இலையுதிர் மரம்
பஞ்சஞ்தீர்ந்த மண்ணைப் போல
மகிழ்ந்து துளிர்த்திருந்த மரமே
மங்கையும் நீயும் ஓரினமோ?
பிரிந்திருந்த வசந்தக் கணவன்
பேரிச்சை கொண்டே திரும்பிவர
பச்சைசேலை பகட்டாய் அணிந்து
பரவசமாய் நீயும் வாழ்ந்திருந்தாய்!
கூவித் திரியும் குயிலினிசையோடு
குலவி உலவிய குடும்பியோடு
கூடிக் களித்தச்சில நாளில்
கூட்டமாய் மக்களை ஈன்றெடுத்தாய்!
சிகப்பு ஊதா மிதமஞ்சளென
சிறப்பாய்ச் சேய்களும் மலர்ந்திட
செருக்காய்ச் செப்பினில் சுமந்தே
செழிப்பாய்ச் சேர்ந்தே சுகித்திருந்தாய்!
காத்திருந்த கோபக்கார கோடையவன்
காழ்ப்புற்று வசந்தனை விரட்டிடனன்!
வீறுகொண்ட மலர்பிள்ளை துடித்தனரே
வீறாப்பாய்ப் போரிட்டு மடிந்தனரே!
களைப்படைந்த கோடையும் கடந்திட
கரும்பச்சை ஆடைதனை களைந்தே
மக்கள் நினைவில்வாடி சிவப்பும்
மஞ்சளும் மாற்றி மாற்றியுடுத்தினாய்!
கண்விரித்து காமுறாத ஆளில்லை!
கண்துடைத்து கவலையகற்ற ஒருவரில்லை!
கையறுநிலையில் காற்றவன் துகிலுரித்தான்
கையுயர்த்தி அபலையாய் நின்றிருக்கிறாய்!
பொறுமையற்று மருகிடாதே மரப்பெண்ணெ
பசலையுற்று மெலிந்திடாதே சலிப்புடனே.
கண்ணனுக்கு உறவாம் இயற்கையன்னை! நீ
கரமுயர்த்தி சரணடையவே காத்திருந்தாள்.
மாம்பச்சை சேலைக்குப் பணித்துவிட்டு நின்
மானங்காக்க உறைபனி போர்த்தியிருப்பாள்.
வெள்ளுடை விலக்கி விசனம்போக்க
விரைந்தே வசந்தனை கொணர்ந்திடுவாள்!
– ரவிக்குமார்
wow !!!! what an excellent comparison!!