சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
அரசியல் சாணக்கியர் என்று பலரால் அழைக்கப்பட்ட ராஜாஜி எனும் ராஜகோபாலாச்சாரி பிறந்தது 1878ம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 10ம் நாள். இவர் அப்போதைய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொரப்பள்ளியில் பிறந்தவர். இவரது தந்தை சக்கரவர்த்தி ஐயங்கார். சமஸ்கிருத பண்டிதரான அவர் தமது பிள்ளையின் படிப்பைக் கருத்தில் கொண்டு ஓசூருக்கு வர, ராஜாஜியின் பள்ளிப்படிப்பு ஓசூரில் துவங்கியது. படிப்பில் மிகவும் சூட்டிகையான மாணவராக இருந்தார் தொடர்ந்து தனது ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்டு உலக விஷயங்களைத் தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினார் ராஜாஜி. அதோடு மட்டுமல்லாது சமுதாயத்தில் நிலவி வந்த ஏற்றத் தாழ்வுகளையும் கூர்ந்து கவனித்து வந்தார். பள்ளிப் படிப்பு முடிந்த பின்னர் பெங்களூரில் தனது பட்டப்படிப்பைத் துவங்கினார் ராஜாஜி. அங்கு பேராசிரியர் டேய்ட் ராஜாஜியின் ஆங்கிலப் புலமை வளர பெரும் காரணமாக அமைந்தார். பட்டப்படிப்பை முடித்த பின்னர் சட்டம் படிக்க சென்னை மாகாண கல்லூரியில் சேர்ந்தார் ராஜாஜி. பட்டப்படிப்பின் போது தமிழ் மொழியில் தேர்ச்சி பெறாத ராஜாஜி, சென்னை வந்த பின்னர் தமிழ்த் தேர்வுகளில் வெற்றி பெற்றார்.
பல நூல்களைப் படித்த ராஜாஜியைப் பெரிதும் கவர்ந்த இரு இந்தியர்கள் – சுவாமி விவேகானந்தரும், பால கங்காதர திலகரும். ஆன்மீகத்திலும், சாஸ்த்ரிய சங்கீதத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். கல்லூரிப் பருவத்தில் ஆங்கில அரசாங்கத்தின் அடக்கு முறை பற்றியும், சமுதாயத்தில் தீண்டாமை போன்ற ஏற்றத் தாழ்வுகள் அகற்றப் படவேண்டும் என்றும் நண்பர்களிடம் தொடர்ந்து புழுங்குவார். சட்டப் படிப்பை முடித்தவுடன் சிறந்த முறையில் தனது வழக்கறிஞர் தொழிலைச் சேலத்தில் தொடங்கி நடத்தி வந்தார். இதற்கிடையே அவருக்கு அலமேலு மங்கம்மாள் என்பவருடன் திருமணமும் நடந்தது. சட்ட நுணுக்கங்களை நன்கறிந்திருந்த அவர் தனது ஞாபக சக்தியால் பல வழக்குகளைச் சிறப்பாக வாதிட்டு வென்றார். அந்தக் காலங்களிலேயே அவர் வழக்காட ஆயிரம் ரூபாய் கட்டணம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு முறை கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தனது வாதத் திறமையால் விடுவித்தார் ராஜாஜி. சன்மானத்தை கொடுக்க வந்த அவரது கட்சிக்காரர், “சிறப்பாக வாதிட்டு எனக்கு விடுதலை வாங்கி கொடுத்து விட்டீர்கள். அப்படியே நான் கொலை செய்யப் பயன்படுத்திய அரிவாளையும் மீட்டு கொடுத்து விடுங்கள். அது எங்கள் பூர்வீகப் பொருள்” என்றதும் குற்ற உணர்வால் ராஜாஜிக்கு தனது தொழிலின் மீதே வெறுப்பு ஏற்பட்டது. அறிவை வைத்து விபச்சாரம் செய்வது வக்கீல் தொழில் என்று சொல்லி தனக்குச் சரியென பட்ட வழக்குகளை மட்டுமே நடத்தத் தொடங்கினார். பொது வாழ்வில் ஈடுபட்டு சேலம் முனிசிபல் கவுன்சில் சேர்மனாக பணியாற்றினார்.
அந்தக் காலகட்டத்தில், காந்திஜி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்க, வழக்கறிஞர்கள் பலரும் தங்கள் தொழிலைத் துறந்து போராட்டதில் ஈடுபட்டனர். ராஜாஜியும் அதனையே செய்தார்.
ஒத்துழையாமை,மதுவிலக்கு, தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம் போன்ற கொள்கைகளை முன்னிறுத்தி பலவித விழிப்புணர்வு போராட்டங்களில் பங்கெடுத்துச் சிறை சென்றார்.
காங்கிரஸ் கொள்கைகளில் வேறுபட்டு சிறிது காலம் விலகி இருந்தவர், உப்புச் சத்தியாகிரகத்தின் போது மீண்டும் காந்திஜியுடன் இணைந்து போராடிச் சிறைச் சென்றார்.
எவருக்காகவும், எதற்காகவும் தனது முடிவுகளை மாற்றிக் கொள்ளாத போராட்டக் குணம் ராஜாஜியின் பிறவியிலேயே இருந்தது. காந்தியின் வெள்ளையனே வெளியேறு கொள்கைகள் வன்முறையானது, தீவிரவாதம் கொண்டது என்று நினைக்கத் துவங்கினார். பாகிஸ்தானைத் தனி நாடாக பிரிப்பது தான் சிறந்தது என்ற தமது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்து, காங்கிரஸிலிருந்து விலகினார். இருப்பினும் அவரது கூர்ந்த அரசியல் வியூகங்களுக்காக, சுதந்திரத்துக்கு முன்னர் இடைக்காலப் பாராளுமன்றத்தில் மந்திரிப் பதவியை வழங்கி உடனிருத்திக் கொண்டனர் நேருவும் காந்தியும். பின்னர் சென்னை மாகாண முதன் மந்திரியாக நியமிக்கப் பட்டார். நாட்டில் முதன் முறையாக மதுவிலக்கைச் சேலம் ஜில்லாவில் அமலுக்கு கொண்டு வந்தார் ராஜாஜி.
இந்தச் சமயத்தில் ராஜாஜியின் மகளான லட்சுமிக்கும், காந்திஜியின் மகனான தேவதாசுக்கும் திருமணம் நடந்தது.
இரண்டாம் உலகப் போர் நடைபெற்றதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி முதன் மந்திரிகள் பதவி விலகிய போது ராஜாஜியும் பதவி விலகினார். பின்னர், மவுண்ட் பேட்டன் நோய்வாய்ப் பட்டிருந்த போது ராஜாஜிக்கு கவர்னர் ஜெனரல் பதவி வழங்கப்பட்டது.
பாகிஸ்தான் கொள்கைகளில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்த காரணத்தினால் காந்திஜிக்கும், ராஜாஜிக்கும் சிற்சில மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தன. இறுதியாக ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகி ஒத்த கருத்துக் கொண்டிருந்த சிலருடன் இணைந்து சுதந்திராக் கட்சியை உருவாக்கினார்.
மீண்டும் சென்னை முதல்வராகப் பட்டேலும், நேருவும் ராஜாஜியை கொண்டு வந்தார்கள். இடையே காந்திஜியின் பரம சீடரான சத்தியமூர்த்தியுடனும் ராஜாஜிக்குப் பிணக்கு ஏற்பட்டது. இக்காரணத்தினால் சத்தியமூர்த்தியை குருவாகக் கொண்டு பணியாற்றிய காமராஜருக்கும் ராஜாஜிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் எதிரெதிர் துருவங்களாக இருந்து வந்தனர். கல்வித்துறை சீரமமைப்பு என்று ராஜாஜி கொண்டு வந்த மாற்றங்களினால் ஆட்சியிழக்க, தேர்தலில் காங்கிரஸ் சார்பில் காமராஜர் முதல்வரானார்.
“அறுபது வயதானவர்கள் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும்” என்று காமராஜரும் “உங்களது மாகாணத்தில் கல்லூரியில் படித்த
ஒருவர் முதல்வர் இருக்கிறார். எங்கள் சென்னை மாகாணம் அந்தளவுக்கு கொடுத்து வைக்கவில்லை” என்று பம்பாயில் நடந்த கூட்டத்தில் ராஜாஜியும் ஒருவரை ஒருவர் மறைமுகமாகத் தாக்கிக் கொண்டனர். சிறப்பான அரசாட்சி நடத்திக் கொண்டிருந்த காமராஜரின் ஆட்சி கவிழ ராஜாஜி, திராவிடக் கட்சியினரை ஊக்குவித்ததும் ஒரு காரணமானது.
பின்னாளில், 1971ல் ராஜாஜியும், காமராஜரும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து இணைந்து பணியாற்ற முயன்ற போது கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.
ஆன்மிக நாட்டம் கொண்ட ராஜாஜிக்கும், நாத்திக கருத்துக் கொண்ட பெரியாருக்கும் மோதல்கள் நடந்துக் கொண்டிருந்தன.
இது போல் காந்திஜி, நேரு, படேல், சத்தியமூர்த்தி, காமராஜர், பெரியார், அண்ணாதுரை எனப் பலருடனும் சில நேரங்களில் இணக்கம் கொண்டு
இணைந்தும், பல நேரங்களில் மாறுபட்ட கருத்துக்களால் சுணக்கம் கொண்டு பிரிந்தும் செயலாற்றி வந்தார். பல்வேறு கட்டங்களில் பெரும்பான்மையினர் கருத்தோடு இவர் ஒத்துப் போனதில்லை.
எந்த விஷயத்துக்கும், அவர் ஆற்றிய எதிர்வினை அவரைச் சிறந்த ஆட்சியாளராக, பிடிவாதக்காரராக, சீர்திருத்தவாதியாக, அரசியல் அறிஞராக, துணிவு மிக்கவராக பல பரிமாணங்களில் காட்டியது. தனக்குச் சரியெனப் பட்டதைத் துணிந்து செய்தார். தவறென உணர்ந்தால் திருத்திக் கொள்வதிலும் அவர் தவறவில்லை.இதனால் நிலையில்லாத கருத்துக்களை கொண்டவர் என்ற பழியும் அவர் மீது இருந்து வந்தது. இவரை அரசியல் மேதை என்று அறிந்தவர்கள் கூட இவரை நம்பத் தயங்கினர்.
இவையெல்லாம் கொள்கை, கருத்து முரண்பாடுகள் தானே தவிர தனிப்பட்ட முறையில் அனைவரிடமும் சிறந்த மரியாதையுடனும், நட்புடனும் பழகி வந்தார் ராஜாஜி.
பெரியார், வாழ்வின் இறுதி நாட்களில் தவமணியை மணக்க முடிவெடுத்த போது தனது கட்சியிலிருந்தும், உறவினர்களிடமிருந்தும் எழுந்த எதிர்ப்பை புறந்தள்ளி, அவர் தனது முடிவைப் பற்றி கடிதம் எழுதி கருத்து கேட்ட ஒரே நபர் ராஜாஜி.
தனது அன்னை இறந்த போதுக் கூட கலங்காத காமராஜர் ராஜாஜி இறந்த போது கண்ணீர் விட்டு அழுதார்.
அரசியல் மட்டுமல்லாது இலக்கியத்திலும் சிறந்த ஆளுமை கொண்டிருந்தார் ராஜாஜி. அவர் எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் (ராமாயணம்), வியாசர் விருந்து (மகாபாரதம்) இரண்டும் அவருக்குப் பெரும் புகழைத் தேடிக்கொடுத்தன. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். “குடி கெடுக்கும் கள்”, “திக்கற்ற பார்வதி”, “கண்ணன் காட்டிய வழி”, “சிறையில் தவம்”, “குட்டிக் கதைகள்”, “உபநிடதப் பலகணி”, “சிசு பரிபாலனம்”, “தமிழில் முடியுமா?” முதலிய நூல்களையும் எழுதியுள்ளார். பள்ளி நாட்களில் தொடர்ந்து நான்காண்டுகள் தமிழில் தேர்ச்சிப் பெறாத அவர் பிற்காலத்தில் அருமையான நடையில் தனது படைப்புகளை உருவாக்கினார். அவரின் பாடலான ‘குறை ஒன்றும் இல்லை ..’ என்ற பாடலை எப்போது கேட்டாலும் மனமிளகும்.
முதன் முதலாக பாரத ரத்னா விருது பெற்ற ஒரு சிலரில் ராஜாஜியும் அடக்கம். உள்துறை அமைச்சர், கவர்னர் ஜெனரல், முதன் மந்திரி, ஆளுனர் என இந்திய அரசியலில் பல பதவிகள் வகித்த போதும் இறுதி நாட்களில் சென்னை தி. நகரில் சாதாரண வாடகை வீட்டில் வாழ்ந்து வந்த அவர் தனது 94வது வயதில் 1972ம் ஆண்டு கிரிஸ்துமஸ் தினத்தில் மறைந்தார்.
– ரவிக்குமார்.
Very helpful thank you so much….