ஒரு ஈழத் தாயின் இன்றைய தாலாட்டு
“ஆராரோ ஆரிவரோ
ஆரடிச்சு நீயழுதாய்
அடித்தாரை சொல்லியளு
ஆக்கினைகள் பண்ணி வைப்பேன்
காத்து நுழையாத வீட்டினுள்ளே
காவாலி அவன் நுழைஞ்சான்
பாத்துப்பாத்து கட்டி வைச்ச
செல்வமெல்லாம் கொண்டுபோனான்
முகமூடி கொண்டொருவன்
படியேறி வருவானென்று
அடிப்பாவி நான் நினைக்க
ஆதாரம் ஏதுமுண்டோ?
கடிகாவல் செய்து வைக்க
காவலர்கள் யாருமில்லை
கடிநாயும் வளர்க்கவில்லை
காவலுக்கு வைக்கவில்லை
அந்தாளும் சீவன் விட்டு
ஆகாயம் போயிட்டார்
இந்த உலகமதில் எங்களுக்கு
வேறு துணை யாருமில்லை
சிறுக்கி செம சிறுக்கி
சின்னமகள் இவளிருக்க
பொறுக்கி எடுத்த முத்து
வேறெதற்கு உலகினிலே?
பொன்னனான பொன்மணியை
பொத்திப் பொத்தி வளர்க்கையிலே
கண்ணான கண்மணிகள்
கருவிழியும் மங்குதடி
கருவிழிகள் மங்கி மங்கி
காவல் செய்யும் வேளையிலே
இரவுதனில் எவன் வருவான்
எதையெடுப்பான் என்று பயம்
இரவு வரும் வேளையிலே
காடையர்கள் வீடு வந்தால்
இரவி வரும் வேளைக்குமுன்
பாடையெல்லோ கட்டிடுவார்
பொழுதேறிப் போகையிலே
வருவதுவோ நித துக்கம்?
அழுதழுது கண்கள் மங்கும்
அனுதினமும் முகஞ்சினுங்கும்
கள்ளன் வந்தான் என்ற சேதி
வெள்ளம் போல பரவமுன்னர்
உள்ளங் கொள்ளை போனதென்று
ஊர் முழுக்க கதையுரைப்பார்
பருத்தி இலை போல நெஞ்சு
படபடக்கச் செய்யுதடி
நெருடி நெருடி நெஞ்சம்
நெதம் பயத்தில் திணறுதடி
சிறு பெண்ணும் நானுமிங்கே
உறு மீனாய் தவிக்கையிலே
சிலவேளை வருநாளில்
வயசுக்கு வந்து விட்டால்
காப்பாற்ற நாதியற்று
கலங்கியெல்லோ போயிடுவேன்
பாப்பாரும் யாருமில்லை
பாவிநான் தவிக்கையிலே
கண்ணான கண்மணியே
காலந் தாழ்த்தி வயசுக்கு வா
மண் மீட்கும் காலம் வந்தால்
மகிழ்வுடன் நீ வளர்ந்திடம்மா…
ஆராரோ ஆரிவரோ
ஆரடிச்சு நீயழுதாய்
அடித்தாரை சொல்லியளு
ஆக்கினைகள் பண்ணி வைப்பேன்!!!
– காண்டீபன்