கண்ணிவெடிப் பூமியிலே
ஆள்காட்டி ஆள்காட்டியே அன்புள்ள ஆள்காட்டியே
தூது செல்ல மாட்டாயோ சேதி சொல்ல மாட்டாயோ
அனுபல்லவி
அன்னை மண்ணே அன்னை மண்ணே உன்னை இழந்து போகின்றேன் -என்
ஆசையுள்ள காதலியாள் எங்கேயென்று தேடுகின்றேன்…
வெட்டைவெளி தாண்டி நாங்கள் நடைப்பயணம் போகின்றோம்
வாழவழி தேடி நாங்கள் வழிப்பயணம் போகும் நேரம் – என்
பாசமுள்ள காதலியைக் கைப்பிடிக்க முடியலையே…
(ஆள்காட்டி ஆள்காட்டியே…)
சரணம்
கிட்டிப் புள்ளு அடித்து நாங்கள் கெந்தித் தொட்டு ஆடி அங்கே
தொட்டுத் தொட்டுப் பேசி முன்னே காதல் செய்து மகிழ்ந்திருந்தோம்
சுற்றிவர முள்வேலி அதன் நடுவே சிறு குடிசை
சிறு குடிசை தாண்டி நானும் தேடுகிறேன் காதலியை
கண்தொலைவில் அவளுருவம் அசைவதெல்லாம் தெரிந்தாலும்
கைப்பிடிக்க முடியலையே கண்ணிவெடிப் பூமியிலே…
(ஆள்காட்டி ஆள்காட்டியே…)
சரணம்
மிதிவெடியைப் பொறி வெடியைத் தூது விட முடியலையே
சீறிவந்து உயிர் குடிக்கும் ஆட்லறியாய் பலர் கூட்டம்
பல் குழல் பீரங்கிபோல் படபடென்று பேசுமவள்
பாவியாகி நிற்கின்றாள் பார்த்த மனம் துடிக்குதையா
பாவியாகி நிற்கின்றாள் பார்த்த மனம் துடிக்குதையா
(ஆள்காட்டி ஆள்காட்டியே…)
-தியா –