வறுமை
இளமையில் வறுமை இறப்பினும் கொடிது
இயம்புதல் அருமை ஔவையின் அமுது
இன்னலின் முதன்மை இல்லாததன் பொழுது
இரப்பவன் நிலைமை இருப்பவன் தொழுது
இரந்திடும் வாழ்க்கை இகத்தினர் வேண்டிலர்
இருப்பவர் அனைவரும் இயல்பவர் ஆகிலர்
இளமைப் பருவத்து இரப்பவர் ஆகுவர்
இனிமை துறந்து இன்னலில் வாடுவர்
இன்பம் துறந்ததால் இன்னல் அடைந்ததால்
இளமை முழுவதும் இறைஞ்சி வாழ்ந்ததால்
இல்லறம் புளித்து இகமும் கசந்தது
இயல்பெனக் கருதுதல் இயற்கை நிலையது
இவற்றின் மத்தியில் இயல்புக்கு மாறாய்
இளமை வறுமையில் இன்பந்தரும் நல்ல
இனியதும் உளதென இயம்பிற்று எம்மனம்
இதுவென விந்தை இல்லாத புதுமை
இயம்புமெனக் கேட்கும் இதயங்களுக்கு பதிலிதோ
இன்பமாய் நடாத்தும் இல்லறம் தம்மில்
இணைந்திட்ட உறவின் இதந்தரு நன்மக்கள்
இனிமை மட்டுமே இகவாழ்வில் கண்டிட்டால்
இரும்பென உறுதியாய் இதயமது ஆகிடுமோ
இருப்பது எல்லாம் இளங்குருத்து தனக்கே
இயன்றவரை செலவிட்டால் இல்லாமை விளங்கிடுமோ
இல்லாமை விளங்குவது இல்லாமை இல்லாததாக்கும்
இலகுவாய்க் கிடைக்கும் இன்பங்கள் அனைத்தும்
இனிமையின் உணர்வை இளைஞர்க்குத் தருமோ
இறுதியாய்ச் செல்லும் இயற்கையின் வழிக்கு
இளமையில் வறுமை இன்பமே பயக்கும்!!!
வெ. மதுசூதனன்.