\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

சூப்பர் போல்

SuperBowl2013_420x420நண்பர்களை வீட்டிற்கு அழைத்து பார்ட்டி கொடுப்பதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னரே திட்டமிடும் திருநாளைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இரவு உணவுக்கு பீட்சா வேண்டுமென்றால் ஐந்து தினங்களுக்கு முன்னரே ஆணையிட வேண்டுமென்று அறிவீர்களா? இந்திய உணவகத்திற்கு கொறிக்கும் பதார்த்தங்களை ஆர்டர் செய்வதற்காக அரை மணி நேரம் தொலை பேசியில் காத்திருந்த அனுபவமுள்ளதா? மது பானக்கடையில் வாங்கியவையனைத்திற்கும் பணம் செலுத்துகையில், “சொந்த உபயோகத்திற்காக மட்டுமே வாங்குகிறேன், சில்லறை வியாபாரத்திற்காக அல்ல” என்று கையொப்பமிட வேண்டிய கட்டாயமிருந்ததுண்டா? நாள் முழுக்க இயற்கையன்னை தூய்மையான வெண் பனித்துளிகளை இடைவிடாமல் தூவிக்கொண்டிருக்கையில், நண்பர்களின் பாதுகாப்புக் கருதியோ, பீட்சா கொடுக்க வருபவர் நீதிமன்றம் சென்று விடுவாரென்ற பயம் கருதியோ ட்ரைவ் வே முழுக்க மூன்று முறை ஒரே நாளில் சுத்தம் செய்த அனுபவமுண்டா? ஒரு டாலர் நோட்டுக்களாக 200 டாலருக்கு சில்லறை மாற்ற எப்போதாவது தேவையிருந்ததுண்டா?

சூப்பர் போல் பார்ட்டி ஒன்றை நடத்திப் பாருங்கள், மேற்சொன்ன விடயங்களுடன் கூடி இன்னும பல சுவையான அனுபவங்களும் கிடைக்கப் பெறுவீர்கள்!!

பல வருடங்களுக்குமுன், இந்தியாவிலிருந்து வந்த புதிதில், உலகம் முழுவதும் விளையாடப்படும் ஒரே விளையாட்டு கிரிக்கெட் தான் என்று எண்ணிக்கொண்டிருந்த பல சராசரி இந்திய இளைஞர்களில் நானும் ஒருவன். ஆம், இளைஞன் – பல வருடங்களுக்கு முன். ஐந்து நாட்கள் நடக்கும் ஆட்டம் – ஓய்வு நாள், உணவு இடைவெளி, தேநீருக்கான இடைவெளி எனப் பல மணி நேர ஓய்வுகளுக்கு மத்தியில் நேரமென்பதற்கு ஒரு விலையேயில்லாத ஆட்டத்தை ஒரு நாள் விடாமல் பார்த்து ரசித்த அதே இளைஞன், இன்னும் இரண்டு விநாடி மட்டுமே மீதி இருக்கும் நிலையில் ஆட்டத்தின் முடிவு மாறுவதற்கு இப்பொழுதும் சந்தர்ப்பமுள்ளது என்ற அளவில் இருக்கையின் நுனிக்கு அழைத்துச் செல்லும் ஒரு ஆட்டத்தின் பரம ரசிகனானேன்.. அந்த ஆட்டம் அமெரிக்க ஃபுட் பால் – அதன் இறுதிப் போட்டி “சூப்பர் போல்”.

தொலைக் காட்சியில் பார்த்து ரசிக்கும் பல விளையாட்டுக்களையும் ஒரு முறையாவது நிஜ வாழ்வில் விளையாட முயற்சி செய்திருப்போம், ஆனால் இந்த விளையாட்டை மட்டும் தொலைக்காட்சியில் பார்ப்பதோடு சரி.. கற்பனையிலும் கூட நமது 5 அடி 7 அங்குல, 160 பவுண்டு உருவம் அந்த ஆறரையடி 250-300 பவுண்டு மாமிச மலைகளுக்கு மத்தியில் ஒட்டுவதில்லை. சிலமுறை அந்த ஒரு பந்தைப் பிடிக்க இரண்டு அணிகளிலுமுள்ள மொத்த வீரர்களும் ஒருவர்மேல் ஒருவர் விழுந்து சுமார் 3 டன் எடையுள்ள ஒரு மனிதக் குவியலை (human pile) உருவாக்குவதைப் பார்ப்பதற்கு மிகவும் வியப்பாக இருக்கும். அடியிலிருப்பவன் நசுங்கிச் சிதைந்து விடமாட்டானாவென்ற சந்தேகம் வருவது இயல்பு. நமக்கு ஒரு காலில் சிறு காயம்பட்டால், காயம் ஆறுவதற்கு ஓரிரு வாரங்கள், தழும்பு போவதற்கு ஒரு சில மாதங்கள்.. இவர்கள் ஒருவருக்கொருவர் 50 மைல் வேகத்தில் ஓடிவந்து, இரண்டு கன ரக வாகனங்களைப்போல மோதிக்கொண்டு கீழே விழுகின்றனர், அணியின் மருத்துவக் குழு வந்து ஏதோ ஒரு மருந்தைத் தூறல் (spray) முறையில் தூவிச் செல்கின்றனர், இவர்கள் எழுந்து முன்போல 50 மைல் வேக ஓட்டத்தைத் தொடர்கின்றனர்.. இவர்கள் மனிதர்கள்தானா இல்லை இயந்திர மனிதர்களா என்ற சந்தேகம் நம்மில் தொடரும்……

அமெரிக்காவில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் துவங்கி, ஃபிப்ரவரி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கோலாகலமாக நடந்தேறும் சுவாரசியமான விளையாட்டுப் போட்டி, ”தேசியக் கால்பந்துப் போட்டி” (National Football League). கால்பந்து என்று பெயரிருந்தாலும், காலால் விளையாடுவது மிகச் சொற்பமே. பந்தை எறிந்து பிடிப்பதும், எடுத்துக் கொண்டோடி முன்னேறுவதும்தான் பெரும்பாலான நேரங்களில் நடைபெறும் விளையாட்டு முறை. பல உபாயங்களையும் (strategy), தந்திரங்களையும் (techniques), உடல் வலு, மன வலிமை மற்றும் நம்பிக்கையையும் கொண்டு விளையாட வேண்டிய கடினமான விளையாட்டுக்களில் முதன்மையானது இது.

மொத்தம் 32 அணிகள், 16 அணிகள் தேசியக் கால்பந்து மாகுழு (National Football Conference) என்ற பெரும் பிரிவிலும் மற்றும் 16 அணிகள் அமெரிக்கன் கால்பந்து மாகுழு (American Football Conference) என்ற மற்றவொரு பிரிவுக்குள்ளும் அடக்கம். ஒவ்வொரு மாகுழுக்குள்ளும் 4 அணிகள் கொண்ட 4 பிரிவுகள் அடக்கம். ஆக மொத்தம் இரண்டு மாகுழுவிலும் சேர்த்து மொத்தம் 8 பிரிவுகள். ஒவ்வொரு அணியும் மொத்தம் 16 அணிகளுடன் விளையாடி முடிக்க வேண்டும். அவர்களின் வெற்றி தோல்வி எண்ணிக்கையை வைத்து 8 பிரிவிலிருந்தும் முதன்மை வகிக்கும் அணி என 8 அணிகள் தகுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்படுவர். அவற்றைத் தவிர்த்து புள்ளி விவரங்களின்படி மேலுமொரு 4 அணிகள் வைல்ட் கார்ட் (wild card) என்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தகுதிச் சுற்று விளையாட்டுக்கள் நடைபெறும். இந்தத் தகுதிச் சுற்றுக்களின் இறுதியில் ஒவ்வொரு மாகுழுவிலும் ஒரு அணி இறுதியான வெற்றி பெறும் (conference championship) இந்த இரு அணிகளுக்கிடையே நடைபெறும் இறுதிச் சுற்றுக்கு சூப்பர் போல் என்று பெயர். இதில் வெற்றிபெறும் அணி கோப்பையையும் வைர மோதிரங்களையும் கைப்பற்றும்.

ஒவ்வொரு வாரமும் பல ஆட்டங்கள் நடைபெற வேண்டும். ஒரு ஆட்டம் இடைவெளி நேரத்தையும் சேர்த்து பொதுவாக, கிட்டத்தட்ட 3 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு நடக்கும். பெரும்பான்மையான ஆட்டங்கள் ஞாயிற்றுக் கிழமையன்று நடைபெறும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 12 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணிவரை விளையாட்டுக்கள் உண்டு. இவற்றைத் தவிர்த்து, திங்கட்கிழமை இரவு நேர விளையாட்டு.. சீசன் தொடங்கி சில வாரங்கள் கழிந்த பிறகு, வியாழக்கிழமை இரவு, சனிக்கிழமை இரவு என நாட்காட்டியில் ஒரு கிழமையை விட்டு வைக்க மாட்டார்கள். அவர்களுக்கென்ன தெரியும் நாம் வீட்டில் படும் பாடு. சமைப்பதில் உதவுவதில்லை என்று தொடங்கி, கடைகண்ணிக்கு   செல்வதில்லை என்று தொடர்ந்து, பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில்லை, துணிமணி துவைப்பதில்லை, வீடு சுத்தம் செய்வதில்லை எனப் பலப்பல ராகங்களில் நமக்குக் கிடைக்கும் பாட்டுப்பற்றி ”தேசிய கால்பந்துக் குழு”வுக்கு என்ன அக்கறை? ரெகுலர் சீசன் விளையாட்டின் மொத்த சேதாரம், பதினேழு வாரம் கிட்டத்தட்ட 230 மணிநேரத் தொலைக்காட்சி, 50லிருந்து 60 டாலர் வரை தொலைக் காட்சிச் செலவு, ஒரு 10 பவுண்டு எடை அதிகரிப்பு மற்றும் ஒரு 50 பக்கங்கள் எழுதுவதற்குகந்த லட்சார்ச்சனை மனைவியிடமிருந்து..

இந்தக் கட்டுரையின் நோக்கம் இந்த விளையாட்டைக் கற்றுத்தருவதோ அல்லது இந்த விளையாட்டின் நுணுக்கங்களைப் பறை சாற்றுவதோ கிடையாது. இந்தவொரு இறுதிப்போட்டி அமெரிக்க நாட்டின் சராசரி மனிதர்களுக்கு மத்தியிலே எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்குவதே. இதனைச் சில சுவாரசியமான புள்ளி விவரங்களைக் கொண்டு விளங்கிக் கொள்ள எத்தனிக்கலாம்.

· முதன் முதலில் 1967 ஆம் வருடம் தொடங்கிய சூப்பர் போல் விளையாட்டுக்கு தற்பொழுது வயது 47.

· அமெரிக்க மக்களின் ஒரு வருட வாழ்க்கையில், இரண்டாவதாக அதிக அளவு உணவு உட்கொள்ளும் தினம் சூப்பர் போல் தினமாகும் (முதலாவது: தேங்க்ஸ் கிவிங் – Thanksgiving Day)

· அமெரிக்க மக்களின் ஒரு வருட வாழ்க்கையில், இரண்டாவதாக வீட்டுக்கு வெளிப்புறத்தில் உணவு சமைக்கும் தினம் (outdoor grilling) சூப்பர் போல் தினமாகும் (முதலாவது: அமெரிக்க சுதந்திர தினமான ஜுலை 4). பல மாகாணங்களில் இந்த சூப்பர் போல் நடைபெறும் பருவகாலம் உதிரத்தை உறைய வைக்கும் குளிர்காலமென்பது குறிப்பிடத்தக்கது.

· சூப்பர் போல் தினத்தன்று மட்டும் கிட்டதட்ட 15,000 டன் எடையுள்ள சிற்றுண்டி உட்கொள்ளப்படுகிறதாம்.

· சுமார் 36,000 டன் எடையுள்ள அவகேடோ (avocado) அன்று ஒருநாளில் உட்கொள்ளப்படுகிறதாம்.

· 13.5 மில்லியன் சிக்கன் விங்க்ஸ் (Chicken Wings) விற்பனையாகிறது, மறுநாள் அஜீரணத்திற்கான மாத்திரையின் விற்பனை 20 சதவிகிதம் உயருகிறதாம்.

· கிட்டத்தட்ட 4,000 டன் எடையுள்ள பாப்கார்ன் அன்று மட்டும் அமெரிக்கர்களால் தின்று தீர்க்கப்படுகிறதாம்.

· 11 மில்லியன் உருளைக் கிழங்கு வறுவல் மென்று நொறுக்கப்படுகிறதாம்.

· 49.2 மில்லியன் சாராய (beer) பாட்டில்கள் குடித்துக் காலி செய்யப்படுகின்றனவாம். இந்தக் கணக்கில் மற்ற வகையான மது பானங்கள் (hard liquor) அடக்கமில்லை.

· இது அமெரிக்காவில் மட்டுமே விளையாடப்படும் ஆட்டமாக இருந்தாலும், சூப்பர் போல் விளையாட்டு மட்டும் உலகில் 180 நாடுகளில் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பாகிறதாம். அதுவும் 30 மொழிகளில் வர்ணனைகளுடன்..

· அமெரிக்காவில் மட்டும் மொத்தம் 111.3 மில்லியன் ரசிகர்கள் தொலைக் காட்சியில் இந்த விளையாட்டைக் கண்டு ரசிக்கின்றனராம். இது அமெரிக்காவின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி.

· சூப்பர் போலுக்காக நண்பர்களுடன் வீட்டில் கூடி இதனைக் கண்டு களிக்கும் விருந்தில் சராசரியாக பங்கேற்கும் மனிதர்களின் எண்ணிக்கை 17 ஆம். இது போன்ற சராசரிகளையெல்லாம் எப்படித்தான் எடுப்பார்களோ தெரியவில்லை. அது சரி, நாமென்ன நேரில் சென்று சரிபார்க்கவா முடியும்? நம் வீட்டிலிருந்தவர்களின் எண்ணிக்கை 16 – அழைத்ததில் இருவரால் வரயிலவில்லை.

· நாம் ஆச்சரியப்படும் விதமாக, இந்த தினத்தன்று சுமார் 5 சதவிகிதம் மின்சாரம் குறைவாகச் செலவாகிறதாம். அது சரி, எல்லோரும் ஒன்று கூடியிருந்தால், மொத்தத்தில் மின்சாரத் தேவை குறைவுதானே!!

· வெறும் 5 சதவிகித மக்கள் மட்டுமே தாங்கள் தங்கள் குடும்பத்துடன் மட்டும் அமர்ந்து தொலைக்காட்சியில் இதனைப் பார்க்கிறார்களாம். மற்ற 95 சதவிகிதத்தினர் நண்பர்களுடனோ, உறவினர்களுடனோ இணைந்து பார்த்து ரசிக்கிறார்களாம்.

· மொத்தமாக 8.3 சதவிகித மக்கள் இதில் வரும் விளம்பரத்தைப் பார்த்து ரசிப்பதற்காக மட்டுமே விளையாட்டைப் பார்க்கிறார்களாம். விந்தை மனிதர்கள்!!

· விளையாட்டரங்கிற்கு நேரில் சென்று பார்க்கும் ரசிகர்களால் மட்டும் கிட்டத்தட்ட 185 மில்லியன் டாலர் வரவாம். இது இந்தியப் பணத்திற்கு கிட்டத்தட்ட 1,017 கோடி ரூபாய் மதிப்பு.

· பாவங்களின் நகரமெனப் பெருமை(!)யுடன் அழைக்கப்படும் லாஸ் வேகஸ் நகரில் மட்டும் மொத்தமாக 95 மில்லியன் டாலர் மதிப்பு பந்தயப்பணமாகப் புரளுகிறதாம் இந்த ஒரு நாளில். இது இந்தியப் பணத்திற்கு சுமார் 522 கோடி ரூபாய்.

· அது மின்னணுச் சாதனமோ இல்லை முகச்சவரம் செய்யும் பிளேடோ, ஒரு 30 வினாடி மட்டுமே வரும் விளம்பரத்திற்கான விலை 3.8 மில்லியன் டாலராம் – இந்திய நாணயத்தில் சுமார் 21 கோடி ரூபாய். அடேயப்பா!!

இத்தனை முக்கியத்துவமுள்ள இந்த சூப்பர் போல் கடந்த ஞாயிற்றுக் கிழமை, ஃபிப்ரவரி 3ஆம் திகதி கோலாகலமாக நடந்து முடிந்தது. முதல் பத்தியில் குறிப்பிட்ட அனைத்து அனுபவங்களும் இந்த வருடம் கிடைக்கும் வாய்ப்புப் பெற்றது நாம். விளையாட்டு மாலை 5.30 க்கு ஆரம்பம். அனைவருக்கும் உள்ளது போல் பல தரப்பட்ட நண்பர்கள் நமக்கும். அழைப்பில் குறிப்பிட்ட மணிக்கு சரியாக ஆஜராகி வீட்டுக்கடிகாரத்தை அவர்களது வருகையை வைத்து சரிசெய்து கொள்ளுமளவுக்கு நேரம் தவறாமல் வரும் சில நண்பர்களும் நமக்குண்டு. விளையாட்டு ஆரம்பித்து சில மணித்துளிகள் கடந்த பின்னும் ”இந்தியன் ஸ்ட்ரெட்சபிள் டைம்” என்று IST க்கு நூறாவது முறையாக அதே விளக்கத்தைத் தந்து தாமதமாக வருவது தனது பிறப்புரிமையென உண்மையாகவே நம்பும் சில நண்பர்களுமுண்டு.

கணினிப் படிப்பை விட்டு விட்டு ஒரு மதுபானக் கடையில் பார்ட்டெண்டர் வேலைக்குச் சேர்ந்திருந்தால் மிகப் பிரபலமாக வந்திருக்கக் கூடிய அளவு பானங்கள் கலக்குவதில் லாவகமுள்ள ஒருவர், ஏதோவொரு மென்பொருள் தயாரிப்பதை விடுத்து, ஓவியத்துறையிலோ, புகைப் படமெடுப்பதிலோ நுழைந்திருந்தால் உலகப் புகழ் பெற்றவராக வளர்ந்திருக்குமளவுத் திறமையுள்ள இன்னொருவர், 47 வருடமாக நடந்த அனைத்து கால்பந்து சீசன்களின் புள்ளி விவரங்களை விரல் நுனியில் வைத்திருக்கும் மற்றொருவர், விளையாட்டு அவ்வளவாக விளங்காவிடினும் எல்லாவற்றையும் ஒரு பொது அறிவுடன் கூர்ந்து நோக்கி நடக்கும் விவரங்களைத் திறமையுடன் கிரகித்துக் கொள்ளும் இன்னொருவர் எனப் பலதரப்பட்ட மனிதர்கள் அங்கே..

ஒருவழியாக அனைவரும் வந்து சேர்ந்தனர். விளையாட்டு ஆரம்பித்தவுடன் கடை களை கட்டியது. விளையாட்டில் வரும் ஒவ்வொரு ட்ரைவிற்கும் பல பந்தயங்கள் கட்டப்படுகின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிகழ்வுகள் குறித்தும் ஒரு கருத்து உள்ளது, அதை ஒவ்வொருவரும் வெளிப்படையாகப் பேசி, மற்றவர்கள் ஆதரிப்பது அல்லது மறுப்பது அல்லது மேலும் பல உடன்பட்ட கருத்துக்களை எடுத்துச் சொல்வது என்று பல முனைகளிலிருந்தும் பல பேச்சுக்கள். வெண்கலக் கடையில் யானை புகுந்ததுபோல என்ற பழைய பழமொழி ஒன்றுக்கு அந்தச் சூழலொரு மிகச்சிறந்த உதாரணம்.

வழக்கம்போல ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் அளவு அதிகமென்ற ஞானோதயம் பாதி பார்ட்டியில் வர, பீட்சாக்காரனை அழைத்து ஆர்டர் செய்த ஒரு பீட்சாவை ரத்து செய்ய ஒரு 15 நிமிடப் பேச்சு. நாம் ஆர்டர் செய்த ஒவ்வொரு வகையையும் அவர்களுக்குப் புரியவேண்டிய அதே பதங்களைக் கொண்டு விளக்கிப் புரிய வைப்பதற்குள் பசி அதிகரித்து அந்த ரத்துக் கோரிக்கையை ரத்து செய்யலாமா என்ற நிலை. ஒருவழியாக அந்தத் தொலைபேசி அழைப்பு முடிந்தது. கடைசியிலென்னவோ நாம் ஆர்டர் செய்த அளவே வந்து சேர்ந்தது. தொலைபேசியில் அழைக்காதிருந்தால் ஒரு 15 நிமிடமாவது மிச்சமாகியிருக்கும்.

ஏற்கனவே காரத்தினளவு உச்சந்தலையை வியர்க்க வைக்கும் அளவுள்ள மிளகாய் பஜ்ஜியின் காரம் போதவில்லையென்ற நண்பனுக்காக மிளகாய்ப் பொடி தேடத்தொடங்கி, அடுக்களையிலுள்ள அனைத்து அலமாரிகளையும் திறந்தாகிவிட்டது. கிடைக்கவில்லை. மனைவியைத் தொலைபேசியில் அழைத்துக் கேட்கலாம், “இது கூடத் தெரியல, இந்த வீட்லதானே இருக்கீங்க” என்ற பாட்டைக் கேட்க வேண்டும். வேண்டாமென்று நினைத்தாலும் வேறு வழியில்லை, விருந்தோம்பலுக்கும் வீண்பிடிவாதத்திற்குமிடையே ஒரு சிறு போராட்டம். கடைசியில் எப்போதும்போல் விருந்தோம்பல் வென்றது..

இன்னொரு நண்பர் கனிவுடன் வீட்டிலிருந்து கொண்டுவந்த பண்டத்தை சூடு செய்ய உதவி கேட்கிறார். மைக்ரோவேவ் அவனில் திறனைத் தெரிவு செய்வது எவ்வாறு? மனைவிக்கு இன்னொரு தொலைபேசி செய்யவேண்டுமோ என்ற பதைபதைப்பு மனதில் மறுபடியும். நல்ல வேளை, நண்பர் சற்று சாமர்த்தியசாலி. அவரே கண்டு பிடித்து விட்டார்..

இதற்கு நடுவில் நம்மைக் கேலி செய்துச் சிரிப்பதே பிறவியின் பயனாகக் கொண்ட ஒரு சில நண்பர்கள், நம்மீது கானாப் பாடல்களை எடுத்து விடுகின்றனர். நமக்கும் ஏதோ நாம்தான் அதியமான் நெடுமானஞ்சி என்றும் இவர்களெல்லாம் ஔவை போன்ற புலவர்களாகி நம் பெருமை பாடுகிறார்களென்றும் ஒரு நினைப்பு. பாடுவது புரிகிறதோ இல்லையோ, “சூப்பர்” என்று கைதட்டிச் சிரித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம். தன்னையே கேலி செய்து சிரிக்க இயலாதவர்கள் ஆரோக்கியமான நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களாம், எவரோ எப்போதோ கூறிய பொன்மொழி நம்மை மேலும் பலி கடாவாக்கும் இந்த ஆரவாரங்களில்.

superbowl2013_2_314x383ஆட்டத்திற்கு நடுவில் வரும் “ஹாஃப் டைம் ஷோ” வைப் பற்றிக் கண்டிப்பாகச் சொல்லியாகவேண்டும். ஒவ்வொரு வருடமும் மிகப் பிரம்மாண்டமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி. உலகப் புகழ் பெற்ற பாப்பிசைப் பாடகர்களையோ அல்லது அதற்கு இணையான ஒருவரையோ அழைத்து வருவார்கள். இந்த முறை புகழ்பெற்ற பாடகி, பாட்டெழுதுபவர், நடன மங்கை மற்றும் நடிகையான பியான்சே நோவ்ல்ஸ் (Beyonce Knowles) அவர்களின் நிகழ்ச்சி. மிகப் பிரம்மாண்டம், கண்டிப்பாக கோடிக்கணக்கில் செலவாகியிருக்கும். ஆனாலும் பியான்சே அவர்கள் ஒரு பைசாக் கூட வாங்கவில்லையாம். கொஞ்சம் அதிகமாக உடையணிந்திருந்தால் குடும்பத்தோடு உட்கார்ந்து ரசித்திருக்கலாம். ஆனால் என்ன பாட்டுப் பாடினார்களென்றுதான் புரியவில்லை. அது சரி, TMS க்கும் PBS க்கும் காலங்காலமாய்ப் பழகிய நம் செவிகளுக்கு இவை எப்படிப் புரியும்?

ஹாஃப் டைம் ஷோவிற்குப் பிறகு விளையாட்டுத் தொடர்ந்தது. விளையாட்டுக் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் முடிந்துவிட்டிருந்த நிலையில் ஆட்டம் ஒருதலைப் பட்சமாகப் போய்க் கொண்டிருந்தது. ”எனக்குத் தெரியும், இப்டித்தான் சுவாரசியமில்லாம இருக்கும்னு” என்று அங்கலாய்த்தார் ஒருவர், “என்னால நம்பவே முடியல, எவ்வளவு நல்ல டிஃபன்ஸ், இவ்ளோ மோசமா ஆடுறானுங்க” என்று சோஃபாவில் முழுவதுமாய்ச் சரிந்து காலை சுகமாய் நீட்டிக்கொண்டு இன்னொருவர் சொல்ல, “எல்லா வெறும் மேட்ச் ஃபிக்ஸிங்பா” என்று உலக ஞானத்துடன் ஒருவர் விடையளிக்க.. இன்னும் பல கருத்துக்கள் மாறி மாறி வந்து குவிந்த வண்ணமிருந்தன.

இப்பொழுது திடீரென்று யாருமே எதிர்பார்த்திராத வகையில், அரங்கம் முழுதும் கும்மிருட்டு. கோடிகளுக்கு மேல் கோடிகளாகப் புரளும் சூப்பர் போல் ஆட்டத்தில் மின்வெட்டாம்!! 47 வருட சரித்திரத்தில் கேட்டறிந்திராத ஒன்று, ”தமிழர்கள் நாமனைவரும் ஒன்று கூடிப் பார்ப்பதனால் நமது மாநில அதிர்ஷ்டம் இந்த விளையாட்டையும் தாக்குகிறதோ” என ஒருவர் ராஜ தந்திரத்துடன் கூடிய அரசியல் பேசுகிறார். மொத்த 34 நிமிட இருட்டிற்கு பின் மின்சாரம் மீண்டும் வந்தது. விளையாட்டு நடந்தது.

பின் தங்கியிருந்த அணி ஏதோ மாய மந்திரம் செய்தது போல் அவசர, அவசரமாகப் பல புள்ளிகளெடுத்து முன் வந்தது. ஒரு கட்டத்தில் அவர்கள் வென்று விடுவார்களோவென நினைக்கும் நிலைக்கு வந்தனர். ஆட்டம் தொடர்ந்தது. இந்த நிலையில், நம் கூட்டத்தில் பலர் எவர் வென்றாலெனக்கென்ன என்ற மனோ நிலைக்கு வந்து விட்டிருந்தனர். ஏதோவொரு அணி வெற்றி பெற்றது, நாங்களைனைவரும் ஏதேதோ பேசி முடித்து, ஒவ்வொருவராக புறப்பட, இரவு இனிதே முடிந்தது.

மறுநாள் பொழுது விடிகிறது… நமது வழக்கமான வில்லன் கடிகாரம் அலாரமெனும் இடியை நம் தலைமீது போட, முக்கி முனகி, உருண்டு புரண்டு நாம் எழுகிறோம். லேசான தலைவலி, கண்ணெரிச்சல், உடம்பு வலி. ”நா யாரு, எங்க இருக்கேன்” என்ற வழக்கமான தேடல். வெளியிலெதுவும் சொல்லாமல், சில நிமிடங்களுக்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு, ஒவ்வொரு நிகழ்வாக மனதில் கொண்டு வர முயற்சி செய்தோம்.

”சூப்பர் போலை ஏந்தான் சனிக்கிழமை வைக்க மாட்டேன்றானுங்களோ” புலம்பிக் கொண்டே குளியலறையை நோக்கி நடக்கலானோம். “இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்” வழக்கமான பாடலுடன் மனைவியின் திருப்பள்ளி எழுச்சி பின்னணி இசையாய்க் கேட்டுக் கொண்டிருந்தது….

பொழுது புலர்ந்தது!!!
– மது வெங்கடராஜன்.

Comments (3)

Trackback URL | Comments RSS Feed

  1. Arun says:

    மது, அருமையான தொகுப்பு.

    வீட்டை கட்டி பாரு, கல்யாணத்த பண்ணி பாரு என்பதுபோல் இனிமேல் சூப்பர் போல் பார்ட்டி ஒன்றை நடத்திப் பாரு என்று சொல்ல வேண்டும் என்று நினைக்கிறன்!

  2. லெட்சுமணன் says:

    **//தன்னையே கேலி செய்து சிரிக்க இயலாதவர்கள் ஆரோக்கியமான நகைச்சுவை உணர்வு இல்லாதவர்களாம்,//**

    சுஜாதா சார் இதைப்பற்றி விரிவாக ஒருமுறை விகடனின் ”கற்றதும் பெற்றதும்” பகுதியில் விளக்கியிருப்பார்.

    நல்ல கட்டுரை. சூப்பர் போலில் சூப்பரான விளம்பரம் எது என்ற குறிப்பு விகடனில் படித்தேன்.அதையும் சேர்த்திருக்கலாம்.

  3. Chidambaram says:

    Well, Good kalanthuraiyadal in tamil. M.chidambaram

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad