\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

இருபத்தி நான்கு மணி நேரம்

Filed in இலக்கியம், கதை by on December 5, 2013 0 Comments

24-hours_620x443முன்குறிப்பு: ஆங்கிலத் தொலைக் காட்சித் தொடர் “24” பார்த்திருப்பீர்கள். அதனை அடியொற்றித் தமிழில் ஒரு தொடர்கதை எழுதலாமென்ற யோசனை இன்று காலை படுக்கையை விட்டெழும் பொழுது தோன்றியது. உடனே செயல்படுத்தத் துவங்கினோம். அந்த ஆங்கிலத் தொடரில் வருவது போல், இந்தக் கதையில் நடக்கும் சம்பவங்கள் நிஜ மணித்துளிகளில் (Real-time) நடந்தேறுகிறது. அதைவிடுத்து வேறெந்த விடயமும் அந்தத் தொடரைப் பார்த்து எழுதப்பட்டதல்ல என்பதை இப்பொழுதே உறுதிமொழியாய் உரைக்கின்றோம்.

திங்கட் கிழமை காலை 8.00 மணி

கணேஷ் – நம் நாயகன், குறைந்தபட்சம் இனி வரும் இரண்டு மணி நேரத்திற்கு நாயகன். அதன்பின்னர் என்னவாவோனோ, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அதிகாலையில் எழுந்து, காலைக்கடன்கள் முடித்து, குளித்து கல்லூரி புறப்படத் தயாரானான். அன்று அவனின் மூன்றாம் பருவத் தேர்வு. முதல் தேர்வு ஆங்கிலப் பாடம். அவனுக்கு அவ்வளவாக வராத பாடம், ஆனாலும் எல்லாவற்றையும் நன்றாக மனப்பாடம் செய்து வைத்திருந்தான். புரிகிறதோ இல்லையோ, கேட்கப்படும் கேள்விகள் அனைத்திற்கும் அட்சரம் பிசகாமல் பதில் எழுதும் அளவுக்கு பலமுறைத் திரும்பத் திரும்பப் படித்து கடம் உருட்டி வைத்திருந்தான். உடன்படிக்கும் சகதோழி பாரதியைவிட ஒரு மதிப்பெண்ணாவது அதிகமாக எடுத்துவிடவேண்டும் என்பதை ஒரு வைராக்கியமாகவே கொண்டிருந்த கணேஷ்.

முழுவதுமாகத் தயாரானபின், வீட்டின் பூஜையறையின் முன்னின்று தன் விருப்பமான கடவுளுக்கு இன்னுமொரு முறை வணக்கம் வைத்துப் புறப்படத் தயாரானான். ஆடையணிகையில், காலணி அணிகையில் என ஒரு கணமும் விடாமல் தனது பழைய தமிழாசான் ஸ்ரீனிவாசன் ஐயா எழுதிய பிள்ளையார் பட்டி வினாயகர் துதியை மனம் முழுதும் சொல்லிக்கொண்டே கல்லூரிக்குப் புறப்படத் தயாரானான் கணேஷ். அம்மாவின் வாழ்த்தையும், வழியனுப்பலையும் முழுவதுமாகப் பெற்றுக் கொண்டு பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினான் கணேஷ். வீட்டிலிருந்து பத்து நிமிட நடைப் பயணம் பேருந்து நிலையத்திற்கு, எட்டு மணி இருபது நிமிடங்களுக்கு வரும் பேருந்து 1A பிடித்துச் சென்றால், கல்லூரியினருகே எட்டு ஐம்பதிற்கு இறக்கி விடும், ஒன்பதரை மணித் தேர்வுக்கு மிகச் சரியாக இருக்கும்.

இரண்டு புத்தகங்களைக் கையில் பிடித்துக் கொண்டு தலையைக் கோதிவிட்ட வண்ணம் இன்றைய இளைஞனுக்கே உரித்தான அத்தனை ஸ்டைலுடன் நடந்து பேருந்து நிலையம் வந்து சேர்ந்தான் கணேஷ். வழக்கம் போல அவனுக்கு முன்னரே வந்திருந்த நண்பர்கள் பிரகாஷ், வைரவன், சிதம்பரம் மற்றும் மணி அவன் வருகைக்காகவே காத்திருந்தனர். அனைவரும் ஒன்றாக “வணக்கம் மாப்ளே, டாண்ணு டையத்துக்கு வந்துட்டே, நம்ப ஒண்ணு ஏ வர்ர டயம் மாப்ளே… எல்லாம் படிச்சுட்டியா ? ஒனக்கு என்ன மாப்ளே, ஒங்காளு தனியா ஒரு ட்யூஷனே எடுத்துருப்பா” எனத் தங்களின் பாரதி கணேஷ் மேல் காட்டும் அக்கறையின் வயிற்றெறிச்சலை அளவாய்க் கொட்டிக் கொண்டிருந்தனர். கணேஷ் இதனைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. இன்னும் ஐந்து நிமிடங்களில் வந்து சேரும் பேருந்தும், அந்தப் பேருந்தில் இரண்டு நிறுத்தங்களுக்கு முன்னரே ஏறி அதனுள் அமர்ந்திருக்கும் தன் பளிங்கு தேவதை பாரதியையும் பற்றிய நினைப்பாகவே நின்று கொண்டிருந்தான்.

திங்கட்கிழமை காலை எட்டு மணி இருபது நிமிடம்

எப்பொழுதும் போல் ஒரு ஐந்து நிமிடங்கள் தாமதமாக 1A பேருந்து வந்து நின்றது. வழக்கமாக வரும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர். கல்லூரிச் சாலை வழியே செல்லும் என்பதால் பெரும்பாலானவர்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர், அலுவலர்கள் மட்டும் தான். எப்பொழுதும்போல் பின்பக்கக் கதவின் வழி ஏறத் தொடங்கிய கணேஷ், வழக்கமாய்க் கடைசி வரிசையில் அமர்ந்து தனக்காக ஒரு இடம் போட்டு வரும் பாரதியைப் பார்க்க அதேபோல் அவளும் ஒரு இடத்தைப் பிடித்து வைத்திருந்தாள். நண்பர் அனைவரும் பொறாமைப் படும் வண்ணம், அவர்களின் பெருமூச்சைக் கண்டு கொள்ளாதவாறு தனது நாயகியின் அருகில் சென்று அமர்ந்தான் கணேஷ். மல்லிகைப்பூ மற்றும் அவள் அணிந்த செண்டின் மணம் தூக்கலாகத் தெரிய தன்னை மறந்து அருகே அமர்ந்தான் கணேஷ்.

“என்ன, படிச்சுட்டியா?” முதல் வார்த்தையே அதுதான். “சுமாராப் படிச்சுருக்கேன்” சற்றுத் தயக்கத்துடன் பதில் கொடுக்க, “நோக்கு நன்னாத் தெரியும், நான் என்ன எதிர் பார்க்கிறேனுட்டு, அதுக்கு ஒரு மார்க்கு கொறஞ்சுதுனாலும் அவ்ளோதான், சொல்லிட்டேன்” என அப்பாவிற்கு மேலாக மிரட்டினாள் பாரதி. தன்மீது இவ்வளவு அக்கறையுள்ள இவளையா வென்று காட்ட வேண்டுமென்று நான் நினைத்தேன், சற்றே வெட்கித் தலைகுனிந்தாலும், தான் ஆண்பிள்ளை என்பதைக் காட்ட இதுவும் ஒரு அளவுகோல் என நிஜமாகவே நம்பிய கணேஷ் அவளின் அக்கறையைக் காட்டிலும், அவளை விட அதிகமாக மதிப்பெண் பெறவேண்டுமென்பதில் மிகவும் குறியாக இருந்தானென்பதுதான் உண்மை.

திங்கட்கிழமை காலை எட்டு மணி நாற்பது நிமிடம்

பேசிக் கொண்டே செல்கையில், பேருந்து இரண்டு மூன்று நிறுத்தங்களைத் தாண்டிச் செல்கிறது. கிராமங்களைக் கடந்து வெளிப்புறப் பைபாஸ் சாலையில் செல்லத் தொடங்கியிருந்தது பேருந்து. அடுத்த நிறுத்தம் வர இன்னும் சில மணித்துளிகள் ஆகுமென்ற தைரியத்தில் ஓட்டுனர் மூன்றாம் கியரைத் தொட்டு அதிவேகமாகப் பேருந்தை ஓட்டத் தொடங்கியிருந்தார். நடத்துனர் பேருந்தின் பின்னிருந்து தொடங்கி முன்னோக்கி நடந்து ஒவ்வொருவரிடமும் பயணச் சீட்டு வாங்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டே முன்னேறிக் கொண்டிருந்தார். பாரதிக்கு அருகில் அமர்ந்திருந்த வயதான கிராமத்துப் பெண்மணி “பட்டுக் கடப்பாங்க, என்ன எளவுக்கு இம்புட்டு வேகமாப் போறாய்ங்களோ, அப்பிட்யே பரலோகம் போரத்துக்கோ என்னமோ” எனத் தன் மரணபயத்தைத் திட்டித் தீர்ப்பதின் மூலம் சரி செய்து கொண்டிருந்தாள்.

பாரதியின் பேச்சைக் கேட்டுக் கொண்டே இடது புறம் திரும்பி சன்னல் வழியாக வெளிப்புறம் பார்த்த கணேஷுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியாய் அந்தக் காட்சி தென்பட்டது. தான் பார்ப்பதும் தான் புரிந்து கொண்டது சரிதானா எனக் கண்களை ஒருமுறை கசக்கி மீண்டும் பார்க்கிறான் கணேஷ். இடது புறம் தெரிந்த பச்சைப் பசேலென்ற வயல்வெளிக்கு நடுவிலே இரண்டு மனிதர்கள்…

ஒருவன் தலையைக் குனிந்து கொண்டு இன்னொருவனின் பிடியில். பிடித்துக் கொண்டிருந்தவன் கையில் எதையோ வைத்துக் கொண்டு அவனின் வயிற்றில் ஓங்கிக் குத்துகிறான். தூரத்திலிருந்த ஓடும் பேருந்திலிருந்து பார்க்கையில் என்னவென்று தெளிவாகத் தெரியாவிட்டாலும், ஒரூ யூகத்தில் பார்க்கையில், ஒருவன் கையில் கத்திபோல் ஒரு பெரிய ஆயுதம் வைத்துக் கொண்டு மற்றொருவனை வயிற்றில் ஓங்கிக் குத்துவது போலத் தோன்றுகிறது. வளைந்து செல்லும் சாலை இந்தக் காட்சியை அதிக நேரம் காண்பதற்கு ஏதுவாக இருக்க, இது நிச்சயமாக அதுதான் என யூகித்துக் கொண்ட கணேஷ் அதிர்ச்சியுடன் உடனடியாக

“வண்டிய நிறுத்துங்க”

எனக் கூக்குரலிடுகிறான். இவனின் அவசர கதியில் வந்த குரலைக் கேட்க, நடத்துனர் ஒரு கணம் நிலைகுலைந்து என்ன நடக்கிறதென்று புரியாமல் “விசில்” அடிக்கிறார். ஓட்டுனரும் அவரின் விசிலுக்குக் கட்டுப்பட்டு வண்டியை உடனடியாக நிறுத்துகிறார்.

24-hours_2_620x349“எவண்டாவன், வண்டிய நிறுத்துனது.. என்னாச்சு” என நடத்துனர் குரல் கொடுக்க, அதனைச் சட்டை செய்யாமல், “மாப்ளே, கீழே இறங்குங்கடா” எனக் கூவிக் கொண்டே கணேஷ் கீழே குதிக்கிறான். தங்களது நண்பனின் குரலைக் கேட்டும் பின்னர் அவன் அவசரமாய் இறங்குவதைக் கண்டதும் பிரகாஷ், வைரவன், சிதம்பரம் மற்றும் மணி ஒவ்வொருவராக அவசர அவசரமாய் அனைவரையும் தள்ளிக் கொண்டு கதவுக்கு அருகே வந்து கீழே குதிக்கின்றனர். பார்த்துக் கொண்டிருந்த பாரதி, “கணேஷ், என்னாச்சு நோக்கு, எதுக்காக கீழே இறங்குற?” எனக் கேட்க, வெளியே குதித்து விட்ட கணேஷ் சன்னல் வழி நோக்கி “நீ போயிடு பாரதி, நா அடுத்த பஸ்ஸில வர்ரேன்” ஆணினத்திற்கே உரிய தன் பெண்ணைக் காக்கும் பாதுகாப்பு உணர்வுடன் அவளை அனுப்பி வைக்க எத்தனிக்கிறான். இதற்குள் கடுமையாகக் கோபம் கொண்ட நடத்துனர் “டேய், என்னடா வேணும் ஒங்களுக்கு, பஸ்ஸுல வர்ரலன்னா கீளே இறங்குங்கடா” எனக் கூறி, அவசர அவசரமாய் விசில் அடிக்க ஓட்டுனரும் அவரின் விசில் சத்தத்துடன் வண்டியைக் கிளப்பிக் கொண்டு செல்கிறார். “கணேஷ், எக்ஸாம் நேரத்தில தேவையில்லா பிரச்சினையில மாட்டிக்காத” என்ற பாரதியின் குரல் காற்றில் கலந்து கரைந்தது.

நண்பர்கள் அனைவரும் நடு ரோட்டில், “என்னடா மாப்ளே?” என கணேஷைப் பார்த்துக் கேட்க, “அங்க பாருங்கடா” என வயல் மத்தியை நோக்கிக் கை காட்டுகிறான். பேருந்து நின்றதையும் அதிலிருந்து பலர் இறங்கினதையும் பார்த்த மாத்திரத்தில் கத்தியால் குத்திக் கொண்டிருந்த மனிதன் துரித கதியில் ஓடிவிட்டிருக்க, கணேஷ் காட்டிய திசையில் குத்து வாங்கிய மனிதன் வயலில் வீழ்ந்து கிடப்பதை மட்டும் அனைவரும் காண்கின்றனர். மற்றவர்களுக்குக் கொலை என்று புரியாவிட்டாலும், ஏதோவொருவன் விழுந்து கிடக்கிறான் என்றும், ஏதொவொரு விபரீதம் நடந்திருக்கிறது என்றும் விளங்கி விட்டது.

திங்கட்கிழமை காலை ஒன்பது மணி

நண்பர்கள் நால்வரும் சகதியும் சேறும் நிறைந்த வயல்வெளி வரப்புக்களில் நடந்து கீழே விழுந்து கிடக்கும் மனிதனை அணுகுகின்றனர். சமீபத்தில் நடப்பட்ட நாற்றுக்களின் சேறு மற்றும் நீரின் மத்தியில் குத்துயிரும் குலையுயிருமாய் விழுந்து கிடக்கின்றான் ஒருவன். மிக அருகில் சென்று பார்க்க நண்பர்கள் அவன் உயிருடன் இருக்கிறானென உணர்கின்றனர். கண்கள் மேல் நோக்கிச் செருக, கைகள் சற்றே அசைந்தவண்ணம் நிலவுலகின் கடைசி நிமிடங்களில் போராடிக் கொண்டிருக்கிறான் எனத் தெளிவாகத் தெரிந்தது. தன்னால் இயலாத நிலையிலும், கையையும், கண்களையும் அசைத்து அவன் எதையோ குறிப்பிட முயல்வது போலத் தோன்றியது.

கீழே விழுந்து கிடந்ததில் உடல் முழுதும் சகதியுடன் காணப்பட்டாலும் மேல் வயிற்றுப் பகுதியிலிருந்து குபு குபுவென ரத்தம் வழிந்தோடிக் கொண்டிருந்தது. பார்த்த மாத்திரத்தில் நண்பர்களில் ஒருவனான வைரவன் மயங்கிக் கீழே விழுந்தான். ஒருநிமிடம் பார்த்து என்ன செய்வதென்றறியாமல் யோசித்த நண்பர்கள், பிரகாஷைப் பார்த்து “டேய், நீ அவனை எழுப்பிப் பக்கத்துல எங்கயாவது கூட்டிக் கிட்டுப் போய் ஆட்டோப் பிடுச்சி வீட்டுக்குப் போயிருரா மாப்ளே” எனப் பதிலையும் எதிர்பார்க்காது, கணேஷும் சிதம்பரமும் விழுந்து கிடக்கும் மனிதனைப் பிடித்துச் சுமக்கலானார்கள்.

பிரகாஷ், “டேய், என்னடா பண்றீங்க, போலிஸ் கேஸாகப் போகுதுடா, விட்டுட்டு வாங்கடா, வைரவனைத் தூக்கிட்டு நாம தப்பிக்கப் பாக்கலாம்” எனக் கூக்குரலிட, அவனை ஒரு புழுவைப் பார்ப்பது போல் முறைத்துப் பார்த்து விட்டு, இந்த மனிதனின் உயிரைக் காப்பதே நம் வாழ்நாளின் குறிக்கோளென கணேஷும், சிதம்பரமும் அவனைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு தார் ரோடு நோக்கி ஓடத் துவங்குகின்றனர்.

அப்பொழுதுதான் ரோடில் நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும் புல்லட் ஒன்றைப் பார்க்கின்றனர். “மாப்ளே, அந்தப் புல்லட் இவனோடதான் தான் இருக்கணும் மாப்ளே, சாவியிருக்கான்னு பாரு” எனக் கூறிக் கொண்டே, ரோடை அடைந்தபின் அந்த மனிதனின் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டு புல்லட்டின் சாவி இருப்பதைக் கண்டறிய, புல்லட் ஓட்டத் தெரிந்த சிதம்பரம் முன்னமர்ந்து புல்லட் ஒட்ட, பின்னமர்ந்து ரத்த வெள்ளத்திலிருந்த அந்த மனிதனைப் பிடித்துக் கொண்டான் கணேஷ். ஒரு இருபது நிமிடத்திற்கும் மேலானா பயணம் – விஸ்வேஸ்வரய்யா மருத்துவக் கல்லூரியுடன் கூடிய தனியார் மருத்துவ மனையை நோக்கி. அந்த பைபாஸ் சாலையில் அந்த இடத்தின் அருகிலுள்ள மருத்துவமனை அதுவே எனவறிந்த சிதம்பரம் அதனை நோக்கி புல்லட்டைச் செலுத்துகிறான்.

திங்கட்கிழமை காலை ஒன்பது மணி இருபது நிமிடம்

விஸ்வேஸ்வரய்யா மருத்துவ மனை – அவ்வளவு அதிகாலையில் பெருமளவு ஆளரவமில்லாத தனியார் மருத்துவ மனை. “அவசரச் சிகிச்சை” எனக் குறிக்கப்பட்டுள்ள நுழைவாயிலில் புல்லட் நுழைகிறது. அதிகாலை ஷிஃப்ட்டில் சற்று முன்னரே வந்து சேர்ந்த ரோஸி ஸிஸ்டர் நர்ஸ் தொழில் என்பது சேவை செய்வதற்காகவே என நினைத்து இந்தத் தொழிலில் சேர்ந்திருந்தவள், கடந்த சில மாதப் பணிக்குப் பிறகு, சேவை செய்வது என்பது அத்தனை எளிதான ஒன்று அல்ல என்பதை உணர்ந்திருந்தவள். புல்லட்டில் இருவர் அமர்ந்திருப்பதையும் அவர்களுக்கு மத்தியில் ஒருவர் படுத்திருப்பதையும் அவர்கள் அந்த வளாகத்தில் நுழையும் பொழுதே பார்த்து விட்டாள்.

வார்ட் பாய் வடிவேலுவை அவசர அவசரமாய் அழைத்து வெளிவாசலில் வந்து காயம்பட்டவரை தூக்கிக் கொண்டு செல்லத் தயாரானாள் நர்ஸ் ரோஸி. புல்லட் வந்து முன்னின்றது. சிதம்பரம் மற்றும் கணேஷ் இருவராலும் உடனடியாக இறங்க இயலவில்லை. தன் மடியில் பிடித்திருந்த கத்திக் குத்து வாங்கிய மனிதன் கிட்டத்தட்ட நினைவிழந்திருந்தான். முன்னோக்கி ஓடி வந்த வடிவேலுவும், ரோஸியும் உதவி செய்ய அந்த மனிதனைப் பிடித்துக் கொண்டு, கணேஷ் கீழே இறங்குகிறான். சிதம்பரம் ஸ்டாண்ட் போட்டுவிட்டு வண்டியை விட்டு இறங்குகிறான். நான்கு பேரும் சேர்ந்து அவனைத் தூக்கி ஸ்ட்ரெட்சரில் படுக்க வைத்து மருத்துவமனை உள்ளே தூக்கிச் செல்கின்றனர். இப்பொழுது பார்த்தால் கணேஷ்தான் அதிகமாய்க் காயப்பட்டது போலத் தோன்றுகிறது. புல்லட்டில் அமர்ந்து பிடித்துக் கொண்டு வந்ததில் அவன் உடை முழுவதும் ரத்தக் கறை. கைகள், தொடை என எங்கெங்கெல்லாம் அந்த மனிதனின் உடல் தொட்டதோ அங்கெங்கெல்லாம் ரத்தக் கறை. இந்த நிலையில், தேர்ச்சி பெற்ற புத்திசாலியான ரோஸி, தனது புத்தியைப் பயன்படுத்தும் முன்னர், மருத்துவமனையின் கோட்பாடுகளுக்கு ஏற்ப, என்ன நடந்தது என்று இவர்களைக் கேட்டுப் பதிவு செய்து கொள்ளத் தயாரானாள்.

திங்கட்கிழமை காலை ஒன்பது மணி நாற்பது நிமிடம்

”ஸிஸ்டர், இந்தக் கேள்வியெல்லாம் அப்புறமாக் கேக்கலாம், அவருக்கு என்னாச்சு பாருங்க, ஒங்களுக்குப் புண்ணியமாப் போகும்” அந்த உயிரைக் காப்பாற்றி விடவேண்டுமென்ற முனைப்பில் கூறுகிறான் கணேஷ்.

“புரியுதுங்க, ஆனா போலிஸ், கேஸ் கீஸுன்னு வந்தா மொதல்ல இந்த வெவரமெல்லாம் தெரிஞ்சு வச்சுருக்கணும், அதுக்குத்தான்…” என ரோஸி குறிப்பிட..

“ஆத்தா, நாங்க எங்குணயும் ஓடிப் போயிர மாட்டோம், இங்குணயே குத்த வெச்சுக்குனு காத்துக் கடக்கோம், அவுகள பொளைக்க வைக்க வளியப் பாருங்க மொதல்ல” எனக் கடுப்பாய்ப் பதில் சொன்ன சிதம்பரத்தைப் பார்க்கத் துணிவின்றி உள்ளே ஓடுகின்றாள் ரோஸி…

“டேய், இப்ப பரிச்சை ஆரம்பிச்சிருக்குமடா” என சிதம்பரம் நினைவூட்ட, அன்றுத் தேர்வு நாள், இந்தத் தேர்வில் பாரதியை விட அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமென ஒரு முனைப்புடன் தானிருந்தது என்ற இயல்பு நிலை நினைவுக்கு வந்தது. அது முக்கியமா இந்த மனிதனின் உயிர் முக்கியமா என்ற போராட்டத்தில், பரீட்சை தோற்று, இங்கு காத்திருப்பது எனத் தொடர்ந்தான் கணேஷ்.

இதற்குள், அந்த மனிதனை ஒரு படுக்கையில் போட்டு, அவசர அவசரமாகத் தள்ளிக் கொண்டு செல்லத் தொடங்கினர் ரோஸி, வடிவேலு மற்றும் இன்னும் சில நர்ஸ்கள். ஸ்டெரட்சரை வராந்தாவில் விட்டுவிட்டு சில மருந்துகளை எடுத்துக் கொண்டு அறுவைச் சிகிச்சை அறைக்குச் செல்ல ஆயத்தமாகிய ரோஸி, அவளின் கட்டளைக்கிணங்கி எதையோ எடுக்கச் சென்ற வடிவேலு, இருவரும் சென்று விட்டனர் என்ற உறுதியுடன் இன்னமும் மயக்க நிலையை முழுதும் எட்டி விடாத ஸ்ட்ரெட்சரில் படுத்திருந்த அந்த மனிதன் விரலுயர்த்தி கணேஷை அழைக்கின்றான். அதனை உடனே பார்த்து விட்ட கணேஷும், சிதம்பரமும் அவனை நோக்கி ஓடுகின்றனர். அருகில் வந்த இருவரையும் ஓரக் கண்ணால் பார்த்த அந்த மனிதன், விரல்களைக் குவித்து தன் பேண்ட் பாக்கெட்டின் திசையில் காட்டுகிறான். உடனே உணர்ந்து கொண்டனர் இருவரும். அவசர அவசரமாய் பேண்ட் பாக்கெட்டில் கைவிட, அதில் சிறியதாக ஒரு மைக்ரோ எஸ்.டி. கார்ட். அவசரமாய் அதனை எடுத்துக் கொண்டு அந்த இடம் விட்டு அகன்ற அவர்கள், மருந்தை எடுத்துக் கொண்டு திரும்பிய ரோஸி தங்களைப் பார்த்ததைக் கவனிக்கவில்லை.

மைக்ரோ எஸ். டி கார்டை எடுத்துக் கொண்டு, மருத்துவ மனையின் காரிடாரில் அடுத்த மூலைக்கு விரைந்தனர் இருவரும். மிகப் பிரம்மாண்டமான அந்த மருத்துவ மனையில், அந்த மூலையில் ஆளரவம் எதுவுமில்லை என்பதை உறுதி செய்து கொண்டபின்னர், அந்த மைக்ரோ எஸ்.டி கார்டைத் தனது ஆண்ட்ராய்ட் ஃபோனில் செருகத் தொடங்கினான் கணேஷ். உள்ளே பொருத்திப் பார்க்கையில், அந்தக் கார்டில் இருந்தது ஒரு காணொளி (Video) என்பதை உணர்ந்த கணேஷ், சுற்றுமுற்றும் பார்த்து யாரும் இல்லையென உறுதி செய்து கொண்டபின்னர் அந்தக் காணொளியைப் பிளே செய்யத் தொடங்கினான்.

சத்தமெதுவுமில்லாமல் தொடங்கிய அந்தக் காணொளியின் மத்தியில் ஒரு வெள்ளையும் சொள்ளையும் அணிந்த மரியாதைக்குரிய தோற்றமுடைய ஒரு மனிதர். அவர் முன்னர் ஒரு நான்கைந்து வேட்டி சட்டை அணிந்தவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்கின்றனர். இது நடப்பது ஒரு தென்னந்தோப்பில் போலக் காணப் படுகிறது. அவர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கின்றனர் என்ற சத்தம் அந்தக் காணொளியில் சரியாகப் பதிவாகவில்லை. தூரத்திலிருந்து பதிவு செய்யப் பட்ட அமெச்சூர் வீடியோவெனத் தெளிவாகத் தெரிந்தது. பேசிக் கொண்டேயிருக்கையில், திடீரென அந்த நான்கு மனிதர்களில் ஒருவன் தனது இடுப்பு வேட்டிக் கட்டிலிருந்து கருப்பாய் ஒன்றை உருவுகிறான். உற்றுப் பார்த்தால், அது ஒரு துப்பாக்கி எனப் புலப்படுகிறது. உறுவிய மறு நிமிடம், நிதானமாய் ஈவு இரக்கமின்றி அந்தப் பெரிய மனிதரைப் பார்த்துச் சுடத் தொடங்குகிறான். அவர் மார்பிலிருந்து குபு குபுவெனச் சிவப்பு நிறத்தில் ரத்தம் வெளிவரத் தொடங்க, அவர் வாயைத் திறந்த வண்ணம் வேரற்ற மரம்போலக் கீழே சாய்கிறார். அவர் வலியில் அலறியிருக்க வேண்டும், ஆனால் சப்தம் எதுவும் அந்த வீடியோவில் பதிவாகாததினால் எதுவும் கேட்கவில்லை. அவர் முழுதாய்க் கீழே விழுவதற்கு முன்னால் அந்தக் காணொளி மத்தியில் பல அசைவுகளுடன் முடிவு பெறுகிறது. அந்த அசைவுகளை வைத்துக் கணிக்கும் பொழுது, அந்த வீடியோவை எடுப்பவனை யாரேனும் பார்த்திருக்க வேண்டுமெனவும், அவர்களிடமிருந்து தப்புவதற்காக அவன் அங்கிருந்து ஓடியிருக்க வேண்டுமெனவும் தோன்றியது.

அந்தக் காணொளியைப் பார்த்த அதிர்ச்சியில் உறைந்திருந்தனர் கணேஷும், சிதம்பரமும். என்ன செய்வதென்றறியாமல் நின்றிருந்த அவர்களின் உணர்வுகளை எழுப்புவது போல அந்த மருத்துவமனையின் மணிக் கூண்டிலிருந்த பெரிய கடிகாரம், அதன் பூதாகாரச் சத்தத்துடன் பத்து முறை அடித்து ஓய்ந்தது.

(தொடரும்)

–        வெ. மதுசூதனன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad