\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மினசோட்டா விண்வெளி வீராங்கனை

Filed in இலக்கியம், கட்டுரை by on December 10, 2013 0 Comments

Karen_Nyberg_620x827

மினசோட்டா விண்வெளி வீராங்கனை (Astronaut) முனைவர் கேரன் நைபெர்க் (Karen NyBerg)

கார்த்திகை மாதம் நமது மாகாணத்தில் கோலாகலமாக பல்வேறு பண்டிகைகள் ஆரம்பிக்கும் தருணமாகும். இதேசமயம் நமது மாகாணத்தின் விண்வெளி வீராங்கனை கேரன் நைபெர்க் 166 நாட்களுக்கு மேல் சர்வதேச விண்கலத்தில் வலம் வந்து வீடு திரும்பியுள்ளார். அமெரிக்காவில் பல மாகாணங்களிலிருந்தும் பலர் விண்வெளி போய்வரினும் சர்வதேச ரீதியில் விண்வெளி சென்ற 50 வது பெண்மணி என்ற பெருமை இவரைச் சாரும்.

மினசோட்டா மாகாணத்திலிருந்து சென்ற அண்மைக்கால விண்வெளி வீராங்கனையாகிய இவர் இளமையில் மினசோட்டாவில் சாதாரணமாக வாழ்ந்தவர். தனது ஊரிலிருந்த பொதுப் பாடசாலையில் படித்து முன்னேறி விண்வெளி சென்று தமது இள வயதுக் கனவைப் பூர்த்தி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது வாழ்க்கை தற்போதும் மினசோட்டா மக்களின் சராசரி வாழ்வு போன்றதேயாகும். குறிப்பாக ஒரு சிறிய கைக்குழந்தையின் தாயார் விண்ணில் ஐந்து மாதங்களுக்கு மேல் தங்கி மீண்டது பெரிய விடயமே. சென்ற மே மாதம், இவர் ரஷ்ய விண்கலத்தில் வின்வெளிக்குச் சென்று ‘மீண்டும் தரையிறங்கும் செயற்கைக்கோள் விண்முட்டியில்’ ரஷ்ய கசகஸ்தான் பகுதியில் பூமிக்குத் திரும்பினார்.

பூமி திரும்பிய முதல் 24 மணித்தியாலங்கள் தாம் அதிகமாக சமாளிக்க வேண்டியிருந்தது என்றாராம் நைபெர்க். தாம் பூமியீர்ப்பு இல்லாத விண்வெளியில் நன்றாகவே செயற்பட்டதாகவும், அந்தரத்தில் யாவும் பறக்கும் அனுபவமும் சிறப்பானது என்றும் கூறியிருந்தார்.

மேலும் விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் போது கண்களில் வியப்போடு தொலைக்காட்சி மூலம் பேட்டி கண்ட சிறுவர் சிறுமிகளிற்கு, விண்வெளியில் அந்தரத்தில் பறக்கும் போது எவ்வாறு நீண்ட கூந்தலைக் கழுவுவது/ அலசுவது என்பதையும் பகிரங்கமாகக் காட்டித்தந்தார் இந்த விண்கல தொழில் நுட்பவியலாளர்.

மினசோட்டா வாழ் சிறுவர் சிறுமிகளிற்கும் கேரன் நைபெர்க் அவர்களுக்கும் இடையிலான தொடர்பு இவர்கள் யாவரும் நமது மாகாணத்தில் பிறந்து வளர்ந்துள்ளார்கள் என்பதே. கேரன் நைபெர்க் 1969 ஆண்டில் வைநிங் மினசோட்டா Vining Minnesota என்னும் ஊரில் பிறந்தவர். அவர் தாய் திருமதி ஃபிலிஸ் நைபெர்க் தந்தை கென்னத் நைபெர்க் இன்றும் அந்த ஊரிலேயே வாழ்கின்றனர். கேரனின் கணவர் டக்ளஸ் ஹேர்லியும் ஒரு விண்வெளி வீரரே. அவர்களுக்கு ஜாக் என்னும் பெயருடைய சிறிய மகனும் உண்டு.

விண்வெளி வீராங்கனை நைபெர்க் கற்றது ஹெனிங் மினசோட்டா பொதுப் பாடசாலையில் தான். அவர் தனது பட்டதாரிப் படிப்பை தொழில்நுட்பத் துறையில் வடக்கு டக்கோடாப் பல்கலைக் கழகத்தில் முடித்து, இளமானி முதுமானிப் பட்டங்களை டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் முடித்தார்.

2008ஆம் ஆண்டிலிருந்து இவர் பல்வேறு அமெரிக்க, மற்றும் சர்வதேச விண்வெளிப் பயணங்களை மேற்கொண்டு வந்துள்ளார்.

அமெரிக்க நாசா NASA (National Aeronautics and Space Administration) விண்வெளிக் கூடத்தில் 1991லிருந்து வெவ்வேறு பொறுப்புகளில் பணியாற்றி இன்று விண்வெளி சுழல் அனுமானிப்புத் துறையில் (Environmental Controls) உயர் தொழில் நுட்பவியலாளராக இருக்கின்றார்.

நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் கொள்கை, இலட்சியம் பற்றிச் சிந்தித்தாலும் அதை நிறைவேற்றுபவர் ஒரு சிலரே. கேரன் நைபெர்க்கைப் பொறுத்தளவில் தான் நினைத்ததை, கனவு கண்டதை அடைந்துள்ளதாகப் பெருமையுடன் கூறியுள்ளார்.

சாதாரண அமெரிக்கப் பிரஜையாக மினசோட்டா மாகாணத்திலுள்ள சிறிய ஊரில் பிறந்து வளர்ந்த ஒருவர் இன்று 250 மைல்கள் பூமிக்கு மேல் வாழ்ந்துவிட்டு ஊர்திரும்பியது மிகவும் பெருமைக்குரிய விஷயம். இதைத் தனது வாழ்க்கையின் நிரந்தர நினைவுப் பொக்கிஷம் என்கிறார் இந்த அம்மணி.

– யோகி அருமைநாயகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad