\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

JUST JESS

Filed in இலக்கியம், கதை by on November 3, 2013 0 Comments

JESS_1_620x868சாலை நெளிந்து வளைந்துச் சென்றுக் கொண்டிருந்தது. நடுநிசியைக் கடந்த நேரம். அடர்த்தியான மேகங்களிடையே தனது ஒளிக்கதிரை எப்படியாவது செலுத்தி விட நிலவு முயன்று கொண்டிருந்தது. சாலையின் இருபக்கங்களிலும் வளர்ந்திருந்த அடர்ந்த மரங்கள் மேகத்தைக் கடந்து விழுந்த ஒரு சில ஒளிக்கீற்றையும் தரையில் விழுந்திடாதவாறு மறித்திருந்தது. வினோத்தின் காரிலிருந்து விழுந்த வெளிச்சம் மட்டும் அந்த கும்மிருட்டை இரண்டாகப் பிளந்து கொண்டு போய்க் கொண்டிருந்தது. அவ்வப்போது வெளிச்சத்தை நோக்கிப் பறந்து வந்த சின்ன பூச்சிகள் கார் காற்றைக் கிழித்துக்கொண்டு வரும் வேகத்தைப் பார்த்துப் பயந்து விலகியோடின. லேசாகத் தூறிக்கொண்டிருந்த மழையின் துளிகள் சில சரியான கோணத்தில் வெளிச்சம் படும் போது வைரங்களாய் மின்னின.

இதிலெல்லாம் கவனம் செல்லவில்லை வினோத்துக்கு. அவனுடைய கண்கள் தேடியதெல்லாம் எங்காவது கேஸ் ஸ்டேஷனுக்கான அறிவிப்புகள் தென்படுகிறதா என்பது தான். காரணம் காரிலிருந்த வாயுமானியின் முள் எந்த நிமிடம் வேண்டுமானாலும் கார் நின்றுவிடலாம், அதற்கு நான் பொறுப்பல்ல என்பது போல் ‘empty’ புள்ளியை விட்டுக் கீழிறங்கி லேசாக உதறிக்கொண்டிருந்தது.

தவறு வினோத்தினுடையது தான். இந்தியாவுக்கு செல்லும் ஜானவியை ஒஹேர் ஏர்போர்ட்டில் விமானமேற்றி விட மினியாபொலிஸிலிருந்து, சிகாகோ வந்திருந்தான். அவளை அனுப்பிவிட்டு காருக்குத் திரும்பி வந்தபோது தான் கவனித்தான். அவளது செல்ஃபோனைக் காரிலேயே விட்டுவிட்டிருக்கிறாள். அப்போது தான் வினோத்துக்கு, அவள் செக் இன் பண்ணி விட்டு உள்ளே சென்றபின் ஏன் ஃபோன் பேசவேயில்லை என்பது புரிந்தது. மனதுள் அவளைத் திட்டிக்கொண்டு காரை ஸ்டார்ட் செய்த போதே சீக்கிரமாக எனக்கு கேஸ் போடவில்லை என்றால் என்னால் இயங்கமுடியாது என உணர்த்தியது. ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்த போது சேகர் ஃபோனில் கூப்பிட, அவனுடன் பேசிமுடித்து மேலும் இரண்டு பேருடன் தொடர்ந்து பேசியதில் கேஸ் போடவேண்டுமென்பது முழுதுமாக மறந்து போனது. ஹைவேயில் வந்துகொண்டிருந்தபோது யதேச்சையாகப் பார்த்தபோது தான் தெரிந்தது. ’empty indicator’யையும் கடந்து முள் கீழே இறங்கி விட்டிருந்தது. அப்போதே மணி பதினொன்றரையைத் தாண்டியிருந்தது. கார் வழியில் நின்று விட்டால் என்ற கேள்வி எழுந்தவுடன் வேறேதும் தோன்றாமல் அடுத்த எக்ஸிட்டை எடுத்து விட்டான். அங்கு கேஸ் ஸ்டேஷன் எதுவும் இருக்குமா என்று கூட யோசிக்கவில்லை. ஒரு நான்கைந்து மைல்கள் உள்ளே வந்த பின்பும் கண்ணில் எந்த கேஸ் ஸ்டேஷனும் பார்க்க முடியவில்லை என்ற போது தான் மனதில் லேசாக பயம் பற்றிக் கொண்டது. பின்னால் திரும்பிப் போகவும் யோசனையாக இருந்தது. விட்டுவிட்டு இயங்கிய ஃபோன் ஜி.பி.எஸ். கேஸ் ஸ்டேஷன் என்றால் என்ன என்பது போல் திரும்ப கேள்வி கேட்டது. அதை நம்பி பிரயோசனமில்லாது போகவே எங்கே போவது என்று தெரியாமல் அறிவிப்புகள் எங்காவது இருக்கிறதா என்று பார்த்துப் போய்க்கொண்டிருக்கிறான்.

வாயுமானியின் முள் இப்போது அதிகமாக உதறத் துவங்கியிருந்தது. வினோத்துக்கு வண்டி தானாக வேகம் குறைவது போலத் தோன்றியது. ஃபேன் ஓடுவதால் விரைவாக கேஸ் தீர்ந்து விடுமோ என்று எண்ணி ஃபேன் வானொலி அனைத்தையும் அணைத்து விட்டான்.. வெளியே தூறிக்கொண்டிருந்த மழை சற்றே வலுத்து விட்டிருந்தது. வேறெந்த சத்தமும் இல்லாததால் மழைத்துளிகள் சடசடவென விழுவது கேட்டது. வைப்பரைக் கூட தொடர்ந்து இயக்காமல், சுத்தமாகப் பாதை தெரியாமல் போகும் போது மட்டும் இயக்கிக் கொண்டு ஓட்டி வந்தான். முழுதும் இருண்டு போய்க் கிடந்த சுற்றுப்புறங்களில் தொலைதூரத்தில் ஆங்காங்கே வெளிச்சப் பொட்டுகள் தெரிந்தன. ஏதோ ஒரு ஊரை நெருங்கி விட்டது போல் உணர்ந்தான். இன்னும் கொஞ்ச தூரம் தான், போய்விடலாம் எனத் தோன்றியது. கொஞ்ச தூரம் சென்றதும், லாந்தர் விளக்கை ஏற்றி வைத்தது மாதிரியான, இரண்டொரு சாலை விளக்குகள் தெரிந்தன. வண்டியின் எஞ்சின் அடைக்கத் துவங்கியது. சற்றுத் தூரத்தில் சிகப்பும் நீலமும் கலந்த வெளிச்சம் தெரிவது போலிருந்தது. அடுத்த சில நொடிகளில் கண்டிப்பாக அது கேஸ் ஸ்டேஷன் தான் என்று உணர்ந்துக் கொண்டான் வினோத். வாழ்நாளில் இது போன்றதொரு மகிழ்ச்சியான நொடியை அவன் அனுபவித்ததில்லை. வண்டி மேலும் அடைக்கத் தொடங்கியது. இனி வண்டி சுத்தமாக நின்று விட்டாலும் கவலையில்லை என நினைத்தான். அவ்வாறு நினைத்த அடுத்த நொடியே கேஸ் ஸ்டேஷன் திறந்திருக்குமா என ஒரு கேள்வி எழுந்தது. ஒரு வேளை மூடி விட்டிருந்தால்? அப்படியிருக்காது, இன்னும் விளக்கு எரிகிறதே அப்படியானால் திறந்துதானிருக்கும் – சப்பைகட்டு கட்டிக் கொண்டான். இன்னும் இருநூறடி தூரம் தான் என்ற போது வண்டியில் கேஸ் பெடல் செயலிழந்து விட்டதைப் போல் உணர்ந்தான். எவ்வளவு தான் அழுத்தினாலும், வேகம் கூடவேயில்லை. நூறடிதான் …. வண்டி நின்று ஒரு குலுங்கு குலுங்கி நகர்ந்தது. பேட்டரி இண்டிகேட்டர் ஒளிரத்துவங்கியது. ஐம்பது அடிகள் தான் … வண்டியின் இஞ்சின் சுத்தமாக அணைந்து விட்டது. உந்து வேகத்தால் வண்டி ஊர்ந்து சென்று கேஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தது… நல்ல வேளையாக நுழைவாயில் சரிவாக இருந்ததால் மேலும் சில அடிகள் உருண்டுச் சென்றது. அப்போது தான் கவனித்தான், பம்பிலிருந்த சிறிய குழல் விளக்கைத் தவிர வேறு எந்த வெளிச்சமும் இல்லை.

பழங்கால கிளின்ட் ஈஸ்ட்வூட் படங்களில் வருவது போன்ற, ஓரமெல்லாம் துருப்பிடித்த பம்ப் இரண்டு மட்டுமிருந்தன. பம்ப் இயங்குமா என சந்தேகத்துடன் வண்டியை உருட்டி வந்து ஒரு பம்பின் முன் நிறுத்தினான். சாவியை எடுத்து வண்டியை விட்டு இறங்கிய சில நொடிகளில் ஹெட்லைட் விளக்குகளும் அணைந்து விட்டன. சுற்றிலும் கும்மிருட்டு. உயரத்திலிருந்த தகவல் பலகை விளக்கும், பம்பிலிருந்த ஒரு சிறிய குழல் விளக்கும் மட்டுமே எரிந்து கொண்டிருந்தன. கண்ணாடி வழியே தெரிந்த உள்ளறை இருட்டாக இருந்தது. பணியாளர்கள் எவரும் இருக்கச் சாத்தியமில்லை. பணியாட்கள் மட்டுமில்லை, பல மைல் சுற்றுவட்டாரத்தில் ஒருவரும் இல்லையெனத் தோன்றியது. க்ரெடிட் கார்ட் உரசும் கருவியைப் பார்த்தபின் தான் அப்பாடா எனத் தோன்றியது. க்ரெடிட்கார்டை எடுத்து சொருகிய பின், $3.79 என்ற பொத்தானில் விளக்கு எரிந்தது. $3.79 என்ன, $37.90 என்றாலும் பரவாயில்லை என நினைத்தான். ட்யூபை எடுத்து வண்டியின் கேஸ் டாங்கில் பொருத்தி, டிஸ்பென்ஸரின் லிவரை அழுத்தி கேஸலின் ‘ஸ்ஸ்ஸ்’ எனும் ஒலியுடன் காரின் டாங்க்குக்குள் கொப்பளித்துக் கொண்டு இறங்குவதை கேட்ட போது மனதிலிருந்த பாரமெல்லாம் சட்டென விலகி விட்டதைப் போல் உணர்ந்தான். ச்சே … கொஞ்ச நேரத்தில் என்ன பாடுபடுத்தி விட்டது.

6, 7 என கேலன்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதை விட நான்கு மடங்காக டாலர் குறிக்கு நேரான எண்கள் உருண்டுக் கொண்டிருந்தன. மீண்டும் தகவல் பலகையைப் பார்த்தான். ‘ரான் ஹெமிங் கேஸ் கார்னர்’ என்று எழுதியிருந்தது. நட்ட நடுக் காட்டிற்கு நடுவே ஒரு கேஸ் ஸ்டேஷன் திறக்க வேண்டும் என்று தோன்றி, அதுவும் ஒரு ஆட்டோமேட்டட் கேஸ் பம்ப் வைத்த முதலாளி, ’ரான் ஹெமிங்கோ’ அல்லது அவரது பேரனோ, யாராக இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என மனதில் நினைத்துக் கொண்டான்.

அந்த சுற்று வட்டாரத்திலிருந்த மரங்களிலிருந்தெல்லாம் வீழ்ந்த இலைகள் காற்றில் அடித்துக் கொண்டு வருவது போல சத்தம் கேட்டது. மழைத்துளிகளும் வலுத்துக் கொண்டு வந்தன. அதான் கேஸ் போட்டாகி விட்டதே இனிக் கவலை இல்லை. நாலரை மணிநேரம் தொடர்ந்து ஓட்டினால் மினியாபொலிஸ் போய் விடலாம் என நினைத்தான். ‘ப்ளப்’ என ஒலியுடன், வயிறு நிறைந்ததும் தான் குடித்துக் கொண்டிருந்த பால் புட்டியை தட்டிவிடும் குழந்தையைப் போல, கார் தனக்கு கேஸலின் போதுமென்பது போல டிஸ்பென்சர் நாஸிலைத் தள்ளி விட்டது. குளிரால் சில்லிடத் துவங்கியிருந்த கரங்களைப் பரபரவெனத் தேய்த்துவிட்டுக் கொண்டு, டிஸ்பென்சரை எடுத்து பம்பில் பொருத்தி விட்டு, வண்டி கேஸ் டேங்கின் மூடியை இருக மூடினான். பம்பிலிருந்த இயந்திரம் அச்சடித்த ரசீதை நீட்ட அதைக் கிழித்துக் கொண்டு சடாரெனத் திரும்பியவன் … பட்டென ஒரு நொடியில் இதயம் நின்று விட்டதைப் போல உறைந்து போனான்.

“ஓ ! ஷூட்! பயந்தே விட்டேன்” என்றான் வலியச் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு.

மிக அருகில், மிக மிக அருகில் ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். நீலக் கண்கள், பேருக்கு அணிந்திருந்த ஊதாக் கலர் ஸ்வெட்டர், வெளிர் நிற ஜீன்ஸ்.. கலைந்திருந்த தங்க நிற பளபளப்பான முடி. கிறங்கடிக்கும் திரவிய வாசமென ஒரு சராசரி ஆணை ஐந்து வினாடிகள் தொடர்ந்து பார்த்தால் தப்பு செய்யத் தூண்டக்கூடிய அழகு.

“மன்னியுங்கள்.. நான் உங்களை பயமுறுத்த எண்ணவில்லை.. ஒருவரையும் காணாமல் இரண்டு மணி நேரமாக, அதோ அந்த தெரு மூலையில் காத்திருந்தேன். உங்களுடைய கார் வருவதைப் பார்த்துவிட்டு நீங்கள் கிளம்பும் முன் உங்களை பிடித்திட வேண்டுமென ஓடி வந்தேன். அதான் ..” முன்னழகு ஏறி இறங்க சொன்னாள்.

“ஒண்ணும் பிரச்சனையில்லை .. சொல்லுங்க உங்களுக்கு என்ன வேண்டும் … கேஸ் போடவேண்டுமா?”

“மன்னிக்க வேண்டும்.. சற்று முன் இந்த பகுதியில் மிக கனத்த மழை பெய்தது… முன்னால் என்ன இருக்கிறது என்று கூடத் தெரியவில்லை.. பாதை தெரியாமல் ஒரு கம்பத்தில் இடித்து விட்டேன்.. சரியாக இஞ்சினில் அடிபட்டதினால் கார் ஸ்டார்ட் ஆகவில்லை.. இரண்டு மணி நேரமாகக் காத்திருக்கிறேன்.. இந்த பகுதியில் வேறெந்த வாகனங்களும் வரவில்லை..”

மறுபடியும் மூச்சு வாங்கினாள்…

“பதட்டப்படாதிங்க … தண்ணி குடிக்கிறீங்களா?” எனக் கேட்டுக் கொண்டே கார் கதவைத் திறந்தான்.”

”இல்லை .. பரவாயில்லை .. நான் ஜெஸ்.. ஜெஸ்ஸைகா.. வீட்டில் என் அம்மா நான் வருவேன் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.. என்னுடைய செல்ஃபோனைக் கூட நான் மறந்து வைத்து விட்டேன்.. அவருக்குக் கூப்பிட்டு சொல்ல வேண்டும்.. உங்கள் போனை பயன்படுத்திக் கொள்ள முடியுமா?” என்றாள்.

“கண்டிப்பா.. “ காருக்குள் நுழைந்து தனது போனைத் தேடினான். கடைசியாக பேசி விட்டு வைத்த போது தவறி விழுந்து சீட்டுக்கடியில் போயிருக்குமோ? குனிந்து தேடும்போது தான் தோன்றியது. ஜானவியின் ஃபோன் தான் இருக்குமே. அதை பக்கத்து இருக்கையில் தானே வைத்தோமென அதை எடுத்து அவளிடம் கொடுத்தான். அவள் அதை வேகவேகமாக வாங்கி யாருக்கோ டயல் செய்யத் தொடங்கினாள். சீட்டை நகர்த்திவிட்டு, காருக்குள் இருந்த விளக்கைப் போட்டு பார்த்ததில் தனது போன் பல ஒயர்களுக்கிடையே சீட்டுக்கடியில் சிக்கியிருப்பதைக் கண்டு, விரல்களால் துழாவித் துழாவி எடுத்தான். அதற்குள் அவள்…

“மிக்க நன்றி … பேசிவிட்டேன்” என்று போனை நீட்டினாள்.

“ஒண்ணும் பிரச்சனையில்லை. ஆமாம் நீ இப்போது என்ன செய்யப் போகிறாய். உன் வீட்டிலிருந்து யாராவது வருவார்களா” என்று கேட்டான் வினோத்.

“இல்லை. என் வீட்டிலிருந்த இன்னொரு காரை என் அப்பா எடுத்துக்கொண்டு வெளியே போய் விட்டாராம். என்ன செய்வது என்று தெரியவில்லை. அம்மா தான் மிகவும் பயந்து போயிருக்கிறார். எப்படியாவது காரைச் சரி செய்து வீடு வந்து சேர் என்கிறார்.”

”உன்னுடைய கார் எங்கே இருக்கிறது.. எதாவது செய்ய முடிகிறதா என்று பார்க்கலாம்”

“இல்லை நான் பலமுறை முயன்று விட்டேன்.. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை …மழை வேறு பெய்வதால் எதுவும் செய்யவும் முடியவில்லை .. அதோ அந்த தெரு முனையில் தான் இருக்கிறது” என்றாள்.

”நீ சொல்வதும் சரிதான்.. ஆனால் இங்கு என்ன செய்வாய். இந்தப் பகுதியில் உனக்குத் தெரிந்தவர் யாராவது இருக்கிறார்களா?”

”இல்லை எனக்கு இந்தப் பகுதியில் யாரையும் தெரியாது. என் வீடு இங்கிருந்து ஒரு 17 மைல் தொலைவில் இருக்கிறது. அரை மணி நேரத்துக்கும் குறைவாகத் தான் ஆகும்… உங்களுக்கு சிரமமில்லை என்றால் என்னை வீட்டில் இறக்கி விட முடியுமா?” என்றாள்.

”உனது வீடு எந்தப் பக்கம் இருக்கிறது?”

வினோத் செல்ல வேண்டிய ஹைவேக்கு எதிரான திசையைக் காட்டினாள் அவள்.

”உனது நிலைமை புரிகிறது. சற்று முன்னர் நானும் உன்னைப் போலவே ஏதோவொரு இடத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்திருக்கும். ஆனால் நான் எதிர்த் திசையில் செல்ல வேண்டும். தவிர நான் இன்னுமொரு நான்கைந்து மணி நேரங்கள் பயணிக்க வேண்டும் ..” என்று இழுத்தான்.

”தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள். என் அம்மா காத்துக் கொண்டிருக்கிறார்.”

வினோத்துக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. ஜெஸ்ஸை பார்ப்பதற்கு பாவமாக இருந்தது. நடு இரவில், காற்றும் மழையும் சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருக்கும் போது அதுவும் இது போன்ற இடத்தில், தனிமையில் இருப்பது கொடுமை.. ஆபத்தானதும் கூட.

ஆனால் என்ன செய்வது … இவளை இறக்கி விட்டுவிட்டு மினியாபொலிஸ் திரும்ப குறைந்தது ஆறு மணி நேரமாவது ஆகிவிடும். நேற்று இரவு முழுதும் காரோட்டிக் கொண்டு சிகாகோ வந்ததினால் பொட்டுத் தூக்கமில்லை. இன்றும் தூங்கவில்லை என்றால் கஷ்டம்.

“தயவு செய்யுங்கள் .. நான் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறேன்..”

“இங்கே பார். உனக்கு உதவ வேண்டுமென்று தான் நினைக்கிறேன் .. ஆனால் என்னால் முடியுமா என்று தான் தெரியவில்லை .. நேற்று முதல் நான் தூங்கவில்லை .. இப்போதே அசதியாக இருக்கிறது.. நான் செல்ல வெண்டிய தூரம் வேறு அதிகமுள்ளது..”

“ப்ளீஸ் ..ப்ளீஸ் .. நீங்கள் என்னை விட்டுவிட்டு எங்கள் வீட்டிலேயே ஓய்வெடுங்கள்.. காலையில் எழுந்து போகலாம்.” என்றாள்.

“இல்லை அது சரிப்படாது… இங்கே வேறே ஏதாவது ஹோட்டல் இருக்கிறதா? உனக்கு தெரியுமா?”

“ஆங் .. இருக்கிறது.. எங்கள் வீட்டில் இருந்து பதினைந்து நிமிடம் மேற்கில் போனால் இரண்டு ஹோட்டல்கள் அருகருகே இருக்கின்றன …ஆனால் நீங்கள் எங்கள் வீட்டிலேயே தங்கிக்கொள்ளுங்கள் ..”

“இல்லை வேண்டாம் .. நான் உன்னை விட்டு விட்டு ஹோட்டலில் தங்கிக் கொள்கிறேன்.. காரில் உட்கார் ..” என்றான் வினோத்.

“மிக மிக நன்றி.. நான் எப்படியாவது உங்களுக்கு பதில் உதவி செய்வேன் .. எனக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை… உங்களது புரிதலுக்கும் உதவிக்கும் நன்றி ..” கொஞ்சம் அதிகமாகவே நெளிந்தாள்.

“சரி .. சரி .. உட்கார்”

“போகும் போது என் காரருகே ஒரேவொரு நிமிஷம் நிறுத்தறீங்களா.. காரிலிருந்து என் பையை மட்டும் எடுத்துக் கொள்கிறேன் ..” எனச் சொல்லியவாறே வினோத்தின் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.

அவளது நீலக் கண்களில் எப்படியோ இன்று வீடு போய்ச் சேர்ந்துவிடுவோம் என்ற மகிழ்ச்சி தெரிந்து, அவளை மேலும் அழகாக காட்டியது.

காரை இயக்கி, கண்ணாடியில் வழிந்திருந்த மழைத் தண்ணீரை வைப்பரால் துடைத்து கேஸ் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்து சாலையில் இறங்குவதற்குள் மீண்டும் மழைத் தண்ணீர் பார்வையை மறைத்தது.

“எங்கே இருக்கிறது ?” என்றான்.

“அதோ அந்த இடது மூலையில் ..”

அவள் காட்டிய திசையில் “just jess’ என்ற ப்ளேட்டுடன் போர்ட் தண்டர்பெர்ட் வண்டி ஒன்று விளக்குக் கம்பத்தில் இடித்து நின்றுக் கொண்டிருந்தது. பக்கத்தில் சென்று நிறுத்தினான்…

“நீங்கள் இறங்க வேண்டாம் .. ஒரே நிமிடம் வந்து விடுகிறேன் …”என்று இறங்கி ஒடினாள்.

தேங்கியிருந்த மழைத்தண்ணீரில் அவள் இறங்கி ஓடியது ‘தளக்.தளக்’ எனச் சத்தமெழுப்பியது.. தனது காருக்குள் நுழைந்து எதையோ எடுத்து, காரைச் சாவி நுழைத்துப் பூட்டி விட்டு, எல்லா கதவுகளும் பூட்டியிருக்கின்றதா எனச் சரிபார்த்து விட்டு மீண்டும் அதே ஒலியெழுப்பி ஓடி வந்தாள்.. உள்ளே வருவதற்குள் நிறைய நனைந்துவிட்டிருந்தாள்..

“மன்னிக்க வேண்டும் .. உங்க காரை வேறு நான் ஈரப் படுத்துகிறேன் …” என்றாள் இடது கையால் நெற்றி, தலைமுடியைத் துடைத்துக் கொண்டே.

வலது கையில் வைத்திருந்த பூங்கொத்தையும் சிறிய கைப்பையையும் மடி மீது வைத்துக் கொண்டாள்.

காரை நகர்த்தி அவள் காட்டிய திசையில் செல்லத் துவங்கினான்.

“பூங்கொத்து மிகவும் அழகாக இருக்கிறது .. இன்று ஏதாவது விசேட நாளா?”

“என் அம்மாவுக்கு நீல நிறப் பூக்கள் மிகவும் பிடிக்கும்..அவர்களுக்காக வாங்கிச் செல்கிறேன் ..”

“நீ அம்மா பிள்ளையோ.. வந்ததிலிருந்து அம்மா அம்மா என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய் .”

“யாருக்குத் தான் அன்னை மீது ஆசையிருக்காது.. அதுவும் என் நிலையே வேறு … எனக்கு என் அன்னை மீது சற்று கூடுதல் அன்பு .. நான் இல்லாமல் கடந்த ஓராண்டு அவர் ரொம்பவே தனிமைப்பட்டுவிட்டார்..”

“அப்படியானால் நீ வீட்டில் தங்கியிருக்கவில்லையா .”

“இல்லை நான் இங்கிருந்து சற்று தொலைவில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறேன் .. திடிரென்று என் அம்மா என்னை பார்க்கவேண்டுமென அழைக்கவே வீட்டுக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது தான் இந்த மழையும் காற்றும் வந்து .. நான் முட்டாள் மாதிரி காரை ஓட்டிச் சென்று இடித்து விட்டேன் ..”

“..”

“மீண்டும் ஒரு முறை உங்கள் ஃபோனைக் கடன் வாங்கிக் கொள்ள முடியுமா .. நான் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறேன் என்று அம்மாவுக்கு தெரிவித்து விடத்தான்”

ஜானவியின் ஃபோனை மீண்டும் எடுத்துக் கொடுத்தான் வினோத்.

அவள் இரண்டு மூன்று முறை முயற்சி செய்து விட்டு, ஃபோனை நீட்டியபடியே

“எடுக்கவில்லை .. ஒருவேளை தூங்கி விட்டாரோ … ஆனால் நான் போய்ச் சேராமல் தூங்க மாட்டார் ..” என்றாள் நம்பிக்கையுடன்.

“இன்னும் சிறிது நேரம் கழித்து முயன்று பார் . வைத்துக் கொள் …”

“சரி .. இது .. என்ன பொம்மை இது ..” என்றால் ரேடியம் விநாயகரைப் பார்த்து.. நல்லஇருளில் சிறிதாக பச்சை நிற ஒளியைச் சிந்திக் கொண்டிருந்தார் பிள்ளையார்.

“இது ஒரு வகையான இந்துக் கடவுள் .. விநாயக் என்று பெயர் ..”

“ஓ .. அப்படியா .. ” என்று அதை தொடச் சென்றவள் கையை விலக்கிக்கொண்டாள் .. “மிக அழகாக இருக்கிறது ..”

அவள் கையிலிருந்த மலரின் வாசமும், அவள் சூடியிருந்த திரவியமும் கலந்து புதுமையான ஒரு உணர்வை காரில் உண்டு பண்ணிக்கொண்டிருந்தது. அக்டோபர் மாதக் குளிரும், மழையும் ஏற்கனவே சில்லிப்பை ஏற்படுத்தியிருக்க, அவளின் அருகாமை அவனை மேலும் குளிரச் செய்தது ..

“ரொம்பவும் குளிராக இருக்கிறதென்றால் ஹீட்டரைப் போட்டுக்கொள் ” என்றான் அவளைப் பார்த்து ..

“இல்லை பரவாயில்லை .. எனக்கு பழகி போன விஷயம் அது ..”என்று சொல்லி அவனைப் பார்த்து சிரித்தாள் .. அவள் நீலக் கண்மணியில் விநாயகரின் பச்சை வெளிச்சம் தெரிந்தது ..

எதையாவது பேசி தனக்குள் கெட்ட எண்ணங்கள் வளர்வதைத் தடுக்க வேண்டுமே என முயன்று கொண்டிருந்தான் வினோத்.

“ரேடியோ போடட்டுமா .. உனக்குப் பாடல்கள் கேட்கப் பிடிக்குமா ..”

“போன வருடம் வரை நிறைய கேட்டிருக்கிறேன் .. காலேஜ் துவங்கிய பின் அதற்கெல்லாம் நேரமில்லை.”

இரண்டு கைகளையும் ஸ்வெட்டருக்குள் இழுத்துக் கொண்டு முகத்தில் தேய்த்துக்கொண்டாள்.

“பழகிப் போன குளிர் என்று சொன்னாய் .. இப்படி நடுங்குகிறாயே ..”

“இல்லை குளிரினால் இல்லை.. வினாயக்கின் வெளிச்சம் கண்ணைக் கூசுகிறது .. மன்னிக்க வெண்டும் தவறாகச் சொல்லவில்லை .. என் கண்களுக்கு என்னமோ அந்த வெளிச்சம் ஒத்துக் கொள்ளவில்லை ..”

“இதை முன்னரே சொல்லக்கூடாதா? இது வெல்க்ரோ டேப் தான் ” எனச் சொல்லி ‘ப்ரக்’ கென்ற ஒலியுடன் பிள்ளையாரைப் பிய்த்து எடுத்து சி.டி.க்கள் வைப்பதற்கென்று இருந்த பெட்டியில் வைத்து மூடினான் …

“அப்பாடி .. இப்பப் பரவாயில்லையாக இருக்கிறது .. மன்னிக்க வேண்டும் .. நான் உங்கள் நம்பிக்கையை எதுவும் கெடுக்க விரும்பவில்லை .. மதம் மற்றும் மதக் குறியீடுகள் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பம். நான் அதை மதிக்கிறேன் .. நீங்கள் வேண்டுமானால் அதை இங்கேயே வைத்து விடுங்கள் நான் ஸ்வெட்டரால் கண்களை மூடிக் கொள்கிறேன்”

“இல்லை அதொன்றும் பெரிய விஷயமில்லை.. இந்த பொம்மையை வைப்பதால் எனக்கு நம்பிக்கை அதிகமாவதில்லை … எடுப்பதால் குறைவதுமில்லை..”

“நீங்கள் சொன்னது முற்றிலும் சரி .. நீங்கள் சொன்ன விதம் எனக்கு மிகவும் பிடித்தது ..” சொல்லி கொண்டே ஸ்வெட்டரின் முன் பக்கத்தை தளர்த்தி விட்டுக் கொண்டாள் ..

கார் நிதானமாப் போய்க் கொண்டிருந்தது … மழை குறைந்தபாடில்லை .. இருட்டைக் கிழித்துக் கொண்டு மின்னல் தோன்றிய போது அவள் மீது உடலெல்லாம் நீல ஒளி பட்டு…

இல்லை இவள் என்னை நம்பி வந்திருக்கிறாள். கெட்ட எண்ணம் வரக் கூடாது என பாடுபட்டுக்கொண்டிருந்தான்.

வினோத்தின் மனமறியாமல் அவள் தனது மடி மீதிருந்த மலரை முகர்ந்து,

“நல்ல வாசமான மலர்கள் .. உங்களுக்கு மலர்கள் பிடிக்குமா ” என்றாள்.

“பிடிக்கும் ..சில சமயங்களில் ..”

“அதென்ன சில சமயங்களில் ..” திரும்பி அவனைப் பார்த்தாள். வினோத்தால் அவளைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. சரியாக அந்த நேரத்தில் மின்னல் தோன்ற ,,, அந்த நீல நிறக் கண்கள் பள பளத்தன .. அவளின் தங்கக் கூந்தலும், வெண்பட்டு உடலும் நீல ஒளியால் ஜ்வலித்தது .. உடலெங்கும் வெப்பமும், சில்லிப்பும் மாறிமாறிப் பரவுவதை உணர முடிந்தது… ஸ்டியரிங் வீலை அழுந்தப் பற்றிக் கொண்டான்..

“தெரியவில்லை .. சில சமயங்களில் ..”

“பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்டுத் துளைக்கிறேனா .. ஏதாவது பேச வேண்டுமே என்பதற்காகக் கேட்டேன் .. பிடிக்கவில்லையென்றால் பேசவில்லை ..”

“ஐயோ …இல்லை .. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை ..இது வரை எதிர்திசையில் கூட எந்த வண்டியும் வரவில்லை ஆச்சரியமான ஊர் இது ” என்று பேச்சைத் திருப்பினான் …

“ஆம் .. இங்கிருப்பவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் .. அவர்களுடைய தேவை மிகவும் குறைவு .. பகல் நேரங்களில் கூட அதிகம் பேரை பார்க்க முடியாது”

அடுத்த சில நிமிடப் பயணத்தில் இரு மருங்கிலும் இருந்த மரங்கள் குறைந்து, மேகங்களின் அடர்த்தியின்மையால் நிலவொளியும் தரையில் விழத் துவங்கியிருந்தது .. மழையும் தூறலாய் தூறிக் கொண்டிருந்தது.

“நீ இங்கு தான் வளர்ந்தாயா?”

“ஆம் பெரும்பாலும் இங்கு தான் வளர்ந்தேன் .. நடுவில் இரண்டு வருடங்கள் இண்டியானாவில் இருந்தேன் .. பின்பு இங்கேயே வந்து விட்டோம் ..”

திடீரென்று புது விதமான சுகந்த மணம் வீசத் துவங்கியது … முகத்தில் தவழ்ந்த அது இதமான காற்றாய் வருடி விட்டது ..

“இது இந்த இடத்திலுள்ள செடிகளின் வாசம் … பல விதமான பூக்களும் மரங்களும் அடர்ந்த காடுகள் இவை . பகல் நேரத்தில் நான் இந்த காடுகளுக்குப் போயிருக்கிறேன் .. மிகவும் அருமையாக இருக்கும் . இந்த வாசத்தை முகர்ந்து பல மாதங்களாகி விட்டன .. ஒரே ஒரு நிமிடம் இங்கு நிறுத்த முடியுமா? நீங்களும் இந்த வாசத்தை ரசிப்பீர்கள் ..”

அவள் கேட்டு மறுக்கும் நிலையை எப்போதோ கடந்திருந்தான் வினோத் ஓரமாக நிறுத்த வேண்டிய அவசியமின்றி, சாலை நடுவிலேயே நிறுத்தினான்.

ஜன்னல் கண்ணாடியை லேசாக இறக்கி விட்டு ஒரு முறை ஆழமாக வாசனையை முகர்ந்த அவள் .. “அப்பா .. என்ன ஒரு வாசம் .. உங்களுக்குத் தெரிகிறதா ” என்றாள்.

வினோத்துக்கு அவளின் பக்கத்திலிருந்த ஜன்னல் வழியாக நுழைந்த காற்று அவளை ஸ்பரிசித்து வருவதால் தான் அந்த வாசம் என தோன்ற .. “ஆமாம் .. மிக அருமையான வாசம் ..” என்றான்.

“நான் வெளியே ஒரே ஒரு நிமிடம் நிற்கட்டுமா .. நீங்களும் வருகிறீர்களா?”

“இல்லை நான் வரவில்லை .. நீ வேண்டுமானால் நில் ..”

“சரி .. ஒரே ஒரு நிமிடத்துக்குள் வந்து விடுகிறேன் அதற்கு மேல் சத்தியமாக ஆகாது ..” சொல்லிக் கொண்டே தனது ஸ்வெட்டரைக் கழற்றி தனது இருக்கையில் போட்டு விட்டுக் காருக்கு முன் சென்று நின்றாள்.

வினோத்துக்கு ஒன்றுமே புரியவில்லை.. மயக்கத்தின் உச்சியில் இருந்தான் ..

என்ன பெண் இவள் .. அளவெடுத்து செதுக்கியது போன்ற அங்கங்கள் .. குழந்தைத்தனம் மாறாத மனம், பார்க்கும் பார்வையிலே பத்துப் பேரை வீழ்த்தும் பலமிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாத, புரிந்து கொள்ளாத வெகுளியான குணம். அசட்டையாக அணிந்திருந்த உடையும், அலட்சியம் செய்யப்பட்ட பொன்னிறக் கூந்தலும் அவளது அழகை எங்கேயோ தூக்கி வைத்தது. சத்தியமாக இவள் தேவலோகத்தில் இருந்து வந்திருக்க வேண்டும் எனத் தோன்றியது.

நின்ற இடத்திலேயே சுற்றி குழந்தை மாதிரி ஒலி வராமல் கைதட்டி மகிழ்ந்து ஆடிக் கொண்டிருந்தாள். அவளைச் சுற்றிலும் நிலவொளி பட்டு மினுமினுக்க வைத்துக் கொண்டிருந்தது. அதற்குள்ளாகவா ஒரு நிமிடம் முடிந்து விட்டது .. அவள் காரை நோக்கி ஓடி வந்தாள் …

“மிக மிக நன்றி .. எனக்கு உதவி செய்தது மட்டுமல்லாமல் என்னை மகிழ்ச்சி அடைய வைத்ததற்கு நன்றி நன்றி .. ” எனச் சொல்லி சிரித்தாள்.

கார் மீண்டும் பயணிக்கத் தொடங்கியது ..

“என் வீடு அருகில் வந்து விட்டது இன்னுமொரு ஐந்து நிமிட தூரம் தான் ..”

அவ்வளவு சீக்கிரமாகவா?

“இங்க தான் .. இதோ .. இதோ .. இந்தத் தெருவில் போனால் தான் நீங்கள் போக வேண்டிய ஹோட்டல் வரும் ” என்று அவனுக்கு இடப்பக்கத்தைச் சுட்டிக் காட்டினாள். ஒரு அங்குல தூரத்தில் அவனது நாசிக்கருகே அவளது கரம் நீண்டிருந்தது… இவள் நீரில் தான் குளிப்பாளா அல்லது முழுதும் வாசனை திரவிங்களில் குளிப்பாளா எனுமளவுக்கு வாசம் … கிறங்கிப் போனான் ..

“இதோ வருகிற சந்திப்பில் வலது பக்கம் திரும்ப வேண்டும் .. வீட்டினருகே வந்து விட்டோம் ..”

இன்னும் சில சந்துகளில் திரும்பிய பின், “அதோ விளக்கு எரிகிறதே அது தான் என் வீடு .. என் அம்மா இன்னும் தூங்காமல் இருக்கிறார் போலும்..” என அவள் சுட்டிக்காட்டிய வீட்டின் முன் நிறுத்தினான். காரை விட்டு இறங்கி தனது ஸ்வட்டரைப் பக்கத்தில் இருந்த மெயில் பாக்ஸின் மீது வைத்து விட்டு காரிலிருந்த மலர்களை மிக ஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டாள்.

“ரொம்ப நல்லது ஜெஸ் .. என்னால் உனக்கு உதவு முடிந்தது குறித்து மகிழ்ச்சி ..”

“சொன்னால் கேளுங்கள் என் வீட்டில் தங்கி விடுங்கள் .. ” காலையில் எழுந்து போகலாம் ..”

“இல்லை ஜெஸ் .. உனது வார்த்தைகளுக்கு நன்றி .. மீண்டும் எப்போதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் நாம் சந்திப்போம் ..”

“மிக மிக நன்றி .. நான் உங்கள் பேரை கூடத் தெரிந்து கொள்ளவில்லை .. என்ன மடச்சி நான் …”

“இல்லை அது உன் தவறில்லை .. நான் சொல்லியிருக்க வெண்டும்.. வினோத்.. ” அவள் சத்தியமாக எந்த தவறும் செய்யக் கூடியவள் அல்ல என்ற முடிவுக்கே வந்து விட்டிருந்தான்.

“வினோத்.. மிக்க நன்றி வினோத் .” என்று சொல்லிக் கையை நீட்டினாள்.

வினோத் கை குலுக்கிய அந்த நொடி உடலெங்கும் பரவசம் பரவ பிறப்பின் பயனை உணர்ந்தான்.

மேலும் அங்கிருந்தால் நல்லதில்லை எனத் தோன்ற, கையை உதறிக் கொண்டு வண்டியில் வந்தமர்ந்தான். காரைத் திருப்பி வந்த திசையில் செலுத்தினான். கண்ணாடியில் பின்புறம் அவள் பூக்களை வைத்துக் கொண்டு இவனது வண்டி செல்லும் வழியைப் பார்த்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. தூரம் செல்லச் செல்ல இருளில் எதுவும் தெரியாமல் போனது.

அவள் காட்டிய வழியில் சென்ற போது அவள் சொன்னது போலவே இரண்டு மூன்று மைல்களில் ஹோட்டல் ஒன்று தெரிந்தது. அங்கு தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி அறை எடுத்துத் தங்கினான்.

படுத்ததும் தூங்கிப் போனவன் காலையில் எட்டரை மணிக்குத்தான் எழுந்தான். ஃபோனை எடுத்துப் பார்த்த போது ஜானவியிடம் தகவல் வந்திருப்பதாகக் காட்டியது. என்ன தகவல் என்று திறந்து பார்த்த போது ‘தேங்க்ஸ்’ என்று மட்டும் இருந்தது. ஜானவி ஏன்?.. சடாரென்று ஞாபகம் வந்தது ..அடடா ஜெஸ்ஸைகாவிடம் ஃபோனைக் கொடுத்து விட்டு வாங்காமல் விட்டு விட்டோமே என்று தோன்றியது. எப்படியாக இருந்தாலும் நாம் வந்த வழியே தான் திரும்ப போக வேண்டும், அப்போது வாங்கிக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான். மீண்டும் ஒரு முறை அந்த அழகு முகத்தைக் காணப் போகிறோம் என்ற எண்ணமே கடகடவெனக் குளித்துக் கிளம்ப உந்துதலாக அமைந்தது.

திரும்பக் காரில் ஏறி உட்கார்ந்த போது, நமக்கு அங்கே போக வழி தெரியுமா என்ற கேள்வி எழுந்தது. பார்த்துக் கொள்ளலாம், அப்படி எதாவது பிரச்சனை என்றால் அவளை அழைத்து கேட்டுக் கொள்ளலாம் என்று மனதில் நினைத்து கிளம்பினான். அவன் சென்று கொண்டிருந்த சாலையிலிருந்து இடது பக்கம் திரும்ப வேண்டுமென்பது மட்டும் ஞாபகம் இருந்தது. ஆனால் தூரம் போகப் போக வழி தவறி விட்டது போலத் தோன்றியது. சரி ஜெஸ்ஸை கூப்பிடலாம் என்று ஜானவியின் போனில் அழைத்தான். நேரடியாக வாய்ஸ் மெயிலுக்கு சென்றது. ஒரு வேளை ஃபோனில் பேட்டரி தீர்ந்திருக்குமோ?

அங்கும் இங்கும் அரைமணி நேரம் சுற்றிய பிறகு ஜெஸ் வழியில் இறங்கி வாசத்தை அனுபவித்த இடத்துக்கு வந்துவிட்டது போலத் தெரிந்தது. இனி கண்டு பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை தோன்ற அடுத்த இருபது நிமிடங்களில் அவளது வீட்டை அடைந்து விட்டான். இரவில் பார்த்ததை விட இப்போது கொஞ்சம் தெளிவாக இருந்தது. அவர்கள் வீட்டின் முன்பு வேறு கார் ஒன்று நின்றிருந்தது. ஒருவேளை இது தான் ஜெஸ்ஸின் அப்பாவுடைய காரோ, நினைத்தவாறு இறங்கினான். மழையின் ஈரம் இன்னும் தெருவை நசநசக்க வைத்தது. பக்கவாட்டில் திரும்பி இருந்த கராஜ் கதவு திறந்திருக்க அவளின் கார் நின்றிருந்தது. அட அதற்குள் வண்டியை சரி செய்து கொண்டு வந்து விட்டாளோ?

காலிங்பெல்லை அழுத்தி சில நிமிடங்களுக்கு பிறகு, அறுபது வயதைக் கடந்தவர் ஒருவர் வந்து கதவைத் திறந்தார்.

“யெஸ்..”

“வணக்கம். நான் வினோத். ஜெஸ்ஸியுடைய நண்பன்.”

“ஓ அப்படியா, சொல்லுங்க.”

“நீங்க?..”

“நான் ஜெஃப்.. ஜெஃப் ஹெமிங்”

ஹெமிங் என்ற பேரை எங்கோ கேட்டது போல் தோன்ற.. ஓ அந்த கேஸ் ஸ்டேஷன்..

”ஓ அப்ப ரான் ஹெமிங் கேஸ் ஸ்டேஷன்?”

“அதெப்படி உங்களுக்குத் தெரியும்?”

“இல்லை நான் நேற்றிரவு அங்கே தான் கேஸ் போட்டேன். அதான் ஞாபகம் இருந்தது.”

“என்ன? நேத்து கேஸ் போட்டீங்களா?”

“ஆமாம் .. அங்க தான் ஜெஸ்ஸைப் பார்த்தேன்.”

”என்னது?”

“ஆமாம் … வேண்டுமானால் ஜெஸ்ஸைக் கேளுங்கள்.. அவளுடைய காரை அங்கிருந்து தானே கொண்டு வந்தீர்கள்?”

“நீங்கள் எங்கிருந்து வர்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“நான் .. எனக்கு மினியாபொலிஸ்.. சிகாகோவுக்கு வந்துட்டு திரும்பிக்கிட்டு இருக்கும் போது கேஸ் போட வேண்டி தேடிக்கிட்டிருந்தேன் .. ரான்ஹெமிங் கேஸ் ஸ்டெஷனில் கேஸ் நிரப்பிக் கொண்டிருக்கும் போது தான் ஜெஸ்ஸை பார்த்தேன்.”

“ஒரு நிமிடம் உள்ளே வாருங்கள்..” என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றார்.

”ஜெஸ் வீட்டில் இல்லையா?”

“உட்காருங்கள்..” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.

சுற்றும் முற்றும் பார்த்தான் வினோத் … குட்டி ஜெஸ்ஸின் போட்டோ ஒன்று மூலையிலிருந்த மேசையில் இருந்தது.

உள்ளே இருந்து வந்த ஜெஃப் கையிலிருந்த செய்தித்தாளை வினோத்திடம் நீட்டினார்.

”படித்துப் பார்..”

பழைய செய்தித்தாளில் சிகப்பு மார்க்கரால் கட்டம் போடப்பட்டிருந்தது .. ஜெஸ்ஸின் புகைப்படம் .. கார் விபத்தில் சிக்கி இறந்ததாக செய்தி வந்திருந்தது. படத்தில் “just jess” காரும் இருந்தது.. அதிர்ச்சியுடன் நிமிர்ந்து ஜெஃபை பார்த்தான் வினோத்.

”ஜெஸ் இறந்து இரண்டு வருடங்கள் ஆகப் போகிறது. ரான் ஹெமிங் கேஸ் ஸ்டேஷன் எங்களுடையது தான் . இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள் இரவு அங்கிருந்து கிளம்பி வரும் போது ஒரு ட்ரக் விபத்தில் அங்கேயே இறந்து விட்டாள். நாங்கள் கேஸ் ஸ்டேஷனை மூடிப் பல மாதங்களாகிறது ..”

“என்ன சொல்கிறீர்கள்? நேற்று இரவு அவளை உங்கள் வீட்டின் முன் இறக்கி விட்டேன்.”

“நேற்றிரவா ? எத்தனை மணிக்கு?”

“கிட்டத்தட்ட இரண்டேகால் இருக்கும்.”

”…”

“தன் அம்மா அவளுக்காகக் காத்திருப்பார்கள் எனச் சொல்லிக் கொண்டிருந்தாள்..”

“..”

“ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்..”

“மிஷெல் .. என் மனைவி, ஜெஸ்ஸின் அம்மா நேற்று இரண்டரை மணிக்கு இறந்து விட்டார். இன்று காலை தான் அவளது உடலை மார்ச்சுவரிக்கு அனுப்பி வைத்தோம். வரும் புதனன்று இறுதிச் சடங்குகள் நடக்க இருக்கின்றன .. இங்கே வாருங்கள் .. இதோ பாருங்கள் இது தான் என் மனைவியின் படம் ..” என்று உள்ளே அழைத்துச் சென்று காட்டினார்.

அங்கே அவரது மனைவியின் போட்டோ.. பக்கத்தில் மெழுகுவர்த்தி எரிந்தது.. அவர் பயன்படுத்திய நாற்காலி போலிருக்கிறது .. அதன் மேல் பல விதமான மலர்க்கொத்துகள். சட்டெனக் கண்ணில் பட்டது .. ஜெஸ் வைத்திருந்த நீல நிறப் பூக்கள்.

குழம்பிப் போனான் வினோத். எதுவும் பேசாமல் வெளியே வந்தான் .. தனது காரில் ஏறச் சென்ற போது ஜெஸ்ஸின் நறுமண வாசம் முகத்தில் உரசிச் சென்றது. பக்கத்து இருக்கையில் செல்ஃபோன் இருந்தது. அவசர அவசரமாக ஃபோனை எடுத்துப் பார்த்தான். “sorry and thanks” என்ற தகவல். பின்னாடி திரும்பிப் பார்த்தான். பளபளவென மின்னும் போர்டு தண்டர்பேர்ட் நின்று கொண்டிருந்தது, .. ‘just jess’ என்ற நம்பர் ப்ளேட்டுடன்.

– மர்மயோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad