மினசோட்டா ஐரோப்பியத் தொடர்புகள் – ஸ்காண்டிநேவியா SCANDINAVIA
நமது மாநிலமாகிய மினசோட்டாவில் ஆசிய நிலப்பரப்புத் தொடர்பு காலத்தில் புலம் பெயர்ந்த ஆதிவாசி மக்களிற்கு அடுத்தபடியாக கடல்மூலம் புலம் பெயர்ந்த மக்கள் பெரும்பாலும் ஸ்காண்டிநேவியர்கள் ஆகும்.
ஸ்காண்டிநேவியா பிரதேசம் பொதுவாக டென்மார்க் Denmark, நோர்வே Norway, சுவீடன் Sweden நாடுகளைச் சாரும்.
வடதுருவப்பிரதேசக் கடலைச் Arctic Sea சார்ந்த பின்லாந்து, ஐஸ்லாந்து Iceland மற்றும் லப்லாந்து Lapland எனும் வடதுருவக் கலைமான் reindeer வர்க்கங்களை மந்தையாகப் பார்க்கும் நாடோடி மக்கள்
பிரதேசமும் ஸ்காண்டிநேவியாவில் அடங்கும் .
லப்லாந்து மக்கள் எல்லையற்ற வட துருவப்பிரதேசங்களில் சஞ்சரிக்கும் மக்கள். அவர்களின் வாழ்வுமுறை பெரும்பாலும் துருவக் கலைமான்களை பராமரித்தலும் , மேய்த்தலுமே . அவர்கள் துருவப் பருவகாலங்களில், மான் கூட்டம் எங்கெங்கு புற்றரைகளை நாடிச்செல்கின்றனவோ அதைப்பின்பற்றிச் சென்று வாழ்வர்.
ஸ்காண்டிநேவியா பூகோளத்தில் மிகவும் வடக்கில் துருவத்திற்கு அருகில் இருப்பதால் “நள்ளிரவுச் சூரியப் பிரதேசம்” “Land of Midnight Sun” என்றும் அழைக்கப்படும். இதன் காரணம் – வடதுருவத்தில் பூமியின் சூரியனைச் சுற்றிய பூகோள வலத்தின் போது ஆனி, ஆடி மாதங்களில் நள்ளிரவிலும் சூரியன் மறைவதில்லை. இதனால் இப்பிரதேச மக்கள் தமது கலாச்சாரப் பண்பாடுகள், கொண்டாட்டங்களை பருவகால இருள், பகல் மாற்றங்களை ஒட்டி அமைத்துள்ளனர்.
இவை இன்றும், இவர்களது மினசோட்டா வாழ்க்கையில் நத்தார், ஹலோவீன், அறுவடை மற்றும் இருண்ட இரவு, மாலை மாநிலக்கொண்டாட்டங்கள், உணவு வகை பரிமாறல்கள் என தனித்துவமாக அமைந்துள்ளன.
வட ஐரோபியப் பிரதேச ரீதியில் பார்த்தால் ஸ்காண்டிநேவியா நாடுகள் பூகோளவியலில் சற்றுப் பிரிந்தும் அதேசமயம் மக்களின் தொன்றிய கலாச்சார வரலாற்றில் இணைந்தும் இருப்பதைக் காண முடிகிறது.
இயற்கை அமைப்பை எடுத்துப்பார்த்தால் எமது மாநிலத்தில் எங்கெங்கு ஸ்காண்டிநேவிய மக்கள் குடியேறியுள்ளனர் என்பது, அவர்களது சான்றோர்கள் ஐரோப்பிய பிரதேசங்களில் எங்கெங்கு வாழ்ந்தார்களோ அதற்கு ஈடாகவே தங்களது வாழ்விடங்களை அமைத்து உள்ளனர் என்பதையும் அறியலாம்.
ஒவ்வோரு ஸ்காண்டிநேவிய பிரதேச நாடுகளும் சிலவகையில் வெவ்வேறு பட்டுக்காணப் படுகின்றன. உதாரணமாக டென்மார்க் நாட்டை எடுத்துக்கொண்டால் அது திடலான பச்சைப் பசேல் என்ற பூமியைக்கொண்டதாக உள்ளது.
அதே சமயம் நோர்வே நாடானது குளிர் காற்று அரவணைக்கும் அழகிய மலைச்சாரல்களையும், பள்ளத்தாக்குகளையும், இப்பள்ளத்தாக்குகளில் அதி உயரத்தில் இருந்து கடலேராம் வரை காணப்படும் உறைபனி உருகி அமைந்த ஃபயோர்ட்ச் Fiords எனப்படும் பளிங்கு நீர் ஏரிகளைக் கொண்டும் காணப்படுகிறது.
சுவீடன் நாடானது தொடர்ச்சியான விவசாயப் பயிர் செய் நிலங்களையும் இடைக்கிடையே பழமை வாய்ந்த ஐரோப்பிய பெரு நகர்களைக் கொண்டும் காணப்படுகிறது.
ஸ்காண்டிநேவிய நாடுகள் இயற்கையமைப்பில் சற்று வேறுபடினும் அப்பிரதேச மக்கள் வரலாற்றில் ஒருமித்த “வைக்கிங்” வர்க்க மக்களாகவே காணப்படுகின்றனர்.
இதற்கு சான்றாக இன்றும் மினசோட்டா மாநில அமெரிக்க கால் பந்தாட்டக் குழுவின் பெயர் வைக்கிங்க்ஸ் என்றிருப்பதைக் காணலாம்.
வைக்கிங் வர்க்கம் மிகவும் வலிமையும், திறமையும் மிக்க வடதுருவக் கடலோடி மக்கள். அவர்கள் வடதுருவத்தில் இருந்து பண்டைய ரச்சியா Russia மூலம் துருக்கிவரையும் Turkey வந்தனர்,
அவர்கள் பண்பாட்டு சான்றுகளும், கலைவண்ணங்களும் இன்றும் பலநாட்டு நாகரிகங்களில் காணப்படுவதாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
மினசோட்டாவில் பெரும்பான்மையான ஸ்காண்டிநேவிய அடிக்கொடிகள் தற்போது சில விடயங்களில் தான் அதுவும் விளையாட்டு விசிறிகளாகத்தான் வைக்கிங் பலத்தைக் கொண்டாடுகின்றனர். ஆயினும் வரலாற்று வைக்கிங் வர்க்கமும் அவர்களின் தொழிநுட்பமும் யாவரும் பெருமையடையக்கூடியவையே.
இந்த வர்க்கம் தமது கடலோடித் தொழிலிற்கென சிறப்பான வில்லுப்போன்ற உருவப் படகுகளை மரத்தில் தயாரித்தனர்.
வைக்கிங் வர்க்கத்தினர் தச்சு , செதுக்கு வேலைகளில் கைதேர்ந்தவர்கள் என்பதை அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் மூலம் இன்றும் அவர்கள் சென்ற பிரதேசங்கள் பலவற்றிலிருந்து காணலாம்.
வைக்கிங் வர்க்கம் அவர் சமயத்தையும், மேலும் கடல்யாழியை தமது சின்னமாகவும் பாவித்திருந்தனர். ஒவ்வொரு படகும் செதுக்கப்பட்ட கடல் யாழியை நற்சின்னமாக கொண்டிருந்தது. மேலும் மினசோட்டா மாகாணத்தில் மட்டுமல்ல, கனேடிய வரலாற்றிலும் வட அமெரிக்காவை 1492இல் முதலில் கண்டுபிடித்த ஐரோப்பியர் கொலம்பஸ் அல்லர் என்றும் , அது ஆயிரம் ஆண்டுகளிற்கு முன்னர் லெஃப் எரிக்சன் Lief Eriksson எனும் வைக்கிங் இனத்தவரால் கண்டுபிடிக்கப்பட்டது எனவும் இன்றும் விவாதிக்கப்படுகிறது.
தமிழில் “யார் குத்தினால் என்ன? அரிசியைத் நெற்கதிரில் இருந்து தீட்டினால் போதும்” எனும் சொலவடை அமைந்துள்ளதைப் போல
அமெரிக்காவை யார் கண்டுபிடித்தால் என்ன எமது மாநில அயலவர் வரலாற்றையும் அவர்களது சான்றோர் பண்பாடுகளையும் தெரிந்து கொள்வது நல்ல விடயமே.
– யோகி