\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

உறவுகள்

Filed in இலக்கியம், கதை by on February 21, 2013 3 Comments

uravugal

அது ஒரு சனிக்கிழமை. நவம்பர் மாத மினசோட்டாக் காற்று அந்த இளங்காலையைத் தொடர்ந்து குளிரூட்டிக் கொண்டிருந்தது. சற்றுத் தூக்கம் கலைந்தும் கலையாத ஒரு மோன நிலை. அடுக்களையில் மாலினி வெண்பொங்கலுக்குத் தாளித்துக் கொண்டிருந்த வாசனை எழுந்திருக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தது. இருந்தாலும் அந்தச் சனிக்கிழமை காலையை வீணடிக்க மனமின்றி, ரஜாயை நன்றாக இழுத்துப் போர்த்தித் தாளிக்கும் வாசம் மூக்கைத் தாக்காதவாறு திரும்பிப் படுத்தேன்.

 

‘ஏங்க.. எழுந்திருங்க .. ’, மாலினியின் குரல் கேட்டது.

 

‘கொஞ்ச நேரம்மா ..’

 

‘எழுந்திருங்கன்னு சொல்றேனில்ல’

 

‘பரவாயில்லம்மா. எனக்குக் கொஞ்சமா பொங்கலை எடுத்து வெச்சிட்டு.. நீங்கல்லாம் சாப்பிடுங்க… நான் அரை மணி நேரத்தில வந்திடறேன்.’

 

‘அடச்சே… தூக்கத்தில கூடச் சாப்பாடு தானா? எதிர் வீட்டுக்கு நெறய போலீஸ் கார் வந்திருக்குங்க…’

 

‘என்ன சொல்ற’ நம் தூக்கத்துக்கு வேட்டு வைக்க எதாவது கதை விடுகிறாளோ என்ற சந்தேகத்தில் ரஜாயைச் சற்றே விலக்கி அவள் முகத்தைப் பார்த்தேன். அவள் முகத்தில் ஒரு கலவரம் தெரிந்தது. நிஜமாகவே வெளியே ஏதோ நடக்கிறது என ஊர்ஜிதமான பின்னும் எழுந்திருக்க மனமில்லாமல் அலுத்துக் கொண்டே எழுந்தேன். டைனிங் ஏரியாவிலிருந்த ஜன்னல் திரையைச் சிறிதாக விலக்கி எதிர் வீட்டைப் பார்த்தேன். ஒரே ஒரு போலீஸ் கார் நின்று கொண்டிருந்தது. திரும்பி மாலினியைப் பார்த்தேன்.

‘கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இன்னொரு போலீஸ் கார் இருந்துதுங்க’.

‘என்னடி நீ.. அவங்க வீட்டு நாய் ஓடிப் போயிருக்கும்.. அதுக்கு போய் என் தூக்கத்தைக் கலைச்சு எழுப்பி விட்டுட்டியே.’

‘சரி சரி பரவாயில்லை.. அரை மணி நேரம் சீக்கிரம் எழுந்ததினால ஒன்னும் குடி முழுகிப் போகாது. காப்பி போடறேன்.. பல் தேய்ச்சிட்டு வாங்க’.

அப்போது தான் கவனித்தேன். பக்கத்து வீட்டு லிண்டா எதிர் வீட்டிலிருந்து தன் வீடு நோக்கி நடந்து போவதை. மாலினியிடம் லிண்டாவுக்கு போன் பண்ணிக் கேட்கச் சொல்லிவிட்டுப் போனேன். பல் தேய்த்து விட்டு வந்த போது,

’லேரி செத்து போய்ட்டாராம்’ என்றாள் மாலினி.

நாங்கள் இருந்த கல்-டி-சாக்கில் (cul-de-sac) ஏழு வீடுகள். நாங்கள் வீடு வாங்கி இங்கே வந்த போது முதலில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர் லிண்டா. அடுத்து அறிமுகமானவர்கள் லேரியும்(Larry), அவரது மனைவி மேரிலினும் (Marilyn). அவர்கள் இருவருக்குமே வயது எழுபத்தைந்தைத் தாண்டியிருக்கும். லேரி தான் மற்ற வீடுகளை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். அனைவருமே மிக அன்பாக இருந்தனர்.

கோடைக் காலங்களில் அந்தக் கல்-டி-சாக்கே கலகலப்புடன் இருக்கும். அதுவும் இரண்டு வீடு தள்ளி இருந்த ஃபில் (Phil) எப்போது தெர்மாமீட்டரில் முள் ஐம்பதைத் தாண்டும் எனக் காத்திருப்பான். இதற்காகவே வீட்டின் வாசலில் ஒரு மைல் தள்ளி இருந்தாலும் துல்லியமாகத் தெரிகிற மாதிரிச் சூரியனை விட ஒரு சுத்து சின்ன சைஸ் தெர்மாமீட்டர் தொங்கும்.

 

கராஜ் கதவைத் திறந்து வைத்துக் கையில் ஒரு பியர் பாட்டிலுடன், ரேடியோவில் சத்தமாகப் பாட்டைப் போட்டு நான் ரெடி என்கிற மாதிரி அழைப்பைக் கொடுப்பான். மெதுவாகப் பக்கத்து வீட்டு மார்க், ராபர்ட் எல்லோரும் தங்கள் குழந்தைகளை விளையாட வைக்கும் சாக்கில் ‘ஹாய் மேன்’ எனச் சொல்லிக்கொண்டே வெளியே வந்து, உரிமையுடன் ஃபில் வீட்டுக் கராஜிலிருக்கும் ஃபிரிட்ஜில் இருந்து தங்களுக்குப் பிடித்த பியரை எடுத்துக் கொள்ள, ஜமா களை கட்டிவிடும்.

 

நான் எப்போதாவது, அதாவது மாலினி அலுவலகத்திலிருந்து வர நேரமாகும் எனத் தெரியும் சந்தர்ப்பங்களில், அவர்களுடன் கலந்து கொள்வேன். அப்போதெல்லாம் எப்படி இந்தப் ஃபில்லுக்கு அனைவருக்கும் பியர் வாங்கிக் கட்டுபடியாகிறது என்று தோன்றும். பின்னர் தான் தெரிய வந்தது, நம்மூரில் தீபாவளிப் பட்டாசு வாங்க ஜனவரி மாதத்திலிருந்தே  ஃபண்டு கட்டுவது போல, மார்க், ராபர்ட், ஃபில், கெவின், அடுத்த தெரு மைக்கேல் என அனைவரும் ஜமா உறுப்பினராகி, அட்டை பெற்று, மனைவிகளுக்குத் தெரியாமல் மாதச் சந்தா செலுத்தி வருவது.

நானும் மாலினிக்கு தெரியாமல் கெளரவ உறுப்பினர் ஆகி விட்டேன். ஊர் சுற்றும் வேலை என்பதால், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வீட்டுக்கு வரும் லிண்டாவின் கணவன் அலெக்ஸும் அப்படித்தான். கெளரவ உறுப்பினர்கள் என்பதால் மாதச் சந்தாவைத் தளர்த்தி அட்டெண்டன்ஸ் ஃபீஸ் முறையில் எங்களுக்குச் சலுகை தருவான் ஃபில். கூகிள் ஸ்டாக் விலை முதல், அமெரிக்கன் ஐடலில் வருபவர்களின் உடை வரை முதல் நாள் நிகழ்வுகள் அனைத்தும் விமர்சிக்கப்படும்.

சில சமயங்களில் எல்லா மனைவிமாரும் வெளியே வருவதுண்டு. வேண்டுமென்றே ரேடியோ வால்யூமைக் குறைத்து ‘ஹே.. மேலினி (மாலினி எனச் சொல்ல ஏன் அவ்வளவு கஷ்டமோ தெரியாது).. உன் கணவன் மூன்றாவது பியர் குடிக்கிறான்.. இரவு வீட்டில் சேர்க்காதே.. ‘ எனக் கத்துவான் ஃபில். ஆனால் பல சமயங்களில் ‘ஜெவல்ரி ஷோ’வை நமது கல்-டி-சாக்கில் எப்போது வைத்துக் கொள்ளலாம் எனப் பெண்கள் பேச்சில் மூழ்குவதால் மாலினி இதைப் பெரிதாகக் கவனத்தில் கொள்ள மாட்டாள். ஒருவேளை அவர்கள் பேசுவது போல நிஜமாகவே ‘ஜெவல்ரி ஷோ’வை நடத்தி முடித்தால் மாலினியும் ஃபில் சொல்வதைக் கவனிக்கத் துவங்குவாளோ என்னமோ.

லேரி பொதுவாக இது போன்ற சமயங்களில் தனது நாயை வாக்கிங் அழைத்துப் போய், அதன் நடவடிக்கைகளை முடிக்கச் செய்து, கையில் முடி போட்ட பிளாஸ்டிக் பையுடன் வருவார். ‘நலமா இளைஞர்களே?’ என்ற தொனியில் கேள்வி கேட்டுச் செல்வார். சில சமயங்களில் நின்று ஏதாவது பேசுவார். மிகவும் ஹாஸ்யம் நிறைந்தவர். எங்களின் பேச்சுத் தன்மைக்குத் தகுந்தவாறு சுவாரசியமாக ஏதாவது பேசுவார். ராணுவப் பணியில், வியட்நாம் போரின் போது சந்திக்க நேர்ந்த தாதிப் பெண்களைப் பற்றி ஏதாவது சொல்லி, வயதால் தளர்ந்து, இடுங்கிப் போன இடதுக் கண்ணை அடித்துச் சிரிப்பார். வியட்நாமில் அந்தக் காலங்களில் கிடைத்த போதைப் பானங்கள் பற்றிப் பேசுவார். மேரிலின் முதல் நாள் சமைத்த சிக்கன் லசானியாவை, திருவையாறு திருவிழாவைச் சுப்புடு விமர்சிப்பது போல விமர்சிப்பார். எந்த விஷயம் பேசினாலும் சுற்றி இருப்பவர்களை ஆர்வத்துடன் கேட்கும்படிச் செய்வார். கிறிஸ்துமஸ் முன் ராபர்ட் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் மட்டும் ரெட்ஒயின் குடிப்பார்.

தனியாகத் தபால் எடுக்கும் போதோ, வாரக் குப்பையைத் தெருவோரத்தில் வைக்கும் போதோ சந்திக்க நேர்ந்தால் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவார். எங்கள் ரோஹன் பாஸ்கட்பால் விளையாடுவதைத் தினமும் வீட்டிலிருந்து பார்ப்பது பற்றியும், அவனது டிரிபிளிங் முறைகள், ஸ்லாம்டங்க் பண்ண அவன் எகிறிக் குதிக்க முயல்வது என அனைத்தையும், ரோஹன் செய்வது போலவே நடித்து விலாவரியாகச் சொல்வார். அந்த நேரங்களில் அவர் கண்களில் ரோஹனின் வயதும், விளையாட்டு ஆர்வமும் தோன்றும்.

ஒருமுறை கோடை விடுமுறையில் வந்து சென்ற மாலினியின் அம்மா, சத்தியவதி, பெயரைச் சொல்லி அவர்களின் மூட்டு வலி எப்படி உள்ளது என நலம் விசாரிப்பார். இந்திய வானிலை பேசுவார். மாலினியை ‘மேலின்’ எனக் கூப்பிட்டு, ‘‘மேரிலினுக்கும்’ ‘மேலினுக்கும்’ ஒரு வித்தியாசம் சொல்லு’ என்பார். ‘ரி’ எனும் எழுத்து என்று அவள் சொன்னால், ‘இல்லை மேரிலின் அந்நாளைய அழகி. மேலின் இந்நாள் அழகி’ என்று சொல்லி அவளை வெட்கப்படச் செய்வார். இப்படிப் பலவிதமாக எங்களை மிகவும் கவர்ந்தவர்.

மேரிலினும் லேரிக்கு சளைத்தவரில்லை. இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் பரிகசித்துப் பேசினாலும் திருமணமாகி ஒருவாரமே ஆன தம்பதியரின் அன்னியோன்யம் அவர்களிடம் தென்படும். மிகவும் சுறுசுறுப்பானவர்கள். குளிரில்லாத காலங்களில் பகலில் இருவரும் போர்ச்சில் மெலிதாக ரேடியோவை ஒலிக்கவிட்டுப் புத்தகத்துடன் அமர்ந்திருப்பர். மதியமானால் மேரிலின் படுத்து ஓய்வெடுப்பார் போலும். லேரி அந்த நேரத்திலும் கராஜில் எதையாவது தட்டிக் கொண்டிருப்பார்.

இளவேனிர் காலம் தொடங்கும் நாளில் வாசலில் பெரியத்தொட்டிகளில் பூச்செடிகள் வைப்பார்கள். பனிக்காலம் வரை அதை தம் பிள்ளை போலப் பாதுகாத்து அழகு செய்வார்கள். தினமும் மாலை வேளைகளில் இருவரும் ஒரு மணி நேரமாவது செடிகளுக்குச் செலவிடுவார்கள். லேரி ஒரு நீண்ட நீர்த்தூவி கொண்டு ஒவ்வொரு செடிக்கும் நீரூற்றி வர, மேரிலின் கையுறை அணிந்து சிறிய கத்தரிக்கோலால் எதையோ வெட்டுவார்.

மழை பெய்யும் நேரங்களில் லேரி தங்களது கெடிலாக் காரை கொண்டு வந்து ஒரு இருபது நிமிடம் வெளியில் நிறுத்தி பின் மீண்டும் காராஜில் நிறுத்துவார். அடுத்த ஒரு மணி நேரம் இருவரும் சேர்ந்து காரை துடைத்துப் பளிங்கு போலச் செய்து விடுவர். ‘இலவசக் கழுவல்’ என வானைக் காட்டிச் சிரிப்பார் லேரி. அவர்களது கார் பன்னிரண்டு வருடப் பழமையானது என்று சொன்னால் கெடிலாக் கம்பெனிகாரர்களே கூட நம்ப மாட்டார்கள். அப்படி ஒரு மினுமினுப்புடன் இருக்கும்.

மாலை நேரங்களில் லேரி ஒரு பழைய சைக்கிளில் அரை மணி நேரம் ரவுண்டு அடித்து விட்டு வருவார். ‘லேரி பிறக்கும் முன் அவர் தந்தை வாங்கிய சைக்கிள்’ என மேரிலின் சைக்கிளின் வயதைப் போட்டு உடைப்பார். அரை மணி ரவுண்டு என்றாலும் லேரி இதற்குத் தயாராவதற்கு ஒரு மணி நேரமாவது தேவைப்படும். தலையில் ஹெல்மட், சைக்கிளிங் ஜாக்கெட் (ரிப்ளெக்டர்கள் உள்ளது) அணிந்து, முட்டிக்கவசம் இன்ன பிற பாதுகாப்பு கவசங்கள் அணிந்து கிளம்புவார். மேரிலின் துணை நின்று அவரின் ஹெல்மெட்டை நேர் செய்வது, ஜாக்கெட்டில் ஒட்டியிருக்கும் நூலை எடுப்பது என அனைத்து உதவிகளும் செய்வார்.

பாதுகாப்புக் கவசங்களை விட, இந்தச் சைக்கிள் பயணத்தில் லேரிக்கு மிக அவசியமானது ரேடியோ. இதற்காகவே ஹாண்டில்பாரில் ஒரு சிறிய கூடை இருக்கும். ராணுவத்திலிருந்த போது ரேடியோ கேட்கும் பழக்கம் தொற்றிக் கொண்டதாக லேரி சொல்வார். கல் டி சாக்கின் ஒரு வளைவின் ஓரத்தில் ஒரு பாறாங்கல் இருக்கும். அது வரை சைக்கிளை உருட்டிச் சென்று, மேரிலின் சைக்கிளைப் பிடித்துக் கொள்ளக் கல்லின் மீது ஏறிச் சைக்கிளில் அமர்ந்து, கல்லை ஒரு உந்து உந்தி மிதித்துச் செல்வார் லேரி. மேரிலின் முதன் முதலில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ராக்கெட் விஞ்ஞானியின் பூரிப்புடன் கையசைத்து அனுப்பி வைப்பார். திரும்பும் போது லேரி தானாக, விமானத்தைக் கேட்டுக்குக் கொண்டு வந்து சேர்க்கும் விமானியின் லாவகத்தோடு, கல்லருகே வந்து சைக்கிளை லேசாகச் சாய்த்துக் காலூன்றி இறங்கி விடுவார்.

இப்படி அவர்களின் செய்கைகளை ஊன்றிப் பார்க்கையில், ஓரிரு சமயம் சிரிப்பாக இருந்தாலும், முதுமையில் அவர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கையை, ஒவ்வொரு நொடியும் சிறு குழந்தை போல் ரசித்து வாழ்கின்றனர் என நினைப்பதுண்டு. லேரிக்கும், மேரிலினுக்கும் மூன்று பிள்ளைகள். ஒருவர் மினசோட்டாவில் இருக்க மற்ற இருவரும் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தனர். நவம்பர் மாதத் தேங்ஸ் கிவிங் விழாவின் போது அனைவரும் ஒன்று கூடுவார்கள். பேரப் பிள்ளைகள் கோடைக் காலங்களில் ஓரிரு நாட்கள் தங்கிச் செல்வார்கள். அவர்கள் வருவதாகத் தெரிந்தால் மேரிலின் கண்களில் புதிய உற்சாகம் தோன்றும். சில சமயம் அவரது பேத்தியை அழைத்துக் கொண்டு ‘பேபி பாக்கலாம்..’ என எங்கள் வீட்டுக்கு வந்து ஒரு வயதை நெருங்கும் லாவண்யாவை காட்டிச் செல்வார்.

மாலினி அழத் தொடங்கியிருந்தாள். ‘இப்ப என்னங்க பண்றது?..’ என்றாள் விசும்பலுடன். எனக்கும் அழுகை வந்தது. இருந்தும் அதைக் காட்டிக் கொள்ளாமல் ‘தெரிலம்மா .. பாக்கலாம்’ என்றேன்.

சற்று நேரத்தில் போலிஸ்காரர் வெளியே வர, பின்னால் லேரியின் மூத்த மகன் ஜோயல் வந்து போலிஸ்காரருடன் கைகுலுக்கி விடை தந்து விட்டு உள்ளே போய்விட்டார்.

‘அவங்க வீட்டுக்குப் போய்ப் பாத்துட்டு வரலாங்க.. எனக்கு அவர் முகத்தைப் பாக்கணும் போல இருக்கு’ குழந்தையாய் அழத் தொடங்கினாள் மாலினி. எனக்கும் அது சரியென்றே பட்டது. இருந்தாலும் அண்டை வீட்டினர் பலர் செல்லாத போது, நாம் எப்படி என்ற யோசனையுடன் ஃபில்லுக்குப் போன் செய்தேன்.

‘ஏய் .. எப்படியிருக்கிறாய் ..’ என்று ஆரம்பித்தவன், நேற்று நள்ளிரவுக்கு முன் லேரி இறந்து விட்டதாகவும், பாடியை நேற்றிரவே மார்ச்சுவரிக்கு எடுத்துச் சென்று விட்டதாகவும் தெரிவித்தான். பத்து நாட்களில் ஈமச்சடங்கு அருகிலிருக்கும் தேவாலயத்தில் நடக்குமென நினைப்பதாகச் சொல்லிவிட்டு, தான் காலேஜ் புட்பால் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் வீட்டுக்கு வந்தால் பியர் தருவதாகவும் சொன்னான். ‘போடாங்க..’ எனச் சொல்லத் தோன்றியது.

நான் பேசிக் கொண்டிருக்கும் போதே லேரி வீட்டுக் கராஜ் திறப்பதையும் ஜோயல், மேரிலினுடன் காரில் வெளியே போவதையும் பார்த்தேன்.

அன்றிரவு லேரி வீட்டு லைட் எரிவதைப் பார்த்து அவர்கள் வந்து விட்டதை உறுதி செய்து கொண்டோம். மறுநாள் போய்ப் பார்க்கலாம் என்று நாங்கள் முடிவு செய்து கொண்டோம். படுத்தபின், மாலினி சின்னச்சின்ன விசும்பலுக்குப் பின் தூங்கிப் போனாள். அன்று காலை விடிந்தும் எழுந்து கொள்ள மனம் வராத எனக்கு, இரவு ஏனோ வெகு நேரம் தூக்கம் வரவில்லை.

மறுநாள் எழுந்ததும் கடைக்குச் சென்று பூக்கள் சில வாங்கி வந்தேன். அமெரிக்கா வந்து பல வருடங்கள் ஆகி, பல இடங்கள் போய் வந்தாலும் இது போன்ற துக்க வீடுகளுக்குப் போய்ப் பழக்கமில்லை.

நானும், மாலினியும் பலமுறை மேரிலினிடம் என்ன பேசுவது என ஒத்திகை பார்த்துக் கொண்டோம். நான் அவளிடம் ‘நீ பெரிதாக அழுது, அவர்களையும் அழவைத்து எதுவும் கலாட்டா பண்ணி விடாதே’ என்றேன். ‘எதற்கும் ஜோயலுக்கு போன் செய்து, மேரிலின் எப்படி இருக்கிறாரென்று தெரிந்து கொண்டு போகலாம்’ என்றாள் மாலினி. சரியென்று ஜோயலுக்கு போன் செய்தேன்.

செய்தியைக் கேள்விப்பட்டதாகவும், மிகவும் வருந்துவதாகவும் சொன்னேன். இரங்கலுக்கு நன்றி சொன்னவன், தன்னை வீட்டில் விட்டு மேரிலின் திரும்பச் சென்று விட்டதாகக் கூறினான். அப்படியானால் உன் அம்மா நேற்றிரவு முழுவதும் தனியாக வீட்டில் இருந்தார்களா என்று கேட்டதற்கு, ‘ஆமாம் ..ஏன்’ என்றான்.

‘என் அம்மா வீட்டிலிருக்கும் வரை பிரச்சனை இல்லை.. காரோட்ட துவங்கினால் தான் பிரச்சனை.. நேற்று கூட என்னை வீட்டிலிறக்கி விட்டுச் விட்டு செல்லும் போது காருக்குக் கேஸ் போடத் தெரியாமல் மேலேல்லாம் கேஸைக் கொட்டிக் கொண்டாராம் … என் அப்பா இல்லாமல் வாழ மெதுவாகக் கற்றுக் கொள்வார்’ என்றான், சிரித்துக் கொண்டே. எனக்கு அவன் விசித்திர மனிதனாகப் பட்டான். ஒருவேளை நெடுநாள் பிரிந்திருந்ததால் பற்றுதல் இல்லையோ எனத் தோன்றியது.

மேரிலின் வீட்டுக் கதவைத் தட்டினோம்.. நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. மேரிலின் நாயை அதட்டிக் கட்டிவிட்டுக் கதவைத் திறக்க ஐந்து நிமிடங்களாவது ஆனது. கதவைத் திறந்ததும் வெடித்து அழக் காத்திருந்தாள் மாலினி .. ‘ஆ… என்ன ஆச்சரியம் … குடும்பமே வந்திருக்கு என்னைப் பார்க்க.. குட்டி இளவரசி நீயும் வந்திருக்கியா … ஓ என்ன அழகான சிரிப்பு’ என்றார் மேரிலின் லாவண்யாவைப் பார்த்து.

நாம் லேரி மறைந்து விட்டதாகக் கேள்விப்பட்டது உன்மைதானா அல்லது நாம் ஏதாவது கனவு கண்டு விட்டுத் தவறுதலாக வந்து விட்டோமா எனத் தோன்றியது எனக்கு.

 ‘வாங்க … வாங்க ..காலணி இருந்தால் பரவாயில்லை … என் வீடு அவ்வளவு சுத்தம் கிடையாது.’

‘நடந்ததைக் கேள்விப் பட்டோம் … மிகவும் வருந்துகிறோம்’ எனக் கண்ணீர் வெளிப்படாமல் சொல்லிப் பூங்கொத்தைக் கொடுத்தாள் மாலினி …

 ‘ஓ … எவ்வளவு அழகான பூக்கள்’ என வாங்கி மேசையில் வைத்தார் மேரிலின்.

 ‘மாலினி .. நீ டீ குடிப்பாய் என்று தெரியும்.. உனக்கு எப்படி’ என்றார் என்னைப் பார்த்து.

 ‘பரவாயில்லை.. எதுவும் வேண்டாம்’ என்றேன்.

‘இல்லை.. இல்லை .. ஏதாவது குடியுங்கள்.. இந்தக் குளிருக்கு இதமாக டீ தருகிறேன்’ என்று கெட்டிலில் தண்ணீரைக் கொதிக்க வைத்தார்.

வீட்டில் ஒரு சுவர் முழுக்க லேரியின் படங்கள். நிறையப் படங்கள் அவர் ராணுவத்தில் இருந்த போது எடுத்தது போலும். பல சான்றிதழ்களும் இருந்தன. அவற்றில் ஒன்றைப் படித்த போது தான் லேரியின் மருத்துவப் படிப்புப் பற்றித் தெரிந்தது. பல மருத்துவப் பட்டங்களைப் பெற்றிருந்தார். அந்தப் படிப்புக்கெல்லாம் இவர்கள் எப்படியோ வாழ்ந்திருக்கலாமே என்று தோன்றியது.

என் மனவோட்டத்தை அறிந்த மாதிரி ‘லேரிக்கு ராணுவத்தில் பணியாற்றுவதே பிடித்திருந்தது ..’ என்று சொல்லிச் சிரித்தார் மேரிலின்.

அதெல்லாம் கேட்கக் கேட்க எனக்கு மேலும் அழுகை வரத் துவங்கியது. ஐந்தடிக்கு சுருங்கிப் போயிருந்த லேரியின் நிஜ உருவம் என் மனதில் விஸ்வரூபம் எடுத்த மாபெரும் மனிதனாகத் தோன்றியது.

எப்படி? எப்படி இந்த மேரிலின், ஜோயல் போன்றவர்களால் அவரது இழப்பை ஏற்றுக் கொள்ள முடிகிறது? ஒருவேளை இவர்களிடம் மனிதத் தன்மை நீர்த்துப் போய் விட்டதோ?

 நாங்கள் ஒவ்வொரு முறை லேரியைப் பற்றிக் குறிப்பிடும் போதும் மேரிலின் சிரித்து வேறு விதமாக அணுகிக் கொண்டிருந்தார்.

‘லேரி .. சிறந்த மனிதன் … எனக்கு, எனது வாழ்க்கையின் மிகச் சிறப்பான தருணங்களை உருவாக்கித் தந்திருக்கிறார்.. அவருடன் இவ்வளவு நாள் வாழ்ந்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.. அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அவசியம் ஓய்வு தேவை.’ என்றார். அப்போது கூட மேரிலின் முகத்தில் ஒரு சிறு வருத்தமும் தென்படவில்லை,

 நாங்கள் விடைபெற்றுக் கோட்டை எடுக்க முனைகையில் .. ‘ஒரு நிமிடம்’ ..என்றவர், அலமாரியிலிருந்து லேரி அணியும் ஒரு தொப்பியை எடுத்து ரோஹனுக்கு அணிவித்து, ‘நீ இனிமேல் பாஸ்கட் பால் விளையாடும் போது இதை அணிந்து கொண்டு விளையாடு.. உன்னில் தினமும் நான் லேரியைப் பார்க்க வாய்ப்பு தருவாயா?’ என்றார் அவனிடம். உற்றுக் கவனித்த போது விழியோரத்தில் லேசான ஈரம் தெரிந்தது.

– மர்மயோகி –

Comments (3)

Trackback URL | Comments RSS Feed

  1. சுமி says:

    பனிப்பூக்களுக்கு வாழ்த்துக்கள்.அனைவருக்கும் நன்றி.

    மர்மயோகி உங்கள் கதைகள் அருமை

  2. J.K says:

    மிக அருமை. ஜெயகாந்தன் கதை போல நன்றாகவே உள்ளது. இதேபோல் தொடரவும் திரு மர்மயோகி அவர்களே

  3. Raghuraman says:

    Hi Ravi, This story is perfect and it matches me a comfort of reading such story in a.vikatan. Good Flow.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad