமான இலக்கியங்களையும் ஒன்று திரட்டி, உலகிற்கு வெளிக்கொணர்ந்த பெருமை உ.வெ.சா அவர்களையே சாரும்.

uvesa_table3_520x159உ.வே.சா. அவர்களின் தந்தை பெயர் வேங்கடசுப்பையர், தாயார் பெயர் சரசுவதியம்மாள். அவருடைய இயற்பெயர், அவர் பாட்டனார் பெயரான வெங்கட்டராமன் என்பதே. இளமையில், “சாமா” எனப் பெற்றோர்கள் அழைத்து வந்த பெயரை அவருடைய ஆசிரியர் “சாமிநாதன்” என்று திருத்தி அமைத்தார்.

உ.வே.சா. அவர்களின் தந்தை ஒரு சங்கீத விற்பன்னர். இராமாயணத்தைப் பாடல்களுடன் கூடிய கதாகாலட்சேபமாக நடத்துவது அவரின் தொழில். ஆரம்பத்தில் அவருக்கும் தன் மகன் தன் தொழிலில் தொடரவேண்டுமென்ற ஆசை. ஆனால் இளமைப் பருவத்தில் உ.வே.சா அவர்களிடமிருந்த தமிழ் ஈடுபாடு, அவரின் தந்தையின் ஆசையை மாற்றியமைத்தது. உ.வே.சா அவர்களுக்கு இளமைக் காலத்திலேயே பல தமிழறிஞர்களிடத்திலிருந்து தமிழ் கற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தார் அவர் தந்தை. தமிழிலும் இசையிலும் அழியாப் புகழ் பெற்ற அரியலூர் சடகோப ஐயங்கார், திருவிளையாடற் புராணம் புகழ் குன்னம் சிதம்பரம் பிள்ளை, கம்ப ராமாயாணத்தில் தேர்ந்த கஸ்தூரி ஐயங்கார் போன்ற அறிஞர்களிடம் உ.வே.சா. தமிழ் பயின்றார்.

உ.வே.சா. வின் திருமணத்திற்குப் பிறகும் அவரின் தமிழ்க் கல்வி தொடர்ந்தது. சின்னப்பண்ணை விருத்தாசலம் ரெட்டியார் என்ற தமிழறிஞரிடம் கவிதையெழுதுவதன் அடிப்படைகளையும், இலக்கணங்களையும் ஐயமறக் கற்றுத்தேர்ந்தார். ரெட்டியார் அவர்களின் சிபாரிசின் பேரில் உ.வே.சா. அவர்களின் தந்தை அவரை மாயவரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களிடம் இலக்கியம் பயில அழைத்துச் சென்றார். மாயவரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை தனது சீரிய மாணாக்கரில் ஒருவரான மகாவித்வான் சவேரிநாத பிள்ளை அவர்களை உ.வே.சா. அவர்களுக்கு ஆசானாக நியமித்தார். மகாவித்வான் இயற்றிய திருக்குடந்தை திருப்பனந்தாதி, மற்றும் பல அந்தாதிகளையும், பிள்ளைத் தமிழ்ப் பாடல்களையும் கற்றுத் தேர்ந்தார் உ.வே.சா.

மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் மாணாக்கர்களில் ஒருவரான தியாகராசச் செட்டியார் கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழ்த் துறைத் தலைவராக பணியாற்றிக் கொண்டிருக்கையில் உ.வே.சா. அவர்களின் தமிழார்வம் மற்றும் தமிழறிவு கண்டு உவகையுற்று நண்பரானவர். அவர் ஓய்வு பெறும் வேளையில், அவரின் பரிந்துரையின்படி உ.வே.சா. அவர்களுக்கு அந்தப் பதவி 1880 ஆம் வருடம் ஃபிப்ரவரி 16 ஆம் திகதி வழங்கப்பட்டது. நிறைந்த தமிழ்ப்புலமை, எதையும் சுவையாக எடுத்துச் சொல்லும் ஆற்றல், இசைப்பயிற்சி மற்றும் அனைவரிடமும் அன்பு செலுத்தும் தன்மை ஆகியவற்றால் கல்லூரி மாணவர்களின் அன்புக்கு பாத்திரமானார். ஆங்கிலேயர் ஆண்ட அந்த காலகட்டத்தில் தமிழாசிரியர்களுக்கு அவ்வளவாக மதிப்பில்லாத நிலையில் புகழ் பெற்றவராகத் திகழ்ந்தாரென்பது குறிப்பித்தக்கது.

கும்பகோணம் அரசு கல்லூரியில் ஆசிரியர் பொறுப்பில் இருக்கையில் உ.வே.சா. அவர்கள் சேலம் முன்சீப் இராமசாமி முதலியாரைச் சந்தித்து நண்பரானார். இது உ.வே.சா அவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

முதலியார் அவர்கள் உ.வே.சா. விடம் சீவக சிந்தாமணியின் ஒரு சில பகுதிகளின் கையெழுத்துப் பிரதிகளைக் கொடுத்தார். அவற்றைப் படிக்க ஆரம்பித்து அதன் மேலொரு ஈடுபாட்டை ஏற்படுத்திக் கொண்ட உ.வே.சா. அவர்கள், அதன் கருத்தை முழுவதுமாக அறிந்து கொள்ள பல சமண மதத் துறவிகளையும், அறிஞர்களையும் நாடிச் சென்றார். அந்த முயற்சியில் இன்னும் சில சீவக சிந்தாமணிப் பகுதிகளும் அவருக்குக் கிடைக்கலாயின. பல பகுதிகளையும் தொகுத்து ஒரு தெளிவான முடிவுற்ற காவியமாக அதனை 1887 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

சீவக சிந்தாமணியைத் தொடர்ந்து, பத்துப் பாட்டு தொகுத்து வெளியிடப்பட்டது. ஐம்பெருங்காப்பியங்களில் சீவக சிந்தாமணியைத் தொடர்ந்து, சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகியவற்றின் மூலாதரங்களையும் ஓலைச் சுவடிகளைத் தேடிப் பிடித்துத் தொகுத்து நூல்களாக வெளியிட்டார். இவற்றைத் தொடர்ந்து புறநானூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல் மற்றும் குறுந்தொகை ஆகிய இலக்கியங்களையும் ஓலைச் சுவடியிலிருந்து அச்சுப் பிரதியில் வெளியிட்டார். இவ்விலக்கியங்களை வெளியிடும்பொழுது அவற்றில் இடைக்காலத்தில் புகுத்தப்பட்ட இடைச்செருகல்களைக் கண்டறிந்து அவற்றை விலக்கி மூலத்தை மட்டும் வெளியிட்டது அவரது முயற்சிகளுக்கு சிகரம் வைத்தது போன்றது. மேலும், உ.வே.சா அவர்கள் அச்சிலேற்றிய நூற்களில் குறிப்பிடத்தக்கவை திருமுறுகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகியவை.

ppkl_side2_113x85 uvesa_table1_320x115

பல பழங்கால எழுத்துக்கள் ஓலைச் சுவடிகளில் செதுக்கப்பட்டு எங்கோ கிராமங்களிலுள்ள வீடுகளில் மூலைக்கொன்றாக பரவியிருந்த காலங்களில், ஊர் ஊராகச் சென்று, பல கடும் முயற்சிகள் மேற்கொண்டு இவற்றையெல்லாம் ஒன்று திரட்டி நூல்களாக வெளியிட்ட பெருமை உ.வே.சா. அவர்களையே சாரும். தொலைத் தொடர்பு மற்றும் தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்திராத நாட்களில் இவ்வளவு பயணம் செய்து பலரைச் சந்தித்து இவற்றைத் திரட்டுவது என்பது நம் கற்பனைக்கெட்டாத ஒரு அருஞ்செயல் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு பொறிக்கப்பட்ட எழுத்துக்களை அப்படியே பெயர்த்து காகிதத்தில் பதிப்பிக்கும் வேலையன்று உ.வே.சா. அவர்கள் செய்தது. பதிப்பு அவ்வளவு எளிதான செயலாய் இருந்திருந்தால், பலரும் உ.வே.சா. அவர்களுக்கு முன்னரே அதனைச் செய்து முடித்திருப்பார்கள். பல படைப்புக்களில், எழுத்துக்களின் பல பகுதிகள் இன்னதென்றே ஊகிக்க முடியாத அளவுச் சிதைந்திருந்தது அல்லது இன்றைய தமிழறிந்தவர்களால் புரிந்து கொள்ள முடியாத நிலையிலிருந்தது. அதனையெல்லாம் பல நூலறிவினாலும், அறிவுத்திறமையினாலும், விடாமுயற்சியினாலும் ஆராய்ந்துணர்ந்து அவை எழுதப்பட்ட காலகட்டத்தைக் கொண்டு சரியான பின்னணியையும், கருத்தையும் பதிப்பில் கொண்டு வருவது அவருக்கு பெருஞ்சவாலாக அமைந்தது. ஒரு நூலைப் பதிப்பிக்கத் தொடங்கியவுடன், அதில் என்ன புதுமையைப் புகுத்தலாமென்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவராக விளங்கினார் உ.வே.சா. இதனால் பல சமயக் கருத்துக்களையும் சிரத்தையுடன் கற்று அதன் பின்னரே பதிப்பிப்பதில் ஈடுபட்டார். அவருக்கு ஆங்கிலப் பின்னணி அதிகமில்லாத காரணத்தால், தேவைப்படும் நேரங்களில் ஆங்கிலம் அறிந்தவர்களை நாடி கருத்துக்களைப் பெற்று வெளியிடவும் தயங்கியதில்லை.

தனக்கு உதவியவர்கள் அனைவருக்கும் அவர் சரியான முறையில் நன்றி செலுத்தத் தவறியதில்லை. தனது பதிப்பு அனைத்தையும் மிகக் குறைந்த விலையில் கிடைக்குமாறு செய்வதன்மூலம் பலரும் வாங்கிப் படித்துப் பயன் பெறுவர் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையுடையவராக இருந்தார் உ.வே.சா. பதிப்பித்தலைத் தனது முழுநேரப் பணியாக மேற்கொண்டாலும், அதனை ஒரு லாபகரமான தொழிலாக நடத்த வேண்டுமென்ற எண்ணமிருந்ததில்லை. தமிழுக்கும், தமிழருக்கும் தொண்டு செய்வதையே முழு முதற்பணியாகச் செய்து கொண்டிருந்தார்.

இவை தவிர்த்து, தமிழில் “சரிதம்” மற்றும் “சுய சரிதம்” (biography and autobiography) என்ற இருவேறு வடிவமைப்புக்களை அறிமுகப் படுத்திய பெருமையும் உ.வே.சா அவர்களையே சாரும். தனது முழுமுதல் ஆசானான மாயவரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளை அவர்களின் வாழ்க்கையை “மீனாட்சி சுந்தரம்பிள்ளை சரிதம்” எனவும் தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களை “என் சரித்திரம்” எனவும் பொன்னெழுத்துக்களால் பொறித்து வைத்துள்ளார் திருவாளர் உ.வே.சா.

உ.வே.சா. அவர்களின் மற்றொரு சிறப்பான பங்களிப்பு தமிழிசையின் பெருமைகளை உலகறியச் செய்தது. அவர் சிலப்பதிகாரம், பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகை நூல்களைத் தொகுத்து வெளியிடுவதற்கு முன்பு தமிழில் புலமையுள்ள பலர் தமிழிசை என்பது பக்தி மற்றும் வரலாற்று இலக்கியங்களுடன் நிறைவு பெற்றது என்றும், சம்ஸ்கிருதம் மற்றும் தெலுங்கு மொழிகளில் மட்டுமே ஆழ்ந்த இசையுணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்றும் நம்பிக் கொண்டிருந்தனர். தமிழில் முதலில் வெளிவந்த தலை சிறந்த இசை நூலான கருணாமிருத சாகரம் எழுதிய பண்டிதர் ஆப்ரஹாம் அவர்களும் மற்றும் அதனைத்தொடர்ந்து வந்த யாழ் நூல் என்ற இன்னொரு தமிழிசை பற்றிய நூலையியற்றிய விபுலானந்த அடிகளும், உ.வே.சா. அவர்களே தங்களின் பணிகளுக்கான தூண்டுகோலெனக் குறிப்பிட்டுள்ளது உ.வே.சா. அவர்களின் தமிழிசைக்கான பங்களிப்பை மேலும் பெருமைப் படுத்துவதாக அமைந்துள்ளது.

uvesa_table2_420x187அவற்றை விடுத்து, உ.வே.சா அவர்கள் தமிழ் பேசும் சாதாரண மக்களால் “தமிழ்த்தாத்தா” என்று செல்லமாகவும், மரியாதையுடனும் அழைக்கப்பட்டார். இந்திய தேசிய கீதம் எழுதிய இரவீந்திர நாத தாகூர், உ.வே.சா அவர்களின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி ஒரு கவிதையும் வடித்துள்ளார். மகாகவி சுப்பிரமணிய பாரதி, உ.வே.சா. அவர்களைப் பாராட்டி மூன்று பத்திகள் கொண்ட விருத்தப்பாவொன்றை இயற்றி, அகத்தியர் எனப் பொருள்படும் “கும்பமுனி” என்ற பட்டமும் வழங்கி வாழ்த்தியுள்ளார்.

1855 ஃபிப்ரவரி 19

பிறப்பு

1868

திருமணம் (மனைவி: மதுராம்பாள்)

1870

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் மாணாக்கரானது

1874

முதல் நூலியற்றல் (நீலி இரட்டை மணிமாலை)

1880

கும்பகோணம் அரசு கல்லூரியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்பு

1887

சீவக சிந்தாமணி பதிப்பு (உ.வே.சா. வின் தமிழ்ப் பதிப்பின் முதல் மைல்கல்)

1889

பத்துப் பாட்டு பதிப்பு

1893

தந்தையார் மறைவு

1894

புறநானூறு பதிப்பு

1903

சென்னைக் கல்லூரியில் தமிழாசிரியரானது

1906

இந்திய அரசின் “மகாமகோபாத்யாய” பட்டம்

1917

”திராவிட வித்யா பூஷண்” பட்டம்

1919

கல்லூரியாசிரியர் பதவியிலிருந்து ஓய்வு

1924

சிதம்பரம் மீனாட்சி கல்லூரியின் தலைவராகப் பொறுப்பேற்பு

1925

”தக்‌ஷிணாத்ய கலா நிதி” பட்டம்

1927

மீனாட்சி கல்லூரியிலிருந்து ஓய்வு

1932

சென்னைப் பல்கலைக்கழகத்தின் “முனைவர்” பட்டம்

1933

தனது ஆசான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் சரிதம் வெளியீடு

1940

”என் சரிதம்” சுய சரிதையை வாராந்திரியாகத் தொடக்கம்

1942

”என் சரிதம்” 122 வாரங்களுக்குப் பின் முடிவு

1942 ஏப்ரல் 28

நிலவுலகு நீத்தல்

 

மண்ணில் தோன்றிய தன் பிறவியின் பயனைத் தமிழுக்குத் தொண்டு செய்தே கழித்த உ.வே.சா. அவர்கள், தனது 87 ஆவது அகவையில் 1942 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி இந்த நிலவுலக வாழ்வை நீத்தார்.

நாமின்று படித்துப் பயன்பெறும் பல சங்க இலக்கியங்களையும், உலக மத்தியில் தமிழின் பெருமையாக மேற்கோள் காட்டும் அரிய காப்பியங்களையும் நவீன உலகிற்கு அனைவரும் படித்து புரிந்து கொள்ளும் அளவுக்கு அச்சு வடிவத்தில் தந்தவர் உ.வே.சா. இவை, தமிழ் உலகின் தொன்மை மொழிகளிலொன்று என்பதற்கு சான்று கூறும் ஆதியாவணங்களாகும். நம் தாய்மொழியின் நீங்காத பெருமைக்கு முக்கியமான காரணமாகத் திகழ்ந்த உ.வே.சா அவர்களுக்கு நமது நன்றிகளையும், வணக்கங்களையும் தெரிவித்து மகாகவியின் வார்த்தையுடன் முடித்திடுவோம்.

,

பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்

காலமெலாம் புலவோர் வாயில்

துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்

இறப்பின்றித் துலங்கு வாயே!!!

ஆதாரம்: “என் சரிதம்” – ஆனந்த விகடனில் 1940 முதல் 1942 வரை 122 வாரங்கள் வெளிவந்த, உ.வே.சா. அவர்களின் சுய சரிதம் தொடர்.

– மது வெங்கடராஜன்

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. லெட்சுமணன் says:

    உ.வே.சாவின் சென்னை வீடு புறக்கணிக்கப்பட்ருப்பதை படிக்க

    Tamil Thatha’ house in neglect

    http://www.thehindu.com/todays-paper/tp-national/article3313364.ece

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad