திருப்புறம்பியம்
காவிரியின் கிளை நதியான மணியாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையே அமையப்பெற்ற வளமையான ஊர் திருப்புறம்பியம். சோழர் வரலாற்றை மாற்றியமைத்த பெருமை இவ்வூருக்கு உண்டு. பல்லவரும் பாண்டியரும் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது.விசயாலயச் சோழர் தஞ்சையை முத்தரையரிடம் இருந்து கைப்பற்றித் தலைநகராக ஆக்கி பல்லவர்களுடன் நட்புடன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலம்.ஆதித்தச் சோழர் இளவரசுப் பட்டம்மேற்று சோழச் சிற்றரசை சோழப் பேரரசாக ஆக்க கனவு கண்டுகொண்டிருந்த காலம்.
பாண்டிய நாட்டின் வட எல்லையாகவும் பல்லவ நாட்டின் தென் எல்லையாகவும் சோழநாடு இருந்தது. சோழநாட்டின் பெறும் பகுதிகள் பாண்டிய அரசாலும் பல்லவ அரசாலும் கவரப்பட்டிருந்தது. பாண்டியரும் பல்லவரும் தங்கள் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தப் போராடிக் கொண்டிருந்தனர். பாண்டியர்கள் வலிந்த தாக்குதலை ஒரு சேர எல்லா இடங்களிலும் நடத்திக் கொண்டிருந்தனர்.
பல்லவ மன்னன் நிருபதுங்கன் சார்பில் அபராஜித பல்லவன் போருக்கு திருப்புறம்பியத்தில் தலைமை தாங்கினார். கங்கமன்னர் பிருதிவீபதி அவர்களுக்கு உதவியாக படையுடன் தானும் கலந்துக் கொண்டார். விஜயாலயச் சோழர் சார்பில் ஆதித்த சோழரும் அவர் படைகளும் பல்லவருக்குஉதவியாக வந்தது. இவர்களுக்கு எதிராக பாண்டிய படைகளுக்கு இரண்டாம் வரகுண பாண்டியர் தலைமையேற்றார். தமிழர் வரலாற்றில் நடந்த பெறும் போர்களில் திருப்புறம்பியம் போர் முக்கியமான போர்.
இப்போரில் பல்லவ படைகள் கங்கமன்னர் பிருதிவீபதியும் விசயாலயா சோழரும் காட்டிய பெரு வீரத்தால் வென்றன. கங்கமன்னர் பிருதிவீபதி போர்க்களத்தில் மடிந்தார். அவருக்கு இவ்வூரில் நடுக் கல் நட்டு பள்ளிப்படை கோவில் கட்டப்பட்டது வரலாற்றின் வாயிலாகவும், பொன்னியின் செல்வன் எனும் காவியத்தின் வாயிலாகவும் அறியலாம். இப்போருக்குப் பின் பல்லவ மற்றும் பாண்டிய படைகள் வலு சற்றே இழந்தன. சோழர்களின் கை சற்றே ஓங்கியது. முதலில் வட பாண்டி நாட்டையும் பின்பு பல்லவ சாம்ராஜ்யத்தையும் ஆதித்த சோழன் கைப்பற்றி சோழப் பேரரசிற்கு வித்திட்டார்.
பொன்னியின் செல்வன் படித்த பொழுது ஏற்பட்ட ஆவலின் காரணமாக 2005ம் ஆண்டு நானும்,அண்ணன் ஆண்டிப்பட்டி சிவசங்கர் வாண்டையார் அவர்களும் இரு சக்கர வாகனத்தில் தஞ்சையிலிருந்து திருவையாறு, சுவாமிமலை வழியாக காவிரியின் வட கறையில் பொன்னிநதியின் வளைவுகளையும் அவளின் செழுமையையும் ரசித்துக்கொண்டே திருப்புறம்பியம் அடைந்த பொழுது பள்ளிப்படைக் கோவிலை காணப்போகின்றோம் என்ற ஆனந்தம் மனதில் கூத்தாடியது.
எங்களுக்கான சோதனை அங்குத்தான் ஆரம்பம் ஆகியது. ஊருக்குள் நுழையும் போதே நெல் காயவைத்துக்கொண்டிருந்த குடியானவர்களிடம் இங்கு பிருதிவீபதி மன்னனின் பள்ளிப்படைக் கோவில் எங்க இருக்கிறது என்று விசாரிக்கும் போது எவருக்கும் அப்படி ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை. அவர்களில் ஒருவர் , ”நீங்க சட்ட நாதர் கோவில்ல விசாரிச்சா தெரிஞ்சிக்கலானு” சொல்லி அதற்கு வழியும் சொன்னார்கள். நாங்களும் அங்கேருந்து கிளம்பிக் கோவிலுக்குப் போற வழியில நின்றிருந்த நாலு இளவட்டங்களிடம் கேட்டோம். அவர்களும் பள்ளிப்படைக் கோவில் பற்றி அறிந்திருக்கவில்லை. அதில் ஒருவர், ”இப்ப நிறையப்பேர் புதையல் தேடி ஊருக்குள்ள வாராங்க. நீங்களும் அதுக்குத்தான் வந்திங்களா” என்று கேட்டார். ”இல்லைங்க” னு சொல்லிவிட்டு சட்டநாதர் கோவிலுக்குப் போவதற்குள் நடை சாத்தி விட்டார்கள். இன்னைக்கு அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தை பார்ப்போமா என்ற சந்தேகம் எங்களுக்கு வந்துவிட்டது.
மேல் சட்டை அணியாமல் ஒற்றைத் துண்டுடன் அந்தப் பக்கமாக நடந்து வந்துக்கொண்டிருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபரிடம் கேட்டபொழுது, நீங்க பள்ளிப்படை கோவில்னுக் கேட்டிங்கனா யாருக்கும் தெரியாது. ஐயனார் கோவில்னு கேட்டிங்கனாதான் தெரியும்னு சொல்லி அதற்கான வழியையும் சொன்னார். அவர் சொன்ன வழியைப் பின்பற்றி, இரு சக்கர வாகனத்தில் வயல் வரப்பில் வண்டியை ஓட்டிக்கொண்டு வயல்களால் சூழப்பட்டிருந்த ஐயனார் கோவிலை சென்றடைந்தோம்.
ஓங்கி உயர்ந்த மரங்களால் சூழப்பட்டிருந்த அந்த ஐயனார் கோவிலுக்கு சற்றுத் தொலைவில் எங்கள் வாகனத்தை விட்டுவிட்டு உள்நுழைந்த எங்களுக்கு ஒரு சின்ன இன்ப அதிர்ச்சிக் காத்திருந்தது. அங்கு பிரித்திவி மன்னன் பெயரால் பிரித்திவி ஐயனார் சன்னதியும், விஜயாலயச்சோழ மன்னன் பெயரால் விஜயாலய ஐயனார் சன்னதியும் அருகருகே அமைக்கப்பட்டிருந்தன.
இரண்டு ஐயனாரும் கம்பீரமாக அமர்ந்திருந்தது காட்சி அந்த வீரப்புருஷர்களை நேரில் கண்ட மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவிலுக்கு வெளியே கருங்கற்களால் ஆன நடு கற்கள் நடப்பட்டிருந்தன. அந்த ஐயனார் கோவில் சுவற்றில் பிற்காலச் சோழர்கள் பரம்பரை முழுதாக எழுதப்பட்டிருந்தது. இருட்ட ஆரம்பித்துவிட்டதால் நாங்கள் அங்கிருந்து கிளம்பிப் போர் நடந்ததாகக் கூறப்பட்ட இடத்திற்குச் சென்றோம். அங்கும் இரண்டு மூன்று சிறு தெய்வ வழிபாடுகள் நடக்கின்றது. அதுபற்றி விசாரித்த பொழுது அப்போரில் இறந்த தளபதிமார்கள் நினைவாக நடப்பதாக தெரிகின்றது. நன்றாக இருட்டிவிட்டதால் இரு பெரும் வீர மன்னர்களை சந்தித்த மன நிறைவுடன் பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனும், நந்தினியும், இரவிதாசனும் உலவித் திரிந்த காட்டைவிட்டு ஊர் திரும்பினோம்.
– சத்யா-