கிறிஸ்துமஸ் – அன்னை பூமியிலும், அந்நிய பூமியிலும்
வருடந்தோறும் திசம்பர் திங்கள், 25ம் தேதி உலகமெங்கும் கொண்டாடப் படும் பண்டிகை கிறிஸ்துமஸ். ஏசுக் கிறிஸ்துவின் பிறந்த நாள்தான் கிருஸ்துமஸாகக் கொண்டாடப் படுகிறது. கிறிஸ்து ஜெயந்தி என்று கூடச் சொல்லலாம்.
விவிலியத்தில் (Bible ) சொல்லப்பட்டுள்ள காலத்தை வைத்து, அன்றுதான் இயேசு கிறிஸ்து பிறந்திருக்கக் கூடும் என்று கணிக்கப் பட்டுள்ளது. அதேபோல் இன்றும், இந்த நாளில் ,ஒவ்வொரு இல்லத்திலும், உள்ளத்திலும் இறை இயேசு வந்து பாலனாகப் பிறக்கிறார் என்ற நம்பிக்கை அனைத்து கிறிஸ்தவரிடமும் புரையோடிக் கிடக்கிறது. உள்ளம் நிறைந்து ,மனம் மகிழ்ந்த குழந்தையாக அவரை எவ்வாறு நம் உள்ளத்திலும், இல்லத்திலும் பிறக்கவைக்கப் போகிறோம், அதற்காக எப்படியெல்லாம் நம்மை ஆயத்தப்படுத்தப் பார்க்கிறோம் என்பதுதான் இந்தக் காலம் – வருகைக் காலம்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்குச் சரியாக 4 வாரங்களுக்கு முன்பிருந்தே கத்தோலிக்கத் (Catholics) திருத்தலங்களில் வருகைக் காலம் துவங்கிவிடும். நம் ஆன்ம நிறைவுக்கு , ஆழ் மனதைத் தயார் செய்யும் வகையில், தினசரி திருப்பலிகள்(Mass or liturgy), முக்கியமாக ஞாயிறு திருப்பலிகளில் ஜெபங்கள், விவிலிய வாசகங்கள் மற்றும் போதனைகள் இடம் பெறும். இந்நாட்களில், எல்லாவற்றிற்கும் மேலாகப் பத்துக் கட்டளைகளில் (Ten Commandments ) முதல் கட்டளையான “தன்னைப் போல் பிறரையும் அன்பு செய்ய வேண்டும்” என்னும் தாரக மந்திரமும், அதனை ஒத்த “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும்” ஏற்றமிகு பொன்மொழியும் திருத்தலங்களில் பொது மக்களுக்கும், இல்லங்களில் குழந்தைகளுக்கும் விளக்கி வலியுறுத்தி சொல்லப் படும். அதில் தோன்றிய விந்தையின் விளைவுகளில் ஒன்றுதான் இங்கு toy for tots என்பது எனது கருத்து.
இந்தியாவில் கிறிஸ்துமஸ் :
இந்தியாவில் திருத்தலங்கள், கிறித்துவப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தான் அதிக பட்சம் விழாக்கோலம் பூண்டிருக்கும். இங்குபோல் தெருக்களில் தெரிவதில்லை. கிறிஸ்தவர்கள் அதிகமுள்ள தெருக்கள் திருவிழாக் கோலம் கொள்வதுண்டு. நான் இதில் பாக்கியம் பெற்றவள் என்பேன். நான் வளர்ந்தது மதுரையில் எங்கள் தெருவில் கிறித்துவர்கள் அதிகம் இருந்தார்கள்.கிறிஸ்து பிறந்த அன்று அவரைக் காண வந்த நல்ல உள்ளங்களுக்கு வால் நட்சத்திரம் வழி காட்டியதாக விவிலியத்தில் சொல்லப் பட்டுள்ளது. இதன் அடையாளமாக தான் வீட்டின் முன்பு நட்சத்திரம் தொங்க விடப்படுகிறது. . 95 விழுக்காடு கிறித்துவ மக்களின் வீடுகளில் இதை நீங்கள் காணலாம். வீடுகளில் குடில் (Nativity) ஜோடித்து வைப்பார்கள், அதில் பெரும்பான்மையோர் சின்னஞ் சிறு முளைப்பாரி வைப்பது வழக்கம்.
நான் சுமக்கும் நினைவுகள் எல்லாம் கல்லூரிப்பருவ கிறிஸ்துமஸ் காலம்தான். பெரும்பாலோர் தீபாவளி விற்பனையின் போதே கிறிஸ்துமஸ் பண்டிகைக்குத் தேவையான புத்தாடைகள் மற்றும் வெடிகளெல்லாம் வாங்கி வைப்பதுண்டு. எனது குடும்பம் ஆசிரியர் குடும்பம் என்பதால் திசம்பர் முதல் வாரம் தான் கடைப் பயணம். இந்தப் பயணம் நிகழ்வது எப்போதுமே சனிக் கிழமைகளில் தான். வெள்ளி அன்று, இரவு உணவுக்குப் பின் நிதி நிலை அறிக்கை வாசிக்கப் பட்டு , அவரவருக்கான அந்த வருட நிதி ஒதுக்கப் படும்.’அதைக் கொண்டுதான் உங்கள் பயணமா?’ என்று நீங்கள் நினைக்கக் கூடும். எங்களுக்கு அப்படித்தான். அப்பா, அம்மா, அக்காள் மற்றும் குழந்தைகள் ,அண்ணன்கள் , அண்ணி குழந்தை என எங்கள் மொத்தக் குடும்பமும் (கிளம்பியாச்சா??, இன்னும் கிளம்பலையா??என்னும் என் அப்பாவின் அதட்டலும் , இதுங்கல்லாம் இன்னிக்கிக் கிளம்பி நாளைக்கு தானே வருங்க!! என்னும் என் அம்மாவின் இன்னிசையும், பின்னணியாய் தொடர) கிளம்பி, கடைத்தெரு சென்று ,கடைகள் தேர்ந்தெடுத்து, வாங்கும் படலத்தின் முதல் பகுதி முடியும் முன் கடைகள் மதிய உணவிற்காக மூடப் படும். என் அப்பா எங்களை வழக்கமாக ஒரு உணவகம் அழைத்துச் செல்வார். அந்தச் சிறிய உணவகம் (mess) அயிரை மீன் குழம்புக்கும் , ஆட்டுக் கறி வறுவலுக்கும் பெயர் போனது! அனால் நாலு பேர் அதிகம் வந்தால், அமரவும் இடம் இருக்காது, ஆட்டு கறியும் கிடைக்காது. அதனால் ,எங்கள் தந்தையார் முன்தினமே சென்று அந்த முதலாளியிடம் முன்னறிவிப்புச் செய்து விடுவார். எங்களுக்கு ஆட்டுக் கறி வறுவல் கிடைப்பது உறுதி. கிறிஸ்துமஸ் வருவதும் வருடம் ஒருமுறைதான் நாங்கள் அனைவரும் அந்த உணவகம் செல்வதும் அதே வருடம் ஒருமுறைதான், (குடும்பம் பெருசில்ல!!) மதிய உணவு முடிந்து இரண்டாம் பகுதி ஆரம்பம். அண்ணன்கள் அப்படியே காணாமல் போய் விடுவார்கள். குழந்தைகள் யாரவது கால் வலி என்று சொல்லும் வரை கடைகளில் ஏறி இறங்குவது பழக்கம். வந்து அண்டை வீடு, எதிர் வீடு என்று எல்லோருக்கும் காண்பித்து, பிரதாபப் படுத்தி, (அவுங்களே வந்து கேட்பாங்கங்க!! நாங்க வெளில போறதுதான் தெருவுக்கே தெரியுமே!!) அதில் தனி சுகம் இருந்தது !!
24ம் தேதி, வீடு வாசல் கழுவி, வாசலுக்குக் கோலம் தேர்ந்தெடுத்து, பக்கத்து வீட்டுத் தங்கைகளிடம் , கலந்தாலோசித்து (அதே கோலமா? பக்கத்து வீட்டிலுமா ? என்ற கேள்வி எழாமல், எச்சரிக்கையாய்) நிறங்கள் கண்டெடுத்து, அடுத்த நாள் சமையலுக்கு ஆழம் பார்த்து, அப்போதாங்க சட்டையே தச்சு வரும் !! என் அனுபவத்தில் 24ம் தேதிக்கு முன் , அதுவும் 24 முறை நடக்காமல் எங்கள் கைக்குச் சட்டைகள் வந்ததாக சரித்திரமே இல்லைங்க!!
கிறிஸ்துமஸ் திருப்பலி, இரவு 11.30 மணிக்குத் துவங்கும். கத்தோலிக்கத் திருப்பலியில் வானமும் பூமியும் படித்தவராம் என்ற செப வழிபாட்டுப் பாடல் ஒன்று பாடப்படும் , அதில் சரியாகத் திருமகன் மரியிடம் மனுவானார் என்ற வரிகள் வரும்போது , இன்னிசை முழங்க, ஆலய மணிகள் ஆனந்தக் கூச்சலிட , பாடல் குழுவினர் பாடல் வான் வரை முட்ட,மூடி வைக்கப் பட்டிருக்கும் குடில் அல்லது பாலன் திறக்கப் படுவார். ஒவ்வொரு வருடமும், அந்த நொடிகள் நம்மை மெய் கூச்செரிய வைக்கும் என்பதில் ஐயமில்லை . சாம்பிராணியின் சுகந்தமும் , பூக்களின் நறுமணமும்,புத்தாடைப் புது மனமும் , பொங்கி வரும் ஆனந்தமும் , அடடா. நெஞ்சத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளப் பஞ்சமாய்ப் போனதே வார்த்தைகளுக்கு !!
வீட்டிற்கு சென்று , குடில் முன் முழந்தாலிட்டு, சிறிதாய் ஒரு ஜெபம் சொல்லி, பெற்றோர், உடன் பிறந்தோரிடம் (வயதில் மூத்தவர்கள்) ஆசி பெற்று (நெற்றியில் சிலுவைக் குறியிட்டு ) காசு வாங்கி (அப்பா ரூ 10/- அம்மா ரூ 10/-) கேக் வெட்டி, தேநீர் அருந்தி, அண்ணன்களைக் காவலர்களாக்கி , வாசலில் அழகான கோலமிட்டு , வண்ணம் சேர்த்து, அம்மா வடைக்குத் தயார் செய்து , படுக்கப் போகும்போதே 25ம் தேதி அதி காலை மணி 3 ஆகி விடும். காலதி காலையில் படுத்து அதே காலை எழுந்து பண்டிகை, பலகாரங்கள், நண்பர்கள், மற்றும் அண்டை வீட்டாருக்கு விநியோகம் செய்தல் என்று நாள் நீளும்.
என் பெற்றோரும், பிறந்தோரும் அவரவர் விருப்பப்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய இரண்டு குடும்பகளுக்கோ அல்லது அன்னை தெரேசா இல்லத்திற்கோ புத்தாடைகள் வாங்கி கொடுத்து மகிழ்வார்கள்.
அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் :
அமெரிக்காவில் வசிப்பவர்களுக்கு பண்டிகை பற்றிய விளக்கம் தேவையில்லை. ஆனால் , மனிதர்களின் மனம் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். திருத்தலங்களில் பொருளாதாரக் குறைவான குடும்பங்களுக்கு உதவுவதற்கான வகையில் எத்தனையோ வழி முறைகள் உருவாக்கிக் கொடுக்கப் படுகின்றன. அங்குள்ள கிறிஸ்துமஸ் மரமொன்றில் பெரியவர். சிறியவர் என்ற பாகுபாடு இல்லாமல் வயதுடன் பெயரும் தாங்கிய அட்டைகள் தொங்கவிடப் பட்டிருக்க . நீங்கள் அதில் தேர்வு செய்து அவர்களுக்கு உதவலாம்.
சிறு அத்தியாவசியப் பொருட்கள், பதிவு செய்யப்பட உணவுக் குடுவைகள், குளிர் தாங்கும் உடைகளென ஒவ்வொரு வகைப் பொருளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். ஏற்கனவே பயன்படுத்திய, நல்ல நிலையில் உள்ள உடைகளைக் கூட அதில் சேர்க்கலாம்.
எவ்வளவு வருமானக் குறைவு உள்ளவராய் இருப்பினும் , தன்னை விட ஏழ்மையான ஒருவருக்கு உதவி செய்யும் மனம் இவர்களிடம் இருப்பதைக் கண்டேன். முக்கியமாக, கிறிஸ்துமஸ் காலங்களில் இங்குள்ள மக்கள் அனைவரிடமும் அதாவது மொழி, இன, மத வேறுபாடின்றி எல்லோரிடமும் இந்த மனப்பான்மையைக் காண முடிகிறது. உண்மையில் நாமெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டிய உயர்வு நிலை இது. கிறிஸ்துமஸ் காலமென்று வேண்டாம், ஒரு பிறந்த நாள் திருமண நாள் என்று கூடச் செய்யலாமே!! இந்தியாவில் இது போன்று நிறையப் பார்க்க முடிகிறது ஆனால் ஒருவர் செய்வது ஊருக்கே தெரியும்!!!!!!!
கொண்டாட்டம் என்று பார்க்கும்போது, பொதுவாக நன்றி தெரிவித்தல் தினத்தன்று (Thanksgiving) தான் வண்ண வெளி விளக்குகள் எரியவிடத் துவங்குவார்கள்.
இவர்கள், கிறிஸ்துமஸ் ஒருவரது பெற்றோர் வீட்டில், புது வருடம் அல்லது நன்றி தெரிவித்தல் மற்றவரது பெற்றோர் வீட்டில் என்று பிரித்துக் கொள்கிறார்கள்.
2008ம் ஆண்டு என நினைக்கிறேன். என் கணவரின் சக ஊழியர் ஒருவர் வீட்டிற்கு அழைத்திருந்தார். 43 மற்றும் 48 வயது புது மணத் தம்பதியர்!! இருவருக்கும் தனித்தனியாக கல்யாண வயதில் ஒரு பொண்ணும் பள்ளிப் பருவத்தில் ஒரு பையனும் இருந்தனர். அவர்களே நாலு பேர்.
இதைத்தவிர இருவரின் உடன்பிறந்தோர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்.அதோடு கூட இருவரின் பெற்றோரும், குடும்பத் தலைவியின் பெற்றோர் நால்வர் – தந்தையின் இரண்டாவது மனைவி மற்றும் தாயின் இரண்டாவது கணவர். நால்வரும் அருகருகே அமர்ந்திருந்தது அதிசயம், ஆனால் எனக்கோ அது ஏற்றுக்கொள்ள முடியாத உண்மையாக இருந்தது. ஏறக்குறைய 20 பெரியவர்கள், 10,15 பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தினர் , 5 இளஞ்சிறார்கள் என்ற திருவிழாக் கூட்டத்தில் நாங்களும்.
மதிய உணவே களைக் கட்டியது. முடிந்தவுடன் அப்படியே மரத்தின் முன் அனைவரும் கூடினார்கள். குடும்பத் தலைவியும், தலைவரும் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து வந்து வீட்டின் முன்னறையில் ஜோடனை செய்யப்பட்டிருந்த பெரிய ஸ்ப்ரூஸ் மரத்தருகே நின்றார்கள். அதனடியில் பெரிதும் , சிறிதுமென குன்றுபோல் குவிக்கப் பட்டிருந்த பரிசுப்பொருட்களை அனைவருக்கும் விநியோகம் செய்தனர். ஒவ்வொருவர் கையிலும் குறைந்தது 10, 15 பரிசுப் பொருட்கள். ஒவ்வொருவரும் அவர் குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் பரிசளித்து மகிழ்கிறார்கள். தங்கள் குழந்தைகள், பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், அவர்கள் துணைகள் மற்றும் அவரது குழந்தைகள் என்று பரிசுப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
இப்போது தெரிகிறதா? ஏன் இத்தனை ஆரவாரம் இந்தப் பரிசுப் பொருட்களுக்கென்று? கிறிஸ்துமஸ் தாத்தா என்றழைக்கப்படும் சாண்டா க்ளாஸின் (St. Nickolas) வழி வழி கொண்டாட்டங்கள் இவை என்கிறார்கள். அக்காலங்களில், அவர் குழந்தைகளுக்கு போதனை முடிந்ததும் பரிசுப் பொருட்கள் கொடுப்பது வழக்கமாம். அந்தப் பழக்கம் இந்தப் பண்டிகை காலத்தில் பின்பற்றப்படுகிறது.
பத்து ஆண்டுகளுக்கு முன், கிறிஸ்துமஸ் அன்று இரவுத் திருப்பலிக்குச் செல்லும்போது , நமது பாரம்பரியம் மாறாமல். பட்டுடுத்திச் சென்றோம். திருத்தலத்தில் கடவுளை நோக்கியிருந்த கண்கள் அனைத்தும் எங்கள் மேல் கவிழ்ந்தது. மக்களின் கவனத்தைக் கலைத்துவிட்டோமோ என்ற கவலை எனக்குள் இருந்தது. வெளியில் வந்த பிறகுதான் தெரிந்தது என் கணவரும் அதே எண்ணத்தில் தானிருந்தார் என்று.
அதன் பிறகு நான்கு வருடங்கள், மனதில் வருத்தம் இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் இந்த ஊர் உடையணிந்துதான் சென்று கொண்டிருந்தோம்.
அதோடு விட்டிருக்கலாம். மறுபடியும் 2006ல், என் கணவரிடம் நீண்ட சொற் போர் ஒன்று நிகழ்த்த, ஒரு வழியாக ஒத்துக்கொண்டார்.
அன்று நானும் , என் குழந்தைகளும் புத்தம் புதிதாய் பட்டொன்று உடுத்திச் சென்றோம். என்ன ஆச்சர்யம், இன்னும் இரண்டு பெண்கள், இதேபோல். என்ன ஒரு மகிழ்ச்சி. ஆனால், அன்று இம்மண்ணின் மனிதர்களிடம் மாற்றம் தெரிந்தது. யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. நமது உடையைப் பார்த்துப் பழகி விட்டார்கள் போலும்.
புதிதாய் புடவை உடுத்திப் பார்த்தாலும், வண்ண வண்ண விளக்குகள் வாசலை அலங்கரித்தாலும் , உயர் வகை உணவுகள் ஓராயிரம் சமைத்தாலும் நாம் அந்நிய பூமியல் இருக்கிறோம் என்ற உண்மை அப்பட்டமாய்த் தெரிந்தது.
அதனால்தான் கடந்த 5 ஆண்டுகளாக , நாங்கள் ஒரு 12 தமிழ் கத்தோலிக்கக் குடும்பங்கள் இணைந்து, 12 கிறிஸ்தவரல்லாத நண்பர்களையும் இணைத்துக் கொண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி வருகிறோம், சிறப்பு ஜெப வழிபாடு, முழந்தாளிருந்து ஆசி வாங்குதல், பரிசுகள் பரிமாறுதல், பாடல்கள், உயர் வகை உணவுகள் , ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம் என்று அன்று முழுதும் அன்னை பூமியின் வாசனையை நுகர முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். அதில் 80 விழுக்காடு தேர்ச்சி பெற்றிருக்கிறோம் என்பது எனது நம்பிக்கை. எந்த வாசனைத திரவியமும் மதுரை மல்லிகை மணம் தருவதில்லையே!. வித விதமாய்ப் பலகாரங்கள் வீட்டில் அடுக்கி வைத்தாலும், அம்மா செய்யும் அதிரசமும் ,, முறுக்குமாய் அவை ஆவதில்லையே!! நாம் இங்கு கொண்டாடும் கொண்டாட்டங்கள் எவையும் அன்னை பூமியில் கொண்டாடுவதற்கு இணையாக இருக்கமுடியாது என்பது திண்ணம்.
எங்களின் பண்டிகை!!
எங்கள் என நான் குறிப்பிட்டது பெண்களை!!! அதை தி.மு (திருமணத்திற்கு முன்) தி.பி (திருமணத்திற்குப் பின் ) எனப் பிரிக்கலாம். தி.மு நினைவில் நிற்பவை . தி.பி பொறுப்புக்கள் நிறைக்கப்பட்டவை
தி.மு வில் எங்கள் பண்டிகை! –
பெற்றோர் பிறந்தோர் கைகளில்,
புதுத் துணியே பிரதானமாய் ,
புலரும் இன்பம் தான் தனதாய் ,
பொறுப்புக்களை அறியாத புது மலராய் ,
பொத்திப் பொத்தி பார்க்கப் படும் பொன்வண்டாய் !!
பொற்பண்டிகைகள்,அவை எங்கள் பொக்கிஷங்கள்!!!
–புஷ்பா ராஜ்.
கடந்து வந்ததை எண்ணிப் பார்க்கும் அழகான கட்டுரை.
இளமைக்கால சுகமான நினைவுகள்
அடிமனதில் உருவான பதிவுகள் !
விழாக்கால அழகான உறவுகள்
அகிலத்தில் முத்தான உணர்வுகள்!
கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!!
அழகான கட்டுரை. ஒரே பண்டிகையை இரண்டு கலாச்சாரங்களும் எவ்வாறு கொண்டாடுகின்றன என்பதை இரண்டிலும் நேரடி அனுபவமுள்ள ஒருவர் எழுத தெரிந்து கொள்வது மிகவும் சுவாரசியமாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
Wonderful write up. The comparison of ways we celebrate in both the countries was excellent . Finally the celebration before and after marriage was excellent. Brought back nostalgia , I studied in Christian school and it
Brought back my memories of celebrating Christmas with my friends.
Wonderful comparison.please keep writing, totally enjoyed.