தானியங்கி ஊர்தி (Self Driving Car)
நாம் நாளை உலகம், விஞ்ஞான விந்தை என்று திரைப்படம் பார்த்துச் சொக்கிக்கொண்டு இருக்கும் இத்தருணத்தில் 21வது நூற்றாண்டு எந்திரங்கள் சிறிது சிறிதாக எம்மருகில் அண்மித்து, ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன என்று கூறுவது மிகையாகாது. கீழே இது பற்றிய விவரணை.
இதமான காலை வெய்யில் கிழக்கில், முகில்கள் அதிகமற்ற பிரகாசமான நீலவானம் வழக்கம் போல சிவம் வேலைத்தளம் செல்ல ஆயுத்தமாகிறான். அழகான பச்சைப்பசேலெனவும், பூக்கள் பூத்துக்குலுங்கும் சிறிய முன்முற்றத்தைத் தாண்டி தரித்திருக்கும் தனது ஊர்தியினுள் வலதுப்பக்கத்தின் சாரதிப் பகுதியில் ஏறிக்கொள்கிறான்.
அவன் ஒட்டும் சில்லின் அருகில் உள்ள அழுத்தியில் விரலை வைக்க மின்னியல் எந்திரம் உயிர் பெற்று இயங்கத் துவங்கியது. மிக அமைதியாக ஊர்தி பின்புறமாக சென்று மெதுவாக வீட்டுக்கு அண்மைச்சாலையில் திரும்புகிறது. சிவம் ஊர்தியை முன்னோக்கி செலுத்த தொடங்கினான். அவன் வேலையிடம் செல்ல சுமார் அரை மைல்களில் பெருஞ்சாலை எடுத்து கிழக்குப்புறமாகச் செல்லவேண்டும்.
சிவம் பெருஞ்சாலையை அண்மித்த அதேசமயம் அவனது ஊர்தி எந்திரனும் தன்னைத்தானே சுதாரித்துக் கொள்ளுகிறான்.
மனிதருக்குள்ள ஐம்புலன்களைப் போல, தானியங்கி ஊர்தியின் கணினியும் மூன்றுக்கு மேற்பட்ட செயற்கோள்கள் மூலம் பூகோள புள்ளியை நிர்ணயிக்கும் கருவி ( satellite based GPS), மற்றும் அதன் மேல் உள்ள சுழலும் எதிரோலி வாங்கி (ராடார்) இயங்கத் துவங்குகின்றன. நான்குபுறமும் படமெடுக்கும் புகைப்பட கருவிகள் வாகனத்தின் சுற்றாடலை நிர்ணயித்துக் கொள்கிறது.
அடுத்து ஊர்தியின் உள்ளே சாரதி இருப்பிடத்திற்கு எதிர்புறத்தில், ஓட்டுச் சில்லுக்கு அருகாமையில் உள்ள மின்னொளித்திரையில் புதிய தகவல்கள் தோன்றுகின்றன. GO TO AUTO DRIVE LANE. பெருஞ்சாலையின் ஆறு தடங்களில் இடப்பக்கத்தில் உள்ள இரண்டு தடங்களும் தானியங்கி ஊர்திகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வந்து கொண்டிருக்கும் மற்றய பெருஞ்சாலை ஊர்திகளையும் வலதுபுறத்தில் தாண்டி சிவம் தனது ஊர்தியையும் விசேட பாதையில் செலுத்தினான். அடுத்து வாகனம் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கும் போது அலட்சியமாக டொசௌப்பெர் ON/OFF என்றிருந்த அழுத்தியை விரலால் அமுக்கினான்.
தற்போது ஊர்தியின் பெருஞ்சாலை ஓட்டம் முழமையாக மனித சாரதியிடம் இருந்து எந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. இனி சிவம் செலுத்தும் சில்லில் இருந்து கைகளையும், தடைப்பொறியில் ( brake ) இருந்து காலையும் அகற்றி இளைப்பாறலாம்.
ஆமாம் இனி மனித சாரதி தேவையில்லை ஊர்தி எந்திரன் விழித்து பயணத்தைத் தொடர்கிறான். அடுத்து மின் திரையில் சிவம் பயணிக்கும் தானியங்கி ஊர்தி செல்லும் பெருஞ்சாலை தடம் (lane) பச்சையிலும், மற்றும் அண்மையில் உள்ள வாகனங்கள் வெள்ளை முப்பரிமாணச் சதுரங்களாகவும் காட்சிதந்தன.
தரித்த பெருஞ்சாலைத் தலையிடியும் கிடையாது, தற்காலிகமாக அடுத்தடுத்து ஆத்திரத்துடன் தடைப்பொறியில் கால்வைக்கவும் தேவையில்லை. சிவம் ஆறுதலாக தனது மின்பலகையில் நாளாந்த பத்திரிகை வாசிக்க ஊர்தி பக்குவமாக அவனை வேலைக்கு அழைத்துச் செல்கிறது.
இது விஞ்ஞானக் கற்பனையல்ல 2014ம் ஆண்டில் அமெரிக்க முற்போக்கான மாகாணங்களில் சாதாரணமாக நடைபெறும் விடயம். இன்றுவரை தனியங்கி எந்திரரால் ஓட்டப்படும் ஊர்திகள் கலிபோர்னியா, நெவாடா போன்ற மாகாணங்களில் எந்த வித விபத்தும் இல்லாமல் 500,000 மைல்களிற்கும் மேலாக ஓடியுள்ளன.
தானியங்கி ஊர்திகளைப் பொறுத்தளவில் அவற்றின் வளர்ச்சியை நிர்ணயிக்கும் பெரும் ஆண்டாக 2013ஐ எடுத்துக்கொள்ளலாம். தானியங்கி ஊர்திகள் பொதுமக்களுடன் புழங்குவதற்கான சட்டவரையறைகள் 2013ம் ஆண்டு நெவாடாவில் உருவானது. எனினும் இனி மற்றய மாகாணங்கள், அமெரிக்க மத்திய அரசு மற்றும் உலகளாவிய போக்குவரத்து அமைச்சுக்கள் பரிசீலிக்கவும் கூடிய விடயம்.
தானியங்கி ஊர்திகள் பற்றிய விஞ்ஞானக் கற்பனைகள், செயற்பாடுகள் 1970களில் இருந்து அமெரிக்க நாட்டில் இருப்பினும் அமெரிக்க மத்திய அரசு இராணுவ விஞ்ஞான கூடம் ( DARPA ) மீண்டும் ஆர்வத்தைக் கிளப்பியுள்ளது. DARPA 2004-2007 வரை பலவித தானியங்கி ஊர்தியமைப்புப் போட்டிகளை அமைத்து பரிசில் வழங்கி பல்கலைக்கழக, மற்றும் தனிப்பட்ட தொழிநுட்ப ஆய்வாளர்களையும் ஊக்குவித்தது.
வழக்கம் போல் ஒரு காலத்தில் மின் இணையதளத்தை இப்படி உருவாக்கிய DARPA இன்று எந்திரர் ஊர்தி செலுத்தல் தொழிநுட்பப் போட்டியையும் தனியார் வர்த்தகத் தாபனங்களிலும் ஆரம்பித்து வைத்துள்ளது. இன்று Google, GM, Audi, BMW, Volkswagen, Volvo, Toyota, Nisan என பிரபல உலக உற்பத்தியாளர்கள் யாவரும் போட்டிப் போட்டுக் கொண்டு தானியங்கி ஊர்தி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவர் செய்யும் நன்மைக்கு பலருக்கும் பெய்யும் மழை என்பது தமிழ் சான்றோர் வாக்கு. அதைப்போல் தானியங்கி ஆராய்வுகளின் நல்விளைவுகள் வருகிற தசாப்தத்தின் போக்குவரத்து முறையையே மாற்றியமைக்க வழிவகை செய்யும் என்பதில் ஐயமில்லை. பெருஞ்சாலை வாகன நெருக்கடிகள் முடிவுற்ற முந்தைய கால பிரச்சனைகளாகவும், சாலைப் போக்குவரத்து வழிகாட்டி ஒளி என்றும் பச்சையாக இருக்கவும் நம்பிக்கை கொள்கிறோம்.
– யோகி