ஆதிவாசி அமெரிக்க வாச்சீப்பி ஒன்றுகூடல்
மினசோட்டா மாநிலத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாழும் ஆதிவாசிகள் தாம் லக்கோட்டா மக்கள். எமது மாநிலத்தில் பல ஆதி மக்கள் ஒன்று கூடல்கள் நடைபெறுகின்றன. எனினும் வருடா வருடம் எமக்குப் பக்கத்தில் வைச்சிப்பி நடன ஒன்று கூடல் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் வரும் வெள்ளி தொடங்கி சனி மற்றும் ஞாயிறுகளில் நடைபெறுகிறது. இம்முறை சாக்கப்பீ மிடேவாக்கட்டன் சூ ஆதிவாசிகள் சமூகம் ஆகஸ்ட் 16,17 மற்றும் 18 ஆம் திகதிகளில் தமது மைதானத்தில் வாசீப்பியைக் கொண்டாடியது.
வாச்சீப்பி என்றால் என்ன?
வாச்சிப்பியானது சில சமயம் பௌவௌவ் என்றும் அழைக்கப்படும். இது ஆதி மக்கள் வட அமெரிக்கக்கண்ட சகோதர சமூகங்களுடன் ஒன்று கூடிக் குசலம் விசாரித்து தமது நாட்டிய, நடன, பாட்டு மற்றும் இசைகளை ஒருவருக்கு ஒருவர் மகிழ்ச்சியுடன் காட்டி ஒருமிக்கும் கொண்டாட்டமாகும்.
Wacipi வா-சீ-பீ wah-chee-pee என்பது டக்கோட்டா (Dakota) மொழிச் சொல் ஆகும். இது “அவர்கள் நடனம்” எனப் பொருள்படும்.
அவர்களை ஐரோப்பியர்கள் இந்தியர்கள் என்று பிழையாக அடையாளம் கண்டு கொண்டனர். செவ்விந்தியர்கள் என அழைக்கத் தொடங்கினர். இன்று வரையும் அந்தப்பெயர் இம் மக்களைச் சாருவதும் வருத்ததிற்கு உரிய விடயமே.
பிரதான வருகை Grand Entry
இந்தக் கொண்டாட்டங்கள் பிரதான வருகை என்னும் மரபில் ஆரம்பமானது. இதன்போது அமெரிக்கப் படைகளில் போரிட்ட ஆதிமக்கள் வீர்ர்கள், வருகை தந்திருக்கும் வெவ்வேறு ஆதிமக்கள் குழுத்தலைவர்கள், பெரியார்கள் மற்றும் பலவகையான கொடிகள், நாட்டிய உடுப்பு உடையவர்கள் வரிசை வரிசையாக வாத்தியங்கள், மேளங்கள் வாசிக்கப்பட உள்ளே நுழைவார்கள்.
மேள வாசிப்புக்கள் பிரதான குழுக்களிடையே பிரிக்கப்பட்டு நாட்டிய மைதானத்தின் ஒவ்வொரு திக்கிலிருந்தும் இசைத்துப் பாடப்படும். இவற்றில் சில பாடல்கள் தமிழ்நாட்டுக் கிராம ஒப்பாரிப் பாட்டைப் போலவும், இவற்றின் இசை பறை மற்றும் மேளம் வாசிப்பு போலவும் ஒலிக்கின்றனவாம்.
ஆதிவாசிகள் நாட்டியமானது பல்வேறு சூழலில் காணப்படும் பறவைகள், விலங்குகள் அவற்றின் நடையுடை பாவனையை ஓட்டியிருக்கும். எனவே புல் காட்டில் வாழும் காட்டுக்கோழி எவ்வாறு அசையுமோ அதைப்போன்று நடனத்தில் அசைவர் புல்மேட்டுப் பிரதேசக் காட்டு வாசிகள். இது போன்று கழுகு, காகம், எருமையெனப் பல்வேறு வகையான ஆட்டங்களையும் கொண்டிருக்கும் வைச்சீப்பி மைதானம்.
நாட்டிய நடனமானது பலகுழுக்களும் மைதானத்தைச் சுற்றி, சுற்றி வந்து ஆடும் வகையானது.. இதில் குழந்தைகள் தொடங்கி, இளையவர்கள், வாலிபம், பெண்கள் ஆட்டம், ஆண்கள் ஆட்டம், கதைகள் கூறும் நடன அபிநயம் எனப்பல் வேறு போட்டிகளும் வைக்கப்படும்.
இதைவிட நமது ஊர்த் திருவிழாக்கள் போன்றும் இத்தருணம் பெரும்பாலும் ஆதிவாசிக் கலைஞர்களால் ஆக்கப்பட்ட பொருட்களும், லக்கோட்டா மக்கள் சம்பிரதாய உணவுப் பண்டங்களும் (காட்டரிசிக்கஞ்சி) பலதற்காலிகக் கூடாரக் கடைகளில் விற்கப்படும்.
பல்லாயிரம் ஆண்டுகள் இந்தக் கண்டத்தில் வாழும் இம்மக்களும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தரும் மரியாதையும் அமெரிக்கர் யாவருக்கும் ஒரு நல்ல எடுத்துக் காட்டு என்றுதான் சொல்லவேண்டும். அவர்கள் யாவரையும் தமது கொண்டாட்டங்களிற்கு அழைத்து தமது கலாச்சாரங்களையும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளுகிறார்கள்.
யோகி அருமைநாயகம்.