தலையங்கம்
பனிப்பூக்கள் ஆசிரியர் குழு சார்பாக வாசகர்கள் அனைவருக்கும் எங்களின் இதயங்கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு, மற்றும் பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்த ஆண்டில் தங்களின் வாழ்வு மேலும் ஒளிமயமானதாக ஆக எங்களின் இதய பூர்வமான வாழ்த்துக்கள்.
மினசோட்டாவில் வாழ்பவர்கள் கடந்த சில வாரங்களாக உதிரத்தை உருக்கும் குளிரை அனுபவித்து வருகின்றனர். அண்மையில் ஒரு நாள் தட்பம் பூஜ்யத்திற்கு நாற்பது அலகு குறைவான (Minus Forty Degree Fahrenheit) நிலையை அடைந்தது. மினசோட்டா மாகாணத்தின் வட எல்லையிலுள்ள சிறு நகரம் ஒன்றில் பதிவான குளிர் செவ்வாய்க் கிரகத்தைவிட (Mars) அதிகமான அளவில் இருந்ததாம். இந்தச் செய்தியைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில், சிலர் செவ்வாய்க் கிரகம் குளிரான இடமா என்று கேட்டது ஒரு சுவாரசியமான தகவல்.
இந்தக் குளிருக்குப் பழக்கப்படாதவர்கள் இதில் மனிதர்கள் வாழ்வது எவ்வாறு என்று ஆச்சரியப்படுவது புரிந்து கொள்ளக் கூடியதே. இந்தக் குளிரிலும் இங்கு வாழும் மக்கள் தாங்கள் தினந்தோறும் செய்யும் செயல்கள் எவற்றையும் குறைத்துக் கொள்வதில்லை. விதியை மதியால் வெல்வது என்ற ஒரு பழமொழி நாமனைவரும் அறிந்ததே. உறைநிலையில் வானிலை இருப்பதை இயற்கையின் விதி (rule) என்று கொண்டால், அந்த வானிலையிலும் வழக்கமான எல்லா நடவடிக்கைகளையும் செய்வது எவ்வாறு என்று சிந்தித்து, அவற்றை நிறைவேற்றுவதே மதி என்பது இந்தப் பழமொழியின் சரியான விளக்கமாக இருக்கும் என்று நம்புகிறோம். அதன்படி, இந்த நாட்டு மக்கள் அனைத்து வித இயற்கை சீதோஷ்ண நிலையையும் வென்று வாழக் கற்றுக் கொண்டுள்ளனர். இங்கு பல வருடங்கள் வாழ்ந்து பழகிய நமக்கும் அது இப்பொழுது சற்று பழக்கமாகி விட்டது என்றுதான் கூற வேண்டும்.
இன்று தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் உழவர் திருநாள் என்றும் அறுவடைத் திருநாள் என்றும் போற்றப்படுகிறது. நமக்குப் பஞ்சமின்றி மூன்று வேளையும் உணவு கிடைக்கப் பகலிரவு பார்க்காமல் பாடுபடும் உழவர் மற்றும் உழைப்பவர் சமூகத்திற்கும், அவர்களின் உழைப்பின் முடிவை விளைச்சலாக மாற்றும் சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாளே இந்தப் பொங்கல் பண்டிகையாகும். உலகின் வாழ்வாதாரம் உழவு. அதனால்தான், நம் பொய்யாமொழிப் புலவன்,
”சுழன்றும் ஏற்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை”
என்றும்
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”
என்றும் பெருமை பேசுகிறார். உலகத்தின் மிகவும் போற்றப்பட வேண்டிய தொழில்களில் ஒன்றான உழவுத்தொழிலையும் அதில் முழுவதுமாய்த் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் உழவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாளாகையால் இந்தத் திருநாள் ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து கொண்டாடப்பட வேண்டும் என்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே.
2014ஆம் ஆண்டின் முதல் இதழை தங்களின் தமிழ் தாகத்தை தணிக்கும் வகையில் மனதைக் கவரும் பல ஆக்கங்களுடன் வெளியிடுகின்றோம்.
வாசகர்களாகிய உங்களில் பல சிறந்த படைப்பாளிகள் உள்ளனர் என்பதை யாமறிவோம். உங்களின் படைப்பாற்றலை உலகுக்கு தெரிவிக்க ஒரு அரிய வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதில் பனிப்பூக்கள் பெருமை கொள்கிறது. ‘எழுதுங்கள் வெல்லுங்கள்’ என்ற பகுதியில் இடம் பெற்றிருக்கும் படத்துக்கு பொருத்தமாக, நச்சென்று ஒரு தமிழ்ப் படைப்பை எழுதி அனுப்பி பரிசுகளை வெல்லுங்கள். போட்டி பற்றிய விவரங்களை ‘எழுதுங்கள் வெல்லுங்கள்’ பகுதியில் காணுங்கள்.
வாசகர்களாகிய உங்களுக்கும், உங்களின் குடும்பத்தினருக்கும், மீண்டும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
– ஆசிரியர் குழு.