பனிக்கோலம்
சீவ நதி வற்றி போகும் – வறட்சி இல்லை
பட்ட மரம் மலர் சொரியும் – மாயம் இல்லை
துளையிட்டு மீன் பிடிப்போம் – பசியும் இல்லை
ஒல்லியனும் குண்டாவான் – கொழுப்பும் இல்லை
வானமகள் கோலமிட்டாள் – விழா இல்லை
சாலையிலே மினுமினுக்கும் – விண்மீன் இல்லை
நடைபாதை மாயமாகும் – பிரளயம் இல்லை
நடமாட்டம் கடையில் மட்டும் – இலவசம் இல்லை
உரையில்லாக் கைநடுங்கும் – வலிப்பும் இல்லை
உதட்டை நா வருடும் – தாபம் இல்லை
வீட்டிலே முடங்கிடுவோம் – சிறையும் இல்லை
வீட்டின்முன் வெள்ளை மலை – நிரந்தரம் இல்லை
ஏதேதோ சொல்லுகிறேன் – பித்தன் இல்லை
பனி பொழியும் காலமிது – அழகின் எல்லை
– வெ. சச்சிதானந்தன்.