இந்திரா காந்தி
ஆணாதிக்க மனப்பாங்கு கொண்டஇந்தியாவில் வலுவான அதிகார பலத்துடன் மிகவும் உயர்ந்த பதவியிலமர்ந்து நாட்டை ஆண்ட முதல் இந்தியப் பெண்மணி இந்திரா காந்தி.
1917ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் நாள், ஜவஹர்லால் நேருவுக்கும் , கமலா நேருவுக்கும் மகளாகப் பிறந்தவர் இந்திரா பிரியதர்சினி நேரு. அவர் பிறந்த கட்டத்தில் அவரது தாத்தாவும், தந்தையும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். தனது நோயுற்ற தாயின் பராமரிப்பிலேயே வளர்ந்தார் இந்திரா. காவலதிகாரிகள் நேரு சிறையிலிருந்த காலத்தில் அவரது வீட்டுக்குள் நுழைந்து வீட்டிலிருந்த பொருட்களை அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகைக்கு ஈடாக எடுத்துச் சென்றனர். இது போன்ற தொடர்ச்சியான செயல்கள் நான்கு வயதே நிரம்பியிருந்த இந்திராவின் மனதைப் பாதித்தன. இதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த இந்திரா காவல் துறையின் மீது நன்மதிப்பைத் துறந்தார். சிறு வயதில் தோன்றிய இந்த எதிர்ப்பு குணம் அவரது அத்தை விஜயலட்சுமி பண்டிட் உட்படக் குடும்பத்தில் பலரிடம் தொடர்ந்தது.
பள்ளிக் காலங்களில் இளம் பெண்களை இணைத்துக் கொண்டு இவர் ஏற்படுத்திய வானரசேனா அமைப்பு தேசியக் காங்கிரஸின் கொள்கைகளைத் துண்டுப் பிரசுரமாக விநியோகித்து, பிரசாரங்களை மேற்கொண்டது. இதுவே இவருக்குத் தேசியக் காங்கிரசில் சேர முதற் படிக்கல்லாக அமைந்தது.
மேல்படிப்பிற்காக லண்டனுக்குச் சென்ற இடத்தில் ஃபெரோஸ் காந்தியைச் சந்திந்துக் காதல் கொண்டார். அந்தக் காலகட்டத்தில் இருவரும் லண்டனில் இருந்த இந்தியத் தேசியக் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து பணியாற்றினர். உடல் நலம் குன்றிய இந்திரா சில காலங்கள் ஸ்விட்சர்லாந்தில் தங்கி ஒய்வெடுத்துப் பின்னர் ஃபெரோசுடன் இந்தியா வந்து சேர்ந்தார். 1942ல் இருவரும் திருமணம் புரிந்து கொண்டனர். நேருவுக்கு இதில் விருப்பம் இல்லை என்றாலும் காந்திஜியின் அறிவுரையை ஏற்று இருவருக்கும் மணமுடித்து வைத்தார். இந்திரா பிரியதர்சினி என்ற பெயர் இந்திரா காந்தியானது. அதே ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு இருவரும் கைதாகினர்.
விடுதலை பெற்ற பின்னர் இருவருக்கும் ராஜீவ், சஞ்சய் என்ற மகன்கள் பிறந்தனர். விடுதலைக்குப் பிறகு முழு நேர அரசியலில் இறங்கிய ஃபெரோஸ் எதிர் கட்சியில் சேர்ந்து நேருவின் கொள்கைகளை எதிர்க்கத் துவங்கினார். இதனால் இந்திராவுடன் வாழாமல் பிரிந்திருந்தனர். பின்னர் 1960ல் ஃபெரோஸ் இறந்துவிடத் தேசியக் காங்கிரசுக்குத் தலைவரானார் இந்திரா. 1964ல் நேரு இறந்து விட, அப்போது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியால் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். 1966ல் தாஷ்கண்ட் சென்ற லால் பகதூர் சாஸ்திரி இறந்து விட, மொரார்ஜி தேசாய் அல்லது இந்திரா காந்தி இருவரில் ஒருவர் பிரதமராக வேண்டிய சூழ்நிலை உருவானது. பெருந்தலைவர் காமராஜர் சுட்டி காட்டும் ஒருவர் பிரதமராகலாம் என்ற நிலையில் இந்திரா இந்தியாவின் மூன்றாவது பிரதமரானார்.
சில காலங்கள் மொரார்ஜி தேசாய் துணைப் பிரதமராகச் செயலாற்றிக் கொண்டிருந்தார். இருவருக்கிடையே கருத்து வேறுபாடுகளினால் காங்கிரசில் பிளவு எற்பட்டது. இந்திரா காங்கிரஸ் என்ற பெயருடன் புதிய கட்சியைத் துவங்கினார் இந்திரா. 1969ல் நிதி நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர வங்கிகளைத் தேசியமயமாக்கினார்.
1971ல், பாகிஸ்தான் அரசின் போக்கால் மனம் நொந்த பல கிழக்குப் பாகிஸ்தான் பகுதியினர் பலர் இந்தியாவுக்குள் அகதிகளாக வந்தனர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை வற்புறுத்தியும் ஏற்காத பாகிஸ்தானுடன் போர் தொடுத்தார் இந்திரா காந்தி. நிக்சன் தலைமையில் அமெரிக்கா பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்டியது. ரஷ்யாவுடன் நட்புறவு கொண்டிருந்த இந்திராவைப் பல நாட்டினருக்கும் பிடிக்கவில்லை. இந்திராவை ‘தந்திர நரி’ என்று வருணித்து நிக்சன் பேசிய பேச்சுக்கள் சமீப காலங்களில் கூட பரபரப்பை ஏற்படுத்தின. பாகிஸ்தானுடனான போரில் வென்ற இந்திரா, பங்களாதேஷ் அமையக் காரணமாக விளங்கினார்.
பண வீழ்ச்சியின் காரணமாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூபாய் நான்கிலிருந்து ஏழாக உயர நாட்டில் பணப்பற்றாக்குறை எற்பட்டது. வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடிய போது லால் பகதூர் சாஸ்திரி அறிமுகப்படுத்திய பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி போன்றவற்றைப் புதுப் பொலிவுடன் செயல்படுத்தினார் இந்திரா காந்தி. கூடவே ‘கரிபி ஹட்டோவோ’ (ஏழ்மையை விரட்டுவோம்) எனும் திட்டத்தைக் கொண்டு வந்தார்.
இது போன்ற திட்டங்கள் மக்களுக்குச் சென்றடையாமல் ஊழல்கள் நடைபெறுவதை அறிந்த ராஜ்நாராயண் எனும் வழக்கறிஞர் இந்திராவுக்கு எதிராகப் பல வழக்குகளைத் தொடுத்தார். குற்றங்களை மறுக்க முடியாமல் இந்திரா திணறிய போது நாட்டில் வன்முறைக் கலவரங்கள் தோன்றத் துவங்கின. இவற்றை அடக்க முயன்ற இந்திரா ‘அவசர கால நடவடிக்கை’ எனும் ஆயுதத்தால் அமைச்சரவையை மிரட்டி, தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முயன்று தோற்றார்.
1977ல் தேர்தல் அறிவிக்கப்பட ராஜ்நாராயணால் ரேபரேலியில் தோற்கடிக்கப்பட்டார் இந்திரா காந்தி. இந்திரா எதிர்ப்பலையால் மட்டுமே இணைந்த மொரார்ஜி தேசாயின் தலைமையின் கீழான அமைச்சரவை ஒற்றுமையின்மையினால் சில ஆண்டுகளில் கவிழ 1980ல் மீண்டும் பிரதமரானார் இந்திரா.
இம்முறை அவருக்குச் சவாலாக அமைந்தது பஞ்சாப் மாநிலத்தின் ‘அகாலி தளம்’ கட்சி. பஞ்சாப் தேர்தலில் பெரும்பான்மை பெற்ற அக்கட்சியை முடக்க, இந்திரா பிந்தரன்வாலே தலைமையில் பஞ்சாபில் இயங்கிய ‘தம்தமாமி’ என்ற ஒரு சிறு அமைப்பை வலுப்படுத்தி அகாலி தளத்துக்குப் போட்டியாக உருவாக்கினார். இந்திராவால் வளர்க்கப்பட்ட பிந்தரன்வாலேவின் அமைப்பு ‘காலிஸ்தான்’ எனும் தனி நாடு கோரிக்கையை எழுப்பிய போது இந்திரா அதை எதிர்த்தார். தீவிரவாத அமைப்பாக மாறிப்போன பிந்தரன்வாலே, ஆதரவாளர்களுடன் பொற்கோவில் புனித வளாகத்துக்குள் ஒளிந்திருப்பதை அறிந்த ராணுவத்தினரை, அங்கே தாக்குதல் நடத்தச் சொல்லி இந்திரா காந்தி பணித்ததால் பொதுமக்கள் உட்படப் பலர் இறந்தனர்.
இது இந்திரா காந்தி மீது சீக்கியர்களுக்கு வெறுப்பு தோன்றக் காரணமாக அமைந்தது. இதைப் பற்றி அறிந்திருந்த உளவுத்துறை சீக்கியர்கள் எவரையும் காவலுக்கோ, மற்றப் பணிகளுக்கோ அமர்த்த வேண்டாம் என்று அறிவுறுத்திய போதிலும், அதை ஏற்காத இந்திரா காந்தி வழக்கம் போலத் தனது பாதுகாவலுக்கும், பணிகளுக்கும் அவர்கள் வர அனுமதித்திருந்தார்.
1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி, சர்வதேசத் தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளிக்கத் தனது வீட்டு வளாகத்திலேயே அமைந்திருந்த தனது அலுவலகத்துக்கு நடந்து சென்றார். அப்போது பாதுகாப்பு பணியிலிருந்த பாதுகாவலர்கள் பியாந்த் சிங், சத்வந்த் சிங் இருவராலும் சுட்டு கொல்லப்பட்டார். அவரது உடம்பில் 22 குண்டுகள் பாய்ந்திருந்தன.
இந்தியாவின் இரும்பு மனுஷி என்று பெயர் பெற்றிருந்த போதிலும் சில தவறான முடிவுகளால் எப்போதும் சவால்களையும், எதிர்ப்புகளையுமே சந்தித்து வந்தார் இந்திரா காந்தி. தனது அதிகாரத்தைப் பயன்படுத்திப் பல மூத்த தலைவர்களையும் அதிகாரிகளையும் உதாசீனப்படுத்தி செயலிழக்கச் செய்து , தனக்கு தோன்றியவை மட்டுமே சரியென எண்ணி நடந்து கொண்டார். இருந்த போதிலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிக்கோலியவர் இவரே. எண்பதுகளின் தொடக்கத்தில் 16 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்த பணவீக்கத்தை 7 புள்ளிகளுக்குக் கொண்டு வந்தார். 20 அம்சத் திட்டம், குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம், நில உச்சவரம்புச் சட்டம் போன்று இவர் கொண்டு வந்த திட்டங்களும், சட்டங்களும் அந்தக் காலகட்டத்தில் எதிர்க்கப்பட்டாலும், இன்று பார்க்கும் போது நாட்டின் வளர்ச்சிக்குத் தேவைப்பட்ட ஒன்றாகவே தோன்றுகிறது.
இந்திரா காந்தி தான் இறப்பதற்கு முந்தைய நாள் ஒரிசாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய வார்த்தைகள் இவை.
இந்திரா காந்தியின் இறுதிப் பேச்சு ;
”நான் இன்று உயிரோடு இருக்கிறேன், நாளை உயிரோடு இருப்பேனா என்று தெரியாது. நான் என் இறுதி மூச்சு வரை நாட்டுக்கான சேவையைத் தொடர்வேன். நான் இறக்கும் போது என் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு இரத்தத்துளியும் இந்தியாவை பலப்படுத்தி ஒற்றுமையுடன் வாழ வைக்கும்.”
ரவிக்குமார்.