ஆஸ்கரில் தமிழ்ப்பாடல்
’லைஃப் ஆஃப் பை’ (Life of Pi) என்ற ஹாலிவுட் ஆங்கிலத் திரைப்படத்தில் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ எழுதியும் பாடியும் இருக்கின்ற “கண்ணே கண்மணியே” என்ற தமிழ்த் தாலாட்டுப் பாடல் சிறந்த திரைப்படப் பாடலுக்கான பிரிவில் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் இதுவே.
இந்த வாய்ப்புக்காக இறைவனுக்கும், பெற்றோருக்கும், ஆசான்களுக்கும் நன்றிக்கடன் பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜெயஸ்ரீ, திரைப்பாடல்கள் இயற்றிய அனுபவம் இல்லையென்றாலும், தாலாட்டுப் பாட்டுக்கு, அனுபவமோ, இசையறிவோ தேவையில்லை எனக் கருதுகிறார், ஒவ்வொரு தாய்க்குள்ளும் ஒளிந்திருக்கும் தாய்மை உணர்வை வெளிப்படுத்துவதே தாலாட்டு எனவும், அந்த அடிப்படையிலே தான் இந்தப் பாடலை எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் ஜெயஸ்ரீ, இசையமைப்பாளர் மைக்கேல் டானாவும் (Mychael Danna), படத்தின் இயக்குநர் அங்க் லீயும் (Ang Lee), இந்தியாவின் கலாச்சாரம் பாரம்பரியம் பற்றிய அறிவும் நாட்டமும் உடையவர்கள் என்றும் அவர்கள் இந்தப் பாடலின் தமிழ்ச் சொல் ஒவ்வொன்றுக்கும் பொருளறிந்து, மாற்றங்களை முன் வைத்து, பல சுற்றுகளில் பாடலை செம்மைப்படுத்தியதாகவும் குறிப்பிட்டார்.
ஜெயஸ்ரீ, மிகப் பெரிய பாரம்பரிய இசைப் பரம்பரையில் கொல்கத்தாவில் பிறந்து, மும்பையில் வளர்ந்தவர். . தொடக்கத்தில் தன் பெற்றோர்கள் திரு. சுப்பிரமணியம், திருமதி. சீதா ஆகியோரிடம் கருநாடக இசை பற்றி அறிந்து கொண்டு. பின்னர் திருமதி. T.R. பாலாமணி அவர்களிடம் முறைப்படி பத்து ஆண்டுகள் இசைப்பயிற்சி பெற்றவர்.
சென்னைக்கு குடிபெயர்ந்த பின், புகழ்பெற்ற வயலின் கலைஞர் லால்குடி ஜெயராமனிடம் இசைப்பயிற்சி பெற்றார். வீணை இசையிலும், இந்துஸ்தானி இசையிலும் தேர்ச்சியுடையவர் ஜெயஸ்ரீ. கருநாடக இசையுலகில் ஏற்கனவே இதே பெயரில் சிலர் இருந்ததினால் தன்னை பாம்பே ஜெயஸ்ரீ என அடையாளப்படுத்திக் கொண்டார்.
தமிழ்த் திரையுலகில் ஜெயஸ்ரீ பல பாடல்கள் பாடியிருந்தாலும் அவருக்கு மிகவும் புகழ்பெற்றுத் தந்த பாடல்கள் ‘மின்னலே’ திரைப்படத்தின் ‘வசீகரா’ (இசை ஹாரிஸ் ஜெயராஜ்), ‘இருவர்’ படத்தின் .’நறுமுகையே’ (இசை ஏ.ஆர். ரஹ்மான்), ’பாரதி’ படத்தின் ‘நின்னைச் சரணடைந்தேன்’ (இசை இளையராஜா) போன்றவை.
ஜெயஸ்ரீ இங்கிலாந்திலுள்ள புகழ் பெற்ற ‘ஓபரா ஹவுஸ்’ அரங்கத்தில் பாடிய முதல் கருநாடக இசைக்கலைஞர் எனும் பெருமைக்குரியவர்.
’மார்கழி ராகம்’ எனும் முழு நீளப் படத்திலும் அவர் நடித்துள்ளார். ‘வேருக்கு நீர்’ எனும் மலையாளத் திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். தற்போது, இசை மூலம் நோய் தீர்க்கும் மருத்துவ இசை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
இப்படிப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட பாம்பே ஜெயஸ்ரீ, ஆஸ்கர் விருது பெற வாழ்த்துகிறோம்.
– ரவிக்குமார்
கடந்த ஞாயிறு மாலை, கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு, நம்மொழிக்கு இவ்வூரின் கனவுத் தொழிற்சாலையில் எந்தவிடம் என்று பார்க்க தொலைக்காட்சியின் முன்னமர்ந்தேன். பிரம்மாண்டமான மேடையில், காசைத் தண்ணீராக இறைத்த திரைகளில் நம்மூர் முகங்கள், காதுகளைக் கிழிக்க வைக்கும் ஒலிப்பெருக்கிகளில் நம் செவிகளுக்குப் பழக்கப்பட்ட இழையோடும் மெல்லிசை.. விருது கிடைக்கவில்லை, இரண்டு வரித் தமிழாவது கேட்டிருக்கலாம்.. இசை முடிந்து வரிகள் வருவதற்கு முன், நிறுத்திவிட்டார்கள்.. அது சரி, ஜேம்ஸ் பாண்டுக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மக்களில், ஆராரோ ஆரிரரோவை யார் கேட்கப் போகிறார்கள்….
இங்கு வடக்கு தெற்கை புறக்கணிக்கிறதுன்னு சொல்லி ஜானகி அம்மா பத்ம பூசன் விருதை மறுத்துட்டாங்க. இன்னுமே வடக்கு வாழுது. தெற்கு தேயுது. ஆஸ்கார்ல போய் நீங்க தமிழ தேடுறீங்க. எல்லாம் போங்காட்டம்!
ஆராரோ ஆரிரரோவை இப்ப தமிழ் குழந்தைகளே கேட்க முடியல. நம்ம பொண்ணுங்க அத இப்ப மறந்துட்டாங்க..