புதுமை
அது ஒரு மார்கழி மாத அதிகாலை நேரம். சூரியன் முழுவதும் எழுந்திராத துணிவில், மூடுபனி படர்ந்து கடல் அலையையும் அதனையடுத்த மணற்பரப்பையும், தலைவர்களின் சிலைகளையும் மூடி ஆட்கொண்டிருந்த காலம். மூடுபனியை ஊடுருவிக் காணும் அழகை ரசித்த இளஞ்சூரியன் அந்த அழகு கெடாமல் சிறிது நேரம் இருக்கட்டுமென தனது சூடான கிரணங்களைச் சுருட்டி மறைத்தது போல ஒளி குன்றியிருந்தான்…… அவன் ஒளி குன்றியிருப்பது தலைவர்களின் சிலை மீது பறவைகள் கழித்த எச்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டாமலிருப்பதற்காகக் கூட இருக்கலாம்…
திருவல்லிக் கேணியின் பஜனை கோவில் தெரு.. அதிகாலையெழுந்து, சுத்தமாக தலை ஸ்னானம் செய்து, மடிப்பு கலையாத பஞ்ச கச்சமணிந்து, நெற்றி நிறைய திருமண் கமழ தெருவெல்லாம் பவனி பரும் பக்தர் கூட்டம்..
வாரணமாயிரம் சூழ வலஞ்செய்து
நாரணன் நம்பி நடக்கின்றானென்னெதிர்….
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழி…
பஜனைக் கூட்டம், நெஞ்சை வருடும் அழகான டியூனில் பாடிக் கொண்டு செல்ல…
இருபத்தைந்து வயது இளைஞன் மோகன் தாஸ் தொண்ணூறு வயதுத் தாத்தா கோவிந்த ராஜனின் கை பிடித்து நடக்கின்றான்.. காதுகளிரண்டிலும் பொருத்திய ஹெட் ஃபோனில் ஹாரீஸ் ஜெயராஜின் பாடலுக்கு தலையசைத்துக்கொண்டே …. சற்றே தள்ளாடும் தாத்தா, சற்றும் கவனமில்லா இளைஞன்.. யார், யாரை அழைத்துச் செல்கிறார்கள், பார்ப்பவர் முடிவு செய்வது மிகக் கடினம்….
ஹெட் ஃபோன் பாடலுக்கு நடுவே பஜனைப் பாடலிலும் கவனம்… “தாத்தா.. இந்தப் பாட்டு கமல் படத்துல வர்ரதுல்ல..”
இளைஞனின் மனதில் இளமை பொங்கும் வசுந்தரா தாஸ்.. நடந்து செல்லும் பல மனிதர்களைக் கடந்து சாலையின் மறு முனையில் நடந்து செல்லும் ஷ்வேதா.. இரண்டு வருடங்களுக்கு முன் மோகனுக்கு கிடைத்த அறிமுகம்.. அறிமுகம் தொடர்ந்து, நட்பாக மாறி, அடிக்கடி சந்திக்கத் தொடங்கி, சந்திக்காவிடில் ஒரு நாள் வாழ இயலாது என்ற நிலை…. சந்திப்புகள் இன்னும் மோகனின் வீட்டில் மறைத்தே வைக்கப்பட்டுள்ளன.. கட்டுப் பெட்டியான குடும்பமாயிற்றே…
தாத்தாவிற்கு தெரிந்த சினிமா, முதலில் வந்த பேசும் படம் “ஹரிச்சந்திரா”, மோகன் தாஸை மகாத்மா ஆக்கிய கதை.. சுதந்திர இந்தியாவில் திரைப்படம் பார்த்தறிந்தவரல்ல அவர்.. தவிர, ஆண்டாளின் திருப்பாவையை அட்சர சுத்தமாய் அவரின் இளமைக் காலத்திலேயே மனனம் செய்தவர்,.. பெயரன் திருப்பாவையை கமல் படத்துப் பாடலாக அறிவது குறித்து மனதிற்குள் வேதனையுற்று, திருப்பாவை குறித்து விளக்கலானார்..
மோகனின் கவனம் பஜனைப் பாடல் மீது, குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அதன் டியூன் மீது.. தாத்தாவின் விளக்கமெதுவும் புரியவில்லை அதாவது பிடிக்கவில்லை…. எப்போதோ பார்த்த கமல் படக் காட்சிகள் கண்ணெதிரே.. அவனைப் பொருத்தவரை அந்த டியூனுக்குத் தானே கமலஹாஸனாகவும், ஷ்வேதாவே வசுந்தரா தாஸாகவும் உருமாறியதுபோல் கற்பனை… அவனைப் பொருத்தவரை தாத்தாவிற்கு உலக ஞானம் அவ்வளவாக இல்லை…
பழுத்த தேகம், பளபளவென்று தும்பைப் பூப்போன்ற கேசம், காலம் கவனமாக வரைந்த கோடுகளெனும் சுருக்கங்கள் நிறைந்த முகம், வருடமொன்றிற்கு கணக்கு ஒன்றாகக் காவு கொடுத்தபின் மிஞ்சி இருக்கும் ஒரு சில பற்கள், இடது கையில் உட்புறம் திருப்பிக் கட்டிய கைக்கெடிகாரம், உலகமே ஒதுக்கி விட்ட, ஒருகாலத்தில் வெண்ணிறமாயிருந்த பழுப்பு நிற கதர் சட்டை, அந்த சட்டையின் பையினில் பல காலமாய் ராசி என்று பத்திரமாய் வைத்திருக்கும், சற்றே ஒழுகும் ஃபவுண்டன் பேனா.. மடித்துக் கட்டிய நாலு முழ கதர் வேட்டி, நடந்தே தேய்ந்த ஹவாய் செருப்பு….
பார்த்தவரெல்லாம் பாரபட்சமின்றி அவருக்களிக்கும் பெயர் “வாழத்தெரியாத கிழம்”…
”காடு வாவாங்கறது, வீடு போபோங்கறது.. கட்ட மட்டும் நோக்கா நேக்கான்னு அடிச்சிக்கறது…” – விரக்தியில் சில நேரம் அவரே அவருக்கு வழங்கிக் கொள்ளும் வர்ணனை..
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மையுடவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீநான்…
பஜனைக் கூட்டம் பல வெண்பா கடந்து பெரியவரின் மனம் பாய்ந்த பாசுரம் பாடிக் கொண்டிருந்தபோது… ஆண்டாளின்
அம்மி மிதித்த கனவு அவரின் மனம் முன்னே அம்புஜம் மாமியின் கால்களிலே அவர் மாட்டிய மிஞ்சி நிழலாட வைத்தது..
…..
……
…..
1941.. தியாகராய நகரில் ஒரு அரங்கத்தில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கும் மகாத்மாவின் கையால் பாராட்டுப் பத்திரம் வழங்கப்படுகிறது.. நம் நாயகன் கோவிந்தராஜனுக்கும் ஒன்று.. பூமியில் உதித்த பிறவிப்பயனை முழுவதும் அடைந்த உணர்வுடன் திரும்பி வருகையில்.. அஞ்சலை அம்மையார்.. மகாத்மாவை அச்சுப்பிரளாமல் பென்சில் ட்ராயிங்கில் வரைந்து மகாத்மாவிடம் கையெழுத்து வாங்க வரிசையிலே நின்று கொண்டிருந்தார்..
அண்ணலும் நோக்கினார், அஞ்சலை அம்மையாரும்
நோக்கினார்..காதலால் இருவரும் கைப்பிடித்தனர்.. அதே மகாத்மாவின் தலைமையில் பின்னொரு நாளில்.. அந்தக் காலத்திலேயே கலப்புத் திருமணம்…. ஐயாவின் மேலிருந்த காதலால் அவரின் அன்னை பெயரைத் தம் பெயராக மாற்றி அம்புஜம் மாமியானார்..
”இச்சகத்துளோரெலாம் எதிர்த்து வந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே”…
முண்டாசுக் கவிஞன் தாத்தாவைப் பார்த்துத்தான் எழுதினானோ என்னவோ…. உலகம் முழுவதும் எதிர்த்தாலும், தாத்தா இன்றைய பாட்டி, அன்றைய கன்னியை விட்டுக் கொடுக்கவில்லை…
இப்போதிருந்தால் பாட்டிக்கு எண்பது, எண்பத்தைந்து வயது இருக்கலாம்.. ஒரு பத்து வருடங்களுக்கு முன்னே தவறிப் போய்ட்டா.. நன்னா சுமங்கலியாப் போனா மாமி… திருவல்லிக்கேணியே அங்கலாய்த்து மாய்ந்தது.. அவர்களின் கல்யாண மறு நாள்.. அதாவது எண்பதாங் கல்யாண மறுநாள்….
“ஏன்னா.. சித்த இங்க வரேளா.. நெஞ்சு வலிக்கற மாதிரி இருக்கு”
அனேகமாக அதுதான் அவர் கடைசியாகக் கேட்ட மாமியின் பேச்சு.. ஆனால் இப்பொழுதும் அக்குரல் மாமாவின் இதயத்தில் ரீங்காரமிட்டுக் கொண்டு..
…..
……
…..
பல முறை அரசல் புரசலாகப் பார்த்துள்ளார், மோகனின் கவனம் பயணிக்குமிடம்.. பொதுவாக முடிந்தது ஷ்வேதாவின் பக்கம்.. ராமச்சந்திரனின் பேத்தி.. தாத்தாவுடன் சேர்ந்து சுதந்திரத்திற்காக போராடியவர்… அந்தக் காலத்தில் அடிப்படை உரிமைகள் மறுக்கப் பட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர்… மோகனின் தாத்தா, கோவிந்த ராஜர் இன்று உள்ளது போல் மேடையேறி வெற்றுப் பேச்சு பேசும் வர்க்கமல்ல.. காந்தி குஜராத்திலே ஒன்று சொன்னார் செய்தாரென்றால், கோவிந்தராஜர் காரைக்குடியிலே கேட்ட மறு நிமிடம் சிரமேற்கொண்டு செய்பவர்…
பாரதி போன்ற கவிஞன் சாதியில்லையென்றானெனில் முதலாகப் போய்த் தன் தோட்டத்தில் வேலைசெய்யும் அனைவருக்கும் அதனைப் படித்துக் காட்டி தோள் மீது கை போட்டு மகிழ்பவர்… ராமச்சந்திரனின் மனக்குறை பலபோக்கி தன்னில் ஒருவராய் ஆக்கியிருந்தார்… வெள்ளையனே வெளியேறு இயக்கம்… நாடெங்கிலும் பரவிப் புகழ் பெற, கோவிந்த ராஜர், தபால் நிலையம் அருகே தர்ணாவுக்குத் தலைமை தாங்குகிறார்.. தாணாக்காரர்கள் அவரை நோக்கித் தடியுடன் முன்னேற, தானாகக் கண்ட ராமச்சந்திரனோ நடுவிலே புகுந்து தன் தலைவனைக் காக்க எண்ணி தடியடி பெற்றார், தாணாக்காரர்களின் வலையிலே சிக்கி காரக்கிரகப் பிரவேசம்… ராமச்சந்திரனுக்குத் தெரிந்ததெல்லாம் இந்தியா… அதன்பின் அவரின்மேல் அன்பு வைத்த கோவிந்தராஜர்..……
தாத்தா அர்த்த புஷ்டியுடன் பேரனின் கவனத்தை நோக்கி ஒரு குறு நகை புரிய.. நடந்து முன்னேறுகிறார்…..
….
…..
…..
”ஏண்டா சுப்பிரமணியா (பாரதியின் மேற்கொண்ட அன்பினால் மகனுக்கிட்ட பெயர்) நம்ம மோகனுக்கு கல்யாணம் பண்றதப் பத்தி……” பல கணக்குகளை மனதில் கொண்ட தாத்தா பையனிடம் மெதுவாக பேச்சுக் கொடுக்க…
”ஆமாப்பா.. நானும் அதான் யோசிச்சிண்டிருந்தேன்… புள்ளையாண்டான் பத்தி அரசல் புரசலா பேசிக்கிறா.. அசிங்கமா எதாவது நடக்குறதுக்கு முன்ன நாம முந்திண்டுடலான்னு….”..
என்னடா கேள்விப்பட்ட… அந்த ராமச்சந்திரன் பேத்தியா….
கர்மம், கர்மம்… அதப்பத்தி என்னண்ட பேசாதேள்… மோகனண்ட நான் பேசி நல்லது கெட்டது நன்னா புரிய வக்கிரேன்…
சுப்பிரமண்யா.. நோக்கு ஏன் நான் அந்தப் பேர வெச்சேன் தெரியுமா.. அத விடு.. ஒங்கம்மாவும் நானும்…..
அப்பா……. நீங்க அந்தக்காலம்… இப்போ….
தன்னில் தப்பிப் பிறந்த பத்தாம்பசலி மைந்தனுக்கு நிதர்சனம் புரிய வைப்பது எவ்வாறு என்று நினைத்துக் கொண்டிருக்கையில்….
……
…….
…….
எக்ஸ்பிரஸ் மாலில்… ஷ்வேதா மோகனுடன் நடக்கிறாள்.. மோகன்.. நான் நல்லா யோசிச்சிப் பாத்துட்டேன்.. இது சரியா வராது.. எங்க வீட்டுல எல்லாரும் ரொம்ப மாடர்ன், வெஸ்டர்ன் கல்ச்சர்.. உங்க வீட்டுக்கு அதெல்லாம் சரி வராது.. காந்தி, சுதந்திரம்….. அப்டி இப்டின்னுகிட்டு…. லவ்ங்கிறது ஒரு ஃபீலிங் தான், அத ஈஸியா மாத்திக்க முடியும், நான் இப்போ தெளிவாய்ட்டேன்.. நீயும் நல்லா யோசிச்சுப்பாரு, புரிஞ்சுப்ப.. let’s part as friends, nothing personal!!! பேசிக் கொண்டே வெளியே வந்து கார் பார்க்கிங் நோக்கி நடக்கிறார்கள்..
வண்ணங்கள் வேற்றுமைப் பட்டால் – அதில்
மானுடர் வேற்றுமை இல்லை
எண்ணங்கள் செய்கைகளெல்லாம் – இங்கு
யாவர்க்கும் ஒன்றெனல் காணீர்…
ஏறக்குறைய 105 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட பாடல், பாரதி பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக மணிக்கூண்டருகே போடப்பட்டிருந்த மேடையிலிருந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது……
– மது வெங்கடராஜன்
மீரா தன் ‘குறும்புத்’ தொகையில் காட்டும் ‘நவயுகக் காதல்’- இக்காலக் காதல் – வேறு வகையானது. இது சாதி, மதம், உறவு முறை எல்லாம் ‘பார்த்து’ வருகிறது.
உனக்கும் எனக்கும்
ஒரே ஊர் –
வாசுதேவ நல்லூர் …
நீயும் நானும்
ஒரே மதம்…
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட,..
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்தக் காரர்கள்…
மைத்துனன் மார்கள்.
எனவே
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.
(ஊசிகள், பக். 48) (வகுப்பு = சாதி)