\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

மாந்தை – Mantai

பண்டைய தமிழ்த் துறைமுகம் மாந்தை

manthai1_520x416இலங்கை அகழ்வாராய்ச்சி ஆய்வுகளில் மாந்தை அல்லது மாந்தோட்டை மணல்மேடு தமிழ் மக்களின் சரித்திரத்தைப் பொறுத்தளவில் முக்கியத்துவம் வகிக்கின்றது. மாந்தையானது சைவர்கள் போற்றும் திருக்கேதீச்சரம் ஈசன் தலத்தை ஒற்றியும் அமைந்தது எனலாம். திருக்கேதீச்சரம் ஆனது திரு+கேது+ஈச்சரம் என்னும் தமிழ் சொற்களின் ஒன்றிணைப்பே ஆகும். மாந்தை இலங்கை நாட்டின் வடமேற்கில் தலை மன்னாரிற்கு நேர்ப்புறமாக கடற்கரையோரத்திலுள்ள ஒரு நகரம்.  . இதன் பிரதான அம்சம், 22 அடிகளுக்கு (6.7 மீட்டர்) மேல் கடலில் இருந்து உயர்வாகக் காணப்படும் மணல் மேடு, திண்ணை மற்றும் குதிரை இலாடம் போன்ற அகழிகள் ஆகும். தற்பொழுது இதன் சில பகுதிகள் சிறுகாடுகள் மூடியுள்ளன, மிகுதி திருக்கேதீச்சர ஆலயப் பகுதியாகவும் உள்ளது.

மாந்தையின் முக்கியத்துவம்

இந்தப் பகுதியானது பூகோள வரலாற்று ரீதியில் பார்க்கும் போது இலங்கை, இந்தியாவைப் பிரிக்கும் பாக் நீரிணையில் (palk strait)  அமைந்துள்ளது. எனவே இவ்விடம் பாரசீகக் குடாவில் இருந்து வங்காள விரிகுடா வரை கடற்துறை வணிகத்திற்கும் உதவியாக இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் பல கண்டெடுக்கப் பட்டுள்ளன. இவ்விடத்தைக் குறிப்பாகச் சொல்லுவதானால் பூகோள ரேகைகள் கணிப்பின் படி 8`57 1/2` வடக்கிலும் 79`57 1/2` கிழக்கிலும் அமைந்துள்ளது எனலாம்.

மாந்தையானது மன்னார்த்தீவிற்குக் கிழக்குப் புறம் இலங்கைத்தீவின் கடற்கரையில் காணப்படுகிறது. பாம்பன் கரை எனப்படும் இராமேச்சரம் ஒட்டி கடல்கீழ் கற்பாறைப் பாலத்தினால் இலங்கையின் வடமேற்குப் புறமும் தென்னிந்திய வளைகுடாவும் இயற்கையாகவே இணைக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கீழ் பெரும் சுண்ணாம்புப் பாறைகள் பெருங்கப்பல்களை பாக் நீரிணை ஊடாக ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் செல்வதற்குத் தடையாய் அமைந்தன. அதாவது பாரசீகக்குடவில் இருந்து வரும் கப்பல்கள் சீமை செல்லவும், சீமையில் இருந்து வங்காள விரிகுடா ஊடாக வரும் கப்பல்கள் பாரசீகம் போகவும் தடையாயின.

மன்னார்த் தீவின் அருகே ஒடுங்கிய கடல்பகுதிதான் நீரிணைக்கூடாகச் செல்லக்கூடியதாக இருந்தது. கடற்பயணத்தைப் பூகோளப் பொருளாதார ரீதியில் பார்க்கும் போது மன்னார்க்கடல் கடப்பதே ஆதாயமாகவும் இருந்தது. எனவே பெரிய கடல்கலங்கள் இந்தியாவிலும், சீனாவிலும் இருந்து பண்டம் ஏற்றிவந்தவை பாரசீகத்திற்கு அனுப்புவதற்கு சிறு ஓடங்கள் மூலம் பாரசீகப் பெருங் கடல் கலங்களிற்கு கைமாற்றின.

இவ்விடம் பொருட்களைப் பரிமாற பிரயாணத் தூர ஏற்ற இறக்கக் கூலி என்பதெல்லாம் சேர்த்துப்பார்க்கும் போது, கடல் தோணிகள் 12 மணி நேர எழும்பு அலைகள், இறங்கு அலைகள் என்பவற்றை அவதானித்துச் செயல்படுவதும் முதலீட்டிற்கு ஆதாயமாக வணிகற்கு அமைந்தது. மாந்தையானது இவையாவும் நடைபெறும் இயற்கைத் துறைமுகமாகவும் அமைந்தது.

குடியேற்றங்கள்

manthai2_520x416மாந்தையில் உரோமர் காலத்து சிவப்பு மட்பாண்டங்களும், மேலும் கறுப்புச்சிவப்பு அறிகமேடுப் பாத்திரச் சில்ஓடுகளும், சீனம், மற்றும் பாரசீக வெண்களி மினுக்கிய மட்பாண்டங்களும் அகழ்வாராய்ச்சிகளின்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவையாவும் இவ்விடம் உயர்தர வணிகந்தொட்டு சன நடமாட்டம் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. மாந்தைப் பிரதேசம் ஏறத்தாழ 2.3 சதுர மைல்கள் அல்லது 6 சதுர கிலோமீட்டர்கட்கு உள்ளானது.

அகழ்வாராய்ச்சிகளின்படி மாந்தையில் சன நடமாட்டம் கி.மு. இரண்டாவது நூற்றாண்டிற்கு முன்னராகவே இருந்தது தெரிய வந்துள்ளது. மாந்தை தொடர்ந்து கி.பி 11ஆம் நூற்றாண்டுவரை பிரபலமாக இருந்தற்கும் சான்றுகள் உண்டு.

மாந்தைக்குடியேற்றமானது இரண்டு அகழிகளால் சுற்றிவளைக்கப் பட்டிருந்தது. வழக்கமாக அகழிகள் போர்ச்சாதனமாக குடிகளைக்காக்கும் ஒருவகை அரணாகவே அமைக்கப்படும். ஆயினும் மாந்தையில் இவ்விரு அகழிகளும் அவ்வாறு தொழிற்பட்டன என்பதற்கு ஆதாரம் இல்லை. இதன் ஒரு காரணம் அகழிகளம் அவற்றைச் சூழ்ந்த களிமண் திண்ணைகளும் அவ்வளவு உயரமாகக் காணப்படவில்லை. எனவே இவை குடிகளை எதிரிகளிடம் இருந்து பாதுகாத்தாகத் தெரியவில்லை.

ஆயினும் வரலாற்று ஆசிரியர்களும் பூகோள வல்லுனர்களும் இன்னும் ஒரு விளக்கத்தைத் தருகின்றனர். மாந்தை நிலப்பரப்பு இலங்கையின் வரண்ட பாகங்களில் ஒன்றாகும். இவ்விடம் சராசரி மழை வீழ்ச்சி 10 – 12 அங்குலங்கள் அல்லது 24.5-30.5 cm மாத்திரமே. எனவே கடல் நீர் அருகிலிருந்தாலும், மாந்தை மக்களுக்குக் குடிநீர் தட்டுப்பாடு இருந்தது. எனவே அணைகளும், மழை நீர் சேகரிப்பிற்காகவும், குடியேற்றத்தில் உள்ள கிணறுகளைத் தண்ணீரில் நிரப்பி வைக்கவும் அகழிகள் அமைக்கப்பட்டிருக்கலாம். அதே சமயம் இந்த அகழிகள் ஏறத்தாழ 16 அல்லது 5 மீட்டர் ஆழமாகவும் காணப்பட்டது. எனவே இந்த அகழிகள் குடிநீர் உபயோகத்திற்கு மாத்திரம் அல்லாமல் சிறு தோணி போன்ற கடல்கலங்களையும் சிரமம் இன்றி பண்டங்கள் கொண்டு வந்து செல்லவும் உதவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.

உசாத்துணை நூல்கள் சில

Vasant Shinde (1997) Mantai: An Important Settlement In North-West Sri Lanka

Vimala Begley (1988) Rouletted Ware at Arikamedu: A New Approach

Vimala Begley (1983) Archaeological Exploration in Northern Ceylon

Sanmuganathan, S (1950) Excavation at Tirukketisvaram

 – யோகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Rotating Banner with Links
ad banner
Bottom Sml Ad