சச்சின் டெண்டுல்கர்
நூற்றி இருபது கோடி மக்களைக் கொண்டு மதம், மொழி, இனம், பொருளாதாரம், தொழில் எனப் பல வகைகளில் பிளவுபட்டு, வலுவான மாற்று கருத்துக்களைக் கொண்டிருக்கும் ஒரு நாடு – எதிரிகள் தங்கள் நாட்டைத் தாக்கினாலும், சொந்த நாட்டினர் விண்வெளிச் சாகசங்கள் நிகழ்த்தினாலும், தானுண்டு, தன் வேலையுண்டு என்ற மனப்பாங்குடன் நடந்து கொள்ளும் மக்களைக் கொண்ட நாடு – பல மணி நேரங்கள் ஒத்த கருத்தைக் கொண்டு, அதிக கவனத்துடன் ஒரே குறிக்கோளுடன் இருப்பது, சச்சின் டெண்டுல்கர் என்ற அந்த மனிதர் ஆட்டக்களத்தில் மட்டையுடன் இருக்கும் போது மட்டும் தான். அவர் நன்றாக விளையாட வேண்டுமென உண்ணா நோன்பிருந்து, கோயில்களில் விசேஷ பூஜைகள் செய்து, வித விதமான வேண்டுதல் குறிகளிட்டு அவர் பந்தை அடித்தால் மகிழ்ந்து குதித்து, ஆட்டமிழந்தால் நொறுங்கி ஒடிந்து – எத்தனைக் கோடி மனிதர்கள்.
கடந்த நவம்பர் 14ம் தேதியோடு இந்திய கிரிக்கெட் சகாப்தத்தின் ஒரு பகுதி முடிந்து போனது என்றே சொல்லலாம். அடுத்த சில ஆண்டுகளிலோ, இல்லை நூற்றாண்டுகளிலோ சச்சினின் சாதனையை முறியடிக்கக் கூடிய ஒரு இந்தியர் தோன்றலாம். அவ்வளவு ஏன்? தங்களது காலகட்டங்களில், அப்போதிருந்த வசதிகளில், விளையாட்டு விதிகளில், கட்டமைப்புகளில் சச்சினை விட சிறப்பாக சோபித்த பல இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கெல்லாம், ஏன் எந்தவொரு விளையாட்டை சேர்ந்த இந்தியருக்கும் கிடைக்காத ஒரு அன்பும், அரவணைப்பும், மரியாதையும் சச்சினுக்கு கிடைத்திருக்கிறது.
எண்பதுகளில் ஆடத் துவங்கிய சச்சின் முதல் சில ஆட்டங்களிலேயே தனது திறனை வெளிப்படுத்தினார். பல வீரர்கள், பல காலகட்டங்களில் இதனைச் செய்ய/ செய்திருக்கக் கூடும். ஆனால் அந்தத் திறனை, நுட்பத்தை, ஆட்டத்தின் மீதான காதலை இருபத்திநான்கு ஆண்டுகள் கட்டிக் காத்தவர் சச்சின் மட்டுமே இருக்க முடியும்.
வளர்ந்து வந்த இந்தியாவில், தொலைக்காட்சி மற்றும் ஊடக வசதிகள் பெருகி வந்த காலத்தில், குடும்பத்தினரது வசதிகள் சற்று மேம்பட, மேலை நாட்டினர் போல் தங்களது பிள்ளைகளை விளையாட்டுகளில் ஈடுபடுத்திய காலகட்டத்தில் சச்சினின் உருவம் திருவோவியமாக, அழியாத சின்னமாக குழந்தைகள், இளைஞர்கள் மனதில் பதிந்து போனது. இரண்டு தலைமுறையினரைக் கவர்ந்தவரானார் சச்சின். இன்றைய குழந்தைகள் முதல் பதின் பருவத்தினர் அனைவர் இதயங்களிலும் – ‘சச்சினைப் போல வரவேண்டும்’ என்ற ஒரு ஊக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறார்.
ஒரு காலத்தில் ‘கண்ணியவான்களின் விளையாட்டு’ என்று போற்றப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு இன்று சூதாட்டம், அரசியல் தலையீடு, சக போட்டியாளர்களை இழிவுபடுத்துவது என்று தரம் குறைந்து போனாலும், மிகச் சிறந்த கண்ணியவானாகவே தனது கடைசிப் போட்டி வரை ஆடியவர் சச்சின். தவறான முடிவுகளைத் தந்த நடுவர்களை எதிர்த்துப் பேசியதோ, கோபப் பார்வை வீசியதோ கிடையாது.
ஒரு வீரன் எல்லாச் சமயங்களிலும் வெல்வதில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு தனது உடல் நலக் குறைவினாலோ, குடும்ப நிகழ்வுகளினாலோ அவர் இயல்பாக விளையாட முடியாமல் போன போது எத்தனை வசவுகள்? “இவர் ஏன் இன்னமும் ஓய்வு பெறவில்லை?”, “டிஃபன்ஸ் ஆடியிருக்க வேண்டும்..”, “கேவலமாக ஆடுறான்..” என வீட்டில் அமர்ந்துக் கொண்டு எத்தனை பேர் எத்தனை விதமாகப் பேசியிருப்பார்கள்? அத்தனைக்கும் அசராது, தன் கடன் விளையாடிக் கொண்டிருப்பதே என்று ஆடியவர் சச்சின். எந்த புகழ்ச்சியையும், வெற்றியையும் தலைக்கு ஏற்றிக் கொள்ளாமல், எந்த இகழ்ச்சியும், தோல்வியும் மனதில் தொற்றிக் கொள்ளாமல் ஆட்டத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு – காதலியைக் கண்ட காதலன் உலகத்தை மறப்பது போல், காதலுடன் ஆட்டத்தை நேசித்தவர்.
தனது அணியினர் பலவீனமடைந்து இருந்த போது தோள் கொடுத்துத் தூக்கி, பலமடைந்திருந்த போது அவர்களின் தோளில் தட்டி, கோடிக்கணக்கான மனங்களின் எதிர்பார்ப்பை ஏற்று, பல போட்டிகளில் தனி மனிதராகப் போராடி நாட்டுக்குப் பெருமை தேடித் தந்தவர். திறமையும் திமிரும் இணைந்து பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்ற கருத்தை மாற்றித் திறமையும் தன்னடக்கமும் கொண்டு உலக கிரிக்கெட் ரசிகர்களை வென்றவர். உசேன் போல்ட், யோகன் ப்ளேக் போன்ற மற்ற விளையாட்டுத் துறையைச் சேர்ந்த வீரர்களும் மதித்துப் போற்றும் குணம் கொண்டவர்.
கடந்த நவம்பர் 14ம் தேதி அவர் கடைசியாக விளையாடிய டெஸ்ட் போட்டியை உலகமே பார்த்து மகிழ்ந்தது. ஆனால் அனைவர் மனதிலும் ஓடிக் கொண்டிருந்த விஷயம் – இந்த நேர்த்தியை, இந்த கவனத்தை, இந்தப் பொறுமையை, இந்த ஆற்றலை நம் வாழ்நாளில் மீண்டும் பார்க்க முடியுமா என்பது தான்.
அந்தப் போட்டியில் அவர் எதிர்பாராமல் ஆட்டமிழந்த போது திரைப்படங்களில் காட்டுவது போல, பலருக்கு உலகம் ஒரு நிமிடம் அசையாமல் நின்று போய்விட்டதான உணர்வு. கோலாகலத்துடன், பல விதமான முகப்பூச்சுகள், அவரைப் பற்றிய வாசகங்கள் தாங்கிய அட்டைகள், அவரது படத்தைத் தாங்கிய உடைகள் என அதுவரை அன்பை வெளிக்காட்டி குதித்து கொண்டிருந்த ரசிக அலை அடங்கிப் போனது.
தனது கடைசி ஆட்டம் என்ற வருத்தம் மனதில் இருந்தாலும் அதனை வெளிக்காட்டாமல் தலை குனிந்து, கையுறைகளை கழட்டிக் கொண்டே அவர் ஓய்வறையை நோக்கி நடந்த போது எதிரணி வீரர்கள், பார்வையாளர்கள், வர்ணனையாளர்கள் என அனைவரும் 24 ஆண்டுகள் அவர் விளையாட்டுக்கு ஆற்றிய சேவையை, வருங்கால வீரர்களுக்கு விட்டுச் செல்லும் பாரம்பரியத்தைப் பாராட்டி, நன்றி கூறும் வகையில் எழுந்து நின்று ஆரவாரித்தார்கள்.
போட்டிகளின் போது அதிகம் பேசாத அவர் தனது இறுதியுரையில் அவரது ஆட்டத்துடன் தொடர்புடைய அனைவரையும் நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்த போது பல கோடி மனங்களிலும் , கண்களிலும் கண்ணீர்.
மனிதர்களின் பொதுவான குணங்களில் ஒன்று ஒருவரை எவ்வளவு மேலே தூக்குகிறோமோ அவ்வளவு உயரத்தில் இருந்தே கீழே வீசி எறிவது. தனது திறமையால், ஆளுமையால் பல கோடி மனங்களின் அன்புக்குப் பாத்திரமானவரின் புகழை பங்கு போட இன்று பல முயற்சிகள் நடந்து வருகின்றன. அவற்றில் ஒன்று ‘பாரத ரத்னா’ விருது வடிவில் முளைத்துள்ளது.
அவர் ஆடிய போது எப்படி வீட்டில் அமர்ந்து விமர்சித்துக் கொண்டிருந்தார்களோ அதை விட பன்மடங்கு விமர்சனங்கள் எழுகின்றன இப்போது.
அவர் இறுதியுரையில் கூறிய ஒரு வரி – “22 கஜங்கள் மற்றும் 24 ஆண்டுகளுக்கிடையிலான என் அற்புதமான கிரிக்கெட் வாழ்க்கை இன்று முடிந்து விட்டது”.
அந்த 22 கஜங்கள், 24 ஆண்டுகளில் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையை மட்டுமே நினைவில் கொள்வோம். நன்றி கூறுவோம். அதைத் தவிர்த்த மற்ற எதுவும் இந்த மாபெரும் வீரனுக்கு நாம் செய்யும் மரியாதையாகாது.
– ரவிக்குமார்.