\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

ஜவஹர்லால் நேரு

nehru_420x533ஜவஹர்லால் நேரு – காந்திஜியின் அடிப்படைக் கோட்பாடுகளான நீதி, நேர்மை, அகிம்சை இவற்றை அடியொற்றிச் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றவர். உலகம் முழுவதும் புகழ்பெற்ற தலைவராக இருந்தவர். 1947 முதல் 1964 வரை பதினேழு ஆண்டுகள் பிரதமராகப் பணியாற்றியவர்.

1889ம் ஆண்டு, நவம்பர் 14ம் தேதி அலகாபாத்தில் மோதிலால் நேருவுக்கும், ஸ்வரூபராணி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார் ஜவஹர்லால். உருது மொழியில் ஜவஹர்-இ-லால் என்றால் சிகப்பு நகை என்ற பொருள். ரோஜா நிறத்தில் பிறந்த குழந்தைக்குப் பெற்றோர் ஜவஹர்லால் என்று பெயர் வைத்தது மிகவும் பொருந்தியமைந்தது.

இளம்பிராயத்திலேயே பள்ளிப் படிப்புக்காக லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஜவஹர்லால் படிப்பில் பெரிய நாட்டமின்றிக் காணப்பட்டார். ஒரு வழியாகப் பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் கேம்பிரிட்ஜ் பல்கலையில் இயற்கை அறிவியல் பயின்று சிறப்பாகத் தேறினார். தனது தந்தையின் வற்புறுத்தலில் சட்டமும் பயின்று முடித்த பின் வழக்கறிஞராக இந்தியாவுக்குத் திரும்பினார். 1916ம் ஆண்டு கமலா கவுல் எனும் பெண்ணைத் திருமணம் புரிந்தார். அடுத்த ஆண்டே அவர்களுக்கு இந்திரா பிரியதர்ஷணி (பின்னாளில் இந்திரா காந்தி) எனும் மகள் பிறந்தார்.

தனது தந்தையின் வழிகாட்டலின் படி 1916ம் ஆண்டு காந்திஜியை சந்தித்த நேரு, காந்தியின் கொள்கைகளில் பெரிதும் ஈர்க்கப்பட்டார். பின்னர் காந்தியடிகளின் நம்பிக்கைக்குரியவராக மாறிக் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினராக மாறினார். 1920 காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு முதல் முதலாகச் சிறை சென்றவர், பின் பலமுறை பல போராட்டங்களில் கலந்து கொண்டு கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். சிறையிலிருந்த போது சமுதாய முன்னேற்றங்களை வலியுறுத்தி இவர் எழுதிய புத்தகங்கள் காங்கிரஸ் தலைவர்களிடையே நன்மதிப்பைப் பெற்றுத் தர விரைவில் தேசியக் காங்கிரஸின் தலைவரானார். சோஷியலிசத்தில் ஈர்க்கப்பட்ட நேரு தேசியக் காங்கிரஸின் இடதுசாரித் தலைவராகத் திகழ்ந்தார். ஜனநாயகம், ஏற்றத்தாழ்வுகள் இல்லா, ஏழை பணக்காரன் என்ற வேற்றுமை இல்லா, ஜாதி மத வேறுபாடுகள் இல்லாத பாரதம் அமைய விழைந்தார்.

ஆங்கில அரசுடனான பேச்சு வார்த்தைகளில் தொடர்ந்து இடம்பெற்ற நேரு, இந்தியத் தரப்பு வாதங்களை முன் வைத்ததோடு, காந்தியக் கொள்கைகளையும் சிறப்பாக எடுத்துக் காட்டினார். பல சுற்றுப் பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவைச் சுதந்திர நாடாக அறிவிக்க ஆங்கிலேய அரசு முன்வந்தது.

சுதந்திரத்திற்கு முன் இடைக்கால அரசுக்குப் பொறுப்பேற்ற நேரு, இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கான பேச்சுகள் நடந்து வந்த போது இரு தரப்பினருக்கும் சமாதானம் ஏற்படுத்திப் பிளவைத் தவிர்க்க முயன்றார். அதில் தோல்வியுற்ற நேரு இந்திய பாகிஸ்தான் பிரிவுக்கு ஆதரவளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார். அப்போது தலைவிரித்தாடிய வன்முறைகளைத் தவிர்க்க அவரே பஞ்சாப், காஷ்மீர் போன்ற பகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று பாகிஸ்தான் நாட்டுக்குச் செல்ல விருப்பம் இல்லாதவர்கள், இந்தியாவிலேயே தங்கலாம் என்றும், அவர்களுக்குத் தக்க பாதுகாப்பும் உரிமைகளும் வழங்கப்படும் என்றும் வாக்களித்து அவர்கள் இந்தியாவில் தங்க வற்புறுத்தினார்.

1947ல் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்த போது பாரதக்கொடியை ஏற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற நேரு அதன்பின் இந்தியாவை உலகின் தன்னிகரற்ற நாடாக உருவாக்க உறுதி பூண்டார். முதல் ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்கிய நேரு கல்வி, மருத்துவம், அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம் எனப் பல துறைகளில் பாரதம் முன்னேற வழி வகுத்தார். உலக நாடுகளில் அப்போது நிகழ்ந்து வந்த மாற்றங்களில் முன்னேறி வந்த ருஷ்ய நாட்டின் பொருளாதாரத் தத்துவங்களை முன்மாதிரியாக வைத்துக் கொண்டு ஆட்சி புரிந்தார். எனினும் ருஷ்யாவில் அப்போது நடந்தேறிய வன்முறைகளைப் பெரிதும் எதிர்த்தார், உலகக் கண்ணோட்டம் கொண்டிருந்த நேரு சமூக ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நாடாக இந்தியா அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தி வந்தார். வரி வசூலிப்பின் மூலம் கலப்பு பொருளாதாரத்தை உருவாக்கினார் நேரு. விவசாய வளர்ச்சி, தொழிற்சாலை அபிவிருத்தி என நாட்டைப் பல வழிகளில் வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றார். அத்தியாவசியத் தொழில்களான ரயில்வே துறை, மின்சாரத் துறை, கனரக இயந்திரம், நிலக்கரிச் சுரங்கங்கள் போன்றவற்றைத் தனியார் வசம் போகாமல் அரசாங்கமே ஏற்று நடத்தும்படிச் செய்தார். அணு ஆய்வுக்கூடம் மற்றும் தொழிற்சாலைகள் பல ஏற்படுத்தினார். அடிப்படை கல்விக்காகக் கிராமங்கள் எங்கும் பள்ளிக்கூடங்கள், உரத்தொழிற்சாலைகள், சாலை வசதிகள் என ஏற்படுத்திக் கிராம வளர்ச்சிக்கும் வழிகோலினார். அதே சமயம் இந்தியாவின் பழமைக்கும், கலாச்சாரத்துக்கும் பெருமை சேர்க்கும் வண்ணம் அவைகளையும் போற்றி வந்தார். ”நவீன இந்தியாவின் சிற்பி” என்ற புகழும் இவருக்குக் கிடைத்தது.

பெண்களுக்கான சமூகச் சுதந்திரம், சட்ட உரிமைகள், ஜாதி மத வேறுபாடுகளைக் குற்றங்களாகப் பாவித்தல் போன்றவை நேருவின் அறிவுரைப்படி சட்டமாக்கப்பட்டன. பழங்குடி மக்கள், மலைச் சாதியினர் அனுபவித்து வந்த சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்கும் வண்ணம் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி இட ஒதுக்கீட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அமெரிக்க, சோவியத் நாடுகளுக்குள் இருந்த பனிப்போரினால் இரு நாடுகளும் இந்தியாவைத் தங்கள் ஆதரவு நாடாகச் சேர்த்துக் கொள்ளத் துடித்தன. ஐக்கிய நாடுகளின் கூட்டுச்சேரா இயக்கத்தை உருவாக்கி இரு நாடுகளுக்கும் நல்லுறவு ஏற்படுத்த முயன்றார். சீன, கொரிய நாடுகளுக்கிடையேயான உறவு வலுப்பெறத் தூதுவர் போல் செயல்பட்டார். உலக அமைதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளினால் அவர் உலகப் பார்வையில் ‘சமாதான மன்னர்’ எனப் புகழப்பட்டார். அணு ஆயுதங்களால் மனிதச் சமுதாயத்திற்கு உண்டாகும் அழிவுகளைப் பற்றியும், உலக அமைதி குலைவதற்கான வாய்ப்புகள் பற்றியும் பிரச்சாரம் செய்தார்.

1952ஆம் நடந்த தேர்தலில் காங்கிரஸ் பெரிய வெற்றி பெற மீண்டும் பிரதமரானார் நேரு. அந்தக் காலக்கட்டத்தில் உட்கட்சி பூசல், ஊழல்கள் போன்றவை தலைதூக்கத் தொடங்கி நேருவைப் பெரும் கவலைக்குள்ளாக்கின. பலமுறை அவர் பதவியைத் துறக்கவும் முன்வந்தார். எனினும் நாட்டின் வளர்ச்சிக்காகவும், மற்றவரின் வற்புறுத்தலுக்காகவும் பதவியில் தொடர்ந்தார். 1954ஆம் ஆண்டு சீனாவுடனான திபெத் பற்றிய பிரச்சனைக்கு முடிவு காணும் வகையில் பஞ்சஷீல் எனும் கொள்கையை முன் மொழிந்தார்.

பஞ்சஷீலக் கொள்கைகள்

1. ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டின் கெளரவத்தையும், அதிகாரத்தையும் மதிக்க வேண்டும்.

2. எந்த நாடும் மற்ற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது.

3. எந்த நாடும் பிற நாட்டை ஆக்கிரமிக்கக் கூடாது.

4. ஒவ்வொரு நாடும் மற்ற நாட்டின் இறையாண்மையை மதிக்க வேண்டும்.

5. ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளோடு அமைதியான முறையில் நட்புணர்வுடன் நடக்க வேண்டும்.

இரு நாடுகளும், மேலே சொன்ன கொள்கைகளை ஏற்றுக்கொண்டு உடன்படிக்கையில் கையெழுத்திட்டாலும், தலாய் லாமாவுக்கு அடைக்கலம் கொடுத்தததும், பொருளாதாரச் சிக்கல்களும் சீனா இந்தியா மீது போர் தொடுக்கக் காரணமானது. எல்லைப் பாதுகாப்பில் நேரு கவனக்குறைவாக இருந்ததே இதற்குக் காரணம் என்ற கருத்து எதிர்க்கட்சியினரால் பரப்பப்பட்டது. இந்த நேரத்தில் உடல்நலக்குறைவினால் நேரு காஷ்மீரில் ஓய்வெடுத்ததைத் தன் இயலாமையை மறைக்க நேரு ஆடும் நாடகம் என்றும் பரப்பினர். பிறகு அமெரிக்க நாட்டின் உதவியோடு சீன ஆக்கிரமிப்பை இந்தியா முறியடித்தது.

பிறகு சில ஆண்டுகளில், அவரது மகள் இந்திரா காந்தியினால் அவர் சில சங்கடங்களைச் சந்திக்க வேண்டி வந்தது. குறிப்பாக இந்திரா காங்கிரஸ் கட்சியின் தலைவியாக நியமிக்கப்பட்டபோது அதை பெரிதும் எதிர்த்தார் நேரு. மக்களாட்சி நெறி தவறி முடியாட்சி முறையில் மகளைத் தலைவியாக நியமித்தார் நேரு என்ற அவப்பெயர் வரக்கூடாது என்பதற்காக அதை எதிர்த்தார்.ஆனால் எதனையும் தன்னிச்சையாக முடிவு செய்யும் இந்திரா நேருவின் கருத்தை உதாசீனப்படுத்தினார்.

இப்படிப் பலவிதங்களிலும் மனக்கசப்படைந்த நேருவை நோய் தொற்றிக் கொள்ளத் தொடங்கியது. காஷ்மீரில் தங்கி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவர், 1964ல் டெல்லி திரும்பினார். சில நாட்களில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, பக்க வாதம் தாக்கியது. நாட்டின் ஒற்றுமை பற்றியும், வளர்ச்சி பற்றியும் பல கனவுகள் கொண்டிருந்த ஜவஹர்லால் நேரு 1964ம் ஆண்டு மே 27ம் நாள் உலகை விட்டுப் பிரிந்தார்.

”இந்தியாவுக்குச் சேவை செய்வதென்பது துன்பப்படும் கோடிக்கணக்கான மக்களுக்குச் சேவை செய்வதாகும். இவர்களுக்குச் சேவை செய்வது இல்லாமை, ஏழ்மை, அறியாமை, பிணி, துன்பம் ஆகியவற்றிலிருந்து விடுதலை அளிப்பதும் சமவாய்ப்பு அளிப்பது என்பதாகும்” என்று கூறியவர் நேரு

தனது உயிலில் “நான் இறந்த பிறகு எந்த மதச்சடங்குகளின்றி என் உடல் தகனம் செய்யப்பட வேண்டும். ஒரு வேளை நான் வெளிநாடுகளில் இறக்க நேர்ந்தால் என் அஸ்தி அலகாபாத்தில் கங்கையில் கரைக்கப்படவேண்டும். இதன் மூலம் இந்திய எல்லைகளைத் தொடும் கடலில் சங்கமித்து விட வேண்டும். ஒரு பகுதி அஸ்தியினை விமானத்தில் கொண்டு சென்று கிராமப்புறங்களில் தூவப்பட்டு மண்ணோடு மண்ணாகக் கலந்து விட வேண்டும் என்று எழுதியிருந்தார்.

இப்படிப்பட்ட உன்னதத் தலைவரின் புகழ் தற்கால இந்திய அரசியலில் சொந்த ஆதாயங்களுக்காகக் குலைக்கப்பட்டு வருவது வருத்தத்துக்குரிய விஷயமாகும்.

– ரவிக்குமார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad