லால் பகதூர் சாஸ்திரி
பாரத நாட்டின் பெருந்தலைவர்கள் பலரை அநேகம் பேர் கருத்தில் கொள்வதில்லை. பலரது தியாகங்களும் உயர்ந்த கொள்கைகளும் அறியப்படாமலே போய்விட்டன. ஆங்கிலத்தில் ‘UNSUNG HERO’ என்பதைப் போன்று இவர்கள் அதிகம் புகழ் பெறாத, கண்டுக்கொள்ளப்படாத தலைவர்கள். அவர்களில் ஒருவர்தான் மறைந்த பாரதப் பிரதமர் திரு லால் பகதூர் சாஸ்திரி. காந்தியைக் கொலை செய்த கோட்சேவை அறிந்தவர்களை விட காந்தியக் கொள்கைகளை இறுதி மூச்சு வரை வேதமாக கடைப்பிடித்த சாஸ்திரியை அறிந்தவர்கள் மிகக் குறைவு. அவரின் படாடோபமற்ற எளிய தோற்றமும் குணமுமே இதற்கு காரணமாகிப் போனது.
அக்டோபர் 2ம் தேதி காந்தி சிலைக்கு மாலையிட்டுப் படம் எடுத்துக் கொள்ளும் தலைவர்கள் கூட சாஸ்திரி பிறந்ததும் அதே அக்டோபர் 2ம் தேதி தான் என அறிவார்களா என்பது சந்தேகமே.
பல மைல் தூரம் நடந்தும், கங்கை ஆற்றை நீந்திக் கடந்தும் பள்ளிக்கு சென்று படிப்பை முடித்தார்.
தொடக்கத்தில் பால கங்காதர திலகரைப் போற்றி அவர் வழி நடந்தவர் 1921ல் ஒத்துழையாமைப் போராட்டங்களுக்குப் பின்னர் காந்திஜியை பின்பற்றத் தொடங்கினார். சாதி முறையை எதிர்த்த இவர், தன் பெயரில் இருந்த ஸ்ரீவஸ்தவா என்ற பெயரை நீக்கினார். 1926ல் காசி வித்யாபீடத்தில் மெய்ஞானப் படிப்பை முடித்த பிறகு சாஸ்திரி பட்டம் பெற்றார். இதுவே பெயருடன் இணைந்து விட லால் பகதூர் சாஸ்திரியானார்.
1921ம் ஆண்டு மணமுடித்த போது, இவரது ஊரில் அந்தக் காலங்களில் பெரும் வரதட்சணை வாங்கும் பழக்கம் இருந்த போது, இவர் கதர்த் துணியையும், இராட்டையையும் மட்டுமே வரதட்சணையாக வாங்கிக் கொண்டார்.
உப்புச் சத்தியாக்கிரகப் போரில் கலந்து கொண்டு சிறையிலிருந்த போது அவரது மகள் உடல் நலம் குன்றி இருந்தமையால் அவருக்கு இருபது நாட்கள் விடுப்புக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். விடுப்புக் காலம் முடியும் முன்னர், மகள் இறந்து விடவே காரியங்களை முடித்து மறுநாள் (விடுப்புக் காலம் முடியும் முன்னரே) சிறைக்குத் திரும்பினார்.
அதே போன்று மற்றொரு சமயம் மகனுக்கு உடல் நலமின்மைக் காரணமாக ஒரு வார விடுப்பில் வந்தவர், விடுப்பு முடியும் தருவாயிலும் மகனுக்கு சரியாகாதபோதும் சிறைக்குத் திரும்பினார்.
கட்சிப் பொறுப்பிலிருந்த போது இவரது குடும்பச் செலவுக்காக கட்சியிலிருந்து மாதம் நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டு வந்தது. தனது மனைவி இதில் ஐந்து ரூபாய் மிச்சம் பிடிக்கிறார் என்பதை அறிந்த சாஸ்திரி அடுத்த மாதத்திலிருந்து தனது சம்பளத்தை ரூ. 35ஆகக் குறைத்துக் கொண்டார்.
1936ல், லால்பகதூர் சாஸ்திரி, அலகாபாத் நகரசபையில் உறுப்பினராக இருந்தார். அப்போது, நகரசபை, அங்குள்ள நிலங்களை வாங்கி, காலி மனைகளாக மக்களுக்கு விற்றது.சாஸ்திரியின் நண்பர், அவருக்குத் தெரியாமல், தனக்கும், சாஸ்திரிக்கும் காலி மனைகளை வாங்கினார்.
இந்திய விடுதலைக்காகப் பல போராட்டங்களில் கலந்துக் கொண்டு கைதான இவர் தன் வாழ்நாளில் 9 வருடங்களைச் சிறையில் கழித்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு உத்திரப் பிரதேச மாநிலத்தின் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரது காலத்தில் தான் இந்தியாவில் முதன் முறையாக பெண் நடத்துனர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். 1951ஆம் ஆண்டு நேருவின் அமைச்சரவையில் ரயில்வே மற்றும் போக்குவரத்து மந்திரியாக நியமனமானார்.
