\n"; } ?>
ad banner
Top Ad
banner ad

பதிவுகள்

Filed in இலக்கியம், கதை by on February 21, 2013 1 Comment

pathivugalவீட்டுக்குள் நுழையும் போதே ஒரே சத்தமாக இருந்தது. ஸ்பின் சைக்கிளில் வாஷிங் மெஷின் வீட்டையே லேசாகக் குலுக்கிக் கொண்டிருந்தது. சமையலறையில் இரண்டு நாட்களில் இட்டிலியாகப் போகும் மாவு அரைபட்டுக் கொண்டிருந்தது. டீ.வி யில், ‘அய்யய்யோ ஆனந்தமே’ என யானையுடன் ஹீரோ ஆடிக்கொண்டிருந்தார்.

பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த திவ்யா என்னைப் பார்த்ததும் கழுவிய டம்ளரை ‘நங்’கென்று சத்தம் வருமாறு ஸ்டாண்டில் வைத்தாள்.

’காப்பி குடிக்கிறீங்களா?’

’இல்லம்மா.. வேணாம்’.

’அதானே … இன்னைக்கு காப்பி தேவைப்படாதே உங்களுக்கு..’

கிராதகி எப்படித்தான் கண்டுப்பிடிக்கிறாளோ?

‘இல்லம்மா .. ஆபிஸ்லே ஒரு பார்ட்டி’

‘தெரியுதே .. அதான் கதவைத் திறந்ததுமே குப்புனு அடிச்சுதே… போய் மொதல்ல குளிச்சுட்டு வாங்க. இன்னைக்கு வியாழக்கிழமை..சாமிக்கு விளக்கேத்தனும்… ஞாபகம் இருக்கா?’

‘வியாழகிழமையா? வினோவுக்கு ப்யானோ க்ளாஸ் இல்லையா இன்னைக்கு?’

‘அடடா.. என்ன தெளிவு?. இந்த வாரம் க்ளாஸ் கிடையாது அவளுக்கு. அவங்க டீச்சர் தான் போன வாரமே இமெயில் பண்ணியிருந்தாளே.. போய் மொதல்ல ப்ரஷ் பண்ணிட்டு, குளிச்சுட்டு வாங்க .. குடல பொறட்டறாப்பல வருது’.

‘சரி . சரி போறேன்’

‘குளிச்சுட்டு அப்படியே மேல டீவி பாக்க உக்காந்துடாதீங்க..மாலதி இன்னைக்கு கூடப் போன் பண்ணியிருந்தா.. நானும் எத்தனை தடவச் சொல்றேன்? ரமாவோட வெட்டிங் பார்ட்டி கேம்ஸுக்கு நம்ம வெட்டிங் போட்டோஸ் கேக்கறான்னு. எனக்கு எட்டற மாதிரி இருந்தா உங்கள எதிர்பார்க்காமே நானே எடுத்துடுவேன்..எல்லாத்தையும் ஏறக்கட்டறேன் பேர்வழின்னு மேல மேல அடுக்கி வெச்சுட்டீங்க. குளிச்சுட்டு வந்து விளக்கேத்திட்டு, பேஸ்மெண்ட்லே இருந்து அந்த ஆல்பத்தைத் தேடி எடுத்துட்டு வாங்க’

குளித்துவிட்டு மறக்காமல் ப்ரஷ் செய்து விட்டு வந்தேன். வினோதினி கம்ப்யூட்டரில் ஏதோ விளையாடிக் கொண்டிருந்தாள்.

‘ஹோம்வொர்க் செய்யனும்.. ஃபைவ் மினிட்ஸ்லே கீழே வரனும்’ என்றேன்.

’நோ’ என்று முகம் கூடத் திருப்பாமல் மிகப் படிதலாகச் சொன்னாள். கீழே வந்தேன்.

‘நெய் எடுத்து வெச்சிருக்கேன்.. விளக்கேத்திட்டு ஆல்பத்தைத் தேடுங்க’

“சந்தைக்குப் போகனும்.. ஆத்தா வையும்.. காசக் குடு” கமல் கண் முன்னே வந்து போனார்.

போட்டோ ஆல்பம்ஸ் எனச் சிவப்பு மார்க்கரால் எழுதப்பட்ட பெட்டியைத் தூக்கி கொண்டு வந்து மேசையில் வைத்தேன்.

‘செல்லம் இல்ல.. நான் இந்த இட்லி மாவை வழிச்சுட்டு ட்ரையர் போடனும்.. அதுக்குள்ளே நீங்களே ஒரு நாலு போட்டோவ எடுத்து வெச்சிடுங்க .. ரெண்டு ரிசப்ஷன் போட்டோ… ரெண்டு வெட்டிங் போட்டோனு மிக்ஸ் பண்ணி எடுத்துடுங்க’

கண்டிப்பாக இன்று செஞ்சுரி அடிக்க வேண்டுமென 97 ரன்களில் சச்சின் ஆடி கொண்டிருக்க, ஷேன் வார்னேவின் பந்து போலச் சுழன்று கொண்டே வந்தது அந்த “செல்ல்லலம்”

வேறு வழியின்றி ஆல்பத்தைத் திறந்தேன். முதல் பக்கத்தில் தேடித்தேடி ரேமண்ட்சில் வாங்கிய டார்க் ப்ளூ ஷேட் சூட்டில் என்னைப் பார்த்த போது, சமீபத்தில் கலைஞர் டீவியில் பார்த்த படத்தில் வரும் பாலையாவை போல் இருந்தது.

அடுத்த மூன்று பக்கங்களைக் கடக்க வேண்டி மொத்தமாகச் சில பக்கங்களைச் சேர்த்துத் திருப்பினேன். எதைப் பார்க்கக் கூடாதென நினைத்தேனோ அந்தப் படம்…..

ஊரெல்லாம் ‘புது வெள்ளை மழை’ பெய்து கொண்டிருந்தாலும், ‘சீப்பா பண்ணிக் கொடுப்பாண்டா’ என என் அண்ணன் ஏற்பாடு செய்த சோனி ரிதம்ஸ் குழுவினர் ‘புருஷன் வீட்டில் வாழப் போகும் பெண்ணே’ பாடிக் கொண்டிருந்தார்கள்.

பளீரென வெளிச்சமடித்து இருவர் வீடியோ எடுக்கக் கற்றுக் கொண்டிருந்தனர்.

மாப்பிள்ளைத் தோழன் என்ற பந்தாவில், க்ரே கலர் சபாரி சூட் அணிந்து, பக்கத்தில் நின்றிருந்த கண்ணன் மாமா, என்னைக் கேட்காமலே என் நெற்றி வேர்வையைத் துடைக்கிறேன் பேர்வழி என்று என் தலை முடியைக் கலைத்துக் கொண்டிருந்தார்.

‘டேய், வேலூர்ல இருந்து தியாகுவும் வந்துட்டான்.. மொத்தம் ஏழு பேரு.. பக்கத்துல தான் ரூம் போட்டுருக்கோம். எல்லாம் அரேஞ்ச் பண்ணிடுவே இல்ல?’ என யாருக்குமே தெரியாத சங்கேத மொழியில், நான்கு விரலை மூடி கட்டைவிரலை மட்டும் உயர்த்திக் காட்டிக் கேட்டுச் சென்றான் என் கல்லூரி நண்பன்.

எங்கிருந்தோ ஓடி வந்த சிவப்பு ஃப்ராக் அணிந்த குழந்தை பக்கத்தில் நின்றிருந்த திவ்யாவின் கையைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடியபடி வீடியோவுக்குப் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தது.

உதட்டுச் சாயத்தைத் துடைப்பது போல் கைகளால் வாயை மூடி கொண்டு ‘யாருங்க இவ? கை வலிக்குது’ என்றாள் திவ்யா.

‘யாருக்குத் தெரியும்… இங்க மேடைக்கு யாராவது வரும் போது வணக்கம் சொல்ற மாதிரிக் கழட்டி விட்டுடு’ என்று வீடியோ கேமராவுக்காகச் சிரித்துக் கொண்டே, என் நாளைய பெண்டாட்டிக்குக் கபடம் சொல்லிக் கொடுத்தேன்.

‘ஒரு வழியா மாட்டினுட்டியா’ என்று கேட்டுத் தன் ஹாஸ்யத்தைத் தானே ரசித்துச் சத்தமாகச் சிரித்துக் கொண்டே வந்த பக்கத்து வீட்டுச் சீனு மாமா, போட்டோ எடுத்துக் கொண்ட பின். ‘நான் இருந்து சாப்டுட்டு போறேன்.. யூ டோண்ட் வொர்ரி .. அப்றம் நாளைக்குக் காலைல கல்யாணத்துக்கு வர முடியுமான்னு தெரிலே… காஞ்சிவரம் இன்ஸ்பெக்ஷன் ட்யூட்டி.. மாமி வருவா.. எனிவே.. கங்க்ராஜுலேஷன்ஸ்..’ என சொல்லி ஒரு வெள்ளை போஸ்டல் கவரை இரண்டாக மடித்துக் கொடுத்துவிட்டுப் போனார்.

கண்ணன் மாமா அதைப் பத்திரமாக வாங்கிச் சற்றுத் தள்ளி உட்கார்ந்து இன்கம் லெட்ஜரில் எண்ட்ரி போட்டுக் கொண்டிருந்த ஒருவரிடம் கொடுத்து விட்டு வந்து, தன் ‘இசட்’ கேட்டகரிப் பணியைத் தொடர்ந்தார்.

அடுத்து மேடைக்கு வந்த சிலர் திவ்யாவுக்கு தெரிந்தவர்கள். அவளிடம் மட்டுமே பேசி என்னை இக்னோர் செய்கிறார்கள் என்பது வீடியோவில் வெளிப்படையாகப் பதிவாகாமல் இருக்க அரங்கத்தில் உட்கார்ந்திருந்த சிலரைப் பார்த்துக் கையசைத்துக் கொண்டிருந்தேன்.

சரேலென்று அவளைப் பார்த்தேன்.. அண்ணி அவள் வீட்டுக்குப் பத்திரிக்கை கொடுத்தது தெரியும். ஆனால் அவள் எப்படி…? கருநீலப் பட்டில், நெற்றியில் வழக்கமான சந்தனக் கீற்றுடன்….மல்லிகா.

மல்லிகா.. முதலில் அவளை எனது வழக்கமான பஸ் ஸ்டாண்டில் தான் பார்த்தேன். சில மாதங்கள் பார்வை பரிபாஷையில் பேசி, பின்னொரு நாள் சிரித்துத் தோழமை எனும் வட்டத்துக்குள் நுழைந்து என் குடும்பத்துக்கு அவளும், அவள் குடும்பத்துக்கு நானும் அறிமுகமானோம். சில ஆண்டுகளில், நட்பு எனும் நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறோம் என்பது இருவருக்குமே புரிய வந்தது.

ஆற்றங்கரை காத்திருத்தலில் காதல் கொண்டோம். வாழ்க்கைக் கதைகள் பல பேசினோம் – கருநீலப் பட்டுடுத்தி மணம் புரிந்து, பிள்ளை பெற்று, ஆணென்றால் கார்த்தி எனவும், பெண்ணென்றால் கார்த்திகா எனவும் பேர் வைப்பது எனக் கூட்டுக் கனவுகள் கண்டோம்.

நட்புக்குச் சம்மதித்த அவள் குடும்பத்தார்க்கு நாங்கள் அதை மீற நினைத்தது பிடிக்கவில்லை. நாசூக்காக, அதே சமயம் சாமர்த்தியமாகக் காய் நகர்த்தினார்கள். எனக்கு நிறைய மூளைச் சலவை செய்தார்கள்.

பின்னொரு நாளில் அதே ஆற்றங்கரையில் வைத்து அவளின் மனமுடைத்தேன். கோழை என்றாள். ஒத்துக் கொண்டேன். அழுது சென்றாள். தொலைந்து போனேன். அதற்குப் பின், அவளைப் பார்க்கவில்லை. ஆனால் அண்ணிக்கு அவர்கள் குடும்பத்துடன் தொடர்பிருந்து கொண்டிருந்தது.

 

இன்று மீண்டும் அவள். அரங்கத்தில் எல்லோரும் அவுட் ஆஃப் போகஸில் மங்கிப் போனார்கள். என் இயல்பான சிரிப்பு காணாமல் போயிருந்தது. எனக்கு அதிகமாக வேர்க்கத் துவங்கியிருந்தது. கண்ணன் மாமாவுக்கு வேலை அதிகமாகியது.

சிலருக்காகக் காத்திருந்து, பின்னர் அவள் மேடைக்கு வந்தாள். பலமுறை கிறங்கடித்த அதே சந்தன வாசம் – என்னைக் கடந்து சென்று திவ்யாவின் பக்கத்தில் போட்டோவுக்காக நின்றாள். எத்தனை முறை கனவு கண்டிருப்போம். கல்யாண மேடை, கருநீலப் பட்டுப்புடவை, மல்லிகைச் சரம், சந்தன வாசம், அருகருகே நாங்கள் என. அந்த நொடியில் எல்லாம் இருந்தது. எங்களுக்கு நடுவே திவ்யாவும் இருந்தாள்.

’கன்கிராஜுலேஷன்ஸ்’ என்றாள் திவ்யாவிடம்.

’இவங்க மல்லிகா ..’ என்று இழுத்தேன்.

‘இவங்க அண்ணியோட ஃப்ரெண்ட்’ என முந்தி கொண்டாள் மல்லிகா.

‘எப்ப ஊர்லருந்து வந்தீங்க?’ என அவள் கண்களைத் தவிர்த்துக் கேட்டேன்.

‘ரெண்டு வாரமாச்சு’ அவளும் என்னை பார்க்காமல் பதில் சொல்லி, திவ்யாவிடம் மீண்டும் ‘ஆல் த பெஸ்ட்’ சொல்லிச் சென்றாள்.

’நான் மாவை எல்லாம் வழிச்சிட்டு, துணியெல்லாம் ட்ரையர்ல போட்டுட்டு வந்துட்டேன்… நீங்க இன்னும் போட்டோவை எடுத்த பாடில்லையா?’ என்ற திவ்யா ஆல்பத்தைப் பார்த்தவுடன்.. ’நெனச்சேன். என்ன ப்ளாஷ்பேக்கா? நம்ம பையனுக்குப் பத்தொம்பது வயசாகுது… இப்பதான் என்னவோ உங்களுக்குப் பத்தொம்பது வயசான மாதிரி நெனப்பு.. சொல்ல மறந்துட்டேன்… நேத்து உங்க மல்லிகா போன் பண்ணியிருந்தா.. அவ பொண்ணு கார்த்திகா அடுத்த வாரம் ராச்செஸ்ட்டருக்கு இன்டர்வியூக்கு வராளாம்.. நம்ம கார்த்திக்கை ஏர்போர்ட்டுக்கு அனுப்பி அவளைப் பஸ்லே ஏத்தி விடனுமாம். முடியுமான்னு கேட்டா… நான் சரின்னு சொல்லிட்டேன். சரி சரி… தள்ளுங்க நானே போட்டோவ எடுத்துக்கறேன். நீங்க போய் வினோவுக்கு ஹோம்வொர்க் சொல்லிக் கொடுங்க’ என்றாள்.

ஆமாம் பின்னோட்டம் என்பதற்கு எதிர்ப்பதம் என்ன? முன்னோட்டமா?

– மர்மயோகி

Comments (1)

Trackback URL | Comments RSS Feed

  1. Vijo says:

    Rombha naal kalichu rasichu padichathu. Nanrikal. Keep going.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ad banner
Bottom Sml Ad