பல்லாங்குழி
மிகத் தொன்மையான தமிழர் விளையாட்டு, கிட்டத்தட்ட 8000 ஆண்டுகள் பழமையானது எனலாம். பல்லாங்குழி பற்றிய குறிப்புகள் பல தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. மொழி ஞாயிறு தேவனேயப்பாவாணர் தமிழரின் தொன்மையான, தமிழ் மண்ணின் மரபு மாறாத விளையாட்டுகளைப் பற்றி ஒரு தனி நூலே எழுதியிருக்கிறார். இந்நூலில் பாவாணர் எழுதிய முகவுரையிலிருந்து சில பகுதிகள் இதோ; .
”விளை என்றால் விருப்பு என்றும், ஆட்டு என்றால் ஆட்டம் பொருளாகும். எனவே, விரும்பியாடும் ஆட்டு, விளையாட்டு என்றானது. விரும்பப்படுதல், செயற்கெளிமை, இன்பந்தரல் ஆகிய மூன்றும் விளையாட்டின் இயல்பாகும். விளையாட்டால் ஒருவர்க்கு உடலுரம், உள்ளக் கிளர்ச்சி, மறப்பண்பு, மதிவன்மை, கூட்டுறவுத் திறம் வாழ்நாள் நீட்டிப்பு முதலியன உண்டாகின்றன.”
பாவாணர் விளையாட்டுகளை ஆண்பாற் பகுதி, பெண்பாற்பகுதி, இருபாற்பகுதி என முப்பகுதிகளாக வகைப்படுத்துகிறார், இவற்றின் உட்பிரிவுகளாகக் குழந்தைகள்/பெரியோர் விளையாட்டுகளையும் விளக்கியுள்ளார். மேலும் விளையாட்டுகள் ஆடும் காலங்களைத் தொனிக்கும் வகையாகப் பகலாட்டு (பகலில் ஆடுவது), இரவாட்டு (இரவில் விளையாடுவது), இருபொழுதாட்டு (எக்காலத்திலும் விளையாடுவது) என மூன்று வகைப்படுத்துகிறார். “பண்ணாங்குழி” என்று தனித்தமிழில் பாவாணர் அழைக்கும் இந்த விளையாட்டு இருபாலரும் ஆடும் எந்த நேரத்திலும் ஆடும் இருபொழுதாட்டாக குறிக்கப்பட்டுள்ளது.
பல்லாங்குழி என்பது பதினான்கு குழி, பரல்+ஆடும்+குழி = பரலாடும் குழி, பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்றும் பாண்டி விளையாட்டு என்றும் வழங்கப் படுகிறது. சீதைப் பாண்டி என்பது ஒருவர் மட்டுமே தனித்து ஆடும் பல்லாங்குழி விளையாட்டு ஆகும்.
இருவர் சேர்ந்து ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் மரம், இரும்பு, வெண்கலத்தாலான பல்லாங்குழிகள் பயன்படுத்தப் படுகிறது என்பதை நாம் அறிவோம். தமிழன் உலோகங்கள், மரக்கருவிகள் கண்டுபிடிப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மண்ணிலும் பாறையிலும் 14 குழிகளைக் குடைந்து இந்த விளையாட்டை ஆடி இருப்பதற்கான பல தொல்பொருள் புரதான குறிப்புகளும் கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன. சமீபத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் திருச்சி பக்கத்தில் பாறையில் குடைந்த பல்லாங்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது சுமார் 1200 ஆண்டுகள் பழமையுடையது என்கின்றனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்.
எப்படி விளையாடுவது?
இதில் பதினான்கு குழிகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஏழு குழிகள் என்று பிரித்துக் கொண்டு எதிரெதிர் அமர்ந்து ஆட வேண்டும். குழிகள் ஒவ்வொன்றிலும் ஐந்து ஐந்து காய்கள் (புளியங் கொட்டைகள்) இட்டு நிரப்பப்படும். முதலில் ஆடுபவர் ஏதாவதொரு குழியில் உள்ள காய்களை எடுத்துப் பிரித்து விளையாடத் தொடங்குவார். அவ்வாறு பிரித்து விளையாடி வரும்போது குழி வெறுமையாக இருந்தால் அந்தக் குழியைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக் கொள்வார். இதனைத் துடைத்து எடுத்தல் என்று கூறுவர். பின் அடுத்தவர் ஆடத் தொடங்குவார். அவரவர் பக்கத்தில் ஒரு குழியில் நான்கு இருந்தால் அதையும் ‘பசு’ எனச் சொல்லித் தனதாக்க வேண்டும்.
இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் ஆடி கொண்டு வரும்போது காய்கள் அனைத்தும் இருதரப்பிலும் ஆடுபவர்கள் வென்றடுத்தபின் முதல் சுற்று முடிகிறது. இருதரப்பும் தன்னிடம் உள்ள காய்களை அவரவர் பக்கத்து 7 குழிகளில் நிரப்ப வேண்டும். காய்களை இழந்தவர் (காட்டாக 15 காய்கள் குறைவாகக் கிடைத்தன என்றால்) தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டு விட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார். சில இடங்களில் தோற்றவரும் போடமாட்டார். இப்போது தோற்றவருடைய குழி இழப்புக்கு ஒரு நிரந்தரமின்மை ஏற்படுகிறது.
ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிற போது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்து கூட இல்லாமல் நாலாக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயினை இட்டு ஆட்டம் தொடர்கிறது. இதற்கு ‘கஞ்சி காய்ச்சுதல்’ என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும். தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முழுமை பெறுகிறது. தமிழர் வீடுகளில் அவரவர் வசதிக்கேற்றவாறு வெண்கலம், ஐம்பொன் மற்றும் மரத்தினாலான பல்லாங்குழி இருந்தது ஞாபகம் இருக்கும், இல்லையேல் பெற்றோரிடமோ, தாத்தா, பாட்டியிடமோ கேட்டுப்பாருங்கள். இந்த 5 நிமிடக் காணொளியில் விளையாட்டு முறையைச் செயல்விளக்கமாகக் காட்டுகிறார்கள்.
பேராசிரியர் தாயம்மாள் அறவாணன் ‘பல்லாங்குழி (திராவிட ஆப்பிரிக்க ஒப்பீடு)’ என்ற விரிவான நூலை எழுதியுள்ளார். உலகெங்கிலும் பல்லாங்குழி ஆட்டம் சிற்சில மாறுதல்களுடன் பழங்குடிகளிடம் விளங்கி வருகிறது. அமெரிக்க விளையாட்டுப் பொருள் கிடைக்கும் கடைகளான Target, Toys R’us போன்றவற்றில் MANKALA என்ற பெயரில் மரத்தினாலான “பல்லாங்குழி” கிடைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? iTunes இணையக்கடையிலும் ஒரு “App” கிடைக்கிறது..
https://itunes.apple.com/us/app/pallanguli/id433612023?mt=8 தமிழரின் தொன்மையான விளையாட்டில் இருந்து வந்தது என்பதுதான் தெரியாத செய்தி.
-மா.சிவானந்தம்
i would like to buy that swan pallanguzhi. where will I get it.
வணக்கம் உங்கள் வினவலை பனிப்பூக்கள் சஞ்சிகை பல்லாங்குழி, தமிழர் விளையாட்டுக்கள் கட்டுரை ஆசிரியருடன் பகிர்ந்து பதில் தர முயற்சிக்கிறோம்.