சாஸ்திரி ரயில்வே அமைச்சராக இருந்தபோது, மதுரையில் நடக்கவிருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார். மதுரையில் அவர் தங்குவதற்கு, ரயில் நிலையத்திலேயே உள்ள விடுதியில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தை விட சீக்கிரமே ரயில் மதுரையில் சேர்ந்ததால் அவரை வரவேற்க ஒருவரும் வந்திருக்கவில்லை. ரயிலைவிட்டு இறங்கிய சாஸ்திரி, விசாரித்துக்கொண்டு, தனக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறைக்கு சென்ற போது அங்கே நின்றிருந்த காவலாளி அமைச்சருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் பிறரை அனுமதிக்க முடியாது என்று கூறி அனுமதி மறுத்து விட்டார். தான்தான் அந்த அமைச்சர் என்று சாஸ்திரி எடுத்துச் சொல்லியும், காவலாளி அசையவில்லை. இதற்குள், விவரம் அறிந்துகொண்டு, நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் அங்கு வந்து சாஸ்திரியை அழைத்துச் சென்றனர். இவ்வளவு குழப்பத்துக்கு இடையிலும் சாஸ்திரி அந்தக் காவலாளியின் கடமை உணர்வை பாராட்டிவிட்டுச் சென்றார்.
சில மாதங்களுக்குப் பிறகு நிகழ்ந்த அரியலூர் ரயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகினார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு உள்துறை அமைச்சரான சாஸ்திரி, இக்காலகட்டத்தில் மலிந்திருந்த ஊழலுக்கெதிரான பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1964ல் நேருவின் மரணத்துக்கு பின் காமராசரால் பிரதமர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
பிரதமராக பொறுப்பேற்றபின் இந்தியாவின் விவசாயப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இயன்றவர்கள், வார நாட்களில் ஒரு வேளை உணவை விலக்கி உண்ணாவிரதம் இருந்தால் நாட்டில் பல கோடி ஏழைகள் சாப்பிட முடியும் என்று அறிவுறுத்தினார்.
1965ம் ஆண்டு பாகிஸ்தானின் காஷ்மீர் ஆக்கிரமிப்பை எதிர்த்து பல முறை எச்சரித்தும் எடுபடாததால் அந்நாட்டுடன் போர் தொடுத்து ஆக்கிரமிப்பைத் தடுத்தார். இப்போரின் போது, உணவுத் தட்டுப்பாட்டைப் போக்க, இவர் எழுப்பிய ‘ஜெய் ஜவான் ஜெய் கிசான்’ முழக்கம் பெரும் எழுச்சிப் பெற்றது. இந்தியாவில் ஏற்பட்ட ‘பசுமை புரட்சி’யின் விளைவால் பல கிராமங்கள் அழிவிலிருந்து மீண்டு வந்தன. அதே போன்று இவர் ‘வெண்மைப் புரட்சி’ எனும் பால் பண்ணைப் பொருட்கள் உற்பத்தியைப் பெருக்கவும் வழிவகுத்தார். 1965 செப்டம்பர் மாதம் ரஷ்யாவின் தலையீட்டால் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
1966ல் ரஷ்ய அதிபர் அலெக்ஸ் கோசிசின் அழைப்பை ஏற்று உலக அளவில் மிகப் புகழ் பெற்ற தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட தாஷ்கண்ட் சென்றார். பல நாட்கள் பேச்சு வார்த்தைக்குப் பின் பாகிஸ்தான் சார்பில் அதிபர் முகமது அயுப்கானும், இந்தியாவின் சார்பின் லால் பகதூர் சாஸ்திரியும் ரஷ்ய அதிபரின் முன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இரவு உணவை முடித்து தன் அறைக்கு வந்த சாஸ்திரி சில மணிநேரங்களுக்கு பிறகு இறந்தார். இவரது மரணத்தில் இன்றளவும் விடை காணாப் புதிர்கள் நிறைந்துள்ளன. ரஷ்ய அதிபர் கோசிசினும், பாகிஸ்தான் அதிபர் முகமது அயுப்கானுமே இவரது சவப்பெட்டியை சுமந்து வந்து அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தியது அனைவரையும் கலங்க வைத்தது. அமெரிக்க அதிபர் ஜான்சன் இவரது மறைவிற்கு ‘உருவத்தில் சிறிய சாஸ்திரி இறந்த பின் உலகமே சிறுத்து விட்டது’ என்ற செய்தியுடன் தனது துணை அதிபரை இந்தியாவுக்கு அனுப்பி அஞ்சலி செலுத்தினார்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த, மிகக் குள்ளமான லால்பகதூர் சாஸ்திரி, எத்தனையோ உயர் பதவிகள் வகித்த போதிலும் அவருக்குச் சொந்தமாக ஒரு வீடு கூடக் கிடையாது. கடைசி காலத்தில் தவணை முறையில் கார் ஒன்று வாங்கி அந்தக் கடனைத் தான் தன் வாரிசுகளுக்கு விட்டுச் சென்றார். ஆனால் தன்னுடைய நேர்மையான செயல்களாலும் நடத்தையாலும் பாரத ரத்தினாவாக ஒளிர்கின்றார்.
அவரின் இறுதி ஊர்வலத்தின் போது கூட்டத்தை ஒழுங்கு செய்து கொண்டிருந்த ஒரு எளிய மனிதர் சொன்னது, “எங்களை மாதிரி ஏழை எளியவர்களின் குரலைக் காது கொடுத்து கேட்டுக்கொண்டிருந்த கடைசித் தலைவனும் மறைந்து விட்டார்!”.
சாஸ்திரி போன்ற உன்னத ஆத்மாக்கள் மிக மிக அரிதாகத்தான் தோன்றுகிறார்கள்!
– ரவிக்குமார்.
தங்கத்தலைவன் பற்றிய தகவல் அருமை. இன்றைய சூழலில் இப்படி ஒரு தலைவரை காணமுடியாத கோலம்!