\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஆரம்பம்

Arrambam-movie_620x969தமிழ்த் திரைப்படங்கள் மேற்கத்திய திரைப் படங்களைப் போல பிரம்மாண்டமான முறையில் வர ஆரம்பித்துக் காலங்கள் பல ஆகிவிட்டன. ஒரு நூறு மைல் வேகத்தில், தடையேதுமில்லாத அகலமான நெடுஞ்சாலைகளில், பல கார்கள் பறந்து செல்வதும், அதன் மத்தியில் கதா நாயகனும், வில்லனும் துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில் ஒருவரை ஒருவர் காரில் துரத்திக் கொண்டு பயணிப்பதும் சர்வ சாதாரணமான காட்சிகள். இந்தியா ஏழை நாடு, சுமார் முன்னூறு மில்லியன் மக்கள் நாளுக்கு ஒரு டாலருக்கும் குறைவான சம்பளத்தில் வாழ்க்கை நடத்துகின்றனர் என்பதெல்லாம் இது போன்ற படங்களைப் பார்க்கும் பொழுது நம்பற்கரிய விஷயம்.

பிரம்மாண்டமான தொடக்கம். மும்பை நகரில் மூன்று இடங்களில் ஒரே சமயத்தில் மிகப் பெரிய அளவில் குண்டு வெடிப்பு நிகழ்கிறது. நடத்துபவர் நம் தலை அஜித்குமார். மெருகேறிய தோற்றம். வெள்ளையும் கருப்பும் கலந்த பெப்பர் சால்ட் எனப்படும் சிகையலங்காரம் (அலங்காரமல்லாத நிஜமெனத் தோன்றுகிறது), சற்றே எடுப்பாய்த் தெரியும் இயற்கையான தொப்பை (சிக்ஸ் பேக்ஸ் பவனிவரும் இந்த நாட்களில், இப்படித் தெரிவதற்கு தைரியம் வேண்டும்), நேர்த்தியான கூரிய பார்வை, பக்குவம் மிகுந்த தோற்றம், வேகத்தை விட விவேகத்தையும், நிதானத்தையும் நம்பும், நம்பிக்கை மிகு பாத்திரம். எடுத்துக் கொண்ட பாத்திரத்தை மிகவும் சிறப்பாகச் செய்து முடித்துள்ளார் அஜீத்குமார். நடுத்தர வயதில், இளமையில் இருந்ததை விடப் பல மடங்கு வசீகரம் காட்டியுள்ளார் அஜீத்குமார்.

இவருடன் பார்ப்பதற்கு வாட்ட சாட்டமான, உயரமான உருவம் ஆர்யா – வந்து போகிறார் என்று சொல்லலாம், அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இன்றைய போட்டி மிகுந்த திரைப்பட உலகில் இந்த மனிதர் இன்னும் முன்னேற்றிக் கொள்வதற்குப் பல விஷயங்கள் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. இல்லையாயின்   உயரங்களைத் தொடுவது கடினமே. நடிப்பதற்கு நல்ல வாய்ப்பு இருந்த பாத்திரமாகவே தெரிகிறது, அதனைப் பெரிய அளவில் உபயோகப் படுத்தவில்லை என்பதே நமது கருத்து. அவரின் பள்ளிப் பருவ ஃப்ளாஷ் பேக் காட்சிகளெல்லாம் பார்ப்பதற்கு நமக்குப் பொறுமை நிறைய வேண்டும். புகை பிடிப்பவர்கள் மற்றும் டீ, காஃபி குடிப்பவர்கள் இண்டெர்வல் தவிர இந்த நேரத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நயன்தாரா – முகத்தை மெலிதாய் வருடும் தென்றலாக சில நேரங்களில் பரிமளிக்கிறார். சில சமயங்களில் வஞ்சத்தை அளவான முறையில் காட்டி, கண்களின் ஓரத்தில் கண்ணீர் தேக்கி வைத்து, நம்பிக்கை மிகுந்த, புத்திசாலியான ஆனால் வன்மம் மிகுந்த பெண்ணாகக் காட்சியளிக்க வேண்டிய நேரங்களில் கனகச்சிதமாகப் பொருந்துகிறார். கிளுகிளு இளமைக்காக மட்டுமே இவரைப் பாராட்டுவது இவரின் மொத்தத் திறமைக்கும் நாம் மதிப்பளிக்கவில்லை என்பதையே குறிக்கிறது. பெரிய அளவில் கிளுகிளுப்பு இல்லையெனினும், அஜீத்குமாரின் ஆள்மாறாட்டத்திற்கு உதவ அந்த நிஜமான ஏஜண்டை லிஃப்டில் மயக்கி, ஹோட்டல் ரூமில் துப்பாக்கி முனையில் மடக்குகையில், பதின் பருவத்திலிருந்து பல்போனக் கிழம் வரை அனைவரையும் வாயில் ஈ நுழைவது தெரியாமல் பார்க்கச் செய்கிறார் என்றால் மிகையாகாது. இவ்வளவு ஆண்டுகளாக கவர்ச்சியைக் கட்டுக்கோப்பாய்க் காட்டுவது பாராட்டத் தகுந்ததே. இவரின் பள்ளிப்பருவ காட்சிகளாகக் காட்டப்படுவதும் பெரிய அளவில் ரசிக்கும்படியாக இல்லை என்பதுதான் உண்மை. ஒரே ஆறுதல் இவர்களிருவரின் பள்ளிப் பருவக் காட்சிகளும் மிகக் குறைந்த நேரமே திரையில் வருகிறது என்பதுதான்.

ஆர்யாவுக்கு ஜோடியாக டாப்சி பன்னு (Tapsee Pannu) என்னும் புதுதில்லியில் பிறந்த பஞ்சாபி நடிகை. எண்பதுகளில் கூறப்பட்ட “மைதா மாவு பொம்மை” என்ற உருவகத்திற்கு மிகச் சரியாகப் பொருந்துகிறார். நடிப்பதற்கு பெரிய அளவில் சந்தர்ப்பம் இருப்பதாகக் கூற இயலாது, அப்படியே இருந்திருந்தாலும் பெரிய அளவு நடித்திருப்பார் என்றும் நம்ப இயலவில்லை. அது சரி, இது போன்ற இளம் வடநாட்டு நடிகைகளைப் பார்க்க வரும் ரசிகர்கள் பெரும்பாலும் நடிப்பைப் பார்ப்பதற்காக வருவதில்லை என்பதை இயக்குனர்கள் நன்றாக உணர்ந்து தானுள்ளனர்.

பில்லா படத்தை இயக்கிய விஷ்ணுவர்த்தன் இந்தப் படத்தின் இயக்குனர். பில்லா   எடுத்த தாக்கத்திலிருந்து இன்னும் மீளவில்லையென்றுதான் சொல்ல வேண்டும். பிரம்மாண்டம், கார் சேஸிங், துப்பாக்கிச் சூடு, ரத்தம், அலட்சியமான பார்வைகள், கணினி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சம்பத்தப்பட்ட விஷயங்கள், இத்யாதி இத்யாதி என எல்லாமே பில்லா படங்களையே நினைவு படுத்துகின்றன. ஃப்ளாஷ் பேக்கில் வில்லன் கூட்டம் கதாநாயகனைச் சார்ந்தவர்களைக் கொடுமைப் படுத்துவதற்கென பல யுக்திகளைக் கண்டுபிடிப்பதற்கெனவே ரூம் போட்டு யோசிக்கிறார்கள் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. ஒரு ஐம்பது அறுபது வருடங்களாக இதுபோன்ற கொடுமைகளைப் படமாய் எடுத்து புளிக்கச் செய்து விட்டனர் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

கதை என்று பெரிதாய் ஒன்றுமில்லை. தீவிரவாதக் கும்பலைப் பிடிப்பதற்கான தீவிரவாத எதிர்ப்புக் குழு (Anti-Terrorism Squad) உபயோகப்படுத்தும் குண்டு துளைக்காத கவச உடை (Bullet-proof Vest) வாங்குவதில் நடந்த ஊழலின் காரணமாக ஒரு துப்பாக்கிச் சூட்டில் நண்பனை இழக்கும் அஜீத்குமார், அந்த ஊழலுக்குப் பின் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க எத்தனித்து, தனது குடும்பம் முழுதும் இழக்கிறார். அவர்களைப் பழிவாங்க கணிப்பொறி பொறியாளர் ஆர்யாவின் உதவியுடன் பல அட்டுழியங்கள் புரிகிறார். ஜாய்ண்ட் கமிஷனர் ஆஃப் போலிஸ் தொடங்கி உள்துறை அமைச்சர் வரை அனைவரும் வில்லன் கூட்டத்தைச் சார்ந்தவர்கள், அவர்கள் அனைவரையும் அழித்து முடிக்க, சுபம்.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் சில பாடல்கள் படத்தில் வருகின்றன. பாடல் காட்சி ஓடும்பொழுதும், பாடல் மனதில் ஏறவில்லை. படத்தை விட்டு வெளியே வரும்பொழுதும், மனதில் முணுமுணுக்கவெனப் பாடல்கள் ஏதுமில்லை. அது இசையமைப்பாளரின் குறையா இல்லை டி.எம்.எஸ் மற்றும் பி.பி.எஸ் பாடல்களையே இன்றும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் நம் போல் பழம்பஞ்சாங்கங்களின் ஞானகீனமாவெனச் சரியாகச் சொல்ல இயலவில்லை.

முதல் பாதிப் படம் விறுவிறுப்பாகப் போகிறது என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. இரண்டாம் பாதி அதற்கு நேரெதிராக இருப்பதாக நம் எண்ணம். நிஜமான வில்லன்களெல்லாம் பல மடங்கு முன்னேறி விட்டனர், இன்னும் கர்ப்பிணிப் பெண்களையும், கையாலாகாத வயோதிகர்களையும் கொலை செய்வது போல் காட்டுவதைக் கைவிடுவது இயக்குனர்களுக்கு நல்லது. பல புதிய இயக்குனர்கள் கதையையும், கதை சொல்லும் விதத்தையும் மிகவும் சிறப்பாய்ச் செய்யும் இக்காலத்தில் இது போன்ற மசாலாக்களைத் தவிர்ப்பது நல்லது. இல்லாவிடின், திரையுலகில் இந்தப் படைப்பாளிகளின் உயர்வுக்கு ஆரம்பம் போன்ற படங்கள் முடிவாய் அமைந்து விடுவது சாத்தியம்.

வெ. மதுசூதனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad