\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

முத்தமிழ் விழா – பட்டிமன்றம்

Pattimandram2

தலைப்பு: குழந்தைகள் தமிழ் கற்பது பெரிதும் குறைந்ததற்குக் காரணம் சூழ் நிலையா அல்லது பெற்றோர்களா?

அண்மையில் மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் இயல், இசை, நாடக நிகழ்ச்சிகள் நிரம்பிய முத்தமிழ் விழாவினை நடத்தினர். தமிழ்ப் பற்றும், ஆர்வமும் கொண்டு, குழந்தைகள், பெரியோரென நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவுக்கு தமிழ்ப் பேராசிரியை திருமதி புனிதா ஏகாம்பரம் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். விழாவினை தொடக்க முதலே ரசித்த அவர், தனது சிறப்புரையில் ஒவ்வொரு நிகழ்ச்சியின் பெருமைகளையும் கோடிட்டுக் காட்டினார்.

குறிப்பாக, நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு செந்தமிழால் அனைவரையும் கட்டிப்போட்ட அத்விகா, மாலினி மற்றும் சிலரின் பேச்சுகளைப் பற்றி மிகவும் பாராட்டிப் பேசினார். தனது நகைச்சுவை பாணியில் தமிழகத்தில் தமிழின் நிலையைச் சாடிய அவர், மினசோட்டாத் தமிழர்களை கண்ட பின்பு, அவர்கள் பழந்தமிழர் கலைகளைப் போற்றிப் பழகுவது குறித்துப் பேசுகையில், அவர்கள் உணர்விலேயே தமிழ் கலந்துள்ளது எனப் புகழ்ந்து பாராட்டினார்.

பின்னர் நடந்த “குழந்தைகள் தமிழ் கற்பது பெரிதும் குறைந்த காரணம் சூழ் நிலையா அல்லது பெற்றோர்களா?” என்னும் பட்டிமன்றத்துக்கும் திருமதி புனிதா ஏகாம்பரம் நடுவராக இருந்து நடத்தி தந்தார்கள். மிகவும் விறுவிறுப்பாக, நடந்த விவாதங்களின் ஒரு சிறு தொகுப்பே இது.

“குழந்தைகளிடம் தமிழார்வம் குறைந்ததற்குக் காரணம் பெற்றோர்களே” என்னும் அணியில், திரு. மது வெங்கடராஜன் தலைமையில், திருமதி. உமா வெங்கட், திருமதி. பிரசன்னா கஜவரதன், திரு. மணிகண்டன் வைத்தியநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

“குழந்தைகளிடம் தமிழார்வம் குறைந்ததற்குக் காரணம் சூழ்நிலையே” என்னும் அணியில், திரு. வேலப்பன் சுப்புரத்தினம் தலைமையில், திருமதி. பாமா ராஜன், திரு. சத்தியமூர்த்தி ராமதாஸ், திருமதி. கார்த்திகேயன் வெங்கடராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

தமிழின் தொன்மையையும், மற்ற செம்மொழிகளுக்கு இல்லாத சிறப்பாகத் தமிழில் மட்டுமே “வாழ்வியல்” முறைகளை விளம்பிய நூல்கள் இயற்றப் பட்டதையும் சிறப்பாக எடுத்தியம்பிய நடுவர், பட்டிமன்றம் எனும் விவாத அமைப்பை உருவாக்கித் தந்த குன்றக்குடி அடிகளாரை வணங்கி விவாதங்களைத் தொடங்கி வைத்தார்.

முதலில் “பெற்றோர்களின் கவனக்குறைவே இதற்குக் காரணம் ” என்று பேச வந்த திருமதி. உமா வெங்கட், எத்தனை பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் தமிழில் பேசுகிறோம் எனும் பெருங்கேள்வியை முன் வைத்தார். அரங்கத்தில் நிலவிய அமைதியை அவரே கலைத்து, ஒரு சிறிய உதாரணத்தையும் கூறினார். தனது கணவர், வீட்டுக்கு தங்கள் குழந்தைகளுடன் விளையாட வரும் தமிழ்க் குழந்தைகளிடம் தமிழ் பேசுமாறு வலியுறுத்திச் சொல்லச் சொல்ல, அக்குழந்தைகள் அவரைக் கண்டாலே தமிழில் பேசத் தொடங்கினர் என்றார். எப்போதாவது சந்திக்கும் ஒருவரே இத்தகைய மாற்றத்தை ஒரு குழந்தைக்குள் கொண்டு வர முடியும் என்றால், தினம் கூடவே இருக்கும் பெற்றோர் சிறப்பான தமிழார்வத்தை குழந்தைகளிடம் உண்டாக்க முடியும் என்று கூறி முடித்தார்.

அடுத்து எதிர்த்தரப்பிலிருந்து பேச வந்த திருமதி. பாமா ராஜன், சூழ்நிலைதான் தமிழார்வக் குறைவுக்குக் காரணம் என்பதற்கான கருத்துகளை முன்வைத்தார். இப்பொழுது மினசோட்டா தமிழ்ப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களின் எண்ணிக்கையே இதற்கு உதாரணம் என்று கூறிய அவர் ஆறாண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போல பள்ளி இல்லாதிருந்தால் இன்று இவ்வளவு பிள்ளைகளும் தமிழ் படித்திருக்க வாய்ப்பிருந்திருக்காது என்று சுட்டிக் காட்டினார். பொதுப் பள்ளிக்குப் போகும் வரை வீட்டில் தமிழ் பேசிய தனது மகன், அங்கு போன பின்பு சக மாணவர்கள் தமிழ் பேசாதது கண்டு, தான் மட்டும் தமிழ் பேச தயங்கியதைக் குறிப்பிட்டு சூழ்நிலையின் தாக்கத்தை உணர்த்தினார்.

தாங்கள் வீட்டில் தமிழ் மொழி பேசி அதை குழந்தைகள் புரிந்து கொண்டாலும் அவர்கள் ஆங்கிலத்திலேயே பதிலளிப்பதை குறிப்பட்ட அவர் குழந்தைகளுக்குத் தங்கள் வயதை, ஆர்வத்தை ஒத்த நண்பர்கள் இல்லாதது தான் பெருங்குறை என்றும் உணர்த்தினார்.

அடுத்துப் பேசிய திரு. மணிகண்டன், இயல்பான தொனியில், சூழ்நிலையைக் குறை சொல்லிக் காலம் கடத்தக் கூடாது என எதிரணியினரை எச்சரித்தார். பள்ளி இல்லாத காலத்திலேயே தனது குழந்தைகளுக்குக் கணினி வழித் தமிழ்க் கல்வியைப் போதித்ததாகக் குறிப்பட்ட அவர், இன்றைய காலக் கட்டத்தில் இருக்கும் தொழில் நுட்ப வளர்ச்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழ்க் கல்விக்குச் சாதகமான சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளது எனக் குறிப்பிட்டார்.

பின்னர் பேசிய திரு. சத்தியமூர்த்தி அவர்கள் வெகு ஹாஸ்யத்துடன் பேசத் தொடங்க அரங்கமே சிரிப்பலையில் மிதந்தது. பெற்றோர்கள் தங்கள் சூழ்நிலை காரணமாகவே பிள்ளைகளுக்குத் தமிழார்வத்தை உண்டாக்க முடியாமல் தவிக்கிறார்கள் என அழகாக எடுத்துரைத்தார். தமிழ் மொழியில் அறிவியல் சொற்கள் பெருகாத சூழலினால் தான் நாம் அடுத்த மொழியிலிருந்து கடன் வாங்குகிறோம் என்ற சிறந்த, வலுவானதொரு கருத்தினை முன்வைத்து வாதாடினார். தமிழ் வளமிக்க விளங்காடு என்ற ஊரில் பலரிடம் இருந்து பரந்த தமிழறிவை பெற்ற தனக்கு, கடந்த பத்தாண்டுகளாகத் தமிழில் எழுத வாய்ப்பே இல்லாமல் போனதிற்கு சூழ்நிலையன்றி வேறு என்ன காரணமாக முடியும் என்று கேட்டு அனைவரையும் சிந்திக்க வைத்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய திருமதி. பிரசன்னா கஜவரதன், சிறு வயது தொடங்கி குழந்தைகளைத் தூங்க வைக்கக் கதை சொல்கிறோம், ஆனால் நம்மில் எத்தனை பேர் தமிழில் கதை சொல்கிறோம் எனக் கேட்டு அனைவரையும் சிந்திக்க வைத்தார். பள்ளி நேரம் போகப் பிள்ளைகளும் பெற்றோர்களும் சேர்ந்திருக்கும் நேரமே அதிகம். அதில் ஐந்து நிமிடமாவது தமிழில் பேசுகிறோமா என்று அடுத்த கேள்வியை எழுப்பினார். தமிழ் பிழைப்புக்கு உதவாது என்ற மாயைக்குள் நுழைந்துவிட்ட பெற்றோரே குழந்தைகளிடம் தமிழார்வம் வளராததற்குக் காரணம் என்பதை ஆணித்தரமாக உரைத்தார்.

அடுத்துப் பேச வந்த திரு. கார்த்திக், தாய்மொழியான தமிழ் மொழியை பெற்றோர் பேசினாலும் குழந்தைகள் புரிந்துகொண்டாலும், ஆங்கிலத்திலேயே பதில் சொல்வதன் காரணம் சூழ்நிலை தான் என்ற கருத்தை எடுத்து வைத்தார். குழந்தைகள் தமிழ் படித்துப் பேச வேண்டிய அவசியமில்லை எனும் சூழ்நிலை தான் பெற்றோர்களைத் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் அவசியமில்லை என்ற முடிவெடுக்க வைத்துள்ளது என்று பேசினார்.

Pattimandram1

அடுத்துப் பேச வந்த ‘பெற்றோர்களே காரணம்’ எனும் அணியின் தலைவர் திரு. மது வெங்கடராஜன், பெற்றோர் பலரும் தங்கள் தாய்மொழியான தமிழ் மொழியின் வரலாற்றையும், பழமையையும், பெருமையையும் அறியாமல் உள்ளார்கள். அவர்களுக்கே தங்கள் மொழியின் பெருமை தெரியாததால் அதைத் தங்கள் பிள்ளைகளுக்கு எடுத்துரைக்கத் தயங்குகிறார்கள் என்னும் குற்றச்சாட்டை முன்வைத்தார். பொறியியற் துறை கல்விக்குத் தமிழ் மொழியறிவு அவசியம் என்று ஒரு தேவை ஏற்பட்டால் பெற்றோர் அனைவரும் தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க முன்வருவார்கள் என்பதுதான் நிதர்சனம் எனவும் குறிப்பிட்டார். இங்கு பிறந்த குழந்தைகளுக்கு ஆங்கிலமே முதன் மொழியாகி விட்டது. நாம் ஆங்கிலத்தில் பேசும் போதும் தமிழில் சிந்தித்து மொழிமாற்றம் செய்து தான் பேசுகிறோம். நம் குழந்தைகள், ஆங்கிலத்தில் சிந்தித்து, தமிழில் மொழிமாற்றம் செய்ய வேண்டியுள்ளது. அவர்களுக்குப் பெற்றோரின் ஊக்கமும், உதவியும் கண்டிப்பாகத் தேவை என்றார். தமிழ்நாட்டில் இருப்பதை விட இங்கு சூழ்நிலை மொழி கற்பிப்பதற்குச் சாதகமாகவே உள்ளது. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் கூமோன், அபாகஸ் போன்ற வகுப்புகளுக்குப் போக வேண்டியது அவசியம் என்று நினைப்பது போல தமிழ்க் கல்வியும் அவசியம் என்று நினைத்தால் இன்று மினசோட்டாவில் இருக்கும் இரண்டாயிரம் தமிழ்க் குடும்பங்களிலிலிருந்து ஆயிரம் குழந்தைகளாவது தமிழ்ப் பள்ளிக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் 150 பிள்ளைகள் மட்டுமே வருகிறார்கள் என்ற புள்ளி விவரத்தையும் தந்தார். தமிழ்நாட்டில் இருப்பதை விட இங்கு மேம்பட்ட சூழ்நிலையிருந்தாலும் பெற்றோரின் ஊக்கமில்லாதது தான் குறை என்றும் உரைத்தார். சூழ்நிலையைக் காரணங்காட்டி நாம் செய்ய வேண்டிய எந்தக் காரியங்களையும் நாம் தள்ளிப் போட்டதில்லை. சூழ்நிலையை வெல்வதற்கான வழிகளைக் கண்டுபிடித்து நாம் தொடர்ந்து நம் காரியங்களை சாதித்துக் கொண்டு தான் இருக்கிறோம். அதே போன்ற ஒரு முனைப்பு நம் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழி கற்பிப்பதிலும் இருக்க வேண்டும் என்று முடித்தார்.

”சூழ்நிலையே காரணம்” என்ற அணியின் தலைவர் வேலப்பன் அடுத்து பேச வந்தார். வாசிக்கக் கற்றுக் கொள்; வாசித்துக் கற்றுக் கொள் எனும் மேற்கோளுக்கான விளக்கத்தை அளித்து, வாசித்தல், அதாவது படிப்பது எவ்வளவு அவசியம் என்பதை நம் முன்னோர்கள் அறிவுறுத்தத் தவறி விட்டார்கள் என்றார். பெற்றோர் வீட்டில் தமிழ் கற்றுத் தந்தாலும் அந்த குழந்தை வெளியில் சென்று அதைப் பேச எத்தனிக்கும் போது அதைக் கேட்க ஆளில்லை என்னும் சூழ்நிலை வரும் போது, அந்தக் குழந்தைக்கு ஆர்வம் குறைகிறது; உற்சாகம் இழக்கிறார்கள் எனும் மனித ஆழ்மனத்தின் இயல்புகளைத் தங்கள் அணிக்குச் சாதகமாக எடுத்துரைத்தார். தன்னைப் போன்று அடுத்தவன் இல்லை எனும் போது குழந்தைக்குத் தாழ்வு மனப்பான்மை வருகிறது. அதை எதிர்கொள்ள அக்குழந்தை பெரும்பான்மையானோர் பேசும் மொழியை சுவீகரித்துக் கொள்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கார் வென்ற பின்பு, இங்குள்ள பள்ளிகளில் அவரின் பல்லேலக்கா பாடலைப் பாடிய பொழுது, நம் தமிழ்க் குழந்தைகளும் பெற்றோர் சொல்லாமலேயே அதைத் தேடிக் கண்டுபிடித்து விரும்பிக் கேட்டனர். புராண சம்பவத்தை மேற்கோள் காட்டிய அவர், நக்கீரர் உரைத்தது போன்று ஊக்கத்திற்காகவது தமிழ் கற்க வேண்டும் எனும் சூழ்நிலை வந்தால் அனைவரும் தமிழ் கற்பார்கள் என்று தன் வாதத்தை எடுத்து வைத்து, ஸ்டீவ் ஜாப்ஸ், “தொழிலைக் காதலிப்பவர்களே தொழிலதிபராக முடியும்” என்றுரைத்தது போல் “தமிழைக் காதலிப்பவர்களே அதைப் பாராட்ட முடியும்”. அப்படிப் பட்ட சூழ்நிலை அமைந்தால் அனைவரும் எந்த வற்புறுத்தலும் இன்றித் தமிழ் பயில்வார்கள் என்று பேசி முடித்தார்.

தீர்ப்பு வழங்கிப் பேசிய நடுவர், வாதிட்ட அனைவரையும் பாராட்டினார். தமிழ் நாட்டில் கூட பேச்சாளர்கள் ஒரே சம்பவத்தை வேடிக்கைக்காகப் பல மேடைகளில் பல முறை பேசுவார்கள். இங்கு பேசிய அனைவரும் அரிய மற்றும் புதிய தகவல்களை எடுத்துரைத்தனர்.

பிறக்கும் குழைந்தகள் தாங்கள் ஆங்கிலத்தில் தான் கற்க வேண்டும் என்று கேட்பதில்லை. குழந்தையின் பெற்றோர் தாம் அக்குழந்தை என்ன, எங்கு, எப்படிப் படிக்க வேண்டும் என்பதை ஒரு குறிப்பிட்ட வயது வரை முடிவு செய்கிறார்கள். அதே போல் பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை எனும் குறளுக்கேற்ப பொருள் ஈட்ட வேண்டியே அனேகர் அதற்குத் தேவையான வழிகளைத் தேடிக் கொள்கின்றனர். அதற்குக் காரணம் சூழ்நிலை என்று இரண்டு பக்கத்துக்கும் கூடுதல் வலுவைச் சேர்த்து எந்தப் பக்கம் தீர்ப்பு வழங்கப் போகிறார் எனும் பதைபதைப்பைப் பார்வையாளரிடம் ஏற்படுத்தினார்.

இறுதியாக சூழ்நிலை காரணமாக அமைந்தாலும், அதை வெல்லக் கூடிய கூர்மை பெற்றோருக்கு இருக்கும் போதிலும், அவர்களின் ஊக்கமின்மையே தங்கள் குழந்தைகள் தமிழ் கற்பதற்கு முதற் தடையாக அமைகிறது என்று கூறி பட்டிமன்றத்தை நிறைவு செய்து வைத்தார்

வெகு நாட்களுக்குப் பிறகு, கேளிக்கை மட்டுமின்றி் பல அரிய தகவல்களித்த தரமானதொரு தமிழ் நிகழ்ச்சியைக் கண்ட பெருமகிழ்ச்சி பார்வையாளர் அனைவர் மனதிலும் தோன்றியது. நடுவருக்கு நன்றியுரை வழங்கி அவருக்கு நினைவுப் பரிசு அளித்ததுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது.

– ரவிக்குமார்.

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. லெட்சுமணன் says:

    இது அறிவையும் மொழியையும் குழப்பி கொள்வதால் வரும் பிரச்சினை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad