சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் சேர இளவரசன் இளங்கோ அடிகளால் எழுதப்பட்டது. இவர் புகழ் பெற்ற சேர மன்னன் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்றும் அறியப்படுகின்றது.
இக்கதை அந்த நாட்களின் பெரும் அரசுகளான சேர சோழ மற்றும் பாண்டிய நாடுகளில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. சோழ நாட்டின் தலை நகரும் கடற்கரைப் பட்டிணமும் கடல் கொண்டதுமான பூம்புகாரைச் சேர்ந்த கோவலன் மற்றும் அவனது மனைவியான கண்ணகியினது கதையைக் கூறுவதே இந்நூல்.
இந்நூல் இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று ஒரு சாராரும் எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று வேறொரு சாராரும் கூறுகின்றனர்.
இந்நூலில் அக்கால மக்களின் வாழ்க்கை முறை, வணிகச் செழுமை, நகர அமைப்பு, நடைபெற்ற விழாக்கள் மற்றும் பெண்களின் கற்பொழுக்கம் ஆகியவை கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரம் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. இந்நூல் மூன்று பெரும் காண்டங்களாக எழுதப்பட்டுள்ளது
புகார்க் காண்டம்
மங்கல வாழ்த்துப் பாடல்
மனையறம்படுத்த காதை
அரங்கேற்று காதை
அந்திமாலைச் சிறப்புசெய் காதை
இந்திர விழா ஊர் எடுத்த காதை
கடலாடு காதை
கானல் வரி
வேனில் காதை
கனாத்திறம் உரைத்த காதை
நாடுகாண் காதை
மதுரைக் காண்டம்
காடுகாண் காதை
வேட்டுவ வரி
புரஞ்சேரியிறுத்த காதை
ஊர்காண் காதை
அடைக்கலக் காதை
கொலைக்களக் காதை
ஆய்ச்சியர் குரவை
துன்ப மாலை
ஊர்சூழ் வரி
வழக்குரை காதை
வஞ்சின மாலை
அழற்படு காதை
கட்டுரை காதை
வஞ்சிக் காண்டம்
குன்றக் குரவை
காட்சிக் காதை
கால்கோட் காதை
நீர்ப்படைக் காதை
நடுகற் காதை
வாழ்த்துக் காதை
வரந்தரு காதை
பொதுவாக அனைத்து நூல்களும் கடவுள் வாழ்த்து அல்லது கடவுள் காப்பு என்ற பாட்டுடன் தொடங்கும். ஆனால் சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்து என்று இயற்கையை வாழ்த்தித் தொடங்குகின்றது.
திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்
கொங்கலதார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ்
வங்கண் உலகுஅளித்த லான்.
ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்
காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேரு வலம்திரி தலான்.
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்
நாமநீர் வேலி உலகிற்கு அவனளிபோல்
மேநின்று தாஞ்சுரத்த லான்.
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்
வீங்குநீர் வேலி உலகிற்கு அவன்குலத்தொடு
ஓங்கிப் பரந்துஒழுக லான்.
இக்காப்பியத்தின் முழுப்பொருளும் கீழே உள்ள சிறிய பாட்டில் முழுவதுமாக விவரிக்கப்பட்டுள்ளது என்றே கூறலாம்.
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ் வினைச் சிலம்பு காரணமாக,
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடைச் செய்யுள்
-சத்யா-