\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

தமிழ்ச் சங்கக் கோடைச் சுற்றுலா – பெற்றோர் நேர்காணல்

Kannan_mohana_520x390கோடையில் மினசோட்டாத்  தமிழ்ச்சங்கம் நடத்திய சுற்றுலாவில், பனிப்பூக்கள் குழுவினர் சிலர் பங்கேற்றோம். பொழுதுபோக்கும் விளையாட்டுகளில் உற்சாகத்துடன் குழந்தைகளும்  பெற்றோரும்  கலந்துக் கொள்ள அமெரிக்காவில் வாழும் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் காண வந்திருந்த மூத்தவர்கள் பரவசத்துடன் அவர்களைக் கண்டு மகிழ்ந்திருந்தனர்.

அமெரிக்க நாட்டை பற்றியும், குறிப்பாக மினசோட்டாவிலுள்ள  தமிழர் கலாச்சாரம், வாழ்க்கை முறை பற்றிய அவர்களது கருத்தையறிய

மினசோட்டாவில் தங்களது மகள் மற்றும் மருமகன் வீட்டிற்கு வந்திருக்கும் திரு. கண்ணன், திருமதி. மோகனா அவர்களை எங்களது பனிப்பூக்கள் இதழுக்காக பேட்டிக் காண அணுகிய போது மிக மகிழ்வுடன் ஒப்புக் கொண்டனர்.

மார்ச் மாதம் வந்த இவர்கள், பனிக்காலத்தையும், கோடைக்காலத்தையும் ஒரு சேர அனுபவித்ததாகக் கூறினர். வெள்ளைப் பனிப் போர்வை போர்த்தியிருந்த மரங்கள் அடுத்த பத்து நாட்களில் பச்சைப் பசேலென்று மாறியது பற்றி வியந்துக் கூறினார்கள். தங்களது பேரக் குழந்தை மினசோட்டா தமிழ்ப் பள்ளியில் ஆர்வமுடன் படிப்பதும், தமிழ்நாட்டிலேயே பல குழந்தைகள் தமிழை மறந்து விட்ட போதும் இவர்கள் தமிழை மறக்காமல் இருப்பதை மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் குறிப்பிட்டனர்.  அதே போல், இங்கு தமிழ்ச் சங்க விழாக்களில் தமிழர் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்வது, அவர்களிடையே உறவை வலுப்பெறச் செய்வதுடன், உணர்வுப் பூர்வமாக சிந்திக்கவும் வைப்பதை கண்டு மகிழ்வுறுவதாகத் தெரிவித்தனர்.

கடலூரைச் சார்ந்த இவர்கள், தங்கள் ஊரைச் சுற்றிலும் இருக்கும் கோயில்களான வைத்தீஸ்வரன் கோவில், பாடலீஸ்வரர் கோவில், திருவந்திபுரம் கோவில் போன்றவற்றின் சிறப்பைக்  குறிப்பிட்டனர்.

இங்குள்ள உணவு முறைகளைப் பற்றிப் பேச்சு வந்த போது,  ஏறத்தாழ அங்கு கிடைக்கும் அனைத்து உணவு வகைகளும் இங்கும் கிடைப்பதாகக் கருதினார்கள். இருப்பினும் அக்காலங்களில் தங்கள் வீடுகளில் தயாரித்த பழைய சோறும், வடுமாங்காய் ஊறுகாயும் சுவைக்கும் வாய்ப்பு இங்குள்ளவர்களுக்குக் கிடைக்காதது பற்றி சிலாகித்தனர்.  அதைக் கேட்டதும் எங்கள் குழுவில் ஒருவருக்கு நாக்கில் எச்சில் ஊறவே, அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டு விடைபெற்றோம்.

அடுத்து திருவண்ணாமலையை சேர்ந்த தம்பதியினரோடு பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் தனது பள்ளி நாட்களில் ஐந்து கிலோமீட்டர் நடந்து சென்று பயின்றதாகக் குறிப்பிட்டார். இன்று 65 வயதான பின்பும், தனது உடல் நலத்திற்கு அன்றைய உழைப்பும், சத்தான கேழ்வரகு, சாமை போன்ற உணவு முறைகளும் பேருதவியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். பள்ளிக் காலங்களில் சாலையோரங்களில் இருந்த நாகப்பழம் , கோவைப்பழம் போன்ற பழங்களும், தாவரங்களும் தங்களுக்கு மிகவும் சத்துள்ள உணவாக அமைந்ததாக குறிப்பிட்டார்.

இப்போதெல்லாம் ரியல் எஸ்டேட் தொழில் வளர்வதால், விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாறிக் கொண்டிருப்பதாக வருத்தப்பட்டனர்.

அக்காலங்களில் பருவ நிலைக்கு ஏற்றவாறு அரிசி, கம்பு, பருத்தி, கேழ்வரகு போன்ற பொருட்களை மாற்றி மாற்றிப் பயிர் செய்தது பற்றியும் குறிப்பிட்டார்.

அருணாச்சலேஸ்வரர் கோவில் பற்றி மிகவும் விரிவாக எடுத்துரைத்தார் இவர்.  பிள்ளைகளுக்கு வீடுகளில் தமிழ்ப் பேசும் வாய்ப்பு மிகவும் குறுகிக் கொண்டுள்ளது.  பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்வதால், குழந்தைகள் காப்பகத்தில் வளர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் தமிழ் மொழிப் பற்றி அறிமுகம் இல்லாமலே வளர்கின்றனர்.   குழந்தைகள் தமிழில் பேசாததால், தாத்தா பாட்டிகள் தங்களது அன்பைச் செலுத்த வழியில்லாமல் போய் விடுகிறது என்று வருந்தினர்.

தமிழ்ச் சங்கம் நடத்தும் கலை நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றில் குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் கலந்து பழகும் போது தமிழில் உரையாட வாய்ப்புக் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் தமிழ்ச் சங்கத்தின் தமிழ்ப் பள்ளி ஒரு சிறந்த முயற்சி. இதன் மூலம் குழந்தைகள் தமிழ் கற்க  அருமையான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகக் கூறினார்.

இவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டு இவர்களுடன் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த மற்றொரு தம்பதியினரைப் பேட்டிக்காக அணுகினோம்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா, நல்ல பெருமாள் பட்டியைச் சேர்ந்த திரு. பிச்சை அவர்களையும் அவரது மனைவியையும் சந்தித்து பேசினோம். திரு. பிச்சை நீதிபதியாக பணியாற்றி ஒய்வு பெற்றவர். தனது பள்ளி அனுபவங்களைப் பற்றி பேசுகையில், தான் மூன்றாம் வகுப்புப் படிக்கும் போது அவருடைய ஆசிரியர் அவரைப் பள்ளியின் நிதியமைச்சராக நியமித்து தவறு செய்யும் மாணவர்களிடமிருந்து பழங்கால ஓட்டைக் காலணாவை தண்டனைக் கட்டணமாக வசூலிக்கச் செய்தாராம். இவரும், அது போன்றே கட்டணம் வசூலித்து அவற்றைக் கயிற்றில் கோர்த்து கழுத்தில் சங்கிலி போன்று அணிந்து கொண்டிருந்தாராம். ஒரு நாள் விளையாடும் போது அதைத் தவற விட்டுவிட்டு ஆசிரியரிடம் தண்டனை பெற்றதைத் தன் வாழ்நாள் முழுதும் மறக்க முடியாது எனத் தெரிவித்தார்.

Pichai_and_his_wife_2_520x371உணவுப் பழக்க வழக்கங்கள் பற்றிப் பேசும் போது பழங்காலத்தைப் போல இப்போது உடல் உழைப்பு இல்லாததால், பல நோய்கள் பரவி வருவதைக் குறிப்பிட்டனர். கடுமையான உடல் உழைப்புக்குப் பின், சாப்பிடும் பழைய சோற்றுக்கு ஈடு இணை இல்லை என்று இவர்களும் குறிப்பிட்டனர். அரிசிக்கு பதிலாகச் சாமை, கேழ்வரகு, கம்பு போன்ற பொருட்களில் கிண்டப்படும் களி மிக ஊட்டச்செரிவு மிகுந்தது என்றும் குறிப்பிட்டனர்.  உடல் உழைப்பும், சத்தான உணவும் பழங்கால மனிதர்களின் வலிமைக்கு காரணமாக அமைந்ததாகக் குறிப்பிட்டனர்.  பழங்காலங்களில் கிணறுகளில்  25 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்தது. அப்போது அனைத்து கனிமப் பொருட்களும் கலந்து இருந்ததால் தண்ணீர் சுவை மிகுந்து விளங்கியது. இப்போதெல்லாம் 150 அடி ஆழத்திற்கு மேல் தோண்டினால் தான் தண்ணீர் கிடைக்கிறது. அது சுண்ணாம்பும், உப்பும் கலந்து வருவதால் தண்ணீர் சுவையின்றி இருக்கின்றது என்ற கருத்தைத் தெரிவித்தார்.

தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் பற்றிப்  பேசுகையில் இவர் தெரிவித்த கருத்துகள் சில –

வீட்டில் இருக்கும் பெற்றோர்கள், கட்டாயமாக வீட்டில் குழந்தைகளுடன் தமிழில் பேச வேண்டும். எவ்வளவு தான் வெளியில் குழந்தைகள் பலவற்றைக் கற்றாலும்,

தாய் மொழி என்று வருகையில் அவர்கள் வீட்டில் பெற்றோரின் செயல்பாடுகளில் இருந்தே அதைக் கற்கின்றனர். எனவே குழந்தைகள் தமிழ் மொழியையும் பாரம்பரியத்தையும் கற்றுக் கொள்ள பெற்றோர்கள் பெரும் பங்கு வகிக்க வேண்டும்.

தமிழ்ச் சங்கம், பள்ளி போன்ற அமைப்புகள் மொழி கற்பிப்பது மட்டுமின்றி தமிழர் கலாச்சாரம், இலக்கியம் போன்றவற்றைத் தொடர்ந்து பேசி வந்தால், சிறு குழந்தைகள் நெஞ்சில் அவை பசுமரத்தாணி போல் பதியும். அவர்களுக்கு அதைக் கேட்கக் கேட்க மொழி மீது ஈடுபாடு ஏற்பட்டு தானாகவே மொழி கற்றுக் கொள்ள முன் வருவர். அதை விடுத்து தமிழ் படிக்கும்படி அவர்களை வற்புறுத்துவது அவர்களுக்கு ஒரு அயற்சியை ஏற்படுத்தும்.

அதே போன்று கலாச்சாரத்தையும் சேர்ந்து கொடுக்க வேண்டும். உடை, மற்றும் பழக்க வழக்கங்களும் வீட்டில் பெற்றோரை பார்த்து குழந்தைகள் கற்றுக் கொள்கிறார்கள். எனவே இவற்றைக் கற்றுத் தருவது பெற்றோரின் தார்மீகக் கடமை.

தனது பணி சார்ந்து வட நாட்டிலிருந்து வரும் குடும்பங்களில், குழந்தைகள் பள்ளியில் ஆங்கிலம் படித்தாலும், சுற்றுப்புறத்து நண்பர்களுடன் தமிழில் பேசினாலும், வீட்டில் பெற்றோர்களுடன் பேசுகையில் தங்களது தாய் மொழியிலேயே பேசுகின்றனர். ஆனால் தமிழகக் குடும்பங்களில் பெற்றோர்களே தங்கள் பிள்ளைகளை ஆங்கிலத்தில் பேசுமாறு வற்புறுத்துவது வருத்தத்துக்குரிய விஷயம்.

பின்னர் தனது மகன், மருமகள் வீட்டிற்கு வருகை புரிந்திருக்கும் திருமதி. தேவசேனா அவர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தோம்.

மினசோட்டா பற்றிய அவரது கருத்துக்கள் –

தமிழ் நாட்டில் தமிழ் பேசும் வாய்ப்பு அதிகம். வீட்டிலும் வெளியிலும் அனைத்து இடங்களிலும் தமிழ் தெரிந்தவர் நிறைந்திருப்பர். இங்கு அது போன்ற வாய்ப்புகள் குறைவு. இது போன்ற தமிழ்ச் சங்க நிகழ்வுகள், கோவில்,  தமிழ்  தெரிந்த நண்பர்கள் வீடு போன்ற இடங்களில் மட்டுமே தமிழ் பேசும் மனிதர்களைக் காண முடிகிறது.  அந்தச் சமயங்களில் மனதில் இனம் புரியா மகிழ்ச்சி தோன்றும். நம் மக்கள், நம் சகோதர சகோதரி என்ற ஒரு பாசமும், சந்தோஷமும்  உண்டாகும்.

திருச்சிக்கும், மினசோட்டாவுக்கும் ஒப்பிடுகையில், திருச்சியில் வீடுகள் நெருங்கி இருப்பதால் காற்றோட்ட வசதிகள் கிடையாது. இங்கு அது போலல்லாமல் வீடுகள் இடைவெளி விட்டு இருப்பதாலும், மரங்கள் நிறைந்திருப்பதாலும் காற்றோட்டம்  அதிகமாக உள்ளது. இங்கு நல்ல,  சுகாதாரமான வாழ்க்கை வாழ முடிகிறது.

வசதிகள் நிரம்ப இருந்தாலும் அங்கிருக்கும் மனித உறவுகள் இங்கு இல்லையென்றே தோன்றுகிறது. அங்கு மனிதர்கள் ஒருவருக்கொருவர் பிரியமாக இருப்பார்கள். இங்கு அவரவர் அவரவர் வேலையை பார்த்துக் கொள்வதினால் மனிதப் பிணைப்பு குறைவாக உள்ளது. சமைக்க / சாப்பிடக் கூட நேரமில்லாமல் அவரவர் ஃபிரிட்ஜில் சேமித்து வைத்து ஏதோ கடனே என்று சாப்பிட்டு விட்டுச் செல்கிறார்கள். ஊரில் சமைக்கும் முறையே சிறப்பாக இருக்கும். வேப்ப மரக்கிளைகள் பயன்படுத்தி அடுப்பு மூட்டி பிரியாணி செய்வது உணவுக்கு ஒரு தனி மணத்தை கொடுக்கும். இங்கு அனைத்தும் மின்சாரப் பொருட்களில் செய்வதால் உணவில் சுவை இருப்பதில்லை.

தனது மகன் மற்றும் அவரின் குடும்பத்தினருடன் கோடையைக் கழிக்க வந்திருந்த ஒருவருடன் அடுத்து பேசினோம். இவர் வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். எனினும் கவிதைகள் எழுதுவது இவருக்குப் பிடித்த பொழுது போக்கு. தமிழ்ச் சங்க மகிழ்வுலாவில் நடந்த போட்டி முடிவுகளை அறிவித்த போது, இயல்பாய்ச் சட்டென அங்கேயே ஒரு கவிதை இயற்றிப் படித்தார்.

மினசோட்டா அனுபவங்கள் பற்றி அவர் கூறிய  கருத்துக்கள் சில.

Thiruvannamalai_family_520x312இங்கு பல இடங்களில் பல தமிழர்களை பார்க்க முடிந்தது. ஆனால் தமிழ் மக்களிடையே ஒற்றுமை குறைந்து காணப்படுகிறது. தமிழர் வரலாறே இது போன்ற ஒற்றுமைக் குறைவால் தான் சீர் கெட்டது. அது இன்னமும், இங்கு வந்த பின்பும் தொடர்வது வருத்தத்தைத் தருகிறது. இதற்குப் பொருளாதாரச் சூழலும் ஒரு காரணமாக இருக்கலாம்.  இனி வரும் தலைமுறையினருக்காவது இது போன்ற வேற்றுமைகள் மனதில் ஊன்றாமல்,  ஒற்றுமையாக வாழ அறிவுறுத்த வேண்டும்.

தமிழ் மொழியின் நிலை உலகளாவிய அளவில் மேம்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்போதெல்லாம், ‘வணக்கம்’ என்ற சொல்லை அதிகம் கேட்க முடிகிறது. இருப்பினும் தமிழில் அறிவியல் படைப்புகள் வளர்ந்தால் இன்னும் விரைவாகத் தமிழ் வளர வாய்ப்புகள் உண்டு.

நேர்மையுடன் கடுமையாக உழைத்தால் வாழ்க்கையில் உயர்வது நிச்சயம். கிராமங்களில் விவசாயம் குறைந்து, விளை நிலங்கள் வீட்டு நிலங்களாக மாறி வருவதால், விவசாயம் நசிந்து வருகிறது. விவசாயிகள் தங்கள் நிலங்களை விற்று விட்டு வேறு தொழில்களை நாடிச் செல்கின்றனர். இது இப்படியே தொடர்ந்தால் உணவுத் தட்டுப்பாடு தோன்றும். வறுமையில் இருந்த போது, தங்கள் தாய் குடும்பத்தினர் அனைவருக்கும் பழஞ்சோறு கொடுப்பார்கள் என்றும், அதிலிருந்த சுவை அதன் பின்னர் தான் சாப்பிட்ட உயர்ரக உணவுகளில் கூட கண்டதில்லை என்றும் நினைவு கூர்ந்தார்.

இது போன்ற சங்க கூட்டங்களும், நிகழ்ச்சிகளும் மக்களிடையே ஒற்றுமைக்கு  வழி கோலும். ஆகையால் தொடர்ந்து இது போன்ற நிகழ்ச்சிகள் அதிகம் நடத்தப்படவேண்டும்.

–   நேர்காணல் : பனிப்பூக்கள் குழுவினர்

 –  தொகுப்பு: ரவிக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad