\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

செட்டிநாட்டு சம்பாஷணை

Chettinadu-champashanai_620x349”அக்கா சொகமா இருக்கீயளா”….. வெள்ளை மனத்துக்குச் சொந்தகார செகப்பி, நடந்து வரும் வழியில் எதிரில் வரும் தெவ்வானை அக்காவைச் சந்தித்துக் குசலம் விசாரிக்கிறாள்.

“வாடி என்னயப் பெத்த ஆத்தா, நா நல்லாருக்கேனப்பு.. நீ எப்படி இருக்க? ஏது இந்தப்பக்கம் அதிசயமா காத்தடிக்குது?” அதே கரிசனத்துடன் பதிலளித்துக் கேள்வி கேட்கிறாள் தெய்வானை.

“ஒண்ணுமில்லயக்கா, நம்ம பெரியாஸ்பத்திரி வரக்கும் ஒரு எட்டு போயாரலாமுன்னு”…..

“அடியாத்தி, என்னாச்சுடி, உடம்புக்கு எதுவுஞ் சொகமில்லையா?”

“எனக்கெதுமில்லயக்கா, நல்லாக் குத்துக் கல்லாட்டமாத்தேன் இருக்கேன். நம்ம கெளவிக்கு ராவு முச்சூடும் ஒரே செரும, இருமலுன்னு, தூங்காமக் கடந்து தவிச்சிகிட்டு இருந்துச்சு.. அப்பச்சி பெரிய டாக்டரப் பாத்து ஏதாவது மருந்து கிருந்து வாங்கியான்னு சொல்லுச்சு, அதா வாங்கியாரலாமுன்னு….”

“கெளவிக்கு என்னாச்சுரோய்? பெரிசா எதுவுமில்லையல்லோ? வயசென்னடி ஆவுது கெளவிக்கு? ஒரு எம்பளது இருக்குமா? போன வாரம் பாக்கயில கொஞ்சம் சொணங்கித்தான் இருந்துச்சு.. அதயும் கூட்டியாந்திருக்கலாமுல்ல”..

“சரியாப்போச்சு, அதக் கூட்டியாந்தா அம்புட்டுதே, ரெண்டு நாளாயிப்போகும் வந்து சேர்ரதுக்கு, அது ரூம்ப விட்டு வெளிய வாரதுக்கே ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகுதுக்கா”..

“அப்புடியாடி கத, அய்யோ பாவம், சீக்கிரம் போய்ச் சேந்தா எல்லாத்துக்கும் நல்லது”…

“ஆமக்கா, கெளவி சொம்மா இல்லாம, ஆத்தாவைப் போட்டு வஞ்சுகினே இருக்குதுக்கா… எரிச்சலா வருது எளவு, அப்பச்சிக்குப் பயந்துகினு வாய மூடிக்கினு இருக்க வேண்டிருக்கு…”

“வீட்டுக்கு வீடு வாசப்படிஞ்ச, இந்த வம்பு பேசரதால ஒரு புண்ணியமும் இல்ல, படிக்கிற வயசுல ஏதாவது நல்லதாச் செய்யப்பாரு..”

”சரியாச் சொன்னீய ஆச்சி… எங்கவூட்டுக்கு புதுசா இண்டர்நெட் வாங்கியாந்திருக்கு அப்பச்சி, இண்டர்நெட்டுனா தெரியுமாக்கா?”

“அந்த எளவெல்லாம் நானெத்தக் கண்டேன். எல்லான் தெரிஞ்சுக்கணுமுன்னு ஆச.. நம்ம தலயெளுத்து சீல, ரவிக்க தச்சுக் குடுத்துப் பொளப்பு ஓடுது… நம்ம சுப்பையா பொய்த்தகக் கடயில பொய்த்தகம் வாங்கியாந்து படிக்கிறதோட சரி.. நமக்குத்தான் இங்கிலிப்பீசு படிக்க வராதுல்ல”

“அக்கா, இண்டெர்நெட்ல இங்கிலீஸ் மட்டுமில்லயக்கா, எல்லா பாசையும் இருக்குது. நம்ம தமிளு கூட இருக்குதக்கோவ்..”

“நெசம்மாவா சொல்லுற, தமிள்ல என்னவெல்லாம் இருக்குது தங்கச்சி, கொஞ்ச சொல்லிக் குடுதாயி, ஒனக்குப் புண்ணியமாப் போகும். எனக்கு செயகாந்தன், பாலகுமாரன், சுசாதா – இவுக எளுதினதெல்லாம் ரொம்பப் புடிக்குமுடி.. இதெல்லாமும் இருக்குமா”

“நல்லா அக்கா. ஒங்களுக்குச் சொல்லாம வேற எவுகளுக்குச் சொல்லப்போறேன் ஆச்சி.. இவுக எளுதினதில இருந்து இன்னக்கு மொளச்ச நம்ம சிவன்கோயில் தெரு வாத்யாரு மயன் கணேசம்பய எளுதர வரக்கும், எல்லாத்தயும் படிக்கலாமக்கோவ்…”

“அடியாத்தி, கணேசம்பய எளுதரம்னு சொல்லிகிட்டுத் திரியிரான், என்னத்ததான் எளுதுரான்னு படிக்கணும்னு ஆசடியம்மா.. நேரமிருக்கயில கொஞ்சங் காட்டுடியம்மா”…

ஆஸ்பத்திரி போய்ட்டு வெரசா வாரேன், வூட்டுக்குப் போலமக்கோ..”

“சரி பின்னே.. ரவைக்குப் பாக்கலாம்!!”

ரவைக்கு இல்லத்திற்கு அழைத்துச் சென்ற செகப்பி, கணினியைத் திறந்து, இணையதளத்திற்குச் சென்று பல்வேறு தமிழ் இணைய தளங்களை, தமிழார்வம் மிகுதியாய் உள்ள படிப்பறிவு அவ்வளவாக இல்லாதத் தன் உடன் பிறவாச் சகோதரி தெய்வானைக்குக் காட்டினாள். தெய்வானையின் ஆர்வம் கரைபுரண்டோடியது.

“ஐயோ, இங்குண பாருடி பொன்னியிஞ் செல்வன், அங்குண பாருஞ்ச சாண்டில்யனோட கடல் கன்னி.. அம்மாடியோ சுசாதா எளுதின என் இனிய இயந்திரா…. ஆத்தாடி, எம்புட்டு நல்ல வெசயமெல்லா மிருக்குது, இந்தப் பொட்டியில… தாயி, என்னப் பெத்த தெய்வமே.. ஒனக்கு கோயில் கட்டிக் கும்பிடலாமுஞ்ச…”

“அக்கா, உங்களுக்கு இது புடிச்சத நெனச்சு ரொம்ப சந்தோசமுக்கா.. இங்குணதான்க்கா நம்ம கணேசம்பய எளுதினது இருக்குது… அவ பெரண்டு ஒருதன் எல்லா ஊரு பாசயும் எளுதரானாம்.. அம்ம ஊரு பாசய எளுதுரான்னு கணேசம்பயலுக்குச் சொல்லுக்கா”…

“கண்டிசனாச் சொல்றேனாத்தா.. விரசா எளுதச் சொல்றேனாக்கும்… அத்தோட இதப் படிக்கர அப்பச்சிகளும், ஆத்தாக்க, அண்ணந்தம்பி, அக்காதங்கச்சிகளும் அவுக அவுக பாசயில பதிலப் போட்டா என்னய மாதிரி ஆளுக படிச்சுச் சந்தோசப் படலாந்தாயி.. போடுவாகளா?”

–    செட்டிநாட்டுச் சிதம்பரம்

Comments (2)

Trackback URL | Comments RSS Feed

  1. லெட்சுமணன் says:

    மிகவும் செயற்கையாக ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல், மண்ணின் மனமே இல்லாமல் சம்பிரதாய கட்டுரையா கதையா என்று தெரியாமல் இருக்கிறது.

    சுஜாதாவின் இனிய இயந்திரா தெரிந்தவருக்கு இண்டர்னெட் தெரியாமலா இருக்கும்?

    • மதுசூதனன் வெங்கடராஜன் says:

      லெட்சுமணன், வெளிப்படையான கருத்துக்கு நன்றி. சீர்தூக்கிப் பார்த்துக் கூறப்படும் குறைகள் எங்களைச் சரிசெய்து கொண்டு மேலும் வளர்ச்சியடைய வைக்கும் என்பதை உறுதியாக நம்புகிறோம். பாராட்டுக்களையும் குறைகளையும் சமமான மனநிலையில் ஏற்றுக் கொள்கிறோம்.

      அதே சமயத்தில், என் இனிய இயந்திரா படித்தவர்களுக்கெல்லாம் இண்டர்னெட் தெரிந்திருக்கும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பதைத் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். எத்தனையோ கிராமவாசிகளுக்கு ஆர்வமதிகம், தொழில்நுட்பத்தையும், விஞ்ஞானத்தையும் கதைகளாகப் படிக்குமளவுக்கு ஆர்வமுள்ளவர்கள், ஆனால் அவைகளைத் தொழில்நுட்பமாகத் தெரிந்து வைத்திருப்பதோ அல்லது உபயோகப்படுத்துவதோ இல்லை என்பது என் கருத்து மட்டுமல்ல சொந்த அனுபவத்திலும் பார்த்த ஒன்று.

      தொடர்ந்து படியுங்கள், தொடர்ந்து தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள், பாராட்டுதலாக இருந்தாலும் சரி, புடம்போடும் முயற்சியாயினும் சரி.

      நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad