வாங்க ஃப்ரீயா பேசலாம்
“என்ன அண்ணாச்சி? சொகமா இருக்கீயளா?”
“அடடே .. வாடே மாப்ளே .. நல்லா இருக்கம்டே. என்னடே விடியாலைல வேட்டியெல்லாம் கட்டி அசத்தறீரு? இங்கிட்டு என்ன வெய்யிலா அடிக்கி? வெறக்கீயில்லா?”
“பண்டிக நாளல்லா.. வேட்டி கட்டியாகோணுமுன்னு ஊர்லேருந்து ஆத்தா தாக்கீது அனுப்பிருச்சு .. “
”அப்படித்தாம்ல நடந்துகிடோனும்… கெடக்கட்டும் … ஏது இந்தா தூரம்?”
“சும்மாதாம் … கனநாளாச்சுல்லா இந்தப் பக்கம் வந்து ..”
“ஆமாம்லே.. கடையில கொள்ளச் சோலி கெடக்கும் ..அங்கன போய் வாறதுக்கே நேரம் வெருசா ஓடும்.. கீளே மதினியைப் பாத்தீல்லா?”
“இல்ல .. மதினிய காங்கல ..”
“சரி சரி இப்பம் வந்துருவா .. காப்பீ, கீப்பி சாப்புடுதியா? “
“இப்ப ஒன்னும் வேண்டாமண்ணாச்சி .. டிபனச் சாட்டுட்டுதாம் கெளம்பியாரேன்.. டீவி பாத்துக்கிட்டு இருந்தீயளோ?”
“ஆமாம்டே .. என்னத்த செய்யச் சொல்லுதே? ஏ .. கொஞ்ச நேரம் டீவி பாப்போம்முனு ஒக்காந்தா, சினிமா சமாசாரமாவுல காட்டுதானுவ … “
“என்ன இப்படிச் சொல்லிப்புட்டிய? புதுப் படமெல்லாம் போடுதாங்கல்லா?”
“ஏ ..படம் எளவ மட்டும் போடட்டுமே .. ஆரு வேணாஞ் சொன்னா?
.. இவனுக படம் புடிச்ச வெவரத்தை ஆரு கேட்டது? பத்தாததுக்குப் பள்ளிக்கூடத்துக்குப் போற பொட்டப்புள்ளைலுவல கூட்டியாந்து கேள்வி கேக்கச் சொன்னா அதுவ ‘சூட்டிங்க்லா என்ன நடக்கு? வெலாவெரியா சொல்லுங்கையான்னு’ தஸ்ஸு புஸ்ஸுனு பவுசு காட்டுதுவோ.. அதுலும் அந்த ஹீரோ .. எங்கருந்துதா அவனப் புடிச்சிட்டு வந்தாங்களோ? ‘நாங்க படமெடுக்கையில கருங்காக்கா பறந்திச்சு … கட்டெறும்பு கடிச்சிதுன்னுக்கிட்டு’ ..ஆக்கங்கெட்ட கூவை..வெறுவாக்கெட்டவன் ..”
“சரி.. சரி .. அவுன ஏன் இப்டி சவட்டு மேனிக்கு வையிதீய ? அவந்தொளிலு அப்படி.”
“தொளிலு என்னலே தொளிலு .. நம்ப கணேசண்ணாச்சி பாக்காத தொளிலா இவனுவ பாக்குறானுவ? பைய்ய நடந்து வாறதிலேயே நூறு பாவம் இருக்கும்ல .. அத உட்டுபோட்டு இவனுவள நடிகனுவன்னு சொல்லிக்கிட்டு .. நீசத்தனமா இருக்குலே .. ஆனா பேச்சு மட்டும் எல்லாப் பயலுவளுக்கும்.. விண்ண முட்டும்.. “
“நம்மூருல சொல்லுவாங்கல்லா .. போன மாட்டைத்தேடுவாரில்ல, வந்த மாட்டை கட்டுவாரில்லன்னு .. அந்த மாதிரி சினிமால கண்ண மூடித் தூங்குனாலே செத்துட்டாம்னு முடிவாயிரும்.”
“அதுக்காவ? லே .. இவனுக்கெல்லாம் மூணு கோடி சம்பளமாமுடே.. “
“வெள்ளந்தியா பேசுதிய அண்ணாச்சி .. படமெடுக்குற மொலாளி போட்ட மொதலுக்கு மேல பணம் வல்லீன்னா தொளில் பண்ணுவான்னு நெனைக்கீயளா ..”
“ஏ … தெரிஞ்சே பண்ணுததுக்கு அவனுக்கென்ன கோட்டி பிடிச்சிருக்கா?”
“பாத்தியளா ? நீங்களே ஒத்துக்கிடுதீக .. சினிமால அந்தளவுக்கு பணம் பொரளுது அண்ணாச்சி .. பொரளுது”
“சினிமா எடுக்கற அம்புட்டு மொலாளியளும் பணம் பண்றாங்களாடே? இல்லீயே.. எல .. காட்டையும் வயலையும் வித்துப்புட்டு நடுத்தெருல நிக்கிறானுவோல்லா?”
“அங்கதேன் இருக்கு சினிமா சூட்சுமம்… யாரை வெச்சு, எப்பிடியாப்பட்ட படம் ஓடுமினு தெரிஞ்சு எடுக்கிறவுக பொளப்பாக .. படமெடுத்தா மட்டும் போதாது.. யாவாரம் செய்யோணும்”
”அதுக்காவ, எல்லா டீ.வியிலேயும் சினிமாவையே காமிச்சு உசிர வாங்கோணுமாக்கும்.. அவன் என்னமோ புத்தனாட்டமா நிக்கான்.. சுத்தீலும் பத்து செறுக்கி விள்ளைய … அவன கொசு கடிச்சதுக்கு வெசனப்படுதுவளாம்.. என்னத்த சொல்ல?”
“இம்புட்டு பேசுதீயளே அண்ணாச்சி.. பொறவு ஏன் அதப் பாக்கீக?”
“லே.. என்ன பேச்சுப் பேசுதே? பொசுக்குனு? ”
“அண்ணாச்சி .. ஒங்களுக்குப் புரியறாப்ல சொல்ல எனக்கு ஏலல .. சிவாசி காலத்து நடிப்பெல்லாம் இப்பம் யாவாரத்துக்கு ஒதவாது.. இம்புட்டு கோபபட்டியனா ஒடம்புக்கு ஆகாது.. பீப்பீ, சீக்கு வந்து படுத்துட்டீயனா ஒம்ம கவனிக்கிறது ஆரு? பட மொலாளியோ, நடிகனோ வர மாட்டாக.. ”
”ஏல அய்யா இங்கட்டு பாரு.. நான் ஒரு பய கைய எதிர்பாக்கல .. நீரு கெளம்பும் ..”
”சரி அண்ணாச்சி .. உடம்பை கவனமா பாத்துக்கிடுங்க. பொறவு பாக்குதேன் சரியா?”
அவன் சொன்னது நெசந்தானோ? சிவாசி கணேசன் நடிப்பெல்லாம் யாவாரத்துக்கு ஒதவாதோ? நீங்க கொஞ்சம் சொல்லுதீயளா?
– செங்கோட்டை செல்லப்பா,