ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்…..
”இவர் எப்பவும் இப்படித்தான், சொல் பேச்சுக் கேக்கறதே இல்லை. தன் பொண்டாட்டி, குழந்தை குடும்பம்னு ஏதாவது நெனப்பு இருந்தாத்தானே.. பரோபகாரம், மத்தவாளுக்குச் சேவை செய்ரோம் பேர்வழின்னு, சொந்தக் குடும்பத்தைப் பத்திக் கவலையே இல்ல”….
சரஸ்வதி மாமியின் புலம்பல் தொடர, பொழுது புலர்ந்தது என்ற எண்ணத்துடன் பதில் எதுவும் கூறாமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று கிளம்பத் தயாரானார் சாம்பு மாமா. தனது மஞ்சள் பையில், தர்பை, பூணூல் எனத் தர்ப்பணத்திற்குத் தேவையான பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டார். அக்கிரகாரத்திற்கு அடுத்த தெருவிலுள்ள அலமேலு மாமியின் வீட்டு தவசத்திற்குச் செல்ல ஆயத்தமானார் சாம்பு மாமா. அலமேலு மாமியின் கணவர் இறந்து முதல் வருட சிரார்த்தம் – சிரத்தையுடன் செய்யப்பட வேண்டிய காரணத்தால் சிரார்த்தம் என்ற பெயர் வந்தது. சிரத்தையுடன் செய்வதற்கு சாம்பு மாமாவை விட்டால் இன்னொருவர் கிடைப்பாராவென்பது சந்தேகமே. அலமேலு மாமிக்குக் குழந்தைகள் இல்லை, அப்பள வியாபாரம் செய்து வயிற்றைக் கழுவிக் கொண்டிருந்தாள். அந்தக் காரணங்களால் பைசாக் காசு வாங்கிக் கொள்ளாமல் சிரார்த்தம் செய்வதற்கு சாம்பு மாமா ரெடி – இதுதான் சரஸ்வதி மாமியின் புலம்பலுக்கு பெரும் காரணம். இந்த மாதத்தில் காசு வாங்கிக் கொள்ளாமல் பிராமணார்த்தம் செய்து வைப்பது இது மூன்றாம் முறை.
“என்னத்தக் கொண்டு வந்தோம், என்னத்தக் கொண்டு போப்போறம். இருக்கிற வரைக்கும் மத்தவாளுக்கு நல்லதப் பண்ணுவோமே, ஊரார் பிள்ளையை ஊட்டி வளத்தா, தம்புள்ளை தானே வளருமாம். பெரியவா சொல்லுவா” சகஜமாகப் பேசும் நண்பர்களிடம் மட்டுமே சொல்லிக் கொள்வார் சாம்பு மாமா. அதேபோலத் தன்வாழ்நாள் முழுவதும் பிரதி உபகாரம் எதிர் பார்க்காமலேயே, மனைவியின் புலம்பல்களைச் செவியில் வாங்கிக் கொள்ளாது, அனைவருக்கும் தன்னாலான உதவிகளைச் செய்து கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தார்.
சிரார்த்தம் முடித்து சைக்கிளில் திரும்பும் வழியெல்லாம் இறந்து போன அலமேலு மாமியின் கணவரைக் குறித்த நினைப்புடன் வந்து கொண்டிருந்தார். அதே நினைப்புடன் சைக்கிளை மிதித்த சாம்பு மாமா திருப்பத்தில் விரைவாக வரும் மாருதியைப் பார்க்காமல்…… பூணூலணிந்த பூஞ்சையான உடம்பு ரத்த வெள்ளத்தில் மண் தரையில்…
சுற்றியிருந்தவர்களின் உதவியுடன் அவசர அவசரமாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு நினைவிழந்த சாம்பு மாமா எடுத்துச் செல்லப் படுகிறார். உடனடி முதலுதவிகள் முடிந்தபின், பெரிய அளவு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமெனவும் அதற்குப் பல லட்சங்கள் செலவாகுமெனவும் அழுகையை நிறுத்த இயலாமல் முந்தானையில் வாயை மூடி அழுது கொண்டிருக்கும் சரஸ்வதி மாமியிடம் சொல்லப் படுகிறது. “ஐயோ, அத்தனை பணத்துக்கு நான் எங்க போவேன். ஈஸ்வரா.. இந்த மனுஷன் பண்ணி வைக்கப் போன இடத்துல கொஞ்ச கொஞ்சமாப் பணம் வாங்கிண்டிருந்தாக் கூட இப்ப அவர் உயிரைக் காப்பாத்த உபயோகப் பட்டிருக்குமே. பாவி மனுஷன் எதையும் சேத்து வைக்காமத் தன்னையும் காப்பாத்திக்க முடியாம, குடும்பத்தையும் தவிக்க விட்டுட்டுப் போயிடுவார் போலருக்கே”… அந்த நிலையிலும் புலம்பல் குறையவில்லை.
வராந்தாவில் ரவுண்ட்ஸ் சென்று கொண்டிருக்கும் டீன் டாக்டர் ராமமூர்த்தி சரஸ்வதி மாமியின் அழுகை கேட்டு அருகே வருகிறார். மாமியை உற்றுப் பார்த்து விட்டு அறையினுள்ளே சென்று மயக்கத்தில் படுத்திருக்கும் சாம்பு மாமாவைப் பார்க்கிறார். பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்கிறார். மாமியைப் பார்த்து, “மாமி, மாமாவைப் பத்தி எந்தக் கவலையும் படாதேள். அவரோட வைத்தியச் செலவு எல்லாத்தையும் நானே ஏத்துக்கறேன். என்னோட ஹாஸ்பிடல்தான் இது, ஹையஸ்ட் லெவலாஃப் ட்ரீட்மெண்ட் கொடுத்து மாமாவைக் காப்பாத்த வேண்டியது எம்பொறுப்பு”.. பேசிக் கொண்டே போக, கேட்பது கனவா, நினைவா என மாமி ஆச்சர்யத்தில் மூழ்கியிருக்க டாக்டரே தொடர்கிறார். ”சரியா முப்பத்திரண்டு வருஷத்துக்கு முன்னால, செத்துப்போன எங்கப்பாவோட சவத்தை எடுத்துண்டுபோயி மயானத்துல வச்சு ஈமக்கிரியை பண்றதுக்கு சல்லிக்காசு இல்லாத நிலைமையில முழிச்சுண்டு இருந்தப்ப, எல்லாத்தயும் முன்ன நின்ன பத்துப்பைசா வாங்கிக்காம நடத்தினா மாமா, அவருக்கு கைமாறு செய்றதுக்கு பகவான் இந்த சந்தர்ப்பத்தைக் கொடுத்ததா நான் சந்தோஷப்பட்டுண்டிருக்கேன் மாமி”
ஊரார் பிள்ளையை ஊட்டி வளத்தா… மாமா ஹீனக் குரலில் கூறுவது போலக் கேட்டது மாமியின் செவிகளுக்கு
– வெ. மதுசூதனன